Tuesday, May 10, 2016

குறள்

குறள் இனிது: பேச்சு பேச்சாக இருக்கணும்!


பேச்சு பேச்சாக இருக்கணும்! எனது நண்பர் ஒருவர் வேலையில் சேர்வதற்கான தேர்வின் ஒரு பகுதியாக குழு விவாதத்தில் பங்கேற்கச் சென்றார். ‘நம் நாட்டில் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டுமா' எனும் தலைப்பு. 8 பேர் இருந்த அக்குழு 45 நிமிடத்துக்குள் விவாதித்து ஒருமித்த கருத்தைச் சொல்ல வேண்டும்.

சட்டம் படித்திருந்த அவர் கூட்டம் தொடங் கியதும் தனக்குத்தான் பல விஷயங்கள் தெரியுமென்றும் அதனால்தானே தலைவராக இருப்பேன் என்றும் அடம்பிடித்தார். மற்றவர்களுக்கோ ஏக எரிச்சல். ஏனெனில் விடாமல் பேசிக் கொண்டேயிருந்தார். மற்றவர் பேசினால் இடைமறிப்பார். அவர்கள் சொல்ல வந்ததைச் சொல்லி முடிக்க விடமாட்டார். இதனால் அக்குழுவால் தம் முடிவைத் தகுந்த காரணங்களுடன் தேர்வாளர்களிடம் சொல்ல முடியாமலேயே போயிற்று.

உண்மையில் நண்பருக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருந்தது. ஆனால் அவரது அணுகுமுறையால் அவரது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை.

நாம் என்ன பேசுகிறோம் என்பதுடன் எப்படிப் பேசுகிறோம் என்பதும் முக்கியமில்லையா? அருமையான அறுசுவை உணவென்றாலும் அன்புடன் இடாததால் உண்பவர் மறுத்துவிட்டால் அவ்வுணவின் பயனென்ன? சொற்களின் வெற்றி கேட்பவரின் ஏற்பில் தானே உள்ளது?

உங்களது அன்றாட வாழ்க்கையிலும் இவ்வாறான மனிதர்களைச் சந்தித்து இருப்பீர்கள். அவர்கள் படித்திருக்கலாம்; அறிவாளியாக, அனுபவசாலியாக இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பேசினால் நமக்குக் கேட்கப் பிடிக்காது. பேச்சின் தொணி அப்படி!

வர்த்தக நிறுவனங்கள் நடத்தும் புதிய நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். சில உயரதிகாரிகள் ‘25% இலக்கு என்பது சவால்தான். ஆனால் உங்களைப் போலத் திட்டமிட்டு வேலை செய்பவர்கள் சாதித்துக் காட்டுவீர்கள்’ என்கிற ரீதியில் பேசி பெரிய இலக்குகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வைத்து விடுவார்கள்.

எனது நண்பர் போன்றவர்கள் ‘என்ன இது கூட முடியாதா, இதுவரை தூங்கி வழிந்தது போதும். இனியாவது வேலை செய்யுங்கள்' என்று ஏற்கெனவே சிறப்பாய்ப் பணியாற்றிய சிலரைப்பழித்து, அதே 25% இலக்கை கசப்பாக்கி வந்தவர்களை வாதாடவும் மறுக்கவும் வைத்து விடுவார்கள்!

பேச்சைக் கேட்பவர்கள் கருத்தை ஏற்கும்படியாகவும், மாறுபட்ட கருத்துடையவர்களின் மனம் புண்படாதபடி இனிமையாகவும் பேசுவதே நாவன்மை என்கிறார் வள்ளுவர். கேட்பவர்கள் மயங்கும் படியும், கேளாதவர்கள் ஏங்கும் படியும் பேசுவதே சொல்வன்மை என்று இக்குறளுக்குப் பொருள் கொள்வோரும் உண்டு. கிருபானந்த வாரியார், குன்றக்குடி மூத்த அடிகளார், நானி பல்கிவாலா போன்றவர்களின் பேச்சைக் கேட்டவர்களைக் கேட்டுப் பாருங்கள் தெரியும்! கருத்தின் ஆழம், செய்திகளின் பரிமாணம், அள்ளி வீசும் புள்ளிவிபரங்கள், இழையோடும் நகைச்சுவை, சொல்லின் வீச்சு..அடாடா..ள

இன்றைய சூழலில், நீங்கள் தொலைக்காட்சியில் ஆன்மிக உரையோ இலக்கியச் சொற்பொழிவோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கையில் ரிமோட் இருந்தாலும் அடுத்த சானலுக்கு மாறாமல், உடனே நண்பர்களிடம் அதைப் பார்க்கச் சொன்னால், அப்படிப் பேசுபவர் நாவன்மை உடையவர் எனலாமா?

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல் (குறள் 643)

somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024