தொலைக்காட்சிகளில் வரும் மில்க் பிக்கிஸ் விளம்பரத்தைப் பார்த்து ரசித்தீர்களா? சுமார் 4 வயது சிறுமியிடம் 5 வயது சிறுவன் தனக்கு அந்த பிஸ்கட்டை 10 மடங்கு பிடிக்குமெனச் சொல்ல, சிறுமி தனக்கு 20 மடங்கு பிடிக்குமென பதிலளிப்பாள்.
தொடர்ந்து இருவரும் ஆயிரம், லட்சம் மடங்கென ஏற்றிக்கொண்டே போவார்கள்.பின்னர் சிறுவன் அச்சிறுமிக்குப் புரியாத ஏதோ பெரிய எண்ணைச் சொல்வதைக் கேட்டு அச்சிறுமி, தனக்கு அதைவிடவும் மிக அதிகம் பிடிக்கும் என்று சொல்லி அப்பேச்சை முடித்தே விடுவாள்!
வாய்ப் பேச்சில் மற்றவர்களை மடக்குவது என்பது தனிக்கலை. வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள், விற்பனையாளர்கள், சமரசம் பேசுபவர்கள் ஆகியோருக்கு இது பெரும் சொத்து!
இதற்குத் தேவை, வாதங்களை எடுத்து வைத்து எதிரியைத் திணற வைக்கும் திறன்! அத்துடன் வார்த்தை ஜாலம்! சிலர் கம்பு சுற்றுவது போல வார்த்தைகளை வீசி சொற்சிலம்பாடுவர்! நாம் என்ன சொன்னாலும் டக்டக்கென்று பதில் வந்து விடும்.
அவர்கள் எடுக்கும் சொல்லாயுதங்களை எதிர்கொள்ள முடியாமல் நாம் விதிபூத்து நிற்போம்!அதிவேகத்தில் காய் நகர்த்தும் சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்தைப் போல செக் வைத்து சொல் ஆட்டம் ஆடினால் என்னாவது?
பேச்சில் வெல்ல வேண்டுமென்றால் அதை ஒரு போரைப் போலவே அணுக வேண்டுமென்கிறது குறள். யுத்தத்திற்கான ஆயத்தம் என்ன? எதிரி என்ன ஆயுதத்துடன் போரிடுவார் எனச் சிந்தித்து அதை எதிர் கொள்ளத்தக்க ஆயுதங்களை கையிலெடுப்பது தானே! அதைப் போலவே வாக்கு வாதங்களிலும் எதிராளி எடுத்தாளக்கூடிய கருத்துகளை முன் கூட்டியே சிந்தித்து அதற்கான பதில்களுடன் களம் இறங்க வேண்டும் என இக்குறளுக்குப் பொருள் கொள்வார் ராஜாஜி.
ஒரு சொத்தை விற்கச் செல்லும் பொழுது அங்கு சென்று சொத்து வாங்குபவன் போல் விசாரிக்கணும் என்பார் என் தந்தை!
நாம் ஒரு சொல்லைச் சொல்லுமுன் அதை வெல்லக்கூடிய வேறு ஓர் சொல் இருக்கிறதா என்று ஆராய்ந்த பின்னரே அச்சொல்லைச் சொல்ல வேண்டுமென்றும் இக்குறளுக்குப் பொருள் கொள்வார்கள்.
சொல்லும் வார்த்தை சொல்ல வந்ததை ஐயம் திரிபற சொல்லத்தக்கதாக இருக்க வேண்டுமில்லையா? எதுகை மோனை இருந்தால் இன்னும் சிறப்பு.
இதற்கான உதாரணங்களை நாம் வேறு எங்கும் தேட வேண்டாம். ஐயன் வள்ளுவரே தமது திருக்குறளில் அதற்கான செயல் விளக்கத்தைச் செய்து அதாவது சொல்லிச் சொல்லிக் காட்டியுள்ளாரே!
ஏச்சுப் பேச்சை கேட்டவர்கள் அதை எறும் மறக்க மாட்டார்கள் என்பதால் நாவினால் சுட்ட ‘வடு’ என்றார். நல்லவர் கெட்டவர் என்பது அவரவர் ‘எச்சத்தால்' காணப்படும் என்பதை வேறு வார்த்தைகளால் சொல்லமுடியுமா? ‘‘தன்னைவியந்தான்' எனும் வார்த்தைக்கு ஈடு இணை உண்டா?
அதாவது வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல், மனதில் வார்த்தைகளுக்கான தேர்வு நடத்திப் பேசணும் என்கிறார்! செந்தமிழும் நாபழக்கம் தானே!
சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
(குறள் 645)
- somaiah.veerappan@gmail.com
No comments:
Post a Comment