Thursday, May 26, 2016

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த தையல் தொழிலாளியின் மகள் அரசியலில் ஈடுபட விருப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில், அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.ஜனனி, 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல் 100. ஒட்டுமொத்தமாக மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
என்.ஜனனி கூறியதாவது: எனது சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை என அனைவருக்கும் பங்கு உண்டு. என்னுடைய தந்தை நாரயண சாமி, தாய் சுமதி. தந்தை தையல் தொழில் செய்து வருகிறார்.
பள்ளியில் சிறப்பு வகுப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, வேலூர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து 2-ம் இடம் பெற்றனர்.
ஈரோடு சவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி, புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பவ தாரணி, புதுக்கோட்டை ராணி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிஷாத் ரஹீமாமா, கரூர் மலைக்கோவிலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சந்திர சேகர், திருவண்ணாமலை பெருங் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி என்.தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கேத்ரீன் அமலா ராக்கினி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்

முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்ல’ கிரகப்பிரவேச பத்திரிகை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது.

கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக் குமாறு உள்ள இந்த பத்திரிகையை, பம்பாய் வாகில் நிறுவனம் வடி வமைத்திருந்தது.

முகவரி விளக்கம்

கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை’ என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


M.G.R. திரையுலகில் இருந்த காலத்தில் பிரபலமான நடிகர்களாக இருந்தும், சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததால் அவருடன் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் சிலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென தனி பாணியில் நடித்து மக்கள் கலைஞர் என்று புகழ் பெற்றவர் ஜெய்சங்கர். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். ராஜேந்திர குமார், தர்மேந்திரா நடித்து இந்தியில் வெளியான ‘ஆயி மிலன் கி பேலா’ என்ற படம்தான் தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ ஆனது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. 1966-ம் ஆண்டில் ‘பேசும் படம்’ பத்திரி கையில் விளம்பரமும் வெளியானது. ஜெய்சங்கர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு ‘வெள்ளிக் கிழமை ஹீரோ’ என்றே பெயர். அந்த அளவுக்கு பெரும்பாலும் வெள்ளிக் கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். ஒரே ஆண்டில் 16 படங் களில் கதாநாயகனாக நடித்தவர்.

திரைத்துறையில் மட்டுமின்றி; அர சியல் துறையிலும் எம்.ஜி.ஆர். பிஸி யாக இருந்ததால் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படும். இடையில், 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் வேறு. பல மாதங்கள் அவருக்கு படங்களில் நடிக்க முடியாத நிலை. ‘ஒரு தாய் மக்கள்’ படத் தயாரிப்பும் தாமதமாகி 1971-ம் ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து படம் வெளியானது.

பல படங்களில் நடித்து வந்த ஜெய் சங்கருக்கு எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல, கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அவர் நடித்த மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக முத்துராமன் நடித்தார்.

ஜெய்சங்கர் எந்தக் கட்சியையும் சாராதவர். பிற்காலங்களில் திமுக தலை வர் கருணாநிதி வசனம் எழுதிய சில படங்களில் நடித்தார் என்ற வகையில் அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கு கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின், 1974-ம் ஆண்டில் ஜெய்சங்கர் நடிப்பில், ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படம் வெளியானது. அதில் ஜெய்சங்கர் பேசும் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக அவர் பேசுவது போல இருக்கும்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்ட பின், தேர்தலை தமிழகம் எதிர் நோக்கியிருந்த நேரம். அப்போது வெளி யான ‘பணக்காரப் பெண்’ படத்தில், ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,  ராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா,  ராமச் சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே...’ என்ற டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இடம்பெறும். இந்தப் பாடலை படத்தில் ஜெய்சங்கர் பாடி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், ஜெய்சங்கர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகர் என்ற முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜெய்சங்கர் செய்தார். மற்றபடி, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி பழகியவர் அவர்.

சத்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப் பெண்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர்.தான்! அப்போது, எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகள் பற்றி அவருக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகள் கூறினார்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, அவரைப் பற்றி தனது கருத்தை ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். ‘‘எம்.ஜி.ஆரிடம் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராள குணம். திரையுலகிலும் அரசியலிலும் அவரவர்கள், தாங்கள் சார்ந்த கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிறருக்கு கொடுப்பதை விளம்பரத்துக்காகக் கொடுக்கிறார் என்று குறை கூறலாம். ஆனால், பிறருக்கு உதவும் அவரது உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் ரசிக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியாது’’ என்று ஜெய்சங்கர் தன்னிடம் கூறி யதை நினைவுகூர்கிறார் கே.பி.ராம கிருஷ்ணன்.

