Sunday, January 26, 2020

இரண்டாவது மனைவிக்கு 'பென்ஷன்' மறுத்தது ரத்து

Added : ஜன 26, 2020 00:33

சென்னை:முதல் மனைவி இருக்கும் போதே, இரண்டாவதாக திருமணம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, 'பென்ஷன்' வழங்க மறுத்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பேரூராட்சி ஒன்றிய மருத்துவமனையில், டாக்டர் சின்னசாமி என்பவர் பணியாற்றி, ௧௯௯௯ல் ஓய்வு பெற்றார்.முதல் திருமணம் வாயிலாக, மூன்று குழந்தைகள் பெற்றார். முதல் மனைவி இருக்கும் போதே, ௧௯௭௫ல், சரோஜினிதேவி என்பவரை, இரண்டாவதாக திருமணம் செய்தார். அவரும், மூன்று குழந்தைகள் பெற்றார்.முதல் மனைவி, ௧௯௯௭ல் இறந்தார். அதைத் தொடர்ந்து, பென்ஷன் தொகையை பெற, இரண்டாவது மனைவியை நியமித்தார்.கடந்த, 2009ம் ஆண்டில், டாக்டர் சின்னசாமி இறந்தார். பென்ஷன் தொகையை தனக்கு தரக்கோரி, சரோஜினிதேவி, மனு அளித்தார். அதை, உள்ளாட்சி கணக்கு தணிக்கை அதிகாரி நிராகரித்தார்.டாக்டர் சின்னசாமிக்கும், சரோஜினிதேவிக்கும் நடந்த திருமணம் செல்லாது என்பதால், அவரை சட்டப்பூர்வ பிரதிநிதியாக கருத முடியாது என, காரணம் கூறப்பட்டது.பென்ஷன் வழங்க மறுத்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சரோஜினி தேவி மனு தாக்கல் செய்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.தாமரைசெல்வன் ஆஜரானார்.

மனுவை விசாரித்த, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:முதல் திருமணம் அமலில் இருக்கும் போதே, இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. அதை, சட்டம் அங்கீகரிக்கவில்லை. முதல் மனைவி இறந்த பின்னும், டாக்டர் சின்னசாமி இறக்கும் வரை, 12 ஆண்டுகள், அவருடனே சரோஜினிதேவி வாழ்ந்து உள்ளார்.கடந்த, 1975 முதல், 2009 வரை, 34 ஆண்டுகள், டாக்டர் சின்னசாமியுடன் சரோஜினிதேவி வாழ்ந்துள்ளார்; மூன்று குழந்தைகளும் பெற்று உள்ளார்.முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, பென்ஷன் தனக்கு வேண்டும் என கோரியிருந்தால், அதை பெற உரிமையில்லை எனக் கூறலாம். முதல் மனைவி இறப்புக்கு பின்னும், கணவன் - மனைவியாக, டாக்டர் சின்னசாமியும், சரோஜினிதேவியும் தொடர்ந்துஉள்ளனர். தன் மரணத்துக்கு பின், பென்ஷன் தொகையை பெற, மனுதாரரை டாக்டர் சின்னசாமி நியமித்துள்ளார். எனவே, பென்ஷன் வழங்க மறுத்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.சின்னசாமி இறந்த நாள் முதல், மனுதாரருக்கு பென்ஷன் வழங்க உத்தரவிடப்படுகிறது. 12 வாரங்களுக்குள் இதை வழங்க வேண்டும். அவரது வாழ்நாள் வரை, பென்ஷன் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.03.2024