Tuesday, January 28, 2020


தெய்வமே சாட்சி: பெண்ணை வணங்க வேண்டுமா? 




ச.தமிழ்ச்செல்வன்

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா திடீரென்று ஒரே நாளில் ஆகிவிடவில்லை. ஒரே ஒரு காரணத்தாலும் இது நிகழ்ந்துவிடவில்லை. பல்வேறு வழித்தடங்களின் மூலம் நாம் இன்று இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். எல்லா வழித்தடங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கல்லும் முள்ளும் அகற்றப்பட வேண்டும்.

பெண்கள் மீது இந்தியச் சமூகம் கொண்டிருக்கும் இரட்டை மனநிலை நாம் கவனிக்க வேண்டிய ஓர் அம்சம். பெண்ணைத் தெய்வமாகக் கொண்டாடுவது அந்த இரட்டை மனநிலையில் ஒன்று. ஆணுக்குக் கீழாகப் பெண்ணை வைப்பது இன்னொரு மனநிலை. இவ்விரு மனநிலைகளின் வேரைக் கண்டடைய பெண் தெய்வங்களின் கதைகளை வாசித்து விவாதிப்பது உதவியாக இருக்கும்.

நாட்டுப்புறத் தெய்வங்கள்

‘பெண்ணைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா’ என்று ஏன் பாரதி பாடினான்? கும்பிடுவதற்குப் பின்னால் இயங்கும் சமூக உளவியல் என்ன? இந்த உளவியலுக்கும், ஆணாதிக்க மனோபாவத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. தெய்வங்களில் இரண்டு வகை உண்டு. பெருந்தெய்வங்கள் ஒரு வகை. சிறு தெய்வங்கள் எனக் குறிக்கப்படும் நாட்டுப்புறத் தெய்வங்கள் இன்னொரு வகை. நிறுவனமயமாக்கப்பட்ட பெருமதங்களான சைவம், வைணவம், வைதீகம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவை கொண்டாடும் தெய்வங்கள் பெருந்தெய்வங்கள். இத்தெய்வ வழிபாடுகள் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, அம்மதங்களின் மறை நூல்களை (பைபிள், குர் ஆன், சைவத் திருமறைகள் போல்) முன்னிறுத்திச் செய்யப்படுபவை.

ஆனால், நாட்டுப்புறத் தெய்வங்கள் எனப்படுபவை நம்மோடு வாழ்ந்து மறைந்த மனிதர்கள்தாம். அவர்கள் இறந்த பின் நடுகல் நட்டோ பீடங்கள் எழுப்பியோ வழிபடப்படுபவை. பொதுவான ஆகம விதிகளுக்கோ எந்த மதத்தின் வழிபாட்டு முறைகளுக்கோ, சாத்திரங்களுக்கோ கட்டுப்படாதவை இத்தெய்வங்கள். ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனித்தனியான தோற்றக்கதையும் அக்கதையை அடிப்படையாகக் கொண்ட தனித்தனி வழிபாட்டு முறையும், படையலிடும் பழக்கமும் உண்டு. ஒரு வகையில் இத்தெய்வங்களை ‘மதச்சார்பற்ற சாமிகள்’ என்றுகூடச் சொல்லலாம்.

ஆதிக்கம் செலுத்தும் சிறுதெய்வங்கள்

பொ.ஆ. 6-7-ம் நூற்றாண்டுகளில் பெருவீச்சுடன் புறப்பட்ட பக்தி இயக்கத்தின் தொடர்ச்சியாக இத்தெய்வங்களைப் பெருமதக் கடவுள்களின் அம்சங்களாகவும் அவதாரங்களாவும் திரித்து உள்வாங்கிக்கொண்டது பிற்கால வரலாறு. ‘சென்று நாம் சிறு தெய்வம் சேரோம் அல்லோம்’ என்று ஏழாம் நூற்றாண்டின் அப்பர் தேவாரம் இத்தெய்வங்களை வெளித்தள்ளி நிறுத்தியது. ‘பிண்டத்திரளையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும் உண்டற்கு வேண்டி ஓடித்திரியாதே’ என்று நாட்டுப்புறத் தெய்வ வழிபாட்டு முறைகளைப் பெரியாழ்வார் திருமொழி இகழ்ந்து புறமொதுக்கியது. வாழ்ந்து மடிந்த மனிதர்களும் மனுசிகளுமே நாட்டுப்புறத் தெய்வங்கள் என்பதால் இவற்றுக்குத் தெய்விக அந்தஸ்தை வழங்கவோ தம் பிள்ளைகளுக்கு இத்தெய்வங்களின் பெயர்களைச் சூட்டவோ ‘மேலோர்’ இதுவரை முன் வரவில்லை.

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மனங்களைக் கட்டி ஆண்டவையாகவும் ஆள்பவையாகவும் இத்தெய்வங்கள் திகழ்கின்றன.

1916-ல் திருநெல்வேலி மாவட்ட கெஜட்டியர் நூலைத் தொகுத்த ஆங்கிலேயரான ஹெச்.ஆர்.பேட் அந்நூலில், “சிவனோ விஷ்ணுவோ ஆதிக்கம் செலுத்துவதைவிடவும் இம்மாவட்ட மக்களின் மீது அதிக ஆதிக்கம் செலுத்தும் சாமிகளாக இருப்பவை பாபநாசம் மலையில் குடிகொண்டிருக்கும் சொரிமுத்தையனும் அங்குள்ள இதர சிறு தெய்வங்களுமே” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சனங்களின் சாமி

ஆகவே, மக்கள் தொகையில் பெரும் பான்மையாக இருக்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் கூட்டு உளவியலில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தெய்வங்கள் குறித்த ஆய்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. 30-40 ஆண்டுகளாக இத்தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் உரிய கவனம் பெற்றுவருகின்றன.

நாட்டுப்புறத் தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள், கிராம தேவதைகள், சிறு தெய்வங்கள் என பல பெயர்களில் அழைக்கப்படும் இத்தெய்வங்களைக் ‘கொலையில் உதித்த தெய்வங்கள்’ என்று பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் குறிப்பிடுவார். பாளையங்கோட்டை தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரியில் இயங்கும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், இத்தெய்வங்களை நாட்டார் தெய்வங்கள், சனங்களின் சாமிகள் என்று விளிக்கும் மரபை உருவாக்கியது.

சாதி மறுத்துக் காதலித்த குற்றத்துக்காகக் கொல்லப்பட்ட முத்துப்பட்டன் கதை, மதுரை வீரன் கதை உள்ளிட்ட பல நாட்டுப்புறத் தெய்வங்களின் கதைப்பாடல்களைத் தொகுத்துப் பதிப்பித்தவர் பேராசிரியர் நா. வானமாமலை. மக்களின் வாய்மொழியில் மட்டுமே உலவுகின்ற அத்தெய்வங்களின் தோற்றக்கதைகளைக் கொண்டு, அத்தெய்வங்கள் எக்காலத்தில் எந்தச் சமூகப் பொருளாதாரப் பின்னணியில் மனிதர்களாக வாழ்ந்தார்கள், அவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்கிற ஆய்வுகளுக்குள் நம்மை அழைத்துச் செல்வார்.

பசும்பாலே படையல்

மேற்சொன்னவையெல்லாம் ஒரு பின்திரையாகவும் முன்னுரையாகவும் இருக்க, நம்முடைய பயணம் பெண்கள் குறித்த நம் ஆணாதிக்கச் சமூகத்தின் மனக்கட்டமைப்பின் ஒரு வழித்தடத்தில் தொடரவிருக்கிறது. நாட்டுப்புறத் தெய்வங்களில் ஆண் தெய்வங்களும் உண்டு, பெண் தெய்வங்களும் உண்டு. பெண் தெய்வங்களின் தோற்றக்கதைகளை முன்வைத்து இன்றைய பெண்களின் இடமும் இருப்பும் குறித்த உரையாடலை முன்னெடுக்க முடியும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மக்களுக்கு எழுத்தறிவும் எண்ணறிவும் புகட்டத் தொடங்கப்பட்ட ‘அறிவொளி இயக்க’த்தின்போது அதில் பங்கேற்ற எம் போன்றோர், மக்களுக்குக் கற்றுக்கொடுத்ததைவிட, அவர்களிடம் கற்றுக்கொண்டு திரும்பியதே அதிகம். பேராசிரியர் ச.மாடசாமியின் தலைமையில் நாங்கள் மதுரையில் ‘கருத்துக் கூடம்’ ஒன்றை அமைத்து, மக்களிடம் கற்றுக்கொண்டவற்றை முறைப்படுத்தித் தொகுத்தோம். அத்தொகுப்பில் தென் மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நாட்டுப்புறத் தெய்வக்கதைகள் ஒரு பகுதி. அத்தொகுப்பிலிருந்தும் வேறு சில ஆய்வாளர்கள் தொகுத்தவற்றிலிருந்தும் சில பெண் தெய்வங்களின் கதைகளை எடுத்துக் கொண்டு நாம் விவாதிக்கலாம்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் கொம்புசித்தம்பட்டிக்கு வடக்கே பொம்மக்கோட்டைக்கு அருகே உள்ள ஒரு பெண் தெய்வத்தின் பெயரும் அவரை வழிபடும் முறைகளும் நம் கவனத்தை ஈர்த்தன.

இந்தச் சாமியைக் கமுதிப் பக்கமிருந்து வண்டி பிடித்து வந்தும் கும்பிட்டுப் போகிறார்கள். மற்ற ஊர்க்காரர்களும் வந்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைதான் கூட்டம் அதிகமாக இருக்கும். பொம்மக்கோட்டையிலும் மற்ற ஊர்களிலும் ஆடு, மாடுகளுக்குப் பால் சுரக்காவிட்டாலும், குழந்தை பெற்ற பெண்களுக்குத் தாய்ப்பால் இல்லாவிட்டாலும் இங்கு வந்து நேர்ந்துகொள்கிறார்கள். இந்த அம்மனுக்குப் படையலாகப் பசும்பாலைத்தான் தருகிறார்கள். மாடு கன்று போட்ட 30 நாள் கழித்து பால் பீய்ச்சி, அந்தப் பாலைத்தான் விரதம் இருந்து கொண்டு வந்து இந்தச் சாமிக்குப் படைக்கிறார்கள்.

இந்தச் சாமியின் பெயர் மலட்டம்மா. மலடு, மலடி என்கிற வேர்ச்சொல்லைக் கொண்டு ஒரு சாமியா? இந்த மலட்டம்மாவின் தோற்றக்கதை என்ன? பால் ஏன் படையல் பொருளானது?

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024