Tuesday, May 3, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?


மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?

மா.திருநாவுக்கரசு

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.


இந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.

அதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன?

1 . நமது மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவ இடங்களையும் நமக்கே ஒதுக்க வேண்டும்.

2. நமது மாநிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் 15 சதவீதத்தை தனியார் கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு வழங்கிவிட வேண்டும்.

3. மீதமுள்ள 85 சதவீதத்தை ஒரே நுழைவுத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்.

4. தமிழக பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நுழைவுத்தேர்வு நடத்தப்படவேண்டும்.

5. இடஒதுக்கீடு, மற்ற ஒதுக்கீடுகள் கடைபிடிக்கப்பட வேண்டும் .

6. கவுன்சலிங் முறையில், ஒற்றை சாளரம் அடிப்படையில் இடம் ஒதுக்கப்படவேண்டும்.

7. தர வரிசையில் ஒதுக்கீடு செய்யும்போது அரசு மற்றும் தனியார் கல்லூரி ஆகிய அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஒரே தரவரிசையை வெளியிட வேண்டும். அதன்படியே மாணவர்கள் சேர விரும்புவார்கள்.

8. தனியார் கல்லூரி கட்டணம் கட்டுப்படியானவர்கள், கட்டணம் செலுத்த விரும்புவர்கள் அங்கே சேரலாம். வேண்டாம் என்பவர்கள் அரசுக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, தனியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்திலும் தற்போதுள்ள இட எண்ணிக்கையையே பராமரிக்கலாம்.

10. இந்த முறைகள் கடைப்பிடிக்கப்பட்டால், வெளிப்படைத் தன்மை நிலை நாட்டப்படும். இந்த அடிப்படைகளில் நுழைவுத்தேர்வை ஏற்கலாம்.

அடுத்து வரும் ஆண்டுகளில் செய்ய வேண்டியவை:

1. அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.

2. மிக முக்கியமாக தேர்வைத் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும்.

3. அனைத்து வட்டங்களிலும் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

4. ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் அவ்வப்போது ஏற்படும் எண்ணிக்கை மாற்றத்துக்கு ஏற்ப, அந்த மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும். இம்முறையில் நமது மாநிலத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.

5. இப்படி செய்தால் சமூக நீதி பாதுகாக்கப்படுவது உறுதியாகும்

நுழைவுத் தேர்வினால் ஏற்படும் நன்மைகள் என்ன?.

1. வெளிப்படைத் தன்மை மாணவர்கள் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தும்

2. இப்படிச் செய்தால் தேசிய அளவில் நாம் இழந்த பெருமையை மீட்கலாம்.

3. இந்திய அளவில் தமிழக மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியும்

4. தமிழக மாணவர்களைக் குறைத்து மதிப்பிடத் தேவையில்லை.

5. பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் காலம்காலமாக சிரமப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வால் அது தவிர்க்கப்படும்.

6. சரி பாதி மாணவர்கள் குறைந்தது ஆறிலிருந்து பத்து நுழைவுத் தேர்வுகளை எழுதுகிறார்கள். அந்த சிரமம் நிச்சயமாக தவிர்க்கப்படும்.

7. அவற்றுக்காகப் பெற்றோர்கள் படும் அவஸ்தையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

8. சில கல்லூரிகள் பிரபலமானது எப்படி? நுழைவுத் தேர்வை வைத்தே இந்தக் கல்லூரிகள் இன்றும் பிரபலமடைகின்றன. அதுவும் தவிர்க்கப்படும்.

9. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் நுழைவுத் தேர்வு சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும்.

10. நுழைவுத் தேர்வால் மாணவர்கள் மத்தியில் நிச்சயத்தன்மையும் பாதுகாப்பு உணர்வும் ஏற்படும்.

கட்டுரையாளர், மன நல மருத்துவர்

தொடர்புக்கு: mananalamclinic@gmail.com

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...