Sunday, January 26, 2020

64 முறை தவறு செய்த கண்டக்டர்

Added : ஜன 26, 2020 00:26

சென்னை:தொடர்ந்து, 64 முறை தவறு செய்து, சிறிய அளவில் தண்டனை பெற்ற, அரசு பஸ் நடத்துனரை, பணி நீக்கம் செய்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'சிறிய தண்டனை பெற்று தப்பி விடலாம் என நினைப்பவருக்கு, பெரிய தண்டனை காத்திருக்கிறது' என்பதையும், உயர் நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், எம்.சேகர் என்பவர் நடத்துனராக பணியாற்றினார். பயணியரிடம் பெறப்படும் டிக்கெட் கட்டணத்தை, தாமதமாக கட்டுவதாக, இவருக்கு எதிராக புகார் கூறப்பட்டது.இவ்வாறு, 64 முறை தாமதமாக பணம் செலுத்தியதாக தெரிகிறது. இது தவிர்த்து, அனுமதியின்றி பணிக்கு வராமல், பலமுறை இருந்ததாகவும் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுகள் அடங்கிய, 'மெமோ' வழங்கப்பட்டு, 2006 ஏப்ரலில், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். பின், இவர் அளித்த விளக்கத்துக்கு பின், பணி அமர்த்தப்பட்டார்.மேல்முறையீடுஅதைத்தொடர்ந்து, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. சேகருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக, விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார்.இதையடுத்து, அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, கடைசியில் பணி நீக்கம் செய்யப்பட்டார். 22010 ஜூலையில், போக்குவரத்து கழக நிர்வாகம், இந்த உத்தரவை பிறப்பித்தது.பணி நீக்க உத்தரவை எதிர்த்து, வேலுாரில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில், சேகர் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, மீண்டும் பணியில் அமர்த்தும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழக நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.போக்குவரத்து கழகம் சார்பில், வழக்கறிஞர் ரஜினி ராமதாஸ் ஆஜராகி, ''தொடர்ந்து, ௬௪ முறை தவறு செய்துள்ளார். ஆறு முறை அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்துள்ளார்.''கருணை அடிப்படையில் பணி வழங்க, தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பணி நீக்க உத்தரவில், தொழிலாளர் நீதிமன்றம் குறுக்கிட்டிருக்கக் கூடாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு பிறப்பித்த உத்தரவு:தொழிலாளர் நல நீதிமன்றத்துக்கு, தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. இயந்திரகதியாக, காரணம் எதையும் தெரிவிக்காமல், இத்தகைய அதிகாரத்தை செயல்படுத்த முடியாது. எச்சரிக்கையுடன், இந்த அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும்.
மன உறுதி

பணி நீக்க உத்தரவு எப்படி நியாயமற்றது என்பதற்கு, தொழிலாளர் நல நீதிமன்றம் காரணம் தெரிவிக்கவில்லை.கருணை அடிப்படையில், தண்டனையை மாற்றி உள்ளது. சட்ட அம்சங்கள் மீறப்பட்டிருந்தால் அல்லது பின்பற்றாமல் இருந்திருந்தால், அதை ஆராய, உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.இந்த வழக்கை பொறுத்தவரை, நடத்துனரின் பணி நடத்தை சரியாக இல்லை; டிக்கெட் கட்டணத்தை தாமதமாக செலுத்தியது; குறைவான தொகையை செலுத்தியதற்காக, 64 முறை சிறிய அளவில் தண்டனை பெற்றுள்ளார்.கடமை தவறியதற்காக, ஒன்பது முறையும், அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்ததற்காக, ஆறு முறையும் தண்டனை பெற்றுள்ளார்.பயணியருக்கு டிக்கெட் வழங்காதது; பணி நேரத்தில் போதையில் இருந்தது போன்ற காரணங்களுக்காக, இந்த தண்டனையை பெற்றுள்ளார். இவரது கடந்த கால நடத்தையை பார்க்கும்போது, தண்டனையை பொருட்படுத்தாமல், மீண்டும் மீண்டும் தவறு செய்வதை, வாடிக்கையாக வைத்துள்ளார்.

பணிபுரியும் இடத்தில், ஒழுக்கம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை உறுதி செய்ய வேண்டியது, நிர்வாகத்தின் கடமை. சிறிய அளவில் தண்டனை பெற்றும், மீண்டும் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அது குற்றம் தான். தண்டனை பெற்றும் திருந்தவில்லை என்றால், தொடர்ந்து அவரை பணியில் வைத்திருப்பது, மற்ற ஊழியர்களின் மன உறுதியை பாதிக்கும்.பணி நீக்க உத்தரவுஎனவே, பணியில் தொடர, சேகருக்கு தகுதியில்லை. பணி நீக்கம் செய்வது என, நிர்வாகம் எடுத்த முடிவு சரியானது.இதில், குறுக்கிட தேவையில்லை. தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பணி நீக்க உத்தரவு, அமலுக்கு வருகிறது.தொடர்ந்து தவறு செய்து, சிறிய தண்டனை பெற்று தப்பி விடலாம் என, எப்போதும் ஒருவர் நினைக்கக் கூடாது. மீண்டும் தவறு செய்தால், பெரிய தண்டனை காத்திருக்கிறது என்பதை, அவர் அறிய வேண்டும்.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates

Govt sends VC nominee list, guv says no SC direction to appoint state’s candidates Apr 18, 2024, 03.52 AM IST Kolkata: It might have been a ...