Sunday, May 1, 2016

18 மாதங்களில் 108 கிலோ அதிரடி எடை குறைப்பு: குண்டு அம்பானி ஸ்லிம் ஆன கதை


சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் ஒரே பேச்சாக இருந்தது அம்பானியைப் பற்றித்தான். அதுதான் அம்பானியைப் பத்தி, அடிக்கொருதரம் பேசிக்கொண்டிருக்கிறார்களே, இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? பதினெட்டு மாதங்களுக்கு முன்பு இரட்டைநாடியைவிடவும் பெரிதாக மகாகுண்டாகக் காட்சியளித்த முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, திடீரென ஸ்லிம்மாக நடந்துவந்தால், எப்படி ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

21 வயது அனந்த், 40 வயதுக்கார குண்டு ஆள்போல உடல் பருமன் பிரச்சினையுடன் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் வலம்வந்து கொண்டிருந்தபோது இதே சமூக வலைதளம் கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்போது வெறும் 18 மாதங்களில் 108 கிலோ உடல் எடையைக் குறைத்து ‘சிக்‘ ஆகிவிட்டார். உடல் பருமனை எப்படிக் குறைப்பது என்று தீவிர யோசனையில் இருப்பவர்கள், அஞ்சுபவர்களுக்கு மத்தியில் அனந்த் அம்பானியின் எடைக் குறைப்பு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் என்ன?

எப்படி நிகழ்ந்தது இந்த மாயா ஜாலம்? துரித உணவு, சமச்சீரற்ற உணவு, நொறுக்கு தீனி, உடற்பயிற்சியின்மை போன்ற பல அம்சங்கள் உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஏதோ ஒரு நோய்க்குத் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகள்கூட உடல் பருமன் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதும் உண்டு. சிறு வயதிலேயே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட அனந்த், அதற்காக நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டார். அவரது உடல் பருமனுக்கு மருந்துகள் ஏற்படுத்திய பக்கவிளைவுதான் காரணம் என்று கூறுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க எடைக் குறைப்பு நிபுணர்கள் பலரைப் பார்த்தும் அனந்த் அம்பானியிடம் எந்த மாற்றமும் இல்லை. இறுதியில் செயற்கை, அதிரடி எடைக் குறைப்பு முறைகளின் பின்னால் ஓடுவதை விட்டு இயற்கை வழியில் உடல் எடையைக் குறைக்க முடிவு செய்தார் அனந்த். இப்போது அவர் நினைத்ததைச் செய்து காட்டியிருக்கிறார். அனந்த் அம்பானி உடல் எடையைக் குறைத்தது எப்படி?, என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்?:

நடையோ நடை

உடல் எடையைக் குறைக்க முடிவு செய்ததும் அனந்த் அம்பானி செய்த முதல் காரியம் நடைப்பயிற்சி. தினமும் 21 கிலோமீட்டர் தூரம் நடந்திருக்கிறார். பொதுவாக இந்தத் தூரத்தை மெதுவாக நடந்து கடந்தாலே மூன்றரை மணி நேரம் ஆகும். ஆனால், குண்டான உடலை வைத்துக்கொண்டு இந்தத் தூரத்துக்கு அவர் நடந்திருக்கிறார். 21 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி என்பது அரை மாரத்தானுக்கு சமம்.

யோகா

உடலைச் சீராகப் பராமரிக்க உலகெங்கும் யோகா பின்பற்றப்படுகிறது. உடல் எடைக் குறைப்புக்கு அனந்த் அம்பானி, இதைப் பயன்படுத்திக் கொண்டார். டயட், உடற்பயிற்சியை மேற்கொண்டாலும், யோகா மூலம் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். அவருடைய கவனமும் குறிக்கோளும் ஒன்றை நோக்கி இருக்க உதவும். அதை உணர்ந்து, உடற்பயிற்சியுடன் தினமும் யோகா பயிற்சி யையும் மேற்கொண்டுவந்தார் அனந்த்.

டயட்

உடல் எடைக் குறைப்புக்குக் கார்போஹைட்ரேட் குறைவான உணவை உட்கொண்டதோடு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவை அனந்த் முற்றிலும் தவிர்த்தார். துரித உணவு, அரிசி உணவு, சர்க்கரை அதிகமாகக் கலந்த உணவு, குளிர்பானங்களுக்கு விடை கொடுத்துள்ளார். அதேசமயம் புரதச்சத்து நிறைந்த உணவையும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவையும் உண்டுள்ளார். நார்ச்சத்துமிக்க பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொண்டுள்ளார்.

வெயிட் டிரெய்னிங்

வெயிட் டிரெய்னிங் உலக அளவில் தற்போது பிரபலமாகிவருகிறது. குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பவர்கள் இதையும் பின்பற்றுகிறார்கள். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் தசைகள் வலிமையடையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.

ஃபங்ஷனல் டிரெய்னிங்

ஃபங்ஷனல் பயிற்சி என்பது ஒட்டுமொத்த உடலையும் பயன்படுத்தித் தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய உடற்பயிற்சி. முறையான பயிற்சியாளர் ஒருவருடைய மேற்பார்வையில் இதைச் செய்ய வேண்டும். இந்தப் பயிற்சியையும் அனந்த் செய்திருக்கிறார்.

இப்படியாகத் தீவிர முயற்சியுடன் மாதத்துக்கு ஆறு கிலோ வீதம் உடல் எடையைக் குறைத்துவந்துள்ளார் அனந்த் அம்பானி. உடல் எடையை வேகமாகக் குறைக்க நினைத்தால் நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. ஆகவே, அனந்த் அம்பானி சரியான வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து, இயற்கை வழியைப் பின்பற்றியதால் உடல் எடையைப் பிரச்சினையில்லாமல் குறைக்க முடிந்திருக்கிறது.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...