Friday, January 31, 2020

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரம்; டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளும் சிக்குகின்றனர்- இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் சிபிசிஐடி சோதனை

சென்னை

குரூப் 4 தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் சிலரும் சிக்குகின்றனர். இதுதொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு முறைகேடு விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ஜெயக்குமாரின் வீட்டில் பூட்டை உடைத்து சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வில்நடந்துள்ள முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக அரசு அலுவலர்கள், இடைத்தரகர்கள், பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றவர்கள் என 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும்பலரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இடைத்தரகர் தலைமறைவு

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான இடைத்தரகர் ஜெயக்குமார் தலைமறைவாக இருக்கிறார். சென்னை முகப்பேர் மேற்கு கவிமணி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வாடகைக்கு வீடுஎடுத்து ஜெயக்குமார் வசித்து வருகிறார். தேர்வு முறைகேடு குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், அந்த வீட்டை பூட்டிவிட்டு ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரது வீட்டை சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

தரகர் வீட்டில் சோதனை

இந்நிலையில், ஜெயக்குமாரின் வீட்டில் சோதனை நடத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை சிபிசிஐடி போலீஸார் பெற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை ஜெயக்குமார் வீட்டுக்கு சென்ற சிபிசிஐடிடிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான போலீஸார், மதுரவாயலில் இருந்து வந்திருந்த வருவாய்த் துறையினர் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.

சுமார் 3 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு தொடர்பான ஆவணங்கள், விரைவில் அழியக்கூடிய மை நிரப்பிய பேனாக்கள், சில பேப்பர்பைல்களை போலீஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். சோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. சோதனை முடிந்ததும் வீட்டை பூட்டி சீல் வைத்தனர்.

தேர்வு முறைகேடு விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் என்பவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது டிஎன்பிஎஸ்சி அலுவலக உதவியாளர் மாணிக்கம் என்பவரிடம் சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விடைத்தாள்களை கொண்டு சென்ற பிரபல கூரியர் நிறுவனத்தின் 3 ஊழியர்களுக்கு இதில் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அந்த 3 பேரையும் சிபிசிஐடி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை காவலர் சித்தாண்டிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. சித்தாண்டியின் மனைவி, தம்பி, தம்பியின் மனைவி, மற்றொரு தம்பி என 4 பேர் கடந்த ஆண்டு குரூப்-2 மற்றும் குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராமேசுவரம் மையத்தில் தேர்வு எழுதி,மாநில அளவில் முதல் 10 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சித்தாண்டி இடைத்தரகராகவும் செயல்பட்டு பலரிடம் பணம் வாங்கிக்கொண்டு, அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளார் என தெரியவந்தது.

மருத்துவமனையில் காவலர்

இதையடுத்து, காரைக்குடி முத்துப்பட்டணம் சார் பதிவாளரின் நேர்முக உதவியாளராக இருக்கும் சித்தாண்டியின் தம்பி வேல்முருகனை சிபிசிஐடி தனிப்படையினர் பிடித்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வந்து2 நாட்களாக விசாரித்து வருகின்றனர். ஒரு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு சென்ற சித்தாண்டி தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சித்தாண்டிக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, அங்கு அவர் உள்நோயாளியாக இருப்பதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வை பொறுத்தவரை ஒரு அறையில் தேர்வு எழுதும் நபர்களுக்கு 5 விதமான வினாத்தாள்கள் கொடுக்கப்படும். அதனால், ராமநாதபுரத்தில் இருந்து சென்னை கொண்டுவரும் வழியில் விடைத்தாள்களை அவ்வளவு எளிதாக திருத்திவிட முடியாது. தேர்வு எழுதுவதற்கு முன்பே 5 விதமான விடைகளை தெரிந்து வைத்திருக்கும் நபர்களால் மட்டுமே அதை செய்ய முடியும்.

தேர்வர்கள் வேதனை

‘வினாத்தாள் தயாரிப்பது என்பது உயர் அதிகாரிகளால் மிக ரகசியமாக செய்யப்படும் பணியாகும். எனவே, டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் உதவிஇல்லாமல் இத்தகைய மோசடிகளை செய்ய முடியாது. தற்போது,டிஎன்பிஎஸ்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முறைகேட்டில் தொடர்புடைய உயர் அதிகாரிகள் ஒருவர் மீதுகூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை’ என்று தேர்வர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தேர்வு முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் சிலருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதனடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வருவதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024