Friday, January 31, 2020

கை கொடுக்குமா பல்கலைக்கழகங்கள்?

By வெ. இன்சுவை | Published on : 31st January 2020 03:28 AM |

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்பார்கள்; அதேபோல முனைவர் பட்ட ஆய்வுக்கு நெறியாளர்அமைவது அவரவர் வாங்கி வந்த வரம் என்பது அனுபவப்பட்டவர்களின் கூற்று. நல்ல வழிகாட்டி பேராசிரியர்கள்அமைந்தால் மட்டுமே ஒருவரால் முனைவர் பட்ட ஆய்வறிக்கையைச் சிறந்த முறையில் சமர்ப்பிக்க முடியும்.
ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பேர் முனைவர் பட்டம் பெறுகிறார்கள் என்று அறிக்கை தரும் பல்கலைக்கழகங்கள், எத்தனை பேர் ஆய்வைப் பாதியிலேயே விட்டுவிட்டார்கள் என்று கூறுவதில்லை.
தமது துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள ஆய்வை மேற்கொள்பவர்களைவிட தனது பதவி உயர்வுக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும், சமூக மரியாதைக்காகவும் "முனைவர் பட்டம்' பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகப் போய்விட்டது. அதுவும் உயர் கல்வித் துறையில் பேராசிரியராக வேண்டுமென்றால் முனைவர் பட்டம் அவசியம். அவர்களின்அத்தியாவசியத் தேவைகளில் முதலிடம் பி.எச்டி. பட்டமே ஆகும். பெயருக்கு முன்னால் முனைவர் பட்டம் இல்லை என்றால், அவர்களுக்கு மதிப்பு இல்லை, பதவி உயர்வு இல்லை.

எத்தனை திறமையானவராக, மாணவர் நலன் மீது அக்கறை கொண்டவராக இருந்தாலும் முனைவர் பட்டம் இல்லாவிட்டால் அந்தப் பேராசிரியரால் துறைத் தலைவராகவோ, புல முதல்வராகவோ ஒருக்காலும் ஆக முடியாது. எந்த உயர்நிலைக் குழுவிலும் அவர்களின் பெயர் இணைக்கப்படாது. இத்தகைய சூழலில் ஆய்வைச் செய்பவர்கள் பாதியில் விட்டு விடுகிறார்கள்.
முனைவர்பட்டம் பெறுவது எளிதன்று. கடினமான நிபந்தனைகள், குறிப்பிட்ட காலக்கெடு, குறுகிய மனப்பான்மை கொண்ட நெறியாளர்கள் எனப்பல காரணிகள் இருப்பதால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் மாணவர்கள்ஆய்வைப் பாதியிலேயே விட்டு விடுகிறார்கள். சிலர்ஆரம்பத்திலேயே விட்டு விடுவார்கள். அவர்களுக்கு நல்ல வேலை கிடைத்திருக்கலாம். அல்லது குடும்பச் சூழல் காரணமாக இருக்கலாம். இவர்கள் குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

இன்னும் சிலர் அரைக் கிணறு தாண்டிய கதையாகப் பாதி முடித்திருப்பார்கள். இவர்களும் குடும்பம் சார்ந்த நெருக்கடிகள், சமூகக் கடமை, தேவைகள், பணிச் சுமை, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் ஆய்வைக் கைவிட்டிருப்பார்கள். அதேசமயம் இன்னொரு பிரிவினர் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து ஆய்வியல் முறைகள், ஆராய்ச்சி முறையியல், ஆராய்ச்சி நெறிமுறைகள், கோட்பாடுகள், ஆய்வுகளின் தன்மைகள், அணுகுமுறைகள் எனஅத்தனையையும் பின்பற்றி 90 சதவீத ஆய்வை முடித்தபின் என்னகாரணத்தால்ஆய்வைச் சமர்ப்பிக்க இயலாமல் போனார்கள் என்பது தெரியவேண்டாமா?

அவர்களின் முனைவர் பட்டம் கானல் நீராகிப் போனது ஏன் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் ஆராய வேண்டாமா? அவர்களின் இந்த முடிவுக்கு யார்காரணம் எனப் பார்க்க வேண்டியது அவசியம். இறுதிக் கட்டத்தில் பட்டமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் எனத் தூக்கிப் போட்ட மனநிலைக்கு அவர்களைத் தள்ளியது எது? தங்கள் உயிரையே போக்கிக் கொள்ளும்அளவுக்குப் போகிறார்களே ஏன்? உயிரை விடுமளவுக்குக் கடும் மன உளைச்சலில் இருந்தார்களா? அல்லது ஆய்வுப் படிப்பு கடினமானதா? பல இன்னல்களையும், அநியாயங்களையும் எதிர்த்துக் குரல் கொடுக்கத் தெரியாமலும், யாரிடம் சென்று முறையிடுவது என்று புரியாமலும் மௌனமாக அடங்கிப் போகிறார்கள்.

