Tuesday, May 31, 2016

என்ஜினியரிங் ஏன் படிக்கணும்... ஏன் படிக்கக் கூடாது?

vikatan.com

இன்றைய டாக் ஆஃப் தி டவுன் என்ஜினியரிங். பெரும்பான்மையான +2 முடித்த மாணவர்களின் விருப்பமான கோர்ஸ் பட்டியலில் என்ஜினியரிங் இல்லை. 4 வருடங்களுக்கு முன் என்ஜினியரிங்கில் வாய்ப்பு கிடைக்காதா என்று மாணவர்கள் நினைத்தது மாறி, இப்போது என்ஜினியரிங் என்றால் தெறித்து ஓடுகிறார்கள். என்ஜினியரி்ங்கை ஏன் வெறுக்கிறோம் என்று தெரியாமலேயே மாணவர்கள் வெறுக்கிறார்கள். பெற்றோர்களும், ' ஏன் தங்கள் பிள்ளைகள் என்ஜினியரிங் படிக்க வேண்டும்?' என்பதை தெரிந்துகொள்ளாமலேயே பிடித்து தள்ளுகின்றனர்.

என்ஜினியரிங் படிப்பின் தற்போதைய உண்மை நிலை என்ன என்பதை பார்க்கலாம்.


என்ஜினியரிங் மோகம் எப்படி உருவானது?

1990 களுக்கு பிறகு உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் ஆகிய மூன்று 'மயமாக்கல்'களும் சராசரி இந்தியனின் வாழ்க்கையை புரட்டிப்போட்டுவிட்டன. பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுத்தன. குறிப்பாக ஆட்டோ மொபைல் மற்றும் ஐடி துறைகள் அபரிதமாக பெருகின. இதற்கு இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மற்றொரு காரணம் 'சீப் லேபர்'.

'சீப் லேபர்' என்றால் என்ன?

இதற்கு அர்த்தம் தெரிந்தால் டென்ஷன் ஆகிவிடுவீர்கள். சராசரியாக ஒரு 'மனித' மணி நேரத்துக்கு (Manhour) அமெரிக்க பிரஜைகளுக்கு சுமார் 170 டாலரில் இருந்து 280 டாலர் வரை சம்பளம் கொடுக்கவேண்டும். இது இந்திய மதிப்பில் 10,000 ரூபாயில் இருந்து 16,800 ரூபாய் வரை (இது ஒரு மணி நேர வேலைக்கு). ஒரு நாளைக்கு எட்டு மணி நேர வேலை என்றால் கணக்கு போட்டுப் பாருங்கள். ஆனால் அதே வேலையை செய்ய, கல்லூரியில் டாப் ரேங்க் பெற்ற திறமைசாலியான இந்திய என்ஜினியர்களுக்கு 30 டாலர்கள் கொடுத்து வேலை வாங்குகிறார்கள். அப்படியானால் 170 டாலரில் 30 டாலர்கள் போனால் முதலாளியின் பாக்கெட்டிற்கு போவது 150 டாலர் (ஒரு மணி நேரத்துக்கு). இதுவே சுமார் 10,000 தொழிலாளிகள் கொண்ட பெரிய நிறுவனங்களின் மாத வருமானம் என்னவாக இருக்கும் என்பதை உங்கள் கணிதத் திறனிடமே விட்டுவிடுகிறோம்.

சரி பணம் குறைவாக இருந்தால் என்ன, என்ஜினியரிங்குக்கு வேலை இருக்கிறதே?

'வேலை இருக்கு...ஆனால் இல்லை' என்ற ‘தெளிவான பதில்’தான் இதற்கு விடை. இங்கு 2 விஷயங்களை உற்று நோக்க வேண்டி இருக்கிறது

