நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தற்கொலையை தடுக்க... கண்காணிப்பு!
Updated : ஜன 26, 2020 00:24 | Added : ஜன 25, 2020 23:50 |
புதுடில்லி: மருத்துவ மாணவி, 'நிர்பயா' பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதை அடுத்து, அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என தகவல் வெளியானதால், சிறையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், திகார் சிறை நிர்வாகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையே, தண்டனை நிறைவேற்றத்தை இழுத்தடிக்கும்முயற்சியாக, குற்றவாளி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, 2012ல், ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானார். அவரை கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கிய அந்த கும்பல், பின், பஸ்சில் இருந்து வெளியில் துாக்கி வீசியது.
இறந்தார்
மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த வழக்கில், குற்றவாளிகளான வினய் சர்மா, 26, அக் ஷய் குமார், 31, முகேஷ் குமார், 32, பவன் குப்தா, 26, ஆகியோருக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இம்மாதம், 22ல் துாக்கு தண்டனை நிறைவேற்ற, 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.
தண்டனையை இழுத்தடிப்பதற்காக நான்கு பேரும், ஒருவர் மாற்றி ஒருவராக கருணை மனு, சீராய்வு மனுக்களை தாக்கல் செய்ததால், ஏற்கனவே அறிவித்த தேதியில் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை. முகேஷ் குமார் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை அடுத்து, பிப்., 1ல், நான்கு பேருக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்ற, மீண்டும் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.டில்லி திகார் சிறையில் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாற்றம்
இந்நிலையில், குற்றவாளிகள் நான்கு பேரும் தற்கொலை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறை வட்டாரங்கள் கூறியதாவது:குற்றவாளிகள் நான்கு பேரும், சிறை எண், 3க்கு மாற்றப்பட்டுள்ளனர். அதிக பாதுகாப்பும், கண்காணிப்பும் உடைய, தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள அறைகளில், துணி, இரும்பு உள்ளிட்ட எந்தவிதமான பொருட்களும் இல்லை.இயற்கை உபாதையை கழிப்பதற்கு, அவர்களது அறையிலேயே கழிப்பறை உள்ளது.
கழிப்பறையில் அமர்ந்திருந்தாலும், தலை வெளியில் தெரியும் வகையில், சிறிய தடுப்பே வைக்கப்பட்டுள்ளது. நான்கு அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இவற்றில் பதிவாகும் காட்சிகள் கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு அறையிலும், இரண்டு போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தினமும் இரண்டு முறை, அறைக்குள் சென்று, போலீசார் சோதனையிடுகின்றனர். இதுவரை, திகார் சிறையில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட எந்த குற்றவாளிகளுக்கும், இது போன்ற கண்காணிப்பு இருந்தது இல்லை. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, வினய், அக் ஷய், பவன் குப்தா ஆகியோர் சார்பில், டில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணை மனு மற்றும் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, தங்களுக்கு சில ஆவணங்கள் தேவைப்படுவதாகவும், திகார் சிறை அதிகாரிகள், அந்த ஆவணங்களை தர மறுப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு, நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏ.பி.சிங் வாதாடியதாவது:திகார் சிறை அதிகாரிகள், வினய்க்கு, மெல்ல மெல்ல கொலை செய்யும் வகையிலான, 'ஸ்லோ பாய்சன்' என்ற விஷத்தை கொடுத்தனர். இதனால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பான மருத்துவ அறிக்கையை கேட்டபோது, அதிகாரிகள் தர மறுத்து விட்டனர். இதேபோல், வினயின் டைரியையும் தரவில்லை. தங்களிடம், இது தொடர்பான எந்த ஆவணங்களும் இல்லை என்கின்றனர்.
சிறையில், வினய், ஏராளமான ஓவியங்களை வரைந்துள்ளார். இது குறித்து ஜனாதிபதிக்கு தகவல் தெரிவித்து, கருணை மனு தாக்கல் செய்ய விரும்புகிறோம். ஆனால், தகவல்களை தர அதிகாரிகள் மறுக்கின்றனர்.பவன் குப்தாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது தொடர்பான மருத்துவ அறிக்கையையும் அதிகாரிகள் தரவில்லை; அக் ஷய் குமாரின் மருத்துவ அறிக்கையும் தரப்படவில்லை.
இந்த விபரங்கள் எல்லாம் இருந்தால் தான், இவர்களால் கருணை மனு மற்றும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த ஆவணங்களை வழங்கும்படி, சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அவர் வாதாடினார். இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடியதாவது:குற்றவாளிகள் தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களும் அளிக்கப்பட்டு விட்டன. தண்டனையை தள்ளிப் போடும் நோக்கத்தில், இது போன்ற மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளிகளின் நோட்டுகள், ஓவியங்கள் ஆகியவை எங்களிடம் உள்ளன. குற்றவாளிகளிடம் அதை ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால், ஒப்படைக்க தயார். ஆனாலும், எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறுவது போல், டைரி எதுவும் எங்களிடம் இல்லை. இவ்வாறு, அவர் வாதாடினார்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:குற்றவாளிகளின் நோட்டு, புத்தகங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை, அவர்களது வழக்கறிஞர்கள் புகைப்படம் எடுத்து கொள்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி, குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்ட ஆவணங்களை, சிறை அதிகாரிகள் கொடுத்துள்ளனர். எனவே, இந்த வழக்கில், இதற்கு மேல், வேறு எந்த ஆவணங்களையும் கொடுக்கும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
முகேஷ் குமார் மீண்டும் மனு
மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் குற்றவாளியான முகேஷ் குமார், ஏற்கனவே தாக்கல் செய்த கருணை மனுவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, முகேஷ் குமார் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. 'கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது குறித்து, நீதிமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
வரும், 1ம் தேதி, நான்கு குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நேரத்தில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், தண்டனை நிறைவேற்றம் மேலும் தள்ளிப் போகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
No comments:
Post a Comment