Friday, January 15, 2016

யானைகளின் மன அழுத்தம்! By ஆர்.ஜி. ஜெகதீஷ்


First Published : 15 January 2016 01:19 AM IST
மனிதனுக்கு ஏற்படும் மன அழுத்தத்துக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பச் சூழ்நிலைகள், வேலைப் பளு, கடன் பிரச்னைகள் மற்றும் உளவியல் ரீதியான குறைபாடுகள் போன்றவை அதில் முக்கிய காரணிகளாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனிதனின் மன அழுத்தம் தீர்வதற்கு மனநல மருத்துவர்கள் உதவுவார்கள், அவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படும்.
 ஆனால், பிரமாண்ட வன விலங்கான யானைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கு ஆலோசனை எப்படி வழங்க முடியும்? யானைகளுக்கு உடலில் ஏற்படும் உபாதைகளுக்கு மருத்துவத்தில் தீர்வு உண்டு. ஆனால், இப்போது யானைகள் கடும் மனை உளைச்சலில் இருப்பதாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
 மேலும், யானைகளுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தத்துக்கு மனிதனே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். அதன் விளைவே யானை - மனிதனுக்கு இடையே நடைபெறும் மோதல்.
 இதனை, மோதல் என்று சொல்லுவதைவிட யானை - மனிதன் எதிர்கொள்ளல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதே சரியானதாக இருக்கும்.
 யானைகளின் குணாதிசயங்கள் கடந்த 20 ஆண்டுகளில் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. இதற்கு யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்படுவதும், காடுகளில் இயற்கை வளம் குறைந்து வருவதுமே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது.
 நம்முடைய முந்தைய தலைமுறையினர் வனங்களில் வசித்தபோது, யானைகளுடன் இணைந்தே வாழ்ந்தனர்.
 அப்போதெல்லாம் இல்லாத இந்த மோதல், இப்போது அதிகமாகியிருப்பதற்குக் காரணம் ஆக்கிரமிப்புகளே. முக்கியமாக, இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு யானை, காடுகள் குறித்த புரிதல் கடுகளவும் இல்லை.
 முன்பெல்லாம் வயதான யானையின் தலைமையில் ஒரே கூட்டமாக யானைகள் இடம்பெயரும். இப்போது யானைகளும், மனிதர்களைப்போல கூட்டுக் குடும்ப வழக்கத்தை விட்டுவிட்டன.
 வயதான யானையின் வழிகாட்டுதலில் மற்ற யானைகள் செல்லும்போது, மனிதர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் இருந்தது. இப்போது பல்வேறு சுற்றுச் சூழல் மாறுதல்களால் யானைக் குடும்பம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயருகின்றன.
 ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20 முதல் 30 யானைகள் இருக்கும். இப்போது 6 முதல் 10 யானைகள் மட்டுமே இருக்கின்றன. இதனால், யானைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது.
 யானை ஒரே இடத்தில் வசிக்கும் விலங்கினமும் அல்ல. அது இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால் மனிதனின் இடத்தை நோக்கி நகர்கின்றன.
 அப்படி நகரும் யானைகளுக்கு, மனிதன் தன்னை பாதுகாக்க அமைத்துக் கொண்ட மின் வேலிகள் இடையூறாக இருக்கின்றன. வேலியைத் தொடும்போது மின்சாரம் பாயும் என்பதையும், இதனைச் செய்வது மனிதன்தான் என்பதையும் யானைகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றன.
 அந்த நிமிஷத்தில் இருந்து யானை, மனிதனை எதிரியாகவே பார்க்கும். யானை பெரிய விலங்கினம் மட்டுமல்ல; புத்திக் கூர்மை வாய்ந்ததும் கூட. இதில் உச்சபட்சமாக முதுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் வனச் சுற்றுலாவை இப்போது யானைகள் பெரிதும் வெறுக்கத் தொடங்கியுள்ளன.
 ஜீப்பின் சத்தமும், மனிதனின் கூச்சலும், கும்மாளமும் அவற்றுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறது. மசினக்குடி வனப் பகுதியில் இருக்கும் யானைகளுக்குத் தனியார் ஜீப்புகளைக் கண்டால் ஆகாது. இந்தத் தனியார் வாகன ஓட்டிகள், பயணிகளைக் குஷிப்படுத்தும் நோக்கில் கூட்டமாக இருக்கும் யானைகள் அருகே சென்று ஒலி எழுப்புவது, பின்புறமாக இடிப்பது போன்ற சீண்டல்களில் பல காலமாக ஈடுபட்டு வந்தனர்.
 இதை முன்பெல்லாம் சகித்துக்கொண்ட யானைகள், இப்போதெல்லாம் ஜீப்பைக் கண்டால் துரத்த ஆரம்பிக்கின்றன. இதே போல, 2013-ஆம் ஆண்டு கோலின் மானல் என்ற 67 வயது இங்கிலாந்து சுற்றுலாப் பயணி தனியார் ஜீப்பில் சுற்றுலாச் சென்றார்.
 அப்போது, எதிரே வந்த ஒற்றை யானையைக் கண்டவுடன் வாகனம் ஓட்டி வந்த நபர் ஓடிவிட்டார். யானையைப் புகைப்படம் எடுத்த அந்த இங்கிலாந்து பயணியை அந்த ஒற்றை யானை கொன்றது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
 மனிதர்களாகிய நாம் நம் சந்தோஷத்திற்காக யானைகளை அவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கிறோம். எழுத்தாளர் ஜெயமோகனின் "யானை டாக்டர்' என்கிற சிறுகதையில் "டாப்ஸ்லிப்' வனப்பகுதியில் பணி புரிந்த கால்நடை மருத்துவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி யானைகளுடனான அனுபவத்தை விவரித்து இருப்பார்.
 மேலும், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி யானைகளின் உடல்நிலையை பேணுவதற்காக உருவாக்கிய விதிமுறைகள்தான் இந்திய வனவியல் துறையின் கையேடாக இன்றளவும் உள்ளது.
 யானைகள் மிகவும் அதிக நுட்பமான உணர்வுகள் உள்ள விலங்கினம். காட்டு யானைகளுக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால், அவை தன் கூட்டத்துடன் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தியைத் தேடி சிகிச்சைக்காக வரும் என ஜெயமோகன் தன் சிறுகதையில் குறிப்பிட்டு ஒரு சம்பவத்தைச் சொல்லியிருப்பார்.
 இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை, யானைகளுக்குத் தேவையான, உகந்த சூழலை ஏற்படுத்தி யானைக்கும் - மனிதனுக்கும் மோதல் ஏற்படாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளலாம், இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வும் அதுவே!

