தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் பணிகளுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களில் கமிஷன் கொடுக்க முன்வருவதால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள். ' பொதுப்பணி தொடங்கி பள்ளிக்கல்வி வரையில் பழைய நோட்டுக்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுகின்றனர். அரசின் பணிகளும் மொத்தகமாக முடங்கியுள்ளன' என வேதனைப்படுகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.
மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பால், சிறு வணிகர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியான சில நாட்களில், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக், ஆவின், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் சில்லறை நோட்டுக்களாக மாற்றிக் கொண்டனர் சில அமைச்சர்கள். மூன்று தொகுதி தேர்தல்களுக்கும் தேவையான சில்லறை நோட்டுக்களும் அரசு நிறுவனங்களில் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்பின்னர், அரசு சார்பாக அறிவிக்கப்படும் பணிகள் உள்பட இதர வருமானங்களையும் 100 ரூபாய் மற்றும் புதிய நோட்டுக்களாகவே அமைச்சர்கள் கேட்கின்றனர்.
"வணிகவரித்துறை, சி.எம்.டி.ஏ, டாஸ்மாக் உள்பட அரசின் வளம் கொழிக்கும் துறைகளில் அன்றாடம் வர வேண்டிய கமிஷன் தொகையை, சில்லறை நோட்டுக்களாகவே அதிகாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். ஒவ்வொரு துறையின் முக்கியப் புள்ளிகளுக்கும் சில்லறை நோட்டுக்களாக பணத்தைக் கொடுத்துவிடுகின்றனர். அன்றாட வருமானத்தை குறிவைத்து, தனியார் யாரும் பயன்பெற்றுவிடக் கூடாது என்பதற்காக டாஸ்மாக், இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட துறையில், வங்கிகளில் செலுத்தும் தொகைகளுக்கான டினாமினேஷன்களை நகல் எடுத்து தலைமையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசுத் துறைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் பணத்தைக் கையாள்கின்றனர் ஊழியர்கள்.
"மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக, கடந்த மாதம் பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய தொகைள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்குள் ரூபாய் நோட்டுக்கள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், துறையின் முக்கியப் புள்ளிக்குச் சேர வேண்டிய தொகைகளை வழங்க முடியவில்லை. இதனால், வாரியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளையும் முடக்கி வைத்துவிட்டனர். இந்தப் பணிகளை எல்லாம், பல மாதங்களுக்கு முன்பே நிறைவு செய்துவிட்டனர். மின்வாரியத்தில் இருந்து நிதிகளை அளிக்காமல் இழுத்தடிப்பதால், ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை உள்பட பல துறைகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை யாருக்கு ஒதுக்க வேண்டும் என அமைச்சர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகின்றனர். அதற்கேற்ப, கமிஷன் தொகைகளும் முன்பே பெற்றுக் கொள்வது வழக்கமான நடைமுறை. நடப்பு பட்ஜெட்டில் அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகளுக்குக் கடந்த மாதம் டெண்டர்கள் விடப்பட்டன. இவற்றை உடனடியாக செய்து முடிப்பதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுப் பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறு, குளம் தூர்வாருதல், புதிய கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்கான ஒதுக்கப்பட்ட நான்காயிரம் கோடி ரூபாய் வரையில் முடங்கியுள்ளன. காரணம். பழைய நோட்டுக்களில் கமிஷன் கொடுப்பதுதான்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.
"பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள், நாற்காலிகள், ஆய்வக உபகரணங்கள் ஆகிய பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாய் கமிஷனாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.20 கோடி ரூபாயும் மூத்த அமைச்சர் ஒருவரின் உறவினர் 4.80 கோடி ரூபாயும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தை நல்ல நோட்டுக்களாக மாற்ற துறையின் புள்ளிகள் பட்டபாடு தனிக்கதை. வருகிற ஜனவரி முதல் வாரத்தில் அடுத்தகட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான வேலைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ' புதிய நோட்டுக்கள் அல்லது 50, 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்' என அதிகாரிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். ஒப்பந்ததாரர்களும் சில்லறை நோட்டுக்களாக மாற்றும் வேலையில் முனைப்போடு இறங்கியுள்ளனர்.
நடப்பு ஆண்டில், நெடுஞ்சாலை, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்காக துறையின் மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்தனர் ஒப்பந்ததாரர்கள். அவர்களிடம் பேசிய அமைச்சர், ' பழைய 500, 1000 ரூபாய் என்றால், யாரும் கமிஷனை எடுத்துக் கொண்டு வர வேண்டாம். இதுதவிர, வேறு எந்த ரூபாய் நோட்டு என்றாலும், உடனே வரவும்' என நேரடியாகவே கூறிவிட்டார். மற்ற துறைகளின் அமைச்சர்களும் கெடுபிடியாக இருக்கின்றனர். இதனால், சில்லறை ரூபாய் நோட்டுக்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. அதற்குள் யாராவது முந்திக் கொண்டு போய் புதிய நோட்டுக்களைக் கொடுத்துவிட்டால், அவர்களுக்கே பணிகளை ஒதுக்கீடு செய்துவிடுகின்றனர்" என ஆதங்கப்பட்டார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.
புதிய ரூபாய் நோட்டுக்களின் வரவால் அமைச்சர்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளதாக குரல் எழுப்புகின்றனர் கோட்டை வட்டாரத்தில். ' வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்' என்கின்றனர் சில அதிகாரிகள்.
-ஆ.விஜயானந்த்