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ‘‘எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது கொடுத்திருப்பது நியாயம் தானா?’’ என்று ஜெய்சங்கரிடம் நிருபர் கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள் விரும்பினால் தவிர படம் ஓடாது. எம்.ஜி.ஆர். படங்கள் சில 25 வாரங்கள் தாண்டி ஓடுகின்றன. 35 வருடங்களாக சினிமாவில் நடித் துக் கொண்டிருக்கிறார். பல வருடங்க ளாக கதாநாயகனாக நடித்து வருகி றார். இன்னும் பல படங்களுக்கு கதா நாயகனாக ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஆக, மக்கள் ஏற்றுக் கொண் டார்கள் எனும்போது தேர்வுக் குழுவினர் ஏற்றுக் கொண்டதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ‘பாரத்’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று ஜெய்சங் கர் மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார்.

‘பாரத்’ விருது பெற்றதற்காக பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பில் சென் னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, ஜெய்சங்கரின் இந்தப் பேட்டி யைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘உண்மை எப்படி இருக்கிறது என்பதல்ல; அந்த உண்மையை வெளியில் சொல்ல துணிவு வேண்டும். அதற்காக ஜெய் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு தன்னைப் போலவே பிறருக்கு உதவும் ஜெய்சங்கரைப் பிடிக்கும். உண்மையையும் பிடிக்கும்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.


எம்.ஜி.ஆரோடு ஜெமினிகணேசன் நடித்த ஒரே படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முகராசி’. எம்.ஜி.ஆரின் அண்ணனாக ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

Tuesday, May 24, 2016

ஜெ., பதவியேற்பு:'மாஜி'க்கள் ஏமாற்றம்

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., 'மாஜி'க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சாந்தி, சுரேஷ்குமார், அருண் சுப்பிரமணியன். இவர்கள், கடந்த ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., ஆதரவாளராக செயல்பட்டனர். ஆட்சி காலத்தின் இறுதியில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்;
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். இதில், பாண்டியராஜனுக்கு மட்டுமே, தேர்தலில்
போட்டியிட அ.தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கியது. அவர் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்கள், 'சீட்' கிடைக்காததாலும், அ.தி.மு.க.,வினர் தங்களை ஓரம் கட்டியதாலும், கடும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு கிடைக்கும் என, இவர்கள் எதிர்பார்த்தனர். இதற்காக சிலர், இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டு அழைப்பிதழை பெற, அ.தி.மு.க., தலைமை
அலுவலகத்தில் முயற்சித்தனர். ஆனால், கடைசி வரை அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை. இதனால், ஏழு பேரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்;
விரக்தியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.- நமது நிருபர்- -

குறள் இனிது: மறுவார்த்தை இல்லாத பேச்சு...


தொலைக்காட்சிகளில் வரும் மில்க் பிக்கிஸ் விளம்பரத்தைப் பார்த்து ரசித்தீர்களா? சுமார் 4 வயது சிறுமியிடம் 5 வயது சிறுவன் தனக்கு அந்த பிஸ்கட்டை 10 மடங்கு பிடிக்குமெனச் சொல்ல, சிறுமி தனக்கு 20 மடங்கு பிடிக்குமென பதிலளிப்பாள்.

தொடர்ந்து இருவரும் ஆயிரம், லட்சம் மடங்கென ஏற்றிக்கொண்டே போவார்கள்.பின்னர் சிறுவன் அச்சிறுமிக்குப் புரியாத ஏதோ பெரிய எண்ணைச் சொல்வதைக் கேட்டு அச்சிறுமி, தனக்கு அதைவிடவும் மிக அதிகம் பிடிக்கும் என்று சொல்லி அப்பேச்சை முடித்தே விடுவாள்!

வாய்ப் பேச்சில் மற்றவர்களை மடக்குவது என்பது தனிக்கலை. வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், விற்பனையாளர்கள், சமரசம் பேசுபவர்கள் ஆகியோருக்கு இது பெரும் சொத்து!

இதற்குத் தேவை, வாதங்களை எடுத்து வைத்து எதிரியைத் திணற வைக்கும் திறன்! அத்துடன் வார்த்தை ஜாலம்! சிலர் கம்பு சுற்றுவது போல வார்த்தைகளை வீசி சொற்சிலம்பாடுவர்! நாம் என்ன சொன்னாலும் டக்டக்கென்று பதில் வந்து விடும்.

அவர்கள் எடுக்கும் சொல்லாயுதங்களை எதிர்கொள்ள முடியாமல் நாம் விதிபூத்து நிற்போம்!அதிவேகத்தில் காய் நகர்த்தும் சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தைப் போல செக் வைத்து சொல் ஆட்டம் ஆடினால் என்னாவது?

பேச்சில் வெல்ல வேண்டுமென்றால் அதை ஒரு போரைப் போலவே அணுக வேண்டுமென்கிறது குறள். யுத்தத்திற்கான ஆயத்தம் என்ன? எதிரி என்ன ஆயுதத்துடன் போரிடுவார் எனச் சிந்தித்து அதை எதிர் கொள்ளத்தக்க ஆயுதங்களை கையிலெடுப்பது தானே! அதைப் போலவே வாக்கு வாதங்களிலும் எதிராளி எடுத்தாளக்கூடிய கருத்துகளை முன் கூட்டியே சிந்தித்து அதற்கான பதில்களுடன் களம் இறங்க வேண்டும் என இக்குறளுக்குப் பொருள் கொள்வார் ராஜாஜி.

ஒரு சொத்தை விற்கச் செல்லும் பொழுது அங்கு சென்று சொத்து வாங்குபவன் போல் விசாரிக்கணும் என்பார் என் தந்தை!

நாம் ஒரு சொல்லைச் சொல்லுமுன் அதை வெல்லக்கூடிய வேறு ஓர் சொல் இருக்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அச்சொல்லைச் சொல்ல வேண்டுமென்றும் இக்குறளுக்குப் பொருள் கொள்வார்கள்.

சொல்லும் வார்த்தை சொல்ல வந்ததை ஐயம் திரிபற சொல்லத்தக்கதாக இருக்க வேண்டுமில்லையா? எதுகை மோனை இருந்தால் இன்னும் சிறப்பு.

இதற்கான உதாரணங்களை நாம் வேறு எங்கும் தேட வேண்டாம். ஐயன் வள்ளுவரே தமது திருக்குறளில் அதற்கான செயல் விளக்கத்தைச் செய்து அதாவது சொல்லிச் சொல்லிக் காட்டியுள்ளாரே!

ஏச்சுப் பேச்சை கேட்டவர்கள் அதை எறும் மறக்க மாட்டார்கள் என்பதால் நாவினால் சுட்ட ‘வடு’ என்றார். நல்லவர் கெட்டவர் என்பது அவரவர் ‘எச்சத்தால்' காணப்படும் என்பதை வேறு வார்த்தைகளால் சொல்லமுடியுமா? ‘‘தன்னைவியந்தான்' எனும் வார்த்தைக்கு ஈடு இணை உண்டா?

அதாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல், மனதில் வார்த்தைகளுக்கான தேர்வு நடத்திப் பேசணும் என்கிறார்! செந்தமிழும் நாபழக்கம் தானே!

சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

(குறள் 645)

- somaiah.veerappan@gmail.com

Monday, May 23, 2016

தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம் - முதல் உத்தரவில் கையொப்பமிட்டார் ஜெயலலிதா

சென்னை:

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று, தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மது கடைகளை இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

காமராஜர், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதையடுத்து சனிக்கிழமை கவர்னர் ரோசய்யாவை சந்தித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர் 28 அமைச்சர்கள் கொண்ட மந்திரிசபை பட்டியலையும் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ரோசய்யா, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செய்யப்பட்டன.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவி ஏற்பதால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை முதலே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் பகுதியிலும், கடற்கரை சாலையிலும் குவிந்தனர். இதனால் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதுபோல போயஸ் கார்டனில் இருந்து, விழா நடக்கும் இடம் வரை ஜெயலலிதா வரும் வழி நெடுக அவரை வரவேற்று பதாகைகளும், அ.தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆங்காங்கே அ.தி.மு.க. நிர்வாகிகள் மேள-தாளம் முழங்க ஜெயலலிதாவை வரவேற்க திரண்டு நின்றனர். எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகள் பறந்தன.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா 11.40 மணிக்குப் புறப்பட்டார். 11.50 மணிக்கு அவர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழா மேடைக்கு அவர் வந்ததும் “புரட்சித்தலைவி வாழ்க”, “அம்மா வாழ்க” என்று அ.தி.மு.க.வினர் வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களுக்கு ஜெயலலிதா கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து கவர்னர் ரோசய்யா வந்ததும் சுமார் 12 மணியளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

சரியாக 12.07 மணிக்கு ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசைய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ். பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய 28 பேரும் குழு, குழுவாக பதவியேற்றனர்.

அவர்கள் அனைவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சரியாக பதினைந்து நிமிடங்களில் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. 1300-க்கும் மேற்பட்டவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது.

மத்திய அரசின் சார்பில் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் காணும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அகன்றதிரை கொண்ட எல்.சி.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தவிர முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்லும் வழி நெடுக பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, செயிண்ட் ஜாட்ஜ் கோட்டையில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள், பணியாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசின் தலைமை ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் போலீஸ் டிஜிபி அசோக் குமார், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அறைக்கு சென்றார். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இன்று தனது முதல்வர் பணியைத் தொடர்ந்தார். பிற்பகல் 12.40 மணியளவில் ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.

4 கிராமுக்கு பதிலாக தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணிக்கு பதிலாக இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் அவர் கையொப்பமிட்டார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திட்டார்.

இதையடுத்து 28 அமைச்சர்களும் தங்களது அறைக்கு சென்று பொறுப்பேற்றனர். அவர்களும் இன்றே தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.

பிற்பகல் 1.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் 28 அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர்.

அங்கு சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் விழா நடக்கிறது. கவர்னர் ரோசய்யா, தற்காலிக சபாநாயகரான செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு செம்மலைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தி.மு,க. பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்,எல்.ஏ.வுமான பி.கே. சேகர் பாபு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, நடிகரும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் வி.ஐ.பி.க்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

விவசாய கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு: முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்ட 5 கோப்புகள்

500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடல்;
மின் கட்டணச் சலுகைகள்

விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வராக ஆறாவது முறையாக இன்று (23.5.2016) பதவியேற்றுக்கொண்ட ஜெயலலிதா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமைச்செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அறைக்கு வருகை தந்து தமது பணியைத் தொடங்கினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது முதல் பணியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்வர் ஜெ. ஜெயலலிதா ஆணை பிறப்பித்து முதல் கையொப்பமிட்ட கோப்புகள்:

பயிர்க்கடன் தள்ளுபடி

1) வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்தவேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக்கடன் மற்றும் நீண்ட காலக்கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்னும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளிடமிருந்து 31.3.2016 வரை சிறு, குறு விவசாயிகளால் பெறப்பட்ட பயிர்க்கடன், நடுத்தரகாலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிடும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார். இதன் காரணமாக அரசுக்கு 5780 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

மின் கட்டணச் சலுகை

2) மின்சாரம் அனைவருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதால் தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அதற்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார். இதன் காரணமாக அரசு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கும். இந்தச் சலுகை 23.5.2016 முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

திருமண உதவித் திட்டம்

3) 2011-ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக 50000 ரூபாயும் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கமும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக 25000 ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது.

தற்போதைய தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி அனைத்து திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதி உதவியுடன் திருமாங்கல்யத்திற்கென வழங்கப்படும் தங்கம் 4 கிராம் என்பதிலிருந்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் என உயர்த்தி வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை

4) தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின்படி கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரத்தை 200 யூனிட்கள் எனவும், விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டுகளாக உயர்த்தியும் வழங்கும் கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

500 டாஸ்மாக் கடைகள் மூடல்

5) மதுவிலக்கு படிப்படியாக அமல் படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும் என்றும், அதனை நிறைவேற்றும் வகையில் முதலில் சில்லறை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என்றும், கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும், பின்னர் சில்லறை மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும் என்றும் குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக பூரண மதுவிலக்கு என்னும் இலட்சியம் அடையப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் இதுவரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவரும் நிலையில் 24.5.2016 முதல் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு, மற்றும் 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூடப்படும் என்ற உத்தரவு, ஆகியவற்றுக்கான கோப்பில் முதல்வர் ஜெயலலிதா கையொப்பமிட்டார்.

NEWS TODAY 2.5.2024