ஏமாற்று வேலைகளை நிறுத்திக்கொள்ளுங்கள்!
பெரும்பான்மை மக்கள் பொருளாதாரரீதியாக அடிமட்டத்தில் வாழும் ஒரு நாட்டில் இலவசங்கள், மானியங்களை மலினப் பார்வையில் பார்க்க முடியாது. என்றாலும், இலவசமாக அளிக்கப்படுபவையும் அவற்றுக்கான தேவையும் அவை ஏற்படுத்தும் விளைவுகளுமே இலவசங்கள் தொடர்பான கருத்துக்கு முழுமை தரும். இரு திராவிடக் கட்சிகளும் முன்பு மாணவ, மாணவியருக்கு சைக்கிள்கள், மடிக்கணினிகள், ஏழைகள் திருமணத்துக்குத் தங்கம், விவசாயிகளுக்கு ஆடு - மாடுகள் என்று எவ்வளவோ அறிவிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு அர்த்தம் இருந்தது. டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் என்று அந்த அறிவிப்புகள் மாற ஆரம்பித்தபோது, பாதை பெருமளவில் மாறியது. இந்தத் தேர்தலில் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளைத் தூக்கியெறிந்துவிட்டு, ஆக்க பூர்வ அறிவிப்புகளில் கவனம் செலுத்தும்போது இரு பெரிய கட்சிகளும் மீண்டும் மக்களை மாயையில் தள்ளப் பார்க்கின்றன. அதிலும் திமுகவேனும் செல்பேசி அறிவிப்போடு நிறுத்திக்கொண்டது; அதிமுக செல்பேசி, பெண்களுக்கு மொபெட் வாங்குவதற்கு 50% மானியம் என்று வரிசை கட்டி வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள் முகம் சுளிக்க வைக்கின்றன.
இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட செல்பேசி இணைப்புகள் இருக்கின்றன. ட்ராய் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2013-லேயே தமிழ்நாட்டில் 7 கோடிக்கும் அதிகமான செல்பேசி இணைப்புகள் இருந்தன. நிலைமை இப்படியிருக்க, தமிழகத்தின் 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்பேசி அளிப்போம் எனும் அறிவிப்பு ஏற்படுத்தும் தாக்கம் என்னவாக இருக்கும்?
தமிழகத்தில் இன்றைய நாளில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இருக்கின்றன. போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், தனிநபர் போக்குவரத்தைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய ஒரு அரசு, மொபெட் வாங்க 50% மானியம் தருகிறேன் என்று மக்களின் நுகர்வைத் தூண்டிவிடுவதை எப்படிப் புரிந்துகொள்வது? தவிர, இந்தத் திட்டத்தால் பயனடையப்போகும் பயனாளிகள் யார்? ஏழை, எளியவர்களால் எப்படி 50% தொகையைச் செலுத்த முடியும்? இப்படிக் கிளப்பப்படும் நுகர்வு வெறி கடன் வாங்கும் நிலைக்குப் பல குடும்பங்களை இட்டுச் செல்லும். மாதச் செலவில் கூடுதல் பெட்ரோல் சுமையைக் கொண்டுவரும். இன்னும் என்னென்ன விளைவுகள் வரும் என்பதையெல்லாம் ஒரு அரசியல் இயக்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் பல கேள்விகளை எழுப்புகிறது. தமிழ்நாடு மின்வாரியத்தின் கடன் ரூ.1.5 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கும் நிலையில், இதுபோன்ற திட்டங்களை அமல்படுத்துவது விபரீத விளைவுகளையே ஏற்படுத்தும். கடைசியில், இந்தத் திட்டத்தின் பாதகமான விளைவுகள் அனைத்தும் அதிமுக தலையில் அல்ல; பொதுமக்கள் தலையிலேயே விடியும்.
குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு எனும் வாசகம் பெரும் நம்பிக்கையைத் தரலாம். ஆனால், அறிக்கையை விரிவாகப் படித்தால், அதில் வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் தொடர்பாகத்தான் வாக்குறுதிகள் இருக்கின்றன. மேலோட்டமாகக் கவர்ந்திழுக்கும் இது போன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் காரியம் இல்லையா?
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அடிப்படைக் கட்டமைப்பில் மாறுதலைச் செய்யாமல், இலவச அறிவிப்புகளை அள்ளித் தெளிப்பது மக்களின் மீதான அக்கறையின்மையைத்தான் காட்டுகிறது. இதுