Wednesday, May 4, 2016

மனதுக்கு இல்லை வயது

மனதுக்கு இல்லை வயது

 
அந்தப் பெரியவரை மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்கு அழைத்து வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புவரை நன்றாக இருந்தவர், திடீரென்று குழப்பமாகப் பேச ஆரம்பித்து விட்டார். ஆட்களைச் சரியாக அடையாளம் தெரியவில்லை.இடம், காலக் குழப்பம் என்று தடுமாறினார். குழந்தையைப்போல ‘நாளைக்கு இட்லி சாப்பிட்டேன்’, ‘நேற்றுக்கு வீட்டுக்கு போவேன்’ என்றார். இரவானால் இந்தத் தொந்தரவுகள் அதிகமாகின்றன. யாரோ வந்திருப்பதுபோலப் பேசுகிறார். சில சமயம் எழுந்து ஓடவும் செய்தார். என்ன காரணம் என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது. அவர் நான்கு நாட்களாக மருத்துவர் ஆலோசனை இன்றி இருமல் மருந்தைக் குடித்து வந்திருக்கிறார். அதிலுள்ள ஒரு மருந்தே அவரது திடீர் குழப்பத்துக்குக் காரணம்.

பெரும்பாலும் காய்ச்சல் வந்து குழப்பத்தில் புலம்புவதை ‘ஜன்னி’ என்கிறோம். இது டெலிரியம் (Delirium) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஜன்னி காய்ச்சலில் மட்டுமன்றி வேறு சில உடல் பாதிப்புகளிலும் ஏற்படும். குறிப்பாக, வயதானவர்களுக்கு இது எளிதில் ஏற்படும்.

வயதாகும்போது மூளையில் சில ரசாயனங்கள் குறையத் தொடங்கும். குறிப்பாக, அசிட்டைல்கோலின் (Acetylcholine) என்ற ரசாயனம் வெகுவாகக் குறைந்திருக்கும். லேசான காய்ச்சல் அல்லது ரத்தத்தில் சர்க்கரை , ரத்த அழுத்தம், யூரியா, சோடியம் போன்றவை லேசாகக் கூடிக் குறைந்தால்கூட மூளையின் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து வயதானவர்களுக்கு தாங்க முடியாத குழப்பம் ஏற்படக்கூடும்.

குறிப்பாக, இருமல் மருந்து, தூக்க மாத்திரைகள் போன்ற சில மருந்துகளாலும் அசிட்டைல்கோலின் அளவு குறைந்து குழப்பம் ஏற்படும். இந்தக் குழப்பம் வேறு உபாதைகளுக்காக மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் முதியவர்களில் 20 முதல் 30 சதவீதம் வரை காணப்படும். குறிப்பாக, மாரடைப்பு போன்ற இதய பாதிப்புகள் ஏற்பட்டவர்களின் மூளைக்குச் சரியானபடி ரத்த ஓட்டம் இல்லாததால் இந்தக் குழப்பம் அதிகம் காணப்படும்.

இவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்ற குழப்பம், சம்பந்தம் இல்லாமல் பேசுவது, மறதி, யாரோ இருப்பது, பேசுவது போன்ற மாயத்தோற்றங்கள் இருப்பதால் இவர்களை மனநல மருத்துவர்களிடம் அழைத்து வருவதுண்டு.

இந்த ஜன்னியின் அறிகுறிகள் நாம் ஏற்கெனவே பார்த்த டிமென்ஷியா போலவே இருக்கும். ஆனால் டிமென்ஷியாவில் கொஞ்சம் கொஞ்சமாக மறதி ஏற்படும். ஜன்னி திடீரென்று ஏற்படுவது. டிமென்ஷியாவில் மூளையின் செல்கள் மரிப்பதால் நிரந்தரமான பாதிப்பு ஏற்படுகிறது. ஜன்னி மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் வருவதால் அது தற்காலிகமானது.

எனவே, வயதானவர்களுக்கு உடலில் ஏற்படும் சிறு பிரச்சினைகளைக்கூட அலட்சியப்படுத்தக் கூடாது. மருத்துவ ஆலோசனை இன்றி சில மருந்துகளை எடுத்துக் கொள்வதும் ஆபத்தாக முடியும். வயதானவர்களின் உடல் சீட்டுக்கட்டால் ஆன கோபுரம் போன்றது. எங்காவது ஒரு இடத்தில் சிறு பிரச்சினை வந்தாலும் மொத்த கோபுரமும் பாதிக்கப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024