சென்னையில் மனிதம் மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள் என்று அவ்வப்போது உணர்த்துவது உண்டு. கடந்தாண்டு டிசம்பர் மழை மனிதம் மிக்க மனிதர்கள் எவ்வளவு பேர் கொண்டது சென்னை என்பதை உலகுக்கு உணர்த்தியது.
'சென்னையில் ஒரு நாள்' படத்தைப் போல ஒரு பிரசவ வலியால் துடித்த பெண்ணை, அரசு பஸ் ஒன்று தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அதிவேகத்தில் ஓட்டிச் சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். அந்த பேருந்தில் பயணித்த இளவரசன் சுகுமாரிடம் பேசிய போது அவர் சொல்லிய வார்த்தைகள் அனைத்துமே ஆச்சர்யமூட்டுபவை. அரசு பேருந்து ஒட்டுநரும், நடத்துனரும் அப்பேருந்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்காக துரிதமாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
அன்று நடந்த சம்பவத்தை பகிர்கிறார் இளவரசன் சுகுமார்:
எனக்கு காஞ்சிபுரம் சொந்த ஊர். தாம்பரம் சானிட்டோரியத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு அரசுப் பேருந்தில் ஏறினேன். அடுத்த நாள் தேர்தல் என்பதால் கடுமையான கூட்டம் இருந்தது. தாம்பரம் தாண்டி படப்பைக்கு கொஞ்சம் முன்பு ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அலறல் சத்தம் கேட்டது.
கடுமையான கூட்டத்தில் நான் பின்னால் இருந்தேன். அப்போது தான் அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருக்கிறது என தெரிந்தது. அங்கிருந்து பிரசவம் பார்க்கும் மருத்துவமனையை நோக்கி காஞ்சிபுரத்துக்கு செல்ல 1 மணி நேரமாகும் என்பதால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவருமே சீக்கிரமாக செல்ல திட்டமிட்டார்கள்.
பயணிகள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இருந்து 200 அடி தாண்டி தான் பேருந்தை நிறுத்தினார்கள். உடனடியாக இறங்க வேண்டும், வேறு எங்குமே பேருந்து நிற்கவில்லை. இந்த சூழலில் இன்னொரு நடத்துனர் அப்பெண்மணிக்கு பக்கத்தில் இருந்துகொண்டு தண்ணீர் கொடுத்து கவனமுடன் பார்த்துக்கொண்டார்.
ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் பேருந்தை மிக வேகமாக இயக்கினார். ஒவ்வொரு நிறுத்தத்திலும் 200 அடியைத் தாண்டி நிறுத்திவிட்டு, இறங்க வேண்டியவர்கள் இறங்கியவுடன் பேருந்தும் வேகமாக கிளம்பியது. ஒரு நிறுத்தத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் பேருந்தை நிறுத்த கைகாட்டினார். அப்போது கூட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவில்லை.
காஞ்சிபுரம் நெருங்கும் முன்பு நடத்துனர் 108 ஆம்புலன்ஸூக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸ் ரங்கசாமி குளம் என்ற இடத்தில் தயாராக இருந்தது. இதற்கு முன்பே பிரசவ வலியால் துடித்த பெண்ணின் குடும்பத்தினருக்கும் போன் செய்து விட்டதால் அவர்களும் காத்திருந்தனர். அப்பெண்ணை ரங்கசாமி குளத்தில் இறங்கிவிடும் போது கூட "அம்மா.. போயிருவீங்களா. கூட யாரையும் அனுப்பட்டுமா?" என்று கேட்டார் ஒட்டுநர். என் குடும்பத்தினர் இருக்கிறார்கள் என நன்றி கூறிவிட்டு இறங்கி சென்றார்.
அந்த ஒட்டுநர் மற்றும் நடத்துநர் பெயரை எல்லாம் நான் பார்க்கவில்லை. அவர்களுடைய மனிதம் மட்டும் என்னுடைய கண்ணிலும், நெஞ்சிலும் தெரிந்தது என்று கூறிய இளவரசன் சுகுமாரன் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்தப் பதிவுக்கு 84,482 விருப்பம் தெரிவித்தனர். 18 ஆயிரம் பேர் பகிர்ந்திருந்தனர். அவை எல்லாம் எனக்கு எண்களாகத் தெரியவில்லை. நான் கண்டுகொண்டது மனிதர்களையும், மனிதத்தையும் மட்டுமே.
No comments:
Post a Comment