 


Thursday, January 14, 2016

ஜல்லிக்கட்டு: அவசரச் சட்டம் தீர்வாகுமா?

First Published : 14 January 2016 01:10 AM IST
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் தடை விதித்துள்ளதால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் கலாசாரம் தொடர்புடைய ஒரு வீர விளையாட்டுக்கு, மாநிலத்தில் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கும் ஒரு நிகழ்வுக்கு ஜனநாயக நாட்டில் அளிக்கப்படும் மரியாதை இவ்வளவுதானா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த ஓரிரு நாள்களே உள்ள நிலையில் இந்தத் தடை உத்தரவு ஜல்லிக்கட்டு கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி இந்த வீர விளையாட்டை நடத்துவதற்கு மத்திய அரசோ அல்லது மாநில அரசோ ஓர் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது இப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கோரிக்கை. தடை விதிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்து விட்டது அல்ல.
 முதல் தடை விதிக்கப்பட்டது கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம். இதுவரையில், சுமார் 18 மாதங்கள் உருண்டோடி விட்டன. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரையில் இந்தப் பிரச்னையில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழர் நல அமைப்புகளும் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. இப்போது, தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குகிறது. வாக்கு வங்கி அரசியல் எல்லோரையும் விழித்துக் கொள்ளச் செய்துள்ளது.
 மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற ஒருமித்த குரலில், இனிமேல் மத்திய அரசை எதிர்பார்க்காமல் மாநில அரசே அதை செய்ய வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு இனிமேல் வாய்ப்பில்லை என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிரித்து விட்டார்.
 தமிழக அரசு ஓர் அவசரச் சட்டத்தை, ஏன் நிர்வாக ரீதியிலான ஓர் உத்தரவை பிறப்பித்தாலே போதுமானது என்று யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், அவையெல்லாம் சட்டப்படி செல்லுபடியாகுமா? ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வாக அமையுமா என்ற கேள்விகள் எழாமல் இல்லை. இதற்கு வேறு எங்கும் முன்னுதாரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை.
 ஜல்லிக்கட்டுக்குப் புகழ்பெற்ற மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை விவகாரமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடிக்கு உயர்த்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் கடந்த 2006-இல் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பை செயலற்றதாக்கும் வகையில் கேரள அரசு உடனடியாக பாசனம் மற்றும் நீர் பாதுகாப்பு சட்டத் திருத்தத்தை அம்மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றியது.
 அதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவின்பேரில் அந்த சட்டம் செல்லாது என கடந்த 2014-இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், ""கேரள அரசின் 2006-ஆம் ஆண்டு சட்டத் திருத்தமானது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயலிழக்க வைக்கும் வகையில் அரசியல் சட்டம் அனுமதிக்காத ஒன்றை நேரடியாகக் கோருகிறது'' என கூறியது.
 அதாவது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை விரும்பாத மாநில அரசுகள், அவரவர் விருப்பம்போல சட்டங்களையோ அல்லது அவசரச் சட்டத்தையோ நிறைவேற்றிக் கொண்டால் நிலைமை என்னவாகும்? அது நீதித்துறையின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட சவாலாகவே இருக்கும். இன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 142 அடிக்கு உயர்த்தி இருக்க முடியாது.
 ஜல்லிக்கட்டுக்காக இன்று தமிழக அரசு அவசரச் சட்டத்தை நிறைவேற்றினால் அடுத்த ஓரிரு நாளில் காளைகளை அடக்கி மகிழ்ச்சி அடையலாம். ஆனால், அது உச்சநீதிமன்றத்தின் தடைக்கு எதிரான நிரந்தர தீர்வாக இருக்குமா? கேரளத்துக்கு ஒரு நியாயம், தமிழ்நாட்டுக்கு ஒரு நியாயத்தை உச்சநீதிமன்றம் அனுமதிக்குமா?
 அவசரச் சட்டம் என்பது, நாடாளுமன்றம் கூடாத காலங்களில் நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக செய்ய வேண்டிய பணிகளுக்கானது. அதன் ஆயுள்காலம் குறைந்தபட்சம் ஆறு வாரங்கள். தேவைப்பட்டால் ஆறு மாதங்கள் வரை நீட்டித்துக் கொள்ளலாம்.
 ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு மூன்று முறை நாடாளுமன்றம் கூடியது. அப்போது ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்க சட்டத் திருத்தம் கொண்டு வர ஆளுங்கட்சிக்கும் தோன்றவில்லை, மற்றவர்களும் வசதியாக மறந்து விட்டார்கள். இப்போது அவசரச் சட்டம் என்பது செயலற்ற தன்மையின் வெளிப்பாடே தவிர வேறோன்றுமில்லை.
 நிலம் கையக விஷயத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் மூன்று முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் எழுப்பிய விமர்சனங்களை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
 அரசியல் காரணங்களுக்காக ஆளுங்கட்சி அவசரச் சட்டத்தை கொண்டு வந்தாலும் சரி அல்லது எதிர்க்கட்சிகள் அதற்கான அழுத்தத்தை கொடுத்தாலும் சரி, அது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வலு சேர்ப்பதாக அமையாது. மோசமான முன்னுதாரணங்களையே ஏற்படுத்தும்.
 நாட்டு நலன், மக்கள் நலனை கருத்தில் கொண்டு பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்குப் பார்வையுடன் அதனதன் காலத்தே செயல்பட வேண்டும்.
 அரசியலுக்காகவும், வாக்குக்காகவும் செயல்படும் கட்சிகளால் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண முடியாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் 18 மாதங்கள் "சும்மா' இருந்துவிட்டு இப்போது அவசரச் சட்டம் என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்றதுதான்.
 

கரும்பு இவர்களுக்கு இனிக்குமா?

 logo
 
நாளை தைத்திருநாள் பிறக்கிறது. உள்ளங்களிலும், இல்லங்களிலும் உவகை பெருக்கெடுத்தோடும் இந்த நாளில், தித்திப்பான பொங்கல் போல இனிக்கும் கரும்பும் முக்கியபங்கு வகிக்கும். ஆனால், எல்லோருக்கும் இனிக்கும் கரும்பு, விவசாயிகளுக்கும், சர்க்கரை ஆலை அதிபர்களுக்கும் இனிக்கிறதா? என்பதுதான் இப்போது கேட்கவேண்டிய கேள்வியாகப்போய்விட்டது. தமிழ்நாட்டில் கரும்பு பணப்பயிராக கருதப்பட்டாலும், விவசாயிகளின் வாழ்வில் இப்போது பணப்பயிராக இல்லை. காரணம் உற்பத்தி செலவுக்குக்கூட அவர்கள் விளைவிக்கும் கரும்புக்கு விலை கிடைக்கவில்லை. வழக்கமாக தமிழ்நாட்டில் ஏறத்தாழ 28 லட்சம் டன் கரும்பு உற்பத்தி அதாவது, ஒட்டுமொத்த இந்தியாவின் 10 சதவீத கரும்பு உற்பத்தி தமிழ்நாட்டில்தான் இருக்கிறது என்ற நிலைமாறி, இந்த ஆண்டு 18 லட்சம் டன் கரும்பு உற்பத்தியாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கரும்பு கொள்முதல் விலையாக டன்னுக்கு ரூ.2,850 என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த விலை போதாது என்கிறார்கள், கரும்பு விவசாயிகள். தமிழ்நாட்டில் 24 தனியார் சர்க்கரை ஆலைகளும், 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளும் இருக்கின்றன. இந்த ஆலைகளெல்லாம் அரசு அறிவிக்கும் கொள்முதல் விலையைக் கொடுத்து, விவசாயிகளிடம் இருந்து கரும்பு வாங்கினால்தான் விவசாயிகளுக்கு இந்த விலை கிடைக்கும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாகவே அரசு பரிந்துரை செய்த கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் மட்டும் கொடுத்தார்கள், தனியார் ஆலைகள் கொடுக்கவில்லை என்பது விவசாயிகளின் மனக்குமுறலாகும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும் அதைக்கொடுக்கும் அளவுக்கு சர்க்கரைக்கும் விலை இல்லை. தற்போதைய நிலையில் ஒருகிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய ரூ.41–க்கு மேல் ஆகிறது. ஆனால், சர்க்கரை விற்பனை விலை ஏறத்தாழ 30 ரூபாய்தான் என்கிறார்கள், ஆலை அதிபர்கள். உற்பத்தி செலவோடு அரசு தமிழ்நாட்டில் விதிக்கும் வரிகள் மற்ற மாநிலங்களைவிட மிக அதிகமாக இருப்பதால், அவர்களோடு போட்டியிட்டு சர்க்கரையை விற்பனை செய்யமுடியாமல், அனைத்து ஆலைகளிலும் சர்க்கரை தேங்கிக்கிடக்கிறது என்பது ஆலை அதிபர்களின் ஆதங்கம்.

ஒரு டன் கரும்பில் இருந்து 90 கிலோ சர்க்கரை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் சர்க்கரைக்கு இருந்த கொள்முதல் வரியை எடுத்துவிட்டு, 5 சதவீதம் மதிப்பு கூட்டுவரி விதிக்கப்படுகிறது. இதனால் மட்டும் ஒரு கிலோவுக்கு ரூ.1.50 விலை அதிகமாகிறது. மேலும் ஒரு டன் கரும்பில் இருந்து 30 லிட்டர் எரிசாராயம் உற்பத்தி செய்யமுடியும். இதற்கு தமிழ்நாட்டில் 14.5 சதவீதம் வரி. ஆனால் கர்நாடகத்திலும், ஆந்திராவிலும் 2.5 சதவீதம்தான் வரி. இதனால் தமிழ்நாட்டு எரிசாராயத்தின் விலை அதிகமாக இருப்பதால் மற்ற மாநிலத்தோடு போட்டிபோட்டு விற்கமுடியாததால், எரிசாராயம் அளவுக்கு அதிகமாக ஆலைகளில் தேங்கிக்கிடக்கிறது. இதோடு கரும்பு சக்கையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை மின்சார வாரியம் தகுந்த விலை கொடுத்து வாங்கவில்லை என்பதும் அவர்களின் குறையாக இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சர்க்கரையை விற்கமுடியாமல், ஈரோட்டில் வந்து குவியும் கர்நாடக சர்க்கரை விலை குறைவு என்ற காரணத்தால் அதையே வியாபாரிகளும், மக்களும் வாங்குகிறார்கள். ஆக, விவசாயிக்கும் உரிய விலை இல்லை. ஆலை அதிபர்களுக்கும் வருமானம் இல்லை. இந்த பெரிய நெருக்கடியைப் போக்க, உடனடியாக விவசாயிகள், ஆலை அதிபர்களை அழைத்து, அரசாங்கம் முத்தரப்பு கூட்டத்தைக்கூட்டி, இருதரப்புக்கும் கட்டுபடியாகும் நிலையை உருவாக்கவேண்டும். விலை நிர்ணயத்தை மத்திய–மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விலக்கி, தேவை–சப்ளை அடிப்படையில் விவசாயிகள்–ஆலை அதிபர்களே நிர்ணயித்துக்கொள்ளலாமா? என்பதையும் பரிசீலிக்கலாம்.

Wednesday, January 13, 2016

இலையுதிர் காலம் - ஓர் எச்சரிக்கை!

First Published : 13 January 2016 01:18 AM IST
மான்களின் கூட்டத்திலே கிழடு தட்டிய மான் கிடையாது. மீன்களின் இனத்திலே மூப்படைந்த மீன் கிடையாது. வான் பறவைக் கூட்டத்திலே வயது மூத்த பறவைகளைக் காண முடியவில்லை. ஆனால், மனிதனிடம் மட்டும் மூப்பு ஏன்? முதுமை ஏன்?
 வனாந்தரங்களிலுள்ள மரங்களுக்கு வசந்த காலம் வருகிறது. அடுத்து, இலையுதிர் காலம் வருகிறது. மறுபடியும், வசந்த காலம் அல்லது பூக்காலம் வருகின்றது. ஆனால், மனித வர்க்கத்தில் மட்டும் வசந்த காலத்தை அடுத்து, இலையுதிர் காலம் வருகின்றது. தொடர்ந்து வசந்த காலம் திரும்புவதில்லை.
 இலையுதிர் காலத்தோடு மனித வாழ்வு முடிவடைந்து விடுகிறது. அதனால்தான் முதுமையை சோகமான இலையுதிர் காலம் (Sad Autumn) என்றார் ஓர் அறிஞர். சேட்டியாபிரியான்ட் (Chateabriand) எனும் அரசியலறிஞனும் முதுமையை உடைந்து போன கப்பல் என்கிறார்.
 முதுமை பயனில்லாதது என்பதனைச் சங்கப் புலவராகிய நரிவெரூஉத்தலையார், பல்சான்றீரே பல்சான்றீரே கயல்முள்ளன்ன நரைமுதிர் திரைகவுள், பயனில் மூப்பின் பல்சான்றீரே (புறநானூறு : 195-வது பாடல்) எனும் பாடல் மூலம் முதுமை பயனில்லாதது என்பார்.
 சங்கப்புலவரைப் போலவே ஷேக்ஸ்பியரும், முதுமையில் பற்கள் செயலற்றுப் போகின்றன, கண்கள் செயலற்றுப் போகின்றன, நாக்கு சுவையற்றுப் போகின்றது, இறுதியில் எல்லாமே செயலற்றுப் போகின்றன (Sans teeth, sans eyes, sans taste and everything) என்று "அஸ் யு லைக் ட்' நாடகத்தில் எழுதியுள்ளார்.
 நம் காலத்து ஆர்.கே. நாராயணன், என்னுடைய இடது காதின் சவ்வு முதலில் கிழிந்தது, அதற்குப் பிறகு அனைத்துப் பொறிபுலன்களும் செயலற்றுப் போயின (The left ear drum is the first to be switched off. Faculties are switched off one by one) என்றெழுதுகிறார். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாகின்றது.
 ஆனால், மறுபடியும் அது கூட்டுப்புழு ஆவதில்லை. மனிதன் மட்டும் வண்ணத்துப் பூச்சியாகி பின்னர் கூட்டுப்புழு ஆவது கொடுமை அல்லவா? மானிட சாதியில் கிளியோபாட்ரா ஒருத்திதான் முதுமையடையாமலேயே முழு வாழ்க்கை வாழ்ந்ததாக ஷேக்ஸ்பியர் கூறுகின்றார்.
 மரத்திற்கு இலையுதிர் காலம் வந்தால், மரத்துக்காரன் உடனடியாக அதனை வெட்டுவதில்லை. ஏனென்றால், அந்த மரம் அடுத்துப் பூக்கும், காய்க்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு உண்டு. ஆனால், மனித சாதியில் முதுமை வந்துவிட்டால், அது மீண்டும் பூக்காது, காய்க்காது என்பது சந்ததியர்க்குத் தெரிந்த காரணத்தால், அம்மரத்தைப் பாதுகாக்க மறுக்கிறார்கள்.
 பசுக்களில் ஒரு மாடு இனிமேல் பால் சுரக்காது, அது மரப்படி மாடு என்றாகிவிட்டால், அதனை மந்தைக்கு விரட்டிவிடுவார்கள் (பால் சுரப்பற்ற மாடுகளுக்கு, மரப்படி மாடு என்று பெயர்). முதுமையுற்றோர் இனிப்பயன்பட மாட்டார்கள், சுமையாகிவிடுவார்கள் என்பது தெரிந்ததால், இன்றைய இளைஞர்கள் காப்பகத்திற்குக் கைகாட்டிவிடுகிறார்கள்.
 முதுமையின் கொடுமையை நன்கறிந்த கவிஞன் டபிள்யூ.பி. ஏட்ஸ், ஒரு பெண் தான் பெற்றெடுக்கும் மகன், அவனது அறுபது வயதில் எப்படியிருப்பான் என்பதை முன்கூட்டியே அறிந்துவிட்டால், அவள் தாய்மையைத் தியாகம் செய்து, புறக்கணித்துவிடுவாள் என்றார். ஒருகாலத்தில் முதியோர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் படித்தால், நாக்கு அழும்.
 நியூசிலாந்துக்குப் பக்கத்திலிருந்த ஆதிவாசிகள் மூப்படைந்தோர்களை முதுமக்கள் தாழிக்குள்ளே வைத்து, அவர்கள் விரும்பும் உணவு தானியங்களையும் உள்ளே வைத்து, அத்துடன் ஒரு சிறு அகல் விளக்கையும் உள்ளே வைத்துப் புதைத்துவிடுவார்களாம்.
 அதுபோலவே, மலேசியாவுக்குப் பக்கத்திலுள்ள காமரூன் தீவைச் சேர்ந்த வேட்டையாடிகள் முதியோர்களை அடர்ந்த காட்டுக்குள் கொண்டுபோய், அடர்ந்த புதர்களிடையே வைத்துவிட்டு வந்துவிடுவார்களாம். அவர்கள் பசியெடுத்த விலங்குகளுக்கு இரையாகி முடிந்து போவார்களாம். முதியோர்கள் வதைபடுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது.
 குழந்தைப் பருவம், மாணவப் பருவம், வாலிபப் பருவம் என்று சொல்வதுபோல், முதுமையை ஒரு பருவம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அது ஒரு நோய். அந்த நோய் கொல்வது கிருமிகளைக் கொண்டல்ல, கருமிகளைக் கொண்டாகும். லியோ டால்ஸ்டாய் எழுபதாவது வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்தார். அவரைப் பார்த்த ஆண்டன் செகாவ், இவருடைய நோயின் மூலக்காரணம் முதுமை. அம்முதுமை இவரை முழுமையாகத் தின்று கொண்டிருக்கிறது என்றார்.
 முதுமை காலாவதியாகிப் போன ஒரு பிராமிசரி பத்திரம். அதன் பயன்படாமையைக் கவிக்கோ அப்துல் ரகுமான், "முதுமை, நிமிஷக் கரையான் அரித்த ஏடு, இறந்த காலத்தையே பாடும் கீறல் விழுந்த இசைத்தட்டு, ஞாபகங்களின் குப்பைக்கூடை, வியாதிகளின் மேய்ச்சல் நிலம், காலத்தின் குறும்பால் கார்ட்டூன் ஆகிவிட்ட வர்ண ஓவியம்' எனப்பாடி, எதிர்காலத்திற்கு ஓர் எச்சரிக்கை தருகிறார்.
 ‘On growing old‘ எனும் கவிதையில் முதுமையின் இயல்பைப் பாட வந்த மேத்யூ அர்னால்டு எனும் ஆங்கிலக் கவிஞன், "பனித்துளிகளின் மீது என் நடை தளர்கிறது. புதிய ஊர்களுக்கு எனது உள்ளம் துள்ள மறுக்கிறது. மிதிபட்ட என் நம்பிக்கையுணர்வு, மீண்டும் எழ முடியாமல் தவிக்கிறது' எனப் பகர்வார்.
 தொடித்தலை விழுத்தண்டினார் எனும் புறநானூற்றுப் புலவர், கழிந்துபோன இளமைப் பருவத்திற்காக ஓர் இரங்கற்பாவே பாடுகிறார். "இப்பொழுது நினைத்தாலும் என் நிலைமை எனக்கே இரக்கமாகின்றது. ஒரு காலத்தில் மணலிலே வண்டல் இழைத்து விளையாடிய வனிதையரோடு கைகோர்த்து ஆடினேனே.. வஞ்சனையறியா இளைஞர்களுடன் கூடி, மருத மரத்தில் மீதேறி மடு நீருள் தொப்பெனப் பாய்ந்து, அடி மணலை அள்ளி வந்து, பருவப் பெண்கள் ஆச்சரியப்படும்படியாகக் காட்டி மகிழ்ந்தேனே.. அந்த இளமைக் காலம் இனி எப்போது, எங்கே கிடைக்கும்?
 இப்பொழுது பூணிட்ட தண்டினை ஊன்றிக்கொண்டு, இருமல் இடையிடையே வந்து தொல்லை தர, சிலச்சில சொற்களைப் பேசிக்கொண்டு திரிகின்ற நான், கழிந்துபோன என் இளமைக்காலத்தை நினைத்தால் இரக்கமாகின்றதே' (புறநானூறு 243-வது பாடல்) என்ற பாடல் முதுமையின் மீது நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆகும்.
 இத்தகைய இலையுதிர் காலத்துக்குத் தொல்காப்பியர் ஓர் எச்சரிக்கை தருகிறார். ஒரு தலைவனும், தலைவியும் வாழ்வாங்கு வாழ்ந்து முடித்தபிறகு, அவர்களே தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். குடும்பத்திலிருந்து அவர்கள் விலகிப்போய் ஒரு தவ வாழ்க்கையை மேற் கொள்ளலாம்.
 தசரத சக்கரவர்த்தி ஒரு நரை முடியைக் கண்டவுடன், அரண்மனையை விட்டுப் புறப்படத் தயாரான செய்தியை இராமாயணம் சொல்லும். ஒரு காலத்தில் நம் முன்னோர்கள் அந்திமக் காலத்தில் காசிக்குப் புறப்பட்டுப் போனதும், ஒரு விவேகமான செயலாகவே இப்பொழுது தோன்றுகிறது.
 மகாகவி பாரதி பாரத நாட்டின் பெருமையைப் பேசவந்தபொழுது, எங்களுடைய பாட்டன், பூட்டன், முப்பாட்டன்கள் உறவின் முறையோடு கூடிக்களித்த நாடு, இந்நாடு (எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவியிருந்தது மிந்நாடே - அதன் முந்தையர் ஆயிரமாண்டுகள் வாழ்ந்து முடிந்தது மிந்நாடே) எனப் பாடினான். இன்றைக்கு நாம் அதனை மறந்துவிட்டாலும், சீனாக்காரர்கள் பாரதி கண்ட கனவை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 சீன வரலாற்றில் கி.மு. 12-ஆம் நூற்றாண்டிலேயே முதியோரைப் பேணிக்காத்தல் நல்ல மன்னனுக்குரிய கடமையாக வகுக்கப்பட்டது. சீனத்து அரசர்கள் மூத்த அமைச்சர்களுக்கு எதிரில் அமர்ந்து பேசமாட்டார்களாம். சீன ஞானியாகிய கன்பூசியஸ், முதியோர்களுக்கு அமைதியும், இளைப்பாற வசதியையும் செய்து தருவதையே தம் முழுமுதல் நோக்கமாக வைத்திருந்தாராம்.
 சிலப்பதிகாரக் காலத்தில், முதுமை போற்றப்பட்டிருக்கிறது - பாதுகாக்கப் பெற்றிருக்கிறது என்பதை, கண்ணகி கடவுளுக்கு இட்ட நிபந்தனையால் அறியலாம். மதுரையை எரிக்கச்சொல்லி தீக்கடவுளுக்குக் கட்டளையிடுகின்றபொழுது, யார் யாரை எரிக்கக்கூடாது எனப் பட்டியலிடுகின்ற வேளையில், அதில் முதியோர்களும் இடம் பெறுகின்றனர் (பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எம் இவரைக் கைவிட்டு).
 பழங்காலத்துச் சீனத்தில் முதியோர்கள் 70 வயது வரை அரசுப் பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனராம். ஓய்வுபெற்ற அதிகாரி எண்பது வயதை அடைந்ததும், அவரைப் பேணிக் காக்க ஓர் அரசு அலுவலருக்கு ஊதியத்தோடு விடுப்புக் கொடுத்து, எண்பது வயதுப் பெரியவரைப் பாதுகாக்கப் பணிப்பார்களாம்.
 பழைய ரோம அரசில் ஒரு மகன் தந்தையை அடித்துவிட்டால், அடித்தவனின் குடியுரிமையைப் பறித்துவிடுவார்களாம். ரோம சாம்ராஜ்ஜியத்தின் விரிவாக்கத்திற்கு முதியோர்களே காரணமாகத் திகழ்ந்ததால், அவர்கள் அங்குப் போற்றிப் பாதுகாக்கப்பட்டார்கள். சீனத்து, ரோம் நாட்டு முதியோர்களுக்கு இலையுதிர்க் காலத்தின் எச்சரிக்கை தேவையேயில்லை.
 முதுமை எனும் இலையுதிர்காலத்தினால், முதியோர்கள் பெற வேண்டிய எச்சரிக்கை ஒன்று உண்டு. ஒரு தந்தை தம் மகனைப் படிக்க வைப்பதையோ, அவரைப் பணியில் அமர்த்துவதையோ, அவருக்குத் திருமணம் செய்து வைப்பதையோ தம் கடமை என்று எண்ணி ஆற்ற வேண்டும். இவற்றை எல்லாம் இன்றைக்கு நாம் செய்தால், எதிர்காலத்தில் அவன் நம்மைக் காப்பாற்றுவான் என்ற எதிர்பார்ப்பில் செய்யக்கூடாது. இதனைச் சரியாகவே எச்சரித்திருக்கிறார் திருவள்ளுவர்.
 தந்தை மகற்காற்றும் நன்றி என நவின்றார் திருவள்ளுவர். தந்தை மகற்காற்றும் உதவி என்று சொல்லவில்லை. காரணம், ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதைப் பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பித் தருவதாக எண்ண வேண்டும். அதனால்தான் நன்றி எனக் கூறினார். இதனை ஆங்கிலக் கட்டுரையாளர் ஏனெஸ்டு பேக்கர், இம்முறையை ஒரு "ரிலே ரேஸ்' என்றார். ஒருவர் பெற்ற மூங்கில் கழியை இன்னொருவரிடம் ஓடிப்போய் கொடுப்பதைப்போல ஆகும்.
 பிள்ளைகளும் இன்றைக்குத் தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும். இளைய தலைமுறையினருக்கும் ஓர் எச்சரிக்கை செய்கிறது நாலடியார்.
 கறையானால் அரிக்கப்பட்ட ஆலமரத்தை, அம்மரத்தினுடைய விழுதுகள் தாங்கிப் பிடித்து, ஏந்திப் பிடித்துக் காப்பாற்றுவது போல, தந்தையாகிய ஆலமரத்தைப் பிள்ளைகளாகிய விழுதுகள் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
 உலகத்திலுள்ள அத்தனை ஆலமரங்களும் காலங் காலமாய் நிற்பதில்லை. ஆனால், கொல்கத்தா பொட்டானிகல் கார்டனிலுள்ள ஆலமரத் தோப்பும், அடையாறு ஆலமரத்தோப்பும் காலங்காலமாய் நிலைத்து நிற்பதற்குரிய காரணத்தை, மூத்த சமுதாயமும் இளைய சமுதாயமும் கற்க வேண்டும்.
 இவ்விரண்டு இடங்களிலுமுள்ள தாய் மரங்கள் பலனை எதிர்பார்த்து விழுதுகளை விடுவதில்லை விழுதுகளும் வந்த இடத்தை மறந்து தாங்கிப்பிடிக்காமல் விடுவதில்லை. அதனால், ஆச்சர்யப்படத்தக்க வாழ்க்கை வாழ்கின்றன. வேர்கள் விழுதுகளைத் துண்டிப்பதில்லை. விழுதுகள் வேர்களை வெட்டுவதில்லை.
 ஒரு தந்தை தம்முடைய தந்தையிடம் இருந்து எதை பெற்றாரோ, அதனையேத் தம் மகனுக்குத் திருப்பி தருவதாக எண்ண வேண்டும். பிள்ளைகளும் இன்றைக்கு தாம் எதைத் தந்தை - தாய்க்குச் செய்கிறோமோ, அவை பிற்காலத்தில் தமக்கு வரும் என்று எண்ண வேண்டும்.