ஒவ்வொரு விடியலுக்கு முன்னும் சூழும் இருளைப் போல ஒவ்வொரு முனைவர் பட்டத்துக்கு முன்னால் பல்வேறு வலிகள், ரணங்கள், காயங்கள், ஆற்றாமைகள், கோபங்கள் எல்லாம் இருக்கக் கூடும். எந்த ஒரு நாட்டின் விடுதலையிலும் ரத்தக் கறை படிந்தே இருக்கும். அதேபோலத்தான் முனைவர் பட்ட ஆராய்ச்சியிலும், மன உளைச்சலும், மன இறுக்கமும் அடங்கியே இருக்கும்.

ஆய்வு அறிக்கைக்கு இருப்பதைப் போல நெறியாளர்களின் அணுகுமுறை குறித்த நியதிகளும் இருத்தல் அவசியம். ஒரு வழிகாட்டி ஆசிரியர் ஒவ்வோர் ஆண்டும் பல்கலைக்கழகம் அனுமதி அளிக்கும் எண்ணிக்கையில் மாணவர்களை எடுத்துக்கொள்கிறார் என்றால், அவருக்கு அத்தனை உதவியாளர்கள் கிடைத்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை.
ஆசிரியரின் பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்குக் குற்றேவல் செய்வது, வாகன ஓட்டியாக இருப்பது, ஆசிரியர் போகும் திருமண வரவேற்புக்குப் பரிசுப் பொருள் வாங்கி வருவது -இப்படிப் பலவற்றைச் செய்ய வேண்டும். நெறியாளர் குடும்பம் வெளியூருக்குப் போய்விட்டால் இவர்கள்அவர் வீட்டுக்குக் காவலாகப் படுத்துக்கொள்ள வேண்டும். மேலே கூறப்பட்ட அனைத்தும் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் கூறிய தகவல்கள்.
இது என்ன குருகுல வாசமா குற்றேவல் புரிய? ஏற்கெனவே சொற்ப சம்பளத்தில் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆய்வு மாணவர்களுக்குச் செலவு வைக்கலாமா? இதுவே பெண் ஆராய்ச்சியாளர் என்றால் வேறு விதமான தொல்லைகளை எதிர்கொள்ள வேண்டும். என்னவெல்லாம் அக்கிரமங்கள் நடக்கின்றன என்று ஒருசில சம்பவங்கள்மூலம் அறிந்துள்ளோம்.

அனைத்துப் பேராசிரியர்களும் தவறு செய்வதில்லை. கண்ணியத்தோடும், கடமை உணர்வோடும், அர்ப்பணிப்போடும் பணியாற்றுபவர்களை நாம் போற்றி வணங்குவோம். அவர்களை உயர்த்திப் பிடிப்போம்; வாழ்த்துப் பாடுவோம். குறுக்கு வழிகளைஆதரிக்காமல் மாணவர்களைச் சரியாக வழிநடத்தி, ஊக்குவித்து ஆய்வை முடிக்க வைப்பவர்கள்அவர்கள். அந்தக் கண்டிப்பு மாணவர்களின் உற்சாக ஊற்றை அடைத்து விடாது.
இதுகாறும் பல்லாயிரம் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இலக்கியத்திலாகட்டும், தொழில்நுட்பப் பிரிவிலாகட்டும் எத்தனைஆய்வுகள்ஆக்கபூர்வமான சிந்தனைக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் முன்னோடிகளாக உள்ளன என்பதை அறிவிக்க வேண்டும். படைப்பாளிகளின் வளம்மிக்க சிந்தனைகளைத் தமது ஆராய்ச்சி அறிவினால் வெளிக்கொண்டு வருவது சிறந்த இலக்கியத் திறனாய்வு எனலாம்.

தொழில் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் நேரமும், உழைப்பும், பணமும் விரயமே. ஆனால், இன்றைக்குப் பல ஆய்வுகளும் வெறும் பட்டம் பெற மட்டுமே என்பதுதான் எதார்த்தமான உண்மை.
ஆய்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்குத் தரம் உயரவில்லை. காரணம், இதிலும் வியாபார நோக்கு ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் ரூ.5 லட்சம் கொடுத்தால் விரும்பிய பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றுத் தருவதாக செல்லிடப்பேசியில் அழைப்பு வருகிறது. தயாரிப்பாளரே எல்லாவற்றையும் செய்துவிடுவார் - ஆய்வேட்டைக் கணிப்பொறியில் தட்டச்சு செய்வது, கட்டமைப்பது எனஅனைத்தையும் முடித்து விடுவார். ஆய்வேட்டைத் திருத்துபவரையும் கவனித்துக் கொள்வார். ஆய்வறிக்கைகள் இவ்வாறு விற்பனை செய்யப்படும்போது தரமானஆய்வுகள் வெளிவர வாய்ப்பில்லை.

ஒரே தலைப்பைப் பலர் தெரிவு செய்கின்றனர். அறிவுத் திருட்டும் உண்டு. வாய்மொழித் தேர்வின்போது அமர்க்களமான, ஆடம்பரமானவிருந்து அவசியம். அனைத்துமே வெறும் சடங்குகளாகி விட்டன. ஆடம்பரத்தின் வெளிச்சத்தில் தரம் மங்கிப்போய் விடுகிறது.
முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர்களின் கற்பிக்கும் திறன்அதிகரித்து விட்டதா? கூடுதல் தகவலும், ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளும் மாணவர்களை மேம்படுத்துகிறதா? புதியநுணுக்கங்களைஅவர்கள் கற்றுத் தருகிறார்களா? அந்த ஆய்வைத் தொடர வேண்டும் என்று எண்ணுகிறார்களா? முனைவர் பட்டம் அவசியம் என்று மாணவர்களைக் கசக்கிப் பிழியும்போது, அதன் பயன் என்னஎன்பதை எதைக் கொண்டு அளப்பது?

நல்ல தடித்த வளமான கரும்பை இயந்திரத்திற்கு உள்ளே விட்டு எடுக்கும்போது அதன் சக்கை மட்டுமே வெளியே தள்ளப்படும். அதேபோலத்தான் மூன்று ஆண்டுகளில் களைத்துப் போய், சலித்துப் போய், வெறுத்துப் போய் ஒருமாதிரியான மனநிலையோடு "முனைவர்' என்று வெளிவருகிறார்கள். அதற்குப் பின் அந்த ஆய்வு ஆய்வேடாக மட்டுமே தங்கி விடும். ஒருவருக்கும் பயன்படாது.

நம் உயர் கல்வித் துறை இது தொடர்பாக ஏதாவது செய்தாக வேண்டும். ஊடக வெளிச்சம் படும் தற்கொலைகள்சிறிது காலம் பேசப்படுகின்றன. இல்லாவிட்டால் மறைக்கப்படுகின்றன. கல்வித் துறையில் களங்கம் இருக்கக் கூடாது. சமுதாயத்துக்கு நல்வழி காட்ட வேண்டியவர்கள், மாணவ சமுதாயத்தைத் திருத்த வேண்டியவர்கள், கடவுளுக்கும் ஒருபடி மேலே என்று கொண்டாடப்படுபவர்கள் தவறு இழைக்கக் கூடாது. ஆய்வு மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடக் கூடாது. மாணவர்கள் தங்கள் சுய கௌரவத்தை அடகு வைத்துவிட்டு பெறும் முனைவர் பட்டம் மதிப்பை இழந்த ஒன்று. தரமான மாணவர்கள், தரமான நெறியாளர்கள், தரமான ஆய்வு என்ற நிலை வரவேண்டும்.

இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற சில பேராசிரியர்கள் அதையே தங்களின் மிகப் பெரிய பெருமையாகக் காட்டிக் கொள்கின்றனர். ஏதோ அவர்கள் செய்த ஆய்வு மட்டுமே தரமானதுபோல எல்லா இடங்களிலும் அதை சீர்தூக்கிப் பேசி பிற பல்கலைக்கழங்களில் பட்டம் பெற்றவர்களை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். முனைவர் பட்டம் பெற்றவுடன் அனைவரும் ஒருநிறைதான். இங்கே எங்கே வந்தது ஏற்றத்தாழ்வு?
ஆய்வைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதிக் கட்டத்தில் நின்று விடுபவர்களைக் கண்டறிந்து, அவர்களின் பிரச்னைகளைக் கருணையோடு அணுகி, விதிகளைத் தேவைக்கேற்ப சிறிது தளர்த்தி, தேவை ஏற்பட்டால் நெறியாளர்களை மாற்றி அந்த மாணவர்களும் பட்டம் பெற பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும். மாணவர் முன்னேற்றத்துக்கு உதவத்தானே உயர் கல்வித் துறை உள்ளது? கை கொடுக்குமா உயர் கல்வித் துறை?
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024