Wednesday, May 11, 2016

மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் மறுப்பு

இணையதள செய்திப் பிரிவு
Return to frontpage
பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த (ஒப்படைக்க) பிரிட்டன் மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள்காட்டி, இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறது பிரிட்டன்.

பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத மல்லையா தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அவரது பாஸ்போர்ட்டை இந்தியா முடக்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவை, நாடு கடத்தக் (தங்களிடம் ஒப்படைக்க) கோரி பிரிட்டன் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.

'விஜய் மல்லையாவுக்கு எதிராக, கிரேட்டர் மும்பையில் உள்ள நீதிமன்றம் ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்துள்ளதாக அமலாக்கத் துறை எங்கள் அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து, மல்லையாவிடம் விசாரணை நடத்துவதற்காக அவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்த வேண்டி உள்ளது. எனவே, அவரை நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பிரிட்டன் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்திய வெளியுறவுத் துறை விளக்கியிருந்தது.

இந்த நிலையில், தங்கள் நாட்டின் சட்ட நடைமுறைகளை மேற்கோள் காட்டி, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த முடியாது என்று பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்ட தகவல்:

'குடியேற்றச் சட்டம் 1971-ன் படி, தங்கள் நாட்டில் ஒருவர் தங்குவதற்கு செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் அவசியமில்லை. அதாவது, தங்கள் நாட்டுக்குள் நுழையும்போதும், அங்கிருந்து வெளிநாட்டுக்குச் செல்லும்போதும் காட்டப்படும் பாஸ்போர்ட்டில் உள்ள காலாவதியாகும் காலம் வரை பிரிட்டனில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மல்லையா மீதான குற்றச்சாட்டுகளின் தன்மையை பிரிட்டன் அரசு புரிந்துகொள்கிறது. அதையொட்டி, சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு வழங்க பிரிட்டன் தயாராக இருக்கிறது. மேலும், நாடு கடத்தல் தொடர்பான இந்தியாவின் கோரிக்கை குறித்து சட்ட ரீதியிலாக பரிசீலித்து வருவதாகவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது' என்று அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, விஜய் மல்லையாவுக்கு எதிராக வங்கிகள் பணத்தைத் திரும்பப் பெற தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் கடந்த மார்ச் 2 ம் தேதி டெல்லியிலிருந்து பிரிட்டனுக்குச் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024