1) என்ஜினியர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், அவர்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை கண்ணை துடைத்து பார்க்க வேண்டும். ஐடி சம்பந்தமான வேலைகளை 'பிராஜக்ட் கான்ட்ராக்ட்' எடுக்கிறார்கள். Analysis, Design, Development, Implementation and Evaluation என்ற ஐடி படிநிலைகளில், உடலுக்கு அதிக வேலை இருப்பதும், அதிக மனித ஆற்றல் தேவைப்படுவதும் நான்காவதாக செய்யப்படும் implementation-க்குதான். இங்கே implementation என்பது கிட்டத்தட்ட கொத்தனார் வேலைக்கு சமம். செங்கல்லை எடுக்க வேண்டியது, அதை அடுக்க வேண்டியது, சிமெண்ட் பூசவேண்டியது, மறுபடியும் செங்கல், சிமெண்ட்... அதாவது ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வது (Repeatable jobs). ஐடி கம்பெனிகளில் coding, testing எல்லாம் இந்த வகையை சேர்ந்தவைதான். ஆனால் என்ஜினியரிங் அறிவு தேவைப்படுவதோ மற்ற 4 படி நிலைகளுக்குத்தான். பெரும்பாலும் யாரோ ஒருவர் உருவாக்கிய பிராஜெக்டில் மாற்றங்களை மட்டும் சேர்க்கின்றனர். என்ஜினியர்கள் என்ற பெயரை நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தரலாம். ஆனால் என்ஜினியர்களின் திறமையை இங்கு முழுமையாக பயன்படுத்துவது இல்லை.



2) இரண்டாவது சிக்கல் ஆட்டோமேஷன். பெரும்பாலான தொழிற்சாலைகளை இன்று ரோபோக்கள்தான் இயக்குகின்றன. என்ஜினியர்களின் இடத்தை இவை ஆக்கிரமித்து விட்டன. ஒரு கார் கம்பெனியில் 5000 பேர் வேலை பார்க்கிறார்கள் என்றால், 4500 பேர் இந்த அசெம்ப்ளி வேலையைத்தான் செய்வார்கள். இந்த அசெம்ப்ளி வேலைக்கு குறைந்த சம்பளத்தில், டிப்ளமோ அல்லது சில இடங்களில் +2 மாணவர்களையும் வேலைக்கு எடுக்கிறார்கள். இங்கு என்ஜினியர்களுக்கான தேவை மிகக் குறைவு. அதிலும் அந்நிறுவனம் எந்த நாட்டைச் சேர்ந்ததோ அங்குள்ள என்ஜினியர்கள்தான் இங்கு முக்கிய பதவிகளை வகிக்கின்றனர். எனவே மிகத் திறன் வாய்ந்த, சில எண்ணிக்கையிலான என்ஜினியர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள். அரசு பெரும் முயற்சி செய்து, பல பன்னாட்டு தொழிற்சாலைகளை இந்தியாவில் உருவாக்கச் செய்தால் கூட, ஆண்டுக்கு 2 லட்சம் என்ஜினியர்களை இவற்றில் பணியமர்த்த முடியுமா என்பது சந்தேகம்தான்.



திறன் வாய்ந்த என்ஜினியர்களை கல்லூரிகள் உருவாகின்றனவா?

எப்படி முடியும்? டாப் கல்லூரிகளில் மட்டுமே தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காண முடிகிறது. மற்ற கல்லூரிகளில் பி.இ படித்துவிட்டு வேறெங்கும் வேலை கிடைக்காததால், ஆசிரியர்களாக அடைக்கலம் தேடுபவர்கள்தான் அதிகம் உள்ளனர். இவர்களிடம் பயிலும் மாணவர்கள் எத்தகைய திறனைப் பெற முடியும் என்பது கேள்விக்குறியே.

'100% பி்ளேஸ்மென்ட்' என்ற வார்த்தையை பெரிதாக போட்டுவிட்டு, ‘நோக்கி’ என்ற வார்த்தையை கண்ணுக்கு தெரியாதபடி அச்சிட்டு பேனர்கள் வைத்தும், 'கல்வி வழிகாட்டி' நிகழ்ச்சிகளை நடத்தி விளம்பரம் செய்தும் 'சீட்' நிரப்புவதில் அக்கறை கட்டும் கல்லூரிகள், மாணவர் திறன் வளர்ச்சிக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துவதில்லை. இதனால் எந்த ஒரு முன்னறிவும் இல்லாமல் இன்டர்வியூவுக்கு செல்லும் மாணவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.

இந்த காரணங்களை எல்லாம் நீங்கள் கருத்தில் கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் பொறியியல் படிப்பை வெறுப்பது நியாயமானதுதான்.



அப்படியனால் என்ஜினியரிங்க் படிக்கக் கூடாதா...?

எந்த படிப்பும் மோசமானது அல்ல. இன்றைக்கும் பொறியாளர்கள் தேவைப்படும் பல நிறுவனங்கள் உள்ளன. ஒரு நாட்டை செதுக்குவது பொறியாளர்கள்தான். தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் என்று மட்டும் இல்லாமல் வங்கி, மருத்துவம், சமூக உள்கட்டமைப்பு போன்ற சேவை பிரிவுகளிலும் பொறியாளர்களுக்கான தேவை உள்ளது.

என்ஜினியர்களுக்கென்று சில தனித் திறன்கள் இருக்கும். அவர்களுடய பகுப்பாய்வு மற்றும் காரணி அறிவு ( Analysis and Reasoning) அணுகும் திறன் ( Approachability), எண்கணித திறமை ( Numerical Ability), தர்க்க திறமை ( Logical) போன்ற திறன்கள்தான் மற்ற துறை மாணவர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கும். இத்திறன் கொண்ட மாணவர்களை அள்ளிக்கொண்டு செல்ல நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.

அதையும்தாண்டி இந்தியாவின் தற்போதைய புதிய ட்ரெண்ட், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள். ஒரு சின்ன ரூமில் 4 லேப்டாப்களை வைத்துக் கொண்டு, இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கும் மாடர்ன் இந்திய இளைஞர்களுக்கான களம் இது. திறமைசாலிகளை வேலைக்கு எடுக்கும் அளவுக்கான 'நிதி பலம்' ஸ்டார்ட் அப்களிடம் இருக்காது. இங்கு உங்கள் திறன்தான் முதலீடு. இங்கு ஊழியரும் நீங்களே... சி.இ.ஓவும் நீங்களே. இந்தியா முழுவதும் புதுமையான பிஸ்னஸ் ஐடியாக்களுடன் இயங்கிக் கொண்டிருக்கும் இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல் பட்டதாரிகள். பெரியப் பெரிய நிறுவனங்களால் செயல்படுத்த முடியாத விஷயங்களை, இந்த என்ஜினியர்கள் அசால்ட்டாக செய்து காட்டுகின்றனர். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்களும், தொழிலதிபர்களும் இவர்கள் மீது முதலீட்டை கொட்டுகின்றனர்.



பல லட்சம் சம்பளத்துக்கு வேலை கொடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் தயாராக இருந்த போதும் அவற்றை உதறிவிட்டு, குறைந்த சம்பளத்துக்கு 30% ஐ.ஐ.டி மாணவர்கள் இந்திய ஸ்டார்ட் அப்களில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர். காரணம், ஸ்டார்ட்அப்களில் நீங்கள்தான் படைப்பாளி. உங்களுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. சொந்த முயற்சியில் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுடைய முழு திறனையும் பயன்படுத்த முடியும். திறனை வளர்த்துக் கொள்ளவும் முடியும். உங்கள் உழைப்புக்கான முழு கிரெடிட்ஸ் உங்களுக்கே. இவ்வளவையும் மீறி, 'நான் ஒரு படைப்பாளி' என்ற கர்வம் உங்களுக்கு கிடைக்கும். இந்த கர்வம், உங்களை மேலே தள்ளிக் கொண்டே இருக்கும். ஏனெனில் என்ஜினியர்கள் நல்ல படைப்பாளிகள், அடுத்தவரின் கீழ் வேலை செய்ய பிடிக்காதவர்கள். எனவே தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கு ஸ்டார்ட்அப்கள் கை கொடுக்கும்.

மேலே கூறியவற்றை புரிந்து கொண்டு, மிகுந்த ஆர்வத்தோடு பொறியியல் படிக்க முடிவெடுத்தீர்களானால் ஆல் தி பெஸ்ட்.

- ஆரா ( மனிதவள மேம்பாட்டு வல்லுநர்), ரெ.சு.வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...