Friday, February 6, 2015

துள்ளித் துள்ளி இதயம் கிள்ளியவர்!: அந்த நாள் ஞாபகம்

‘நல்லவன் வாழ்வான்’ படத்தில்

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நாயகர்களாக உருவாகிவந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில்தான் நடனத் தாரகை இ.வி.சரோஜாவும் சினிமாவில் நுழைந்தார். 1952-ல் வெளியான ‘என் தங்கை’ படத்தில் எம்.ஜி.ஆரின் தங்கையாக அறிமுகமானார் சரோஜா.

அந்நாளில் தமிழகம் தாண்டி இலங்கை, ரங்கூன், பினாங்கு ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்றது டி.எஸ். நடராஜனின் ‘என் தங்கை’ என்ற நாடகம். அதை அப்படியே தழுவி சினிமாவாக எடுக்கப்பட்டது. சி.எல். நாராயணமூர்த்தி, எம்.கே.ஆர். நம்பியார் ஆகியோர் திரைப்படமாக இயக்கிய அந்த நாடகத்தில், அண்ணன் வேடத்தில் நாயகனாக நடித்தவர் சிவாஜி கணேசன்.

அசோகா பிக்சர்ஸ் இந்த நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. அந்த நாடகத்தில் நடித்துவந்த சிவாஜியையே படத்திலும் ஒப்பந்தம் செய்ய விரும்பினார்கள். அப்போது அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரின் ‘பராசக்தி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.

“ பராசக்தி கதையிலும் அண்ணன் தங்கை பாசம் இருக்கிறது. ‘என் தங்கை’யிலும் அதுதான் கருப்பொருள். எனவே இதில் சிவாஜி மீண்டும் நடிப்பதைவிட எம். ஜி. ராமச்சந்திரன் பொருத்தமாக இருப்பாரே” என்றார் பெருமாள் முதலியார். அதை ஏற்று எம்.ஜி. ராமச்சந்திரனைத் தேர்வு செய்தனர். கதாநாயகனுக்கு அடுத்து கதையைத் தோளில் சுமந்து செல்வது தங்கையின் வேடம்.

ஆனால் பொருத்தமான நடிகை கிடைக்கவில்லை. அதனால் ஒரு புதுமுகத்தையே தேர்வுசெய்துவிடுவது என்று முடிவு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் புகழ்பெற்ற நாட்டியக் கலாசேத்திரமாக இருந்தது வழுவூர் பி. ராமையாப் பிள்ளையின் நடனப்பள்ளி. அதன் ஆண்டு விழாவில் அவருடைய மாணவி பி.இ. சரோஜாவின் நாட்டியத்தைக் கண்டு இவர்தான் தங்கை மீனாவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அறிமுகப் படம் மாபெரும் வெற்றிபெற்றது. பராசக்திக்கு முன்பே வெளியாகி எம்.ஜி.ஆருக்கும் புகழைக் கொண்டுவந்தது. பார்வையற்ற பெண்ணாக நடித்து அறிமுகப் படத்திலேயே பெரும் புகழ்பெற்ற இ. வி. சரோஜா தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

என்கண் தந்த கலைச்செல்வி

இன்றைய திருவாரூர் மாவட்டத்தில் பழம்பெருமை மிக்க, பாடல்பெற்ற முருகன் தலமாக இருக்கும் ‘என்கண்’தான் இ.வி.சரோஜா பிறந்து வளர்ந்த ஊர். வேணு பிள்ளை ஜானகி அம்மையார் தம்பதியின் இரண்டாவது வாரிசாகப் பிறந்த இவருக்கு சிறு வயதுமுதலே நடனத்தில் ஆர்வம். இரண்டு வயதுமுதல் அம்மாவிடம் நடனம் கற்றுக்கொண்டு பிரகாசித்தார்.

அப்போது மயிலாடுதுறை அருகில் உள்ள வழுவூர் பரதக் கலையின் வித்தக மையமாக விளங்கியது. அதற்குக் காரணம் வழுவூர்ப் பாணி நாட்டியம் டெல்லிவரை புகழ்பெற்று விளங்கியது. காண்போரை மயக்கும் லயசுத்தமும், அங்க சுத்தமும் கொண்டதே அதற்குக் காரணம். அதை உருவாக்கியவர் நாட்டிய மேதை நட்டுவனார் பி. ராமையாபிள்ளை.

திரையுலகில் அன்று முத்திரை பதித்த குமாரி கமலா, வைஜயந்திமாலா, லலிதா, பத்மினி அனைவரும் வழுவூராரின் மாணவிகளே. பதினோரு வயதில் இ.வி. சரோஜாவின் திறமையைக் கண்டு, அவரைத் தனது பள்ளியில் சேர்த்துக் கொண்டு முறைப்படி நடனம் பயிற்றுவித்தார் வழுவூரார். ஆசானின் பெயரைக் காப்பாற்றும் விதமாக 14 வயதில் அரங்கேற்றம் செய்து 16 வயதுக்குள் 100 மேடை நிகழ்ச்சிகளில் ஆடிச் சாதனை புரிந்தார் சரோஜா.

மயக்கிய மான் நடனம்

அறிமுகப் படம் தந்த புகழ் அவரை மடமடவென்று புகழ்பெற்ற நட்சத்திரமாக்கியது. ஐம்பதுகளில் ஒல்லியான உடலமைப்பு கொண்ட கதாநாயகிகள் அபூர்வம். இ.வி. சரோஜாவுக்கு ஒல்லியான உடற்பாங்குடன் அகலமான நெற்றி, நீளமான முகம், கருணையும் கவர்ச்சியும் இணைந்த கண்கள், கொவ்வை இதழ்கள், குளிர் சிரிப்பு என்று ரசிகர்களைத் தன் கண்ணியமான அழகினால் கவர்ந்தார்.

வழுவூர் பாணி நடனத்தை சினிமாவுக்கான நடத்துடன் இணைத்து ஒவ்வொரு நடன அசைவையும் இவர் நளினமாக வெளிப்படுத்திய பாங்கில் ரசிகர்கள் உருகிப்போனார்கள். இளம் மான்போல் துள்ளித் துள்ளி பல படங்களில் இவர் ஆடிய நடனம், ரசிகர்களின் இதயத்தை வருடியது.

பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநராக விளங்கிய திரைக்கதாசிரியர் ஏ. பி. நாகராஜன் கதை, வசனம் எழுதி நடித்த ‘பெண்ணரசி’ படத்தை வேணுசெட்டியாரின் தயாரிப்பில் இயக்கினார் கே.சோமு. அதில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துத் தனது திறமையான நடனத்தால் கவர்ந்தார்.

பின்னர் டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் எம்.ஜி. ஆர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த ‘குலேபகாவலி’ படத்தில், முக்கிய வேடத்தில் நடித்தார். அந்தப் படத்தில் “சொக்கா போட்ட நவாப்பு... செல்லாதுங்க ஜவாபு” என்ற பாடலுக்கு பாடி ஆடிய நடனம், சரோஜாவைப் பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தியது.

பின்னர் எம்.ஜி. ஆருக்கு வெள்ளிவிழா காவியமாக அமைந்த ‘மதுரை வீரன்’ படத்தில் கதாநாயகி பொம்மியின் (பானுமதி) தோழியாக நடித்தார். அந்தப்புரத்துக்குள் நுழைந்துவிடும் புள்ளிமானைத் துரத்திவரும் மதுரைவீரன் எம்.ஜி.ஆரை “வாங்க மச்சான் வாங்க, வந்த வழியைப் பார்த்துப் போங்க” என்று பகடி செய்யும் விதமாக இ.வி.சரோஜா பாடி ஆடிய நடனம் அமோக வரவேற்பைப் பெற்றது.

இதேபடத்தில் பானுமதி, பத்மினி ஆகியோர் ஆடிய நடனங்கள் இடம்பெற்றிருந்தாலும் இ.வி. சரோஜாவின் நடனமே ரசிகர்களைத் திரையரங்குக்குத் திரும்பத் திரும்பச் சுண்டி இழுத்தது. இ. வி. சரோஜாவின் நடனக் காட்சி இருந்தால் அந்தப் படம் வெற்றிபெறும் என்று நம்பப்பட்டது. இதனால் 50க்கும் அதிகமான படங்களில் அவரது நடனம் கதையில் பொருத்தப்பட்டது.

மதுரை வீரனுக்குப் பிறகு ‘அமர தீபம்’, ‘ பாவை விளக்கு’, ‘கற்புக்கரசி’, ’எங்க வீட்டு மருமகள்’, ‘தங்கப் பதுமை’, ‘ நீலமலைத் திருடன்’ என்று சரோஜாவுக்குப் புகழைச் சேர்த்த படங்கள் பல. நகைச்சுவை நடிகருடன் ஜோடி சேர்ந்தால் கதாநாயகி ஆக முடியாது என்ற மாயையையும் சரோஜாவே முதலில் உடைத்தார்.

சந்திரபாபுவுடன் மூன்று படங்களில் இணையாக நடித்த அவர், பிறகு எம். ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், தெலுங்குப் படவுலகில் அக்னிநேனி நாகேஷ்வரராவ் என முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். பதினைந்து வயதில் தொடங்கி 26 வயதுவரை மட்டுமே நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உட்பட சுமார் 60 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்களுக்கு நடன இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

நடனத் தாரகை

புகழின் உச்சியில் இருந்தபோது, இயக்குநர் டி.ஆர்.ராமண்ணாவைத் திருமணம் செய்துகொண்டார். தன் சகோதரர் இ.வி. ராஜனுடன் இணைந்து படநிறுவனம் தொடங்கி ‘கொடுத்து வைத்தவள்’ என்ற படத்தைத் தயாரித்தார். ப. நீலகண்டன் இயக்கிய இந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும், இ.வி.சரோஜாவும் இணைந்து நடித்தனர். இதுவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அந்தப் படத்தில் சரோஜாவின் நடிப்புக்குப் பாராட்டு மழை கிடைத்தது. ஆனால் அதுவே அவரது கடைசிப் படமாக அமைந்தது. சரோஜா ராமண்ணா தம்பதிக்கு நளினி என்ற ஒரே மகள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டாலும் நடனத்தைத் தன் கண்ணென நேசித்ததால் ‘மனோன்மணியம்’ காவியக் கதையை நாட்டிய நாடகமாக தயாரித்து இந்தியா முழுவதும் நடத்திக் காட்டி நடனத்திலும் தனது பங்களிப்பைச் திறம்படச் செய்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு இறையடி சேர்ந்தார். ஆனால் நடனத்தில் அவர் வைத்த ஒவ்வொரு அடியும் அமரத்துவம் பெற்றது.

படங்கள் உதவி: ஞானம்

லிங்கா: சிக்கலின் பின்னணி



சினிமாவில் வெற்றியும் தோல்வியும் சகஜம்தான். ஆனாலும், வெற்றி தரும் பரவசத்தைவிடத் தோல்வி கொடுக்கும் படிப்பினைதான் சினிமாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வித்திடும். ஆனால், இப்போது சினிமாவில் நடக்கும் கூத்து தனி ரகம். ஒரு படம் வெற்றியா, தோல்வியா என்பதே இங்கே திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.

அந்த விதத்தில் சமீபத்தில் வெளியான விஜயின் ‘கத்தி’, ரஜினியின் ‘லிங்கா’, விக்ரமின் ‘ஐ’ ஆகிய மூன்று முக்கியப் படங்களின் வசூல் விவரங்களே பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இந்த மூன்று படங்களின் வெற்றி - தோல்வி பற்றி அலசினால் அது இன்றைய தமிழ் சினிமா வசூல் களத்தின் நிஜமான நிலவரமாக இருக்கும்.

இந்த மூன்று படங்களையும் ஆவலுடன் பார்த்த ரசிகர்களின் மனநிலை என்ன? ‘கத்தி’ வெற்றி; ‘ஐ’ அளவான வெற்றி; ‘லிங்கா’ சுமார்! தங்களுக்கென பெரிய அளவில் ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி, விஜய் இருவரும். விக்ரம் இயக்குநர் ஷங்கருடன் கைகோத்துக் கொண்டதால் அவருக்கும் ரசிகர்கள் அளவில் சமபலமே.

ஆனாலும், கதை, படமாக்கியவிதம், திரைக்கதையின் சுவாரஸ்யம் என்கிற விதங்களில் ரசிகர்களின் கணிப்பு ‘கத்தி’, ‘ஐ’ படங்களுக்குச் சாதகமாகவும், லிங்காவுக்குப் பாதகமாகவும் அமைந்திருக்கிறது.

அடுத்து விநியோகஸ்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘கத்தி’, ‘ஐ’ ஆகிய படங்கள் எங்களுக்கு லாபம்தான். ‘கத்தி’ படத்தின் வியாபாரம் மற்றும் வசூலை ‘துப்பாக்கி’ படத்தோடு ஒப்பிட்டால் கம்மிதான். ஆனால், படம் வெளியான தீபாவளி தினத்தில் போட்டிக்கு வேறு படங்கள் இல்லை.

ஆகையால் ‘கத்தி’ மிகப் பெரிய வசூல் செய்தது. தயாரிப்பாளருக்கும், எங்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களும் நல்ல லாபம். ‘ஐ’ படமும் ஓரளவுக்கு லாபம்தான். காரணம், தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனின் வியாபார உத்தி.

கம்மியான விலைக்கு நேரடியாகத் திரையரங்கு உரிமையாளர்களுக்குக் கொடுத்தார் ரவிச்சந்திரன். இதனால் அதிகத் திரையரங்குகள் கிடைத்தன. பிரம்மாண்ட வசூல் இல்லை என்றாலும், முதல் போட்டவர்களைக் காப்பாற்றிய படமாக ‘ஐ’ இருந்தது.

‘லிங்கா’ படத்தில் எல்லாமே தலைகீழ். விளம்பரம், வியாபாரம் எல்லாம் பிரம்மாண்டமாக இருந்தாலும், அடுத்தடுத்து அந்தப் படம் கைமாறிய விதம்தான் கவலைக்குரியது. தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கையிலிருந்து ஈராஸ்... அங்கிருந்து வேந்தர் மூவிஸ்... பிறகு விநியோகஸ்தர்கள்... கடைசியாகத் திரையரங்க உரிமையாளர்களுக்குப் போனது படம். ஒவ்வொருவரும் தங்களுக்கு லாபம் பார்க்க நினைத்து, அநியாயத்துக்குப் படத்தின் விலையை ஏற்றினார்கள்.

ரஜினி படம் ரூ.5 கோடி வியாபாரமாகும் ஏரியாவில் விலை ரூ.8 கோடியானது. ஆனால், இந்த அளவுக்கு வசூல் இல்லை. சரியான விலைக்குக் கைமாறியிருந்தாலே இந்த நிலை வந்திருக்காது’ என்பது சில முன்னணி விநியோகஸ்தர்களின் கருத்து.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் தரிடம் இது குறித்துக் கேட்டபோது “‘கத்தி’ வெளியான தீபாவளி நாளில் விஷாலின் ‘பூஜை’யைத் தவிர்த்துப் பெரிய போட்டியே இல்லை. சரியான நேரத்தில் வெளியிட்டதும், ஒரு சில சர்ச்சைகளும், நல்ல கதையும் ‘கத்தி’யைக் காப்பாற்றி, முதல் போட்டவர்களையும் காப்பாற்றிவிட்டது.

‘ஐ’ விஷயத்திலும் ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ‘ஐ’ நஷ்டமான படம்தான். விநியோகஸ்தர்களுக்குத் தோல்வியான படம். என் நண்பர் திருச்சி விநியோக உரிமையை வாங்கினார். 5 கோடி 40 லட்சம் வாங்கியவருக்கு 60 லட்சத்தில் இருந்து 75 லட்சம் வரை இழப்பு வரும் நிலை. பெரிய அளவில் உருவாகியிருந்த எதிர்பார்ப்பை ‘ஐ’ பூர்த்தி செய்யவில்லை.

5 கிலோ தூக்க முடிந்த ஒருவர் தலையில் 10 கிலோவை ஏற்றிவைத்த கதைதான் ‘லிங்கா’ விஷயத்தில் நடந்தது. அந்தப் படத்தின் பிரம்மாண்ட விளம்பரத்துக்கும், வியாபாரத்துக்கும் மிகப் பெரிய வசூல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், ரஜினி படம் என்று உள்ளே வந்தவர்களுக்குப் படம் பிடிக்கவில்லை. அதனால் பெரிய நஷ்டம்” என்றார் மிக வெளிப்படையாக.

மொத்தத்தில், கத்தி - லாபம்; ஐ - எதிர்பார்த்த லாபம் இல்லை. லிங்கா - பெரிய நஷ்டம் என்பதுதான் உண்மை நிலவரம். நட்சத்திர நடிகர்கள் நடித்தாலும் படம் பெரிதாகப் போகாததற்கு வியாபார விஷயங்கள் முக்கியக் காரணங்கள் என்றாலும், மக்களை ஈர்க்கும் கதையோ, காட்சிகளோ இல்லாததுதான் உண்மையான காரணம். படத்தின் விளம்பரத்துக்காக யோசிக்கும் நேரத்தில் பாதியாவது கதைக்கு யோசிக்கலாமே என்பதுதான் ரசிகனின் எண்ணம்.

‘உப்பில்லாத உப்புமாவுக்கு ஒன்பது தட்டாம்’ என்பார்கள் கிராமத்தில். பிரம்மாண்ட விளம்பரங்களும், நட்சத்திர அடையாளங்களும் உரிய கதையில்லாமல் தடுமாறும்போது உப்பு இல்லாத உப்புமா கதைதான். நல்ல கதையும், கைக்கு அடக்கமான விற்பனையும், வெளியீட்டு நேரத்தைக் கணிக்கும் நேர்த்தியும் அமைந்தால், நிச்சயம் பெரிய நஷ்டம் என்னும் பேச்சுக்கே இடமிருக்காது என்பது வசூல் களம் கூறும் உண்மை.

பிரச்னை நகையல்ல!

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வரும்போது விலை உயர்ந்த நகைகளை அணிந்துவரக் கூடாது, செல்லிடப்பேசி கொண்டு வரக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு மாணவி தன் வகுப்புத் தோழியின் காதணிக்கு ஆசைப்பட்டு, அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற சம்பவத்தையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த நேரத்துக்கான அதிரடி நடவடிக்கையாக இருக்கலாமே தவிர, இன்றைய பள்ளிச் சூழலுக்கும் வளர் இளம் பருவம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்க முடியாது.

உறவினரை, மனைவியை, நண்பனை ஆத்திரத்தால், பொறாமையால் இறந்து போகும் நிலைக்கு காயப்படுத்தும் சம்பவங்களில் பெரும்பாலானோர் செய்யக்கூடியது, நகைகளை, உடைமைகளை எடுத்து மறைத்து, அந்தக் கொலையை யாரோ நகைக்காக செய்ததுபோல திசைதிருப்புவதுதான். வெறும் காதணிக்காக சக மாணவியைக் கொன்றிருக்கிறார் என்பது, முதல் தகவல் மட்டுமே. உண்மையில் அவர்களுக்குள் எத்தகைய நட்பு இருந்தது, அந்த நட்பு எவ்வாறு பகைமையானது, எதனால் மரணம் நேர்ந்தது என்று பல கோணங்களில் விசாரிக்க வேண்டிய வழக்கை, வெறும் காதணிக்காக கொலை என்று முடிவு செய்துவிட முடியாது.

இன்று மாணவர்கள் கொண்டு செல்லும் ஆன்ட்ராய்ட் செல்லிடப்பேசி விலை மிக அதிகம். ஏறக்குறைய எல்லா மாணவர்களும் வைத்திருக்கிறார்கள். இன்று ஒரு 100 சிசி திறன் கொண்ட இரு சக்கர வாகனத்தின் விலை சுமார் ரூ.60,000. பல மாணவர்கள், குறிப்பாக, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில்தான் வலம் வருகின்றனர். இன்றைய வளர் இளம் பருவத்தினர் அனைவரும் ஏ.டி.எம். அட்டை வைத்திருக்கின்றனர். பல மாவட்டங்களில் கல்வி உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதால், அவர்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கவே செய்கிறது. வெறும் நகை, பணம், வாகனம், செல்லிடப்பேசி இவற்றுக்காக மட்டுமே சக மாணவனையோ, மாணவியையோ கொலை செய்ய முடியும் என்றால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பள்ளிகள் கொலைக்களமாகத்தான் இருக்க வேண்டும். உண்மை நிலை அதுவல்ல.

இன்றைய வளர் இளம் பருவ மாணவர்களிடம் உள்ள சிக்கல், அவர்களது இனம் புரியா உணர்ச்சிக் கொந்தளிப்புதான். இந்த உணர்ச்சிக் கொந்தளிப்பு ஒருதலைக் காதலாக, தன் அந்தரங்கத்தில் அடுத்தவர் தலையீட்டின் காரணமாக, கேலியின் விளைவாக, பதிலுக்குப் பதில் கொடுக்கும் ஆக்ரோஷமாக இருப்பதுதான் பெரும்பாலும் இளம் சிறார்கள் குற்றத்தில் ஈடுபடக் காரணமாக அமைகிறது. இந்தச் சிக்கலை உருவாக்கக்கூடிய, வன்மம் விளையும் இடமாக பள்ளி வளாகம் இருப்பதால், இந்த உணர்வுக் கொந்தளிப்பை நெறிப்படுத்தி, அமைதிகொள்ள செய்யும் இடமாகவும் பள்ளி வளாகம்தான் இருக்க முடியும்.

வளர் இளம் பருவத்தினரின் வன்மத்துக்கு அடிப்படைக் காரணம் தாங்கள் காட்டிக் கொடுக்கப்படுவதும், தங்கள் அந்தரங்கத்தில் பிறர் தலையிடுவது அல்லது அதைத் தெரிந்துகொண்டு தங்களை மிரட்டுவதும்தான். கல்லூரி வளாகங்களில் நடக்கும் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமே இவைதான். இதே காரணங்கள் இப்போது உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி வளாகங்களிலும் பரவத் தொடங்கிவிட்டன. இந்த வகையில், உயர்நிலைப் பள்ளிகள் இளநிலைக் கல்லூரிகளாக மாறியிருக்கின்றன. இதுதான் உண்மையான சிக்கல்.

பள்ளிக்கு வராமல் தான் வெளியே சுற்றியதை வீட்டிற்குத் தெரியப்படுத்திவிட்டான் அல்லது வேறு மாணவர்களிடம் சொல்லிவிட்டான் என்பதிலும், தனது செல்லிடப்பேசியின் சேமிப்பு அறைகளைத் திறந்துப் பார்த்து அந்தரங்கங்களை அறிந்துகொண்டு விட்டான் என்பதிலும்தான் இன்று இளைஞர்களிடையே முதல் வன்மம் தொடங்குகிறது. நட்பின் எல்லை எது? ஒருவருடைய அந்தரங்கம் என்பது என்ன? எதைக் கேலி செய்யலாம்? எதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் போன்ற பொது வெளி பழகு முறைதான் இன்று பள்ளியில் சொல்லித் தரப்பட வேண்டிய பாடம். இதை எப்படிச் செய்வது என்பது குறித்துதான் நமது கல்வித் துறை சிந்திக்க வேண்டும்.

இன்றைய மாணவர்களுக்கு பாலியல் கல்வி தேவையே இல்லை. அவர்களுக்கு எல்லாமும் தெரிந்திருக்கிறது. அவர்களிடம் காதல் என்பது வெறும் உடல் கவர்ச்சி என்று பேசுவது பயனளிக்காது. அவர்களிடம் சொல்ல வேண்டியது "கைக்கிளை' குறித்தும், "பொருந்தாக் காமம்' குறித்தும்தான். ஒருவரையொருவர் நேசிப்பதுதான் காதல் என்றாலும், உன்னை நேசிக்கும்படி இன்னொருவரைக் கட்டாயப்படுத்த முடியாது என்பதை மாணவர்களுக்குப் புரிய வைப்பதுதான் இன்றைய தேவை. அதிகாரத்தாலும் பணத்தாலும் மிரட்டலாலும் காதலைப் பெற முடியாது என்பதை உணர்த்துவதுதான் இன்றைய பாலியல் கல்வியாக இருக்க முடியும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் இருபது பேருக்கு ஓர் ஆசிரியரை, அவர் வகுப்பறைக்கு வெளியே தோழனாக இருக்கும் நிலையை உருவாக்குவதும், மாணவர்களின் திசைமாறும் போக்குகளை சுட்டிக் காட்டவும், பிணக்குகளில் விலகி நின்று சிக்கலை அவிழ்க்க உதவும் நண்பனாய் இருப்பவரே இன்றைய நல்லாசிரியர். அவர் நண்பனாய், மந்திரியாய் நல்லாசிரியனுமாய் மாறுவது நிச்சயமாக மாணவர்களுக்குத் தேர்வு மதிப்பெண் கிடைக்க உதவாதுதான். ஆனால், அவர்கள் மனிதனாய் மாற அது உதவும்.

ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, மாணவர்களிடம் பழக வேண்டும் என்பதுதான் இன்றைய கல்வித் துறையின் உத்தரவாக இருக்க வேண்டும்.

Thursday, February 5, 2015

ரசித்துப் படியுங்கள்... தேர்வு பயம் காணாமல் போகும்!...by கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி



பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. தேர்வு என்றதும் பலருக்கும் இனம் புரியாத காய்ச்சல் ஒன்று எட்டிப்பார்க்கும். நன்றாக படிப்ப வர்களுக்கும் சேர்த்துதான். உண் மையில் அப்படி எல்லாம் ஒரு காய்ச்சல் இல்லவே இல்லை. எல்லாம் நாமாக கற்பிதம் செய்துகொள்வதுதான்.

தேர்வு பயத்தை விரட்டி அடிப்பது எப்படி என்பதை முதலில் கண்டறி யுங்கள். அதற்கு நான் உதவுகிறேன். தேர்வு சமயத்தில் உங்களை எந்தெந்த விஷயங்கள் பயமுறுத்துகின்றன என்பதை முதலில் பட்டியலிடுங்கள். ஒன்று, அந்த விஷயங்களை நினைக் காதீர். அவற்றை மனதிலிருந்து விலக்கி வையுங்கள் அல்லது அதனை துணிச்சலுடன் அணுகி சமாளிக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படை இதுதான்.

நாளை தேர்வு எனில் முதல் நாள் இரவு நீண்ட நேரம் கண்விழித்து படித்ததையே மீண்டும் மீண்டும் படிப்பதை நிறுத்துங்கள். தூக்கம் கெட்டால் புத்தி கெடும். மூளையின் நியூரான் சோர்வடைந்து அங்குமிங்கும் நினைவலைகள் அலைபாயும். நேற்று வரை தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் ஒப்பிக்க முடிந்த பதில் தேர்வு அறையில் மறந்து போவதற்கான மருத்துவ ரீதியான காரணங்களில் முக்கியமானது இது.

மாதிரி தேர்வுக்கு இப்போது படித்துக் கொண்டிருப்பீர்கள் அல்லவா. அதுபோலவே படியுங்கள் போதும். நாள் ஒன்றுக்கு நான்கு மணி நேரம் படித்தாலும் படிப்பதை விரும்பி, ரசித்து, கதையை படிப்பது போல படியுங்கள். அதெப்படி கெமிஸ்டிரி பாடத்தை கதையைப் படிப்பது போல படிக்க முடியும்? என்று கேள்வி எழுகிறதா? கணிதம் தொடங்கி அறிவியல் வரை எல்லாமுமே ஒரு புதிர்தான். புதிரை அவிழ்ப்பதில்தான் சுவாரஸ்யமே இருக்கிறது. அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? புரிந்து கொண்டுப் படியுங்கள். ஆராய்ந்துப் படியுங்கள். ரசித்துப் படியுங்கள். இப்படி படிப்பீர்களேயானால் கெமிஸ்ட்ரி, கணிதம் முதலான பாடங்கள் சுவாரஸ் யமான சதுரங்க விளையாட்டைப் போல... காமிக்ஸை, கதைப் புத்த கத்தைப்போல... ஒரு த்ரில் சினிமாவைபோல... உங்களை உள்ளே இழுத்துக் கொண்டு போய்விடும். அப்புறம் என்ன? பாடப் புத்தகத்தையும் தாண்டி புதிர் அவிழ்ப்பீர்கள் நீங்கள். படிப்பதின், வெற்றி பெறுவதின் மிக முக்கிய சூட்சுமம் இதுதான்.

மாதிரி தேர்வின்போதே பொதுத் தேர்வுக்கு பயிற்சி எடுங்கள். கேள்வித்தாளை கையில் வாங்கியதும், சாய்ஸில் விட வேண்டிய கேள்விகளை பார்க்காமல், நன்றாக தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுதலாம். சாய்ஸில் விட்ட கேள்வி அடுத்த மாதிரி தேர்வில் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். தெரியாமல் விட்ட கேள்விகளை குறிப்பெடுத்துக் கொண்டு, அந்த கேள்விகளுக்கான பதிலை நன்றாக மனதில் பதித்து படிக்கலாம். இதனால், தெரியாத கேள்வி மீதுள்ள பயம் பறந்து போகும். மாதிரி தேர்வில் விட்ட கேள்விக்கான பதில் அல்லது தவறாக எழுதிய பதிலை மீண்டும் மீண்டும் எழுதிப் பாருங்கள்.

சரி வந்தே விட்டது தேர்வு. தேர்வு அறைக்கு செல்லும் முன்பு நண்பர் களுடன் ஆலோசிக்க வேண்டாம். நமக்கு தெரியாத கேள்வி, பதில் குறித்து நண்பர்கள் கூறினால், பதற்றம் தொற்றிக்கொள்ளும். தெரிந்த பதிலைக்கூட பயம் மறக்கடித்துவிடும். அன்றைய தினம் காலை 8 மணி முதல் 9.30 மணிவரை தனிமையாக இருங்கள். புத்துணர்வுடன் இருங்கள். மனதை தெளிவாக வையுங்கள். தேவையற்ற பேச்சுகளையும், சுய சந்தேகங்களையும் தவிருங்கள். இதனால், நினைவு சக்தி அதிகரிக்கும். கண்ணை மூடி நான்கு முறை மூச்சை ஆழ்ந்து இழுத்து, மெதுவாக மூச்சை விடுவதன் மூலம் புத்துணர்வு பெறலாம்.

தேர்வு அறையில் கேள்வியை படிக்க அளிக்கப்படும் ஐந்து நிமிடத்தை பதற்றம் இல்லாமல் பயன் படுத்திக்கொள்ளுங்கள். தெளிந்த மனதுடன் புரிதலுடன் கேள்வித்தாளை படியுங்கள்.

தேர்வுக்கு செல்லும் போது பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேலை தேடி அலைவதை தவிர்க்கவும். பெற் றோர்கள் இதற்கு உதவ வேண்டும். பெரும்பாலும் மாதிரித் தேர்வில் பயன்படுத்திய பேனாவையே பொதுத் தேர்விலும் பயன்படுத்துங்கள். பழைய பேனா தவறில்லை. புதுப் பேனா மக்கர் செய்தால், தேவையில்லாத குழப்பம் தானே.

தெரியாத கேள்விக்கான விடையை எழுத வேண்டாம். சென்ற ஆண்டு ஒரு மாணவி மூன்றாம் கேள்விக்கான விடையைத் தெரியாமல் எழுதிவிட்டு, பின், அதனை அடித்து விட்டு நான்காம் கேள்விக்கான விடையை அருமையாக எழுதி முடித்தார்.

ஆனால், கேள்வி எண் மூன்று என்பதை நான்காக மாற்றத் தவறியதால், மதிப்பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதில் மிகுந்த கவனம் தேவை.

குளிர் காலத்தில் இருந்து கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால், உடல் நிலையை பராமரிப்பதும் அவசியம். படிப்பு... படிப்பு... என்று வீட்டில் முடங்கியிருக்காமல், தினமும் ஒரு மணி நேரமாவது நடைப்பயிற்சி செல்லுங் கள். தேர்வு அறையில் தலைவலி, ஜல தோஷம் உள்ளிட்ட உடல் உபாதை களைத் தவிர்க்க உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அடிக்கடி காஃபி, சாக்லெட், குளிர்பானங்கள் அருந்த வேண்டாம். காஃபியில் உள்ள கோக்கைன் ரசாயனம் மந்தநிலையை ஏற்படுத்தக் கூடியது.

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி கொண்டிருக்கும்போது பெற்றோர்கள் வீட்டு பிரச்சினைகளை பேச வேண்டாம். குடும்ப சச்சரவுகளை தவிர்க்கவும். தொலைக்காட்சி சீரியல் களையும் தவிர்க்கவும். அதேபோல் குழந்தைகளிடம் தாழ்வு மனப் பான்மையை உருவாக்கும் வகையில் பேச வேண்டாம்.

தவிர்க்க வேண்டியவை...

* கணித தேர்வுக்கு ஏழு நாட்கள் விடுமுறை உள்ளதால் கேள்வித்தாள் கடினமாக இருக்கும் என்கிற பயத்தை கைவிடுங்கள்.

* தேர்வு முடிந்ததும் எழுதி முடித்த வினா - விடை குறித்து ஆலோசனை செய்வதும், அதனை மறுமதிப்பீடு செய்வதும் வேண்டாம். முடிந்ததை நினைத்து அடுத்தத் தேர்வை சொதப்பிக்கொள்ள வேண்டாம்.

* இறுக்கமான ஆடை அணிந்து தேர்வுக்கு செல்ல வேண்டாம். அது இனம் புரியாத அசவுகர்யத்தை ஏற்படுத்தும்.

பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?



பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...

உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?

பிடித்த உடை எது?

பிடித்த விளையாட்டு எது?

பிடித்த பாடம் எது?

பிடித்தமான ஆசிரியர் யார்?

உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?

மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.

இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.

பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.

ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.

ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.

ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.

மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.

தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.

பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.

தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...

 “உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!

 அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.

 “மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...” என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.

 “நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.

பேராசிரியர் எஸ்.கதிரவன், உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்

மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்


''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

விதிகளின்படி பாஸ்போர்ட் பெற அசல் சான்றிதழ்களை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்காக இந்த விதியிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விதிவிலக்கு அளித்துள்ளது. அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத போது, சில ஆவணங்களை முக்கியமாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இருப்பதாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ், பாஸ்போர்ட் பெற தேவையான அசல் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் ( பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் சான்றொப்பத்துடன்), தற்போது பயிலும் கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் விளக்கம் பெறப்படும். மேலும் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக விழிப்புணர்வு மையத்தை வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்

ரேஷன் கார்டு இருந்தால்தான் ஆதார் கார்டா?



ஆதார் அடையாள அட்டை... இந்த வார்த்தையை தற்போது உச்சரிக்காதவர்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆதார் என்ற வார்த்தை மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஏனென்றால் வங்கி கணக்கு முதல் சமையல் எரிவாயு மானியம் பெற இந்த அடையாள அட்டையின் எண்தான் கேட்கப்படுகிறது.

ஏற்கனவே அந்தந்த ஊர்களுக்கு சென்று ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது வெளியூரில் இருந்து வரமுடியாத சூழல் என பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் அடையாள அட்டை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் தாசில்தார் அலுவலகங்களிலும் தற்போது ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒரு அடையாள சிலிப் வழங்கப்பட்டது. அந்த அடையாள சிலிப் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட சிலிப் கொண்டு வராதவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டைக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க கூடியவர்கள் என்.பி.ஆர் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து வருகிறார்கள்.

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 18 அடையாள சான்றிதழை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவைகள்: பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு அடையாள அட்டை, என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், புகைப்படத்துடன் கூடிய வங்கி ஏடிஎம் கார்டு, புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை, கிசான் பாஸ்புக், சிஜிஎச்எஸ்/இசிஎச்எஸ் அடையாள அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, கெஜட் அதிகாரி மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அரசால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை / மருத்துவ ஊனமுற்றவர் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச சான்றிதழ்.

இதேபோல், ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 20 முகவரி சான்றிதழ்கள் வருமாறு: பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், அஞ்சல பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வீட்டு மின்சார ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), வீட்டு குடிநீர் ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), தொலைபேசி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), சொத்து வரி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி முத்திரையுடன் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், அரசால் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைக்படத்துடன் கூடிய கடிதம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை.

வயதை கணக்கிட பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், குரூப் ஏ கெஜட் அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்று போதுமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்போது பிரச்னை என்னவென்றால், தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் வாங்க சென்றால் முதலில் ரேஷன் கார்டு இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட மாட்டாது என்று மறுக்கிறார்கள். தன்னிடம், வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை இருக்கிறது என்று கூறினாலும், ரேஷன் கார்டுதான் வேண்டும் என்று தடாலடியாக பேசி அவர்களை அனுப்பி வைத்துவிடுகிறார்கள் அலுவலக ஊழியர்கள்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட தாசில்தாரின் உதவியாளர் காந்திமதியிடம் கேட்டபோது, "நாங்கள்தான் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். இதற்கு காரணம், ஏற்கனவே ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை அடையாள அட்டை வராதவர்களும் வந்து விண்ணப்பம் வாங்கிச் சொல்கிறார்கள். இதனை தடுக்கவே ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுக்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை நாங்கள் கணினியில் பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு நம்பர் ஏற்கனவே பதிவாகியுள்ளதா என்பது தெரிந்துவிடும். இதனாலேயே ரேஷன்கார்டு கேட்கிறோம். ஆதார் அடையாள அட்டைக்கு ஏற்கனவே புகைப்படம் எடுத்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். அவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை வந்துவிடும்" என்றார்.

-சகாயராஜ்

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...