M.G.R. முப்பிறவி எடுத்தவர் என்று அவரது ரசிகர்கள் புகழ்வது வழக்கம். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிழைத்தது இரண்டாவது பிறவி என்றும் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பியது மூன்றாவது பிறவி என்றும் கூறுவார்கள். அப்படி இரண்டாவது பிறவி எடுப்பதற்கு முன் அவரது உயிருக்கு ஆபத்து வந்த நாள் 1967 ஜனவரி 12. அன்றுதான் எம்.ஜி.ஆரை நடிகவேள் எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார்.
நாடகத்துறையிலும் வயதிலும் எம்.ஜி.ஆரை விட மூத்தவர் எம்.ஆர்.ராதா. அவரை எம்.ஜி.ஆர். எப்போதும் அண்ணன் என்றுதான் மரியாதையுடன் அழைப்பார். எம்.ஜி.ஆர். மீது எம்.ஆர்.ராதாவும் மிகுந்த அன்பு வைத்திருந்தார். 1966-ம் ஆண்டில் எம்.ஆர்.ராதா அளித்த பேட்டியில், ‘‘படப்பிடிப்பு நடக்கும்போது மற்றவர்களையும் ‘ஜோர்’ படுத்தி வேலை வாங்குகிறவன் நான். இதே பழக்கம் எம்.ஜி.ஆரிடமும் இருந்ததைப் பார்த் தேன். இந்த ஒரு காரியத்திலேயே அவரை எனக்குப் பிடித்துவிட்டது. ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் சண்டைக் காட்சிகள் படமானபோது அவரது திறமை மெச்சத்தக்கதாயிருந்தது. எம்.ஜி.ஆர். தன்னுடைய நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை வைத்திருக்கிறார். அமெரிக்க, இந்தி நடிகர்களைப் பார்த்து காப்பி செய்கிற வழக்கம் அவரிடம் கிடையாது. ஆகையினாலே எம்.ஜி.ஆர். ஒரு ஒரிஜினல் நடிகர்’’ என்று புகழ்ந்துள்ளார்.
அண்ணன், தம்பியாக இருந்தவர் களிடையே அரசியல் புகுந்தது. அரசியல் மாறுபாடு இருந்தாலும் எம்.ஜி.ஆர். யாரையும் விரோதியாக கருதியதில்லை. 1967-ம் ஆண்டு தேர்தல் சமயம். ஜனவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக சிறப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில்,‘‘தேர்தல் நிதியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்’’ என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார். அதற்கு பதிலளித்த பேரறிஞர் அண்ணா, ‘‘எம்.ஜி.ஆரிடம் இருக்கும் பணம் என்னிடம் இருக்கும் பணம் போன்றது. எங்கும் போய்விடாது. ஒருமாதம் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும். அவர் முகத்தைக் காட்டினால் 30 ஆயிரம் வாக்குகள் கழகத்துக்குக் கிடைக்கும்’’ என்று பேசினார்.
அந்தத் தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரையும் காங்கிரஸையும் தந்தை பெரியார் ஆதரித்தார். ஜனவரி 8-ம் தேதி பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில், ‘‘பச்சைத் தமிழர் ஆட்சியைக் கவிழ்க்க அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ராஜாஜி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள்’’ என்று பெரியார் பேசியதாக திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பன் பதிவு செய்துள்ளார். கூட்டத்தில் எம்.ஆர்.ராதா வின் பேச்சிலும் எம்.ஜி.ஆர். மீதான கோபம் வெளிப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டுகிறார்.
இந்த நிலையில், ஜனவரி 12-ம் தேதி மாலை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு புதுப்பட விஷயமாக பேச ‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தின் தயாரிப்பாளர் வாசுவும் எம்.ஆர்.ராதாவும் வருவதாக எம்.ஜி.ஆருக்கு தகவல் கிடைத்தது. பிரசாரத்துக்குப் புறப்பட வேண்டிய நிலையிலும், வீட்டுக்கு வந்த எம்.ஆர்.ராதாவை எம்.ஜி.ஆர். வரவேற் றார். வாசுவுடன் பேசிக் கொண்டிருக் கும்போது எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா துப்பாக்கியால் சுட்டார். எம்.ஜி.ஆரின் தொண்டையில் குண்டு பாய்ந்தது. பின்னர், எம்.ஆர்.ராதா தன்னையும் சுட்டுக் கொண்டார். இருவரும் பிழைத்தது தெரிந்த கதை.
‘எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்டதற்கு அரசியல் கோபம் இருந்தது’ என்பது ஆர்.எம்.வீரப்பனின் உறுதியான கருத்து. ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு உள்ளே சிகிச்சைக்குச் செல்லும்போது, ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் என்பவரிடம் எம்.ஆர்.ராதா தனது சட்டைப் பையில் இருந்து எடுத்து ஒரு கடிதத்தைக் கொடுத்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. விசாரணையில் ஹெட் கான்ஸ்டபிள் லட்சுமணன் சாட்சியம் அளித்தார். MSZ 1843 என்ற காரில் ரத்தகாயத்துடன் வந்த எம்.ஆர்.ராதாவை சப் இன்ஸ்பெக்டர் துரை என்பவரின் உத்தரவுப்படி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிக் கொண்டு சென்றதாகவும் ஆஸ்பத் திரிக்கு உள்ளே செல்லும்போது, எம்.ஆர்.ராதா தன்னிடம் கடிதத்தை கொடுத்ததாகவும் லட்சுமணன் கூறினார். 4 பக்க கடிதத்தை அவர் நீதிமன்றத்தில் படித்தார். எம்.ஆர்.ராதா கைப்பட எழுதியிருந்த அந்த நீண்ட கடிதத்தின் ஒரு சில பகுதிகள் இவை:
‘ஜனவரி 8-ம் தேதி தந்தை பெரியார் தலைமையில் கூட்டம் நடந்து கொண் டிருந்தது. நம் தோழர்கள் உயிர்தானம் செய்ய வேண்டும் என்று நான் உரை யாற்றினேன். மகாநாடு முடிந்து நான் போகும்போது, ‘‘உயிர்தானம் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டாரே எம்.ஆர்.ராதா அவர்கள், இவர் முதலில் செய்தால் பிறகு நாம் செய்வோம்’’ என்று கிண்டலாகவும் சிரித்துக் கொண்டும் சிலர் பேசினார்கள். உயிர்தானம் செய்வதற்கு ஒரு இயக்கம் இந்த எலெக் ஷனுக்குள் நம் நாட்டில் தேவை. அதற்கு நான் தலைமை தாங்கத் தயார். நல்ல ஆட்சியை, நல்லவர்களைக் கவிழ்ப்பதற்குரிய சதிகாரர்களின் உயிரை ஒன்றோ, இரண்டோ எடுத்துச் செல்ல வேண்டும். இதுதான் உயிர்தானம் செய்யும் இயக்கத்தின் கொள்கை. நான் செய்கிறேன். நீங்களும் இதுபோல் செய்ய வேண்டும். செய்வீர்களா?’
இதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். வழக்கு நடந்து எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா தனது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் சுட்டுக் கொண்டது உறுதிப்படுத்தப்பட்டு, அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது கழுத்தில் கட்டுப்போட்டபடி இருக்கும் எம்.ஜி.ஆரை புகைப்படம் எடுத்து தேர்தல் பிரச்சார சுவரொட்டியாக ஒட்டலாம் என்று ஆர்.எம்.வீரப்பன் யோசனை தெரிவித்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் படம் மட்டுமே இடம் பெற்ற சுவரொட்டிகள் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தின. பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைத்தது.
‘தர்மம் தலை காக்கும்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் மகள் சரோஜாதேவி. அவர்களது வீட்டுக்கு வரும் எம்.ஜி.ஆரின் தலைக்கு மேல் இருக்கும் அலங்கார விளக்கு விழும்போது அவரை சரோஜாதேவி காப்பாற்றுவார். அப்போது, எம்.ஜி.ஆரைப் பார்த்து எம்.ஆர். ராதா, ‘‘தர்மம் ஒருமுறைதான் தலை காக்கும்’’ என்று எச்சரிப்பார். புன்னகையை மட்டுமே பதிலாக அளித்து விட்டு, காரை ஓட்டியபடி எம்.ஜி.ஆர் திரும்பும்போது இந்தப் பாடல்…
‘தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்...’
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
1967 தேர்தலில் படுத்துக் கொண்டே பரங்கிமலைத் தொகுதியில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று சாதனை படைத்தார். 54,106 ஓட்டுக்கள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை அவர் தோற்கடித்தார்.
No comments:
Post a Comment