மரண தண்டனையைத் தீர்மானிப்பது எது?
மரண தண்டனைக்கு எதிராக எழும் குரல்கள், அதன் பின்னே இருக்கும் குரூரத் தன்மை, நிரபராதிகள் தண்டிக்கப்படும் வாய்ப்புகளைப் பற்றித் தொடர்ந்து பேசிவருகின்றன.
இந்தச் சூழலில் டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கை, மரண தண்டனை விதிக்கப்படுவதில் சமூகக் காரணிகளும் பொருளாதார நிலையும் முக்கியப் பங்கு வகிப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியான இந்த அறிக்கையில், மரண தண்டனை விதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள் என்றும் கல்வியறிவு இல்லாதவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மரண தண்டனை அளிக்கப்பட்டவர்களில் பலர் சிறுபான்மை இனத்தவர்கள். மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் 385 பேரில் 241 பேர் முதல் முறை குற்றவாளிகள். இவர்களில் பலர் குற்றம் நடந்த சமயத்தில் சிறாராக இருந்தவர்கள். எனினும், தங்கள் வயதை நிரூபிக்கப் போதுமான ஆவணங்கள் இல்லாததால், தூக்குக் கயிற்றை எதிர்பார்த்துச் சிறையில் கிடக்கிறார்கள்.
வயதில் இளையவர்களுக்கும், முதியவர்களுக்கும் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது நியாயமாகப் பின்பற்றப்பட வேண்டிய விதி. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பவர்களில் 54 பேர், 18 முதல் 21 வயதுள்ளவர்கள். 60 வயதைக் கடந்த ஏழு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் சிறுபான்மையினத்தவர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லது பொருளாதாரரீதியாகப் பின்தங்கியவர்கள், பத்தாம் வகுப்பைக் கூடத் தாண்டாதவர்கள் போன்றோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தன் பதவிக் காலத்தில் கருணை மனு அளித்திருந்த மரண தண்டனைக் கைதிகள் தொடர்பாகத் தனது அலுவலகம் நடத்திய ஆய்வு ஒன்றைப் பற்றிப் பேசும்போது, மரண தண்டனைக் கைதிகளில் சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பின்தங்கியிருப் பவர்களே அதிகமாக இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “ஏன் இத்தனை ஏழைகள் மரண தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள்?” என்று அவர் வருத்தத்துடன் கூறியது குறிப்பிடத் தக்கது. திட்டமிட்டே இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதா அல்லது நிறுவனமயமான முன்முடிவுகள் காரணமாக அமைகின்றனவா என்ற கேள்விகளை, தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அறிக்கை எழுப்பியிருக்கிறது.
மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட தருமபுரி பஸ் எரிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் பேருந்தை அவர்கள் எரிக்கவில்லை என்றும், குழு வன்முறையின் தாக்கத்தில் இந்தச் செயலில் அவர்கள் ஈடுபட்டதாகவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. எந்தக் காரணத்துக்காகவும் மரண தண்டனையிலிருந்து தண்டனைக் குறைப்பு செய்யப்படுவது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், நீதியின் இறுதிப் படி வரை சென்று தண்டனைக் குறைப்பு பெறும் அளவுக்குப் பலருக்குப் போதுமான பொருளாதார வசதி இருப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.
பொருளாதார வசதி கொண்டவர்களால் இறுதிக் கட்டம் வரை சென்று மரண தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்பதும், அது சாத்தியமாகாததால் பலர் வேறு வழியின்றி மரண தண்டனையை எதிர்கொள்கிறார்கள் என்பதும் விரிவான விவாதத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள். தண்டனை என்ற பெயரில் ஒருவருடைய உயிரை அரசே பறிக்க வேண்டுமா என்ற கேள்விக்கும் விரைவில் விடை தேட வேண்டிய தருணம் இது!
No comments:
Post a Comment