மக்களால்தான் வரலாற்றுச் சிறப்பு சாத்தியமானது: ஜெயலலிதா வெற்றிப் பேச்சு
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தமிழக மக்களாலேயே சாத்தியமானதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை அதிமுக தொண்டர்கள், கட்சி பிரமுகர்கள், பல்வேறு துறை சார்ந்தவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அவர் பேசியதாவது:
தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 1984-ம் ஆண்டுக்குப் பிறகு இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்சி சாத்தியமாகியுள்ளது. எனது நெஞ்சத்தின் அடித்தளத்தில் எழுகின்ற நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை, தமிழ் அகராதியில் இல்லை.
இத்தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாதபோதிலும் ஆண்டவனையும் மக்களையும் கூட்டணியாகக் கொண்டு களம் கண்டேன். மக்கள் என்னைக் கைவிடவில்லை. தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன். அந்த நம்பிக்கையை மக்கள் வீண்போகச் செய்யவில்லை.
மக்களால் நான், மக்களுக்காக நான் என்பதே எனது தாரக மந்திரம். இதே தாரக மந்திரத்தின் அடிப்படையில் இனியும் தொடர்ந்து செயல்படுவேன். எனது வாழ்க்கையை தமிழக மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன். என்றென்றும் மக்கள் தொண்டில் என் வாழ்வை அர்ப்பணிப்பேன். இத்தருணத்தில் அதிமுகவின் அமோக வெற்றிக்கு உழைத்த கட்சியின் தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment