இணையத்தின் நிறம் என்ன?
சைபர் சிம்மன்
இந்தக் கேள்விக்கான பதில் உங்கள் மனதில் நீல நிறத்தில் தோன்றிக்கொண்டிருக்கலாம். பலவிதமான நீல நிறங்கள். கூகுள் இணைப்புகளில் பார்க்கும் நீலம்! பேஸ்புக் நீலம்! ட்விட்டர் நீலம்! இன்ஸ்டாகிராம் நீலம்!
இப்போது ‘ஏன் நீலம்?' என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். ஆனால் அதை விட இன்னொரு முக்கியமான கேள்வி இருக்கிறது. இணைய இணைப்புகளின் நிறம் என்ன என்பதுதான் அது. இதற்கான பதிலும் நீலம்தான். தீர்மானமாக நீலம். ஏனெனில் இணையத்தின் ஆரம்ப காலம் தொட்டு இணைப்புகள் நீல நிறத்தில்தான் இருந்து வருகின்றன.
எதற்கு இந்த நிற ஆராய்ச்சி என்று கேட்கலாம். காரணம் இல்லாமல் இல்லை. முன்னணி தேடியந்திரமான கூகுள் இணைய இணைப்புகளின் நிறத்தை அதன் வழக்கமான நிறமான நீலத்தில் இருந்து கருப்பு நிறத்திற்கு மாற்றிப் பார்க்கும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சோதனை இணைய அபிமானிகள் பலரை அதிருப்தியில் ஆழ்த்தி, ‘எங்கே எங்கள் நீல நிறம்’ என்று பொங்க வைத்திருக்கிறது. அதனால்தான் இணைய இணைப்புகளின் நிறம் பற்றிய கேள்வி எழுந்துள்ளது.
நீங்களேகூட ஒரு கணம் கண்களை மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தால், ‘எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக கூகுள் தேடல் இணைப்புகள் நீல நிறத்தில்தான் தோன்றுகின்றன' என்று பதில் சொல்வீர்கள். கூகுள் என்றில்லை, ஆதிகால அல்டாவிஸ்டா, லைகோஸ் உள்ளிட்ட எல்லா தேடியந்திரங்களிலும் இணைப்புகளின் நிறம் நீலம்தான்.
இதை நீங்கள் கவனிக்காமலே இருந்தாலும் சரி, உங்கள் மனது நீல நிற இணைப்புகளுக்குப் பழகியிருக்கும். இணைய முகவரிகள் பச்சை வண்ணத்தில் அமைந்திருக்கும். அது மட்டும் அல்ல ஏற்கெனவே கிளிக் செய்யப்பட்ட இணைப்பு எனில் அதன் வண்ணம் ஊதா நிறத்தில் மாறுபட்டிருப்பதையும் உங்கள் இணைய மனது பதிவு செய்திருக்கும்.
இணையத்தைப் பொறுத்தவரை இணைப்புகளின் நிறம் என்பது நீலம்தான்!
அதனால்தான் கூகுள் இந்த நிறத்தை மாற்றும் சோதனையில் ஈடுபட்டிருப்பது இணைய உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தேடல் முடிவுகளில் வரிசையாக இடம்பெறும் முடிவுகளின் பட்டியலை வழக்கமான நீல நிறத்திற்குப் பதிலாகக் கருப்பு நிறத்தில் தோன்ற வைத்துள்ளது. இப்படி நிறம் மாறியிருப்பதைப் பார்த்த பல இணையவாசிகள் திடுக்கிட்டு போயிருக்கின்றனர். ஒருசிலர் இது குறித்த அதிருப்தியையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். இதற்காக ’பிரிங் பேக் தி ப்ளு’ (#BringBackTheBlue) எனும் ஹாஷ்டேகுடன் இந்தக் கருத்துகளை ட்விட்டரில் குறும்பதிவுகளாக வெளியிட்டு வருகின்றனர்.
இணையக் கிளர்ச்சியாக இது வெடிக்கவில்லை என்றாலும் நிச்சயம் பரவலான அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தச் சோதனையின் தொடர்ச்சியாக கூகுள் இந்த மாற்றத்தைப் பரவலாகக் கொண்டுவர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது சோதனை அளவிலேயே கைவிட்டாலும் வியப்பதற்கில்லை.
இப்போதைக்கு இணையவாசிகள் எப்படி எதிர்கொள்கின்றனர் என்று மட்டும் வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறது. கூகுள் இது தொடர்பாக வெளிப்படையாகப் பதில் அளிக்கவில்லை, ஆனால் சின்னச் சின்னதாகச் சோதனைகளை அவ்வப்போது மேற்கொள்வது வழக்கம் என்று மட்டும் கூறியிருக்கிறது.
உண்மைதான்! கூகுள் இது போன்ற சோதனைகளை நடத்துவது புதிதல்ல. எழுத்துரு தொடங்கி சின்னச் சின்ன விஷயங்களில் கூகுல் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக இணைப்புகள் மற்றும் ஜிமெயில் விளம்பர இணைப்புகளுக்காக 41 வகையான நீல நிறங்களை கூகுள் பரிசோதனை செய்து பார்த்துத் தற்போது பயன்பாட்டில் உள்ள குறிப்பிட்ட நீல நிறத்தைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
எந்த நிறத்தைப் பயனாளிகள் அதிகம் கிளிக் செய்கின்றனர் என சோதித்துப் பார்த்து அதனடிப்படையில் கூகுள் செயல்பட்டதாகவும், இதன் காரணமாக ஆண்டுக்கு 200 மில்லியன் கூடுதலாக விளம்பர வருவாய் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதே போல இணைப்புகளின் கீழே தோன்றும் சிவப்புக் கோட்டையும் நீலமாக மாற்றியிருக்கிறது. இந்த முறையும் இதே போன்ற வருவாய் நோக்கம் ஏதேனும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
கூகுள் மட்டும் அல்ல, ஃபேஸ்புக் கூட இது போன்ற சோதனையைப் பயனாளிகள் மத்தியில் மேற்கொள்ளும் வழக்கம் கொண்டிருக்கிறது. இதனிடையே கூகுள் கணக்குப் பக்கத்தில் ‘லாக் இன்' செய்து வெளியே வந்தால் இந்தச் சோதனையில் இருந்து விடுபட்டு, நீல இணைப்புகளுக்கு மாறிக்கொள்ளும் வசதி இருப்பதாகவும் கூகுள் விவாதக் குழுக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
நிற்க, இணைப்புகளின் நிறம் அத்தனை முக்கியமா எனும் கேள்வி எழலாம். நீல நிற இணைப்புகள் என்பது இணையப் பாரம்பரியமாகவே இருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டிய விஷயம். 1990களில் ‘www' அறிமுகமான காலம் முதல் இணைய இணைப்புகள் நீல நிறத்திலேயே அடையாளம் காட்டப்படுகின்றன.
இணையத்தின் தந்தை எனப் போற்றப்படும், வலையை உருவாக்கிய பிரிட்டன் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லீ, கருப்பு நிற எழுத்துக்களுக்கு மத்தியில் பளிச்செனத் தெரிவதற்காக இணைப்புகளை நீல நிறமாக தோன்றச் செய்தார். ஆரம்ப கால பிரவுசர்களான மொசைக் போன்றவற்றில் இணைப்புகளுக்கு இதே நிறம் பயன்பட்டிருக்கிறது. அதற்கு முன்னரே கூட, ஹைபர் லிங்க் வசதிக்கு நீல நிறமே பயன்பட்டிருக்கிறது.
அது மட்டும் அல்ல, இணையத்தில் நிறங்கள் என்பவை பொதுவான சில அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இணையக் களஞ்சியமான விக்கிப்பீடியாவில் பார்த்தால், நீல நிற இணைப்பு என்பது தற்போது பயன்பாட்டில் உள்ள பக்கங்களைக் குறிக்கிறது. அடர் நீல நிறம் என்றால் ஏற்கெனவே விஜயம் செய்த இணையப் பக்கங்களைக் குறிக்கும். சிவப்பு நிற இணைப்பு எனில் அந்தப் பக்கம் விக்கிப்பீடியாவில் இல்லை எனப் பொருள். வெளிர் சிவப்பு என்றால்,
இப்போது இல்லாத ஆனால் நீங்கள் ஏற்கெனவே விஜயம் செய்த பக்கம் என்று பொருள். இன்னும் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விக்கிப்பீடியாவில் இதற்கான விரிவான பட்டியலைப் பார்க்கலாம்.
ஆக, இணையம் தனக்கென பொதுவான சில செயல்பாட்டு நடைமுறைகளைக் கொண்டிருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நலனுக்காக அதைச் சோதனைக்கு உள்ளாக்கலாமா என்ற கேள்வியையும் இணைய வல்லுநர்கள் எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment