Thursday, May 26, 2016

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


M.G.R. திரையுலகில் இருந்த காலத்தில் பிரபலமான நடிகர்களாக இருந்தும், சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததால் அவருடன் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் சிலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென தனி பாணியில் நடித்து மக்கள் கலைஞர் என்று புகழ் பெற்றவர் ஜெய்சங்கர். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். ராஜேந்திர குமார், தர்மேந்திரா நடித்து இந்தியில் வெளியான ‘ஆயி மிலன் கி பேலா’ என்ற படம்தான் தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ ஆனது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. 1966-ம் ஆண்டில் ‘பேசும் படம்’ பத்திரி கையில் விளம்பரமும் வெளியானது. ஜெய்சங்கர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு ‘வெள்ளிக் கிழமை ஹீரோ’ என்றே பெயர். அந்த அளவுக்கு பெரும்பாலும் வெள்ளிக் கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். ஒரே ஆண்டில் 16 படங் களில் கதாநாயகனாக நடித்தவர்.

திரைத்துறையில் மட்டுமின்றி; அர சியல் துறையிலும் எம்.ஜி.ஆர். பிஸி யாக இருந்ததால் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படும். இடையில், 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் வேறு. பல மாதங்கள் அவருக்கு படங்களில் நடிக்க முடியாத நிலை. ‘ஒரு தாய் மக்கள்’ படத் தயாரிப்பும் தாமதமாகி 1971-ம் ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து படம் வெளியானது.

பல படங்களில் நடித்து வந்த ஜெய் சங்கருக்கு எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல, கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அவர் நடித்த மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக முத்துராமன் நடித்தார்.

ஜெய்சங்கர் எந்தக் கட்சியையும் சாராதவர். பிற்காலங்களில் திமுக தலை வர் கருணாநிதி வசனம் எழுதிய சில படங்களில் நடித்தார் என்ற வகையில் அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கு கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின், 1974-ம் ஆண்டில் ஜெய்சங்கர் நடிப்பில், ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படம் வெளியானது. அதில் ஜெய்சங்கர் பேசும் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக அவர் பேசுவது போல இருக்கும்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்ட பின், தேர்தலை தமிழகம் எதிர் நோக்கியிருந்த நேரம். அப்போது வெளி யான ‘பணக்காரப் பெண்’ படத்தில், ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,  ராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா,  ராமச் சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே...’ என்ற டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இடம்பெறும். இந்தப் பாடலை படத்தில் ஜெய்சங்கர் பாடி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், ஜெய்சங்கர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகர் என்ற முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜெய்சங்கர் செய்தார். மற்றபடி, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி பழகியவர் அவர்.

சத்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப் பெண்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர்.தான்! அப்போது, எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகள் பற்றி அவருக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகள் கூறினார்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, அவரைப் பற்றி தனது கருத்தை ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். ‘‘எம்.ஜி.ஆரிடம் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராள குணம். திரையுலகிலும் அரசியலிலும் அவரவர்கள், தாங்கள் சார்ந்த கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிறருக்கு கொடுப்பதை விளம்பரத்துக்காகக் கொடுக்கிறார் என்று குறை கூறலாம். ஆனால், பிறருக்கு உதவும் அவரது உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் ரசிக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியாது’’ என்று ஜெய்சங்கர் தன்னிடம் கூறி யதை நினைவுகூர்கிறார் கே.பி.ராம கிருஷ்ணன்.

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ‘‘எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது கொடுத்திருப்பது நியாயம் தானா?’’ என்று ஜெய்சங்கரிடம் நிருபர் கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள் விரும்பினால் தவிர படம் ஓடாது. எம்.ஜி.ஆர். படங்கள் சில 25 வாரங்கள் தாண்டி ஓடுகின்றன. 35 வருடங்களாக சினிமாவில் நடித் துக் கொண்டிருக்கிறார். பல வருடங்க ளாக கதாநாயகனாக நடித்து வருகி றார். இன்னும் பல படங்களுக்கு கதா நாயகனாக ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஆக, மக்கள் ஏற்றுக் கொண் டார்கள் எனும்போது தேர்வுக் குழுவினர் ஏற்றுக் கொண்டதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ‘பாரத்’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று ஜெய்சங் கர் மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார்.

‘பாரத்’ விருது பெற்றதற்காக பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பில் சென் னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, ஜெய்சங்கரின் இந்தப் பேட்டி யைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘உண்மை எப்படி இருக்கிறது என்பதல்ல; அந்த உண்மையை வெளியில் சொல்ல துணிவு வேண்டும். அதற்காக ஜெய் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு தன்னைப் போலவே பிறருக்கு உதவும் ஜெய்சங்கரைப் பிடிக்கும். உண்மையையும் பிடிக்கும்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.


எம்.ஜி.ஆரோடு ஜெமினிகணேசன் நடித்த ஒரே படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முகராசி’. எம்.ஜி.ஆரின் அண்ணனாக ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024