மார்க்கும் மார்க்கமும்
டாக்டர் ராமானுஜம்
மதிப்பெண் வாழ்க்கை இல்லை
நம்முடைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கே மதிப்பு அதிகம் இருப்பதால், மார்க்குகளே நாம் போகப் போகும் மார்க்கத்தை நிர்ணயிப்பதாக அமைகிறது. ஒருவரது உள்ளார்ந்த திறமையும் ஆர்வமும் எந்தத் துறையின்பால் இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கல்விக் கூடங்களை ஒரே மாதிரியான இயந்திரங்களைச் செய்யும் தொழிற்கூடங்கள்போல் கருதும் மனநிலைதான் நிலவுகிறது.
பொதுத்தேர்வு முடிவுகள் வந்தாச்சு. மட்டற்ற மகிழ்ச்சியில் வானத்தையே எட்டிப் பிடித்த மனநிலையில் சிலர் இருப்பார்கள். சிலருக்கு உலகமே இருண்டு பாதாளத்துக்குள் விழுந்ததுபோல இருக்கலாம். இரண்டு வகையான உணர்வுகளுமே மிகையானவை. தேவையற்றவையும்கூட!
வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வாழ்க்கைத் தேர்வில் தோல்வி அடைந்திருப்பதை நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். அதேபோல் அதிக மதிப்பெண்கள் பெறாமல் தோல்வியடைந்த பலரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று மதிப்போடு வாழ்வதைக் காண்கிறோம்.
முடிவு உங்கள் கையில்
‘மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி’ என்று சொல்வதைப்போல் படித்தால் மருத்துவம், பொறியியல்தான்; இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்று நினைக்கும் மனப்பான்மை குறுகிய பார்வை.
இவற்றைத் தாண்டி வேறு எதையும் பார்க்கவிடாத குறுகிய குகைப் பார்வையை Tunnel Vision என்பார்கள். இந்தக் குகைப் பார்வை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்பட முக்கியக் காரணம் சமூகம் பொதுபுத்தியில் திணித்திருக்கும் மதிப்பீடுகள்தான்.
நமக்கு என்ன வேண்டும், எது நன்றாக வரும் என்பதையெல்லாம் நினைக்கையில் சமூகம் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதற்கு அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுப்பதுதான் சிக்கல்.
முதன்முதலாகப் பத்திரிகை நிருபர் வேலைக்குச் சேர்ந்த ஒருவரைத் துறைமுகத்திலிருந்து கப்பல் கிளம்புவதைப் பற்றிச் செய்தி சேகரிக்க அனுப்பினார்களாம். காலையில் சென்ற அவரிடமிருந்து அன்று இரவுவரை எந்தத் தகவலும் இல்லையாம். நடு இரவில் அலுத்துக் களைத்த வந்த அவரிடம் செய்தி எங்கே என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டதற்கு ‘போங்க சார்! கப்பல் கவிழ்ந்து பலர் இறந்துவிட்டார்கள்’ என்று பதில் சொன்னாராம். ‘அடப்பாவி இதுதானே நாளைய தலைப்புச் செய்தி! இதைத்தானே நீ உடனடியாகச் சொல்லியிருக்கணும்!’ என்றாராம் பத்திரிகை ஆசிரியர். இதுபோல எது முக்கியமோ அதைச் சுயமாகத் தீர்மானிக்காமல் போடப்பட்ட பாதையில் குறுகிய பார்வையோடு இருப்பதுதான் சிக்கல்.
ஆராய்ச்சிகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் தேவையான மனித ஆற்றல் இல்லாமல் பல்வேறு துறைகள் இருக்கின்றன. சற்று கவனமாகக் கண்காணித்தால் போதும். வாய்ப்புகள் நம் வசப்படும்.
எது கவுரவம்?
அப்துல்கலாமைப் பற்றிச் சொல்லாமல் சுயமுன்னேற்றக் கட்டுரை எழுத முடியுமா? அவர் மிகப் பெரும் கல்வி நிலையத்தில் கற்றவர் அல்ல. ஆனால் தமது துறைமீது கொண்ட ஆர்வமே அவரை ராக்கெட் தொழில்நுட்ப வல்லுநராக்கியது. இன்னும் கணினி மற்றும் மென்பொருள் துறையின் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் ஜூக்கர்பெர்க் போன்ற வெற்றியாளர்களது கதைகளை எல்லாம் எடுத்துப் பார்த்தால் பலரும் முறையான பள்ளிப் படிப்வைக்கூடப் படித்திருக்கவில்லை.
இது போன்ற உதாரணங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் மதிப்பெண் பின்னால் ஓடும் மனப்பான்மைக்குக் காரணம் நல்ல மதிப்பெண் எடுப்பது கார், வீடு வாங்குவது போல் ஒரு சமூகக் கவுரவமாகக் கருதப்படுவதால்தான்.
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வெற்றிபெறத் தேவை, முதலில் ஆர்வம். மகாபாரதத்தில் தர்மரிடம் ஒரு யக்ஷன் பல கேள்விகளைக் கேட்பான். அதில் ஒன்று “யார் மிகச் சிறந்த ஆசிரியர்?” என்பதாகும். அதற்குத் தர்மர் “ஆர்வமே மிகச் சிறந்த ஆசிரியர்” என்றார். “கல்வி என்பது விஷயங்களைத் தெரிந்து கொள்வதல்ல. எப்படிச் சிந்திக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதே” என்பது ஐன்ஸ்டீனின் கருத்து. எனவே, புரிந்தோ புரியாமலோ மனப்பாடம் செய்து பெறும் மதிப்பெண் சான்றிதழ் வெறும் அச்சடித்த காகிதம்தான்.
அதைத் தாண்டி நமக்கு நன்கு வரக்கூடிய, நமக்கு மிகவும் பிடித்த விஷயத்தைச் செய்வதே வெற்றி. ஆனால் நாமோ பொருள்ரீதியான விஷயங்களைப் பெறுவதே வெற்றி என்ற சமூக அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு மதிப்பெண்கள் பின்னால் ஓடுவது கண்ணிரெண்டும் விற்றுச் சித்திரம் வாங்குவது போன்றதே.
ஆகவே மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படுவதை விடுங்கள். வந்தால் மகிழ்ச்சி. வராவிட்டால் மிக்க மகிழ்ச்சி!
மிகமிக முக்கியமான விஷயம், தயவு செய்து இந்த அச்சிடப்பட்ட காகிதத்தில் சில எண்கள் நீங்கள் நினைத்ததுபோல் அமையவில்லை என்பதால் வாழ்க்கையே அவ்வளவுதான் என நினைக்க வேண்டாம்.
அது எலிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவது போன்றதாகும். கலைக்காகவே கலை என்று இலக்கியத்தில் சொல்வதைப்போல் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்துக்காக கற்றலே உண்மையான வாழ்க்கைக் கல்வி. அது மதிப்பெண்களுக்கெல்லாம் அப்பாற்பட்டது. கற்றல் இனிதானது. வாழ்தல் அதனினும் இனிமையானது.
கட்டுரையாளர், மனநல மருத்துவர், தொடர்புக்கு: ramsych2@gmail.com
No comments:
Post a Comment