 

Tuesday, January 12, 2016

குறள் இனிது: அங்கே இது வேலைக்கு ஆகாதுங்க..!

Return to frontpage


சோம.வீரப்பன்


சுமார் 30 வருடங்களுக்கு முந்தைய நிகழ்ச்சி இது. எனது வங்கிக் கிளை யின் மேலாளர் குமாருக்கு (மாற்றிய பெயர்தான்) முதுநிலை மேலாளராகப் பதவி உயர்வுடன் அடிதடிக்குப் பெயர் பெற்ற ஒரு வடமாநிலத்தில் போய்ச் சேருமாறு உத்தரவும் வந்தது. குமார் மென்மையானவர் எப்பொழுதும் ஸ்டைலாக இன்ஸர்ட் செய்து பெல்ட் போட்டு, ஷுவுடன் டிப் டாப்பாக இருப்பார். அவரை வழியனுப்ப நண்பர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தோம்.

குளிர் சாதன வகுப்பு. அவரது விலையுயர்ந்த விஐபி சூட்கேஸை பெர்த்திற்குக் கீழே வைக்க முயன்றோம். ஆனால், ஏற்கெனவே அங்கே இடம் முழுக்க பல பழைய கனமான பெட்டிகள் இருந்தன. அவற்றை அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதம் செய்து, அகற்றச் சொல்லி குமாரின் சூட்கேஸை வைத்து விட்டோம். எதிரில் இருந்தவர்கள் எங்களை ஏளனமாய்ப் பார்த்து, ‘இதெல்லாம் எவ்வளவு தூரம் பார்க்கலாம்’ என்றார்கள். ஒரு வழியாய் ரயில் கிளம்பியது.

6 மாதங்கள் கழித்து குமார் சென்னை வந்தது அறிந்தோம். நடுவில் பார்க்க முடியாததால், மீண்டும் ரயில் ஏற்றிவிடச் சென்றோம். அவசரமாக பிளாட்பாரத்தில் ஓடி அவரை கண்டுபிடித்தால், மனிதனை அடையாளமே தெரியவில்லை! ஆள் ஒன்றும் மெலியவில்லை. இன்னும் குண்டாகியிருந்தார்! முன்பு, ஜெமினி கணேசன் மீசையாக இருந்தது, இப்போது வீரப்பன் மீசையாக மாறியிருந்தது. குரலில் அவ்வளவு கரகரப்பு எப்படித்தான் வந்ததோ தெரியவில்லை. கைகுலுக்கினால் தோள் வரை வலித்தது.

மகானுபாவன தோற்றமளிக்கும் வகையில் பெரிய ஜிப்பாவும், பைஜாமாவும் அணிந்திருந்தார்; அவரே, இரண்டு பெரிய துத்தநாகப் பெட்டிகளை உள்ளே அமுக்கிக் கொண்டிருந்தார்; ‘என்ன ஆளே மாறிவிட்டீர்களே’என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே, ‘நண்பர்களே, நான் போகும் இடத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்கிறேன். இந்த ஏசி, முன்பதிவு எல்லாம் இன்னும் 10 மணி நேரம் வரைதான். பின்னாடி யார்; வேண்டுமானாலும் ஏறிக் கொள்வார்கள். முன் பதிவு என்று சொல்லிப் பயனில்லை. அங்கு நமது தோற்றம் கரடு முரடாக இருந்தால்தான் நல்லது. எனவேதான், நடை உடை பாவனைகளையும் மாற்றிக் கொண்டேன். முதலில் நான், அங்கு சென்ற பொழுது பலரும் என்னிடம் உரத்த குரலில் அதட்டும் தோரணையிலேயே பேசினர். நான் மெதுவாய்ப் பேசினால் எடுபடாது. ஆனால், இப்போது எனது குரலைக் கேட்டு, மற்றவர்கள்தான் அஞ்சுவார்கள். நான் நல்லவனாகவே இருக்கிறேன். ஆனால், வலிமையானவன் நெஞ்சுறுதி மிக்கவன் என்பதையும் சொல்லாமல் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்றார்.

போரில் நாம் கையில் எடுக்கும் ஆயுதம் நமது பகைவனால் முடிவு செய்யப்படுகிறது என்று சொல்வார்கள். நமது அன்றாட வாழ்க்கையிலும் சரி, வணிகத்திலும் சரி, நமது அணுகுமுறை இடத்துடன் பொருந்தினால்தான், வெற்றி சாத்தியம்!. வலிமையான தேர், கடலில் ஓடாது, அதுபோலக் கப்பலும் நிலத்தில் செல்லாது என்கிறது குறள். சமீபத்திய சென்னை வெள்ளத்தில் மக்கள் சாலையிலேயே படகில் பயணித்தது ஞாபகம் வருகிறதா?

கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும்

நாவாயும் ஓடா நிலத்து (குறள் 496)

Sunday, January 10, 2016

ANNA UNIVERSITY CONVOCATION JANUARY 2016


நிதி ஆளுமையில் நீங்கள் எப்படி?

 Return to frontpage


எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்கிற வாசகம் ஒரு வரி நகைச்சுவையாக பலரும், பல இடத்திலும் சொல்லியிருக்கிறோம், சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தைகளைக் கேட்டு சிரிப்பதற்கான பொருள் இருக்கிறதா என்றால் எதுவும் கிடையாது. இதை திரைப்படக் காட்சியோடு பொருத்தி வெறும் நகைச்சுவையாக கடந்துபோவதுதான் மிகப் பெரிய நகைச்சுவை.
எதையும் பிளான் பண்ணி செய்யணும் என்பதுதான் உண்மை. வேலைகளை திட்டமிடுவது என்பது, வேலைகளை பாதி செய்து முடித்ததற்கு சமமானது என்கிறனர் அறிஞர்கள்.
இது பொதுவான அனைத்து இடத்துக்கும், சூழலுக்கும், வேலைக்கும் பொருந்தும் என்றாலும், இந்த புது ஆண்டு தொடக்கத்தில் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்ப பிளான் பண்ணுவது பொருத்தமாக இருக்கும். குறிப்பாக வரவு, செலவு பொருளாதார விஷயங்களில் குழப்பமில்லாமல், தெளிவான திட்டத்துடன் இருந்தால் தனிநபர்களின் வாழ்க்கை இலக்குகளில் சிக்கல் இருக்காது என்கின்றனர் குடும்ப நிதி ஆலோசகர்கள்.
பொருளாதார விஷயங்களில் இந்த ஆண்டு மேற்கொள்ள வேண்டிய திட்டங் கள், அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்காக நிதி ஆலோச கர்கள் தரும் விளக்கங்கள் இது.
இந்த ஆண்டில் வீடு வாங்க வேண்டும், கார் வாங்க வேண்டும், வெளிநாட்டுச் சுற்றுலா போக வேண்டும் என கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சில வேண்டும்கள் அதிகரித்திருக்கலாம். இந்த அனைத்து தேவைகளையும் அடைவதற்கு தேவை ஒரு முறையான திட்டமிடுதல். அதை இந்த புது ஆண்டிலிருந்தாவது தொடங்குவோம்.
கடன்களை முடியுங்கள்
தனிநபர்களின் பொருளாதார திட்ட மிடுதல்களில் முதன்மை கடமையாக வலியுறுத்தப்படுவது கடன்கள் இல் லாமல் இருப்பதுதான். ஒவ்வொரு கடனையும் அவ்வப்போது அதற்குரிய கால அவகாசத்தில் முடிக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதில் நாணயமானவர் என்கிற பட்சத்தில்தான் புதிய கடன்களை வாங்கு வதற்கான தகுதி தீர்மானிக்கப்படும். அப்போதுதான் நிதிச் சார்ந்த இலக்கு களை எளிதாக திட்டமிட முடியும்.
வருமானத்தை அதிகப்படுத்துங்கள்
கூடுதல் வருமானத்தை உறுதிப் படுத்த வேண்டும். மாதாந்திர சம்பளக்காரர்கள் என்றால் உங்கள் வேலை நேரம் போக, மீதி நேரங்களில் இரண்டாவது வருமானத்துக்கு வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனித் திறமைகளை வருமானமாக்கும் வழிகளை திட்டமிடுங்கள். சொந்த தொழில் என்றால் தொழிலில் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடுங்கள்.
சேமிப்பை தொடங்கவும்
ஒவ்வொரு மாதமும் சேமிப்பது பழக்கமாகட்டும். சென்ற ஆண்டில் செய்த தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கணிசமான தொகையை மிச்சப்படுத்தலாம். செலவு களை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அவசியமில்லாத செலவுகளை மேற் கொள்ள ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கலாம்.
எழுதி வைக்கவும்
ஒவ்வொரு செலவையும் எழுதி வைக்கும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் எவ்வளவு செலவாகிறது, அதில் தேவையில்லாத பழக்கங்களுக்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறோம் என்பது தெரிய வரும். கணக்கில்லாமல் செலவு செய்வது மாத திட்டமிடலில் துண்டு விழ வைக்கும்.
இதுபோல நமது சேமிப்பு, முதலீடுகள், வங்கி கணக்கு விவரங்கள், காப்பீடு போன்ற நிதி சார்ந்த ஆவணங்களை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைப்பதும் தெரிந்து கொள்ளச் செய்வதும் முக்கியமானது. ஒருவருக்கு மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்கிற ரகசியம் கடைபிடிப்பதை இந்த வருடத்திலிருந்து கைவிடுங்கள்.
வீண் செலவுகள்
வீண் செலவுகள் என்று எதுவுமில்லை. ஆனால் அதை எப்போது செய்கிறோம் என்பதைப் பொறுத்துதான் வீண் செலவா, இல்லையா என்பது முடிவு செய்ய முடியும். ஆன்லைன் ஸ்டோரில் ஆபர் கிடைக்கிறது என்பதற்கான கடன் வாங்கி பொருட்களை வாங்குவது வீண் செலவுதான் என்கின்றனர் நிதி ஆலோசகர்கள். நோக்கமில்லாமல் மால்களுக்கு சென்று பொருட்களை வாங்குவது, நமக்கு உபயோகப் படாத கருவிகளை அந்தஸ்துக்காக வாங்குவது போன்ற செலவுப் பழக்கங்களையும் குறைக்க வேண்டும்.
காப்பீடுகள்
காப்பீடுகளின் அவசியம் குறித்து தெரிந்து வைத்திருந்தாலும் அதன் முழு பலனை அனுபவிப்பதற்கு திட்டமில்லை. வருமானம் ஈட்டுபவர்களுக்கான டேர்ம் இன்ஷூரன்ஸூம், குடும்பத்திற்கு போதுமான மருத்துவ காப்பீடு திட்டங் களையும் இந்த ஆண்டிலாவது திட்ட மிடுங்கள்.
வருமானம் ஈட்டும் இளவயதினருக் கான டேர்ம் காப்பீட்டின் பிரீமியத் தொகை ஒப்பீட்டளவில் குறைவானது என்பது முக்கியமானது.
அவசர தேவைகள்
அவசரகால தேவைகளுக்கான நிதி ஒதுக்குவது முக்கியமானது. இதை சேமிப்பு போல கருதி கை வைக்காமல் இருக்க வேண்டும். சாதாரணமாக சமாளிக்கக்கூடிய செலவுகளுக்கு இதில் கை வைக்க கூடாது. இப்படி ஒரு தொகையை ஒதுக்கி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் பலருக்குமே இருப்பதில்லை. ஆனால் அவசியம் என்கிறனர் அனுபவசாலிகள்.
முதலீடுகள்
இதுவரை முதலீடுகள் மேற்கொள் வது குறித்து யோசிக்காதவர்கள் இனிமேலா வது யோசிக்க வேண்டும். மாத திட்டமிடலில் இதற்கும் ஒரு தொகை ஒதுக்குங்கள். குறைந்தபட்சம் 10 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இதற்கு ஒதுக்க வேண்டும். நிதி சார்ந்த முதலீடு திட்டங்கள், தங்கம், ரியல் எஸ்டேட் என முதலீடு திட்டங்களை பிரித்து மேற்கொள்ள வேண்டும். ரியல் எஸ்டேட், தங்கம் என ஒரே முதலீட்டில் கவனம் செலுத்துவது சரியான வழியல்ல. எதிர்கால நலன்கள் பொருட்டு முதலீடுகள் அவசியம்.
ஓய்வு கால நிதி
ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதி யாக வைத்துக்கொள்ளவும் நிதி ஒதுக்க வேண்டும். வருமானம் ஈட்டும் வரை தற்போதைய வாழ்க்கைத் தரம் இருக்கும். அதற்கு பிறகு இதே வாழ்க்கைத் தரத்தை நீடிக்க வேண்டு மெனில் ஓய்வுகால நிதி ஒதுக்கீடு தேவை. இதற்கு என்று பிபிஎப், என்பிஎஸ் திட்டங்கள் உள்ளன.
பட்ஜெட் போடுங்கள்
இலக்கில்லாத பயணம் கடைசியில் எந்த இடத்துக்கும் சென்று சேராது என்பார்கள் அதுபோல திட்டமிடா மல் செய்கிற செலவுகளால் எந்த பழக்கத்தையும் கடை பிடிக்க முடியாது. வருமானத்துக்கும் செலவுக்குமே சரியாக இருக்கிறது அப்பறம் எதற்கு திட்டமிடுவது என யோசிக்க வேண்டாம். நிதி கையாளுவதில் நமது திறமை என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வதற்குகூட திட்டமிடுதல் அவசியமாகிறது.
மாதந்தோறும் குடும்பத்திற் கான பட்ஜெட் முன் கூட்டியே எழுத வேண்டும். இதனால் செலவுகளுக் கான முன்னுரிமையை திட்டமிட லாம். கடந்த காலங்களில் உங்கள் நிதி ஆளுமை எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்படியான உறுதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். நிதி ஆளுமை என்பது நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ஆண்டின் முடிவில் அறிந்து கொள்வீர்கள்.

NEWS TODAY 2.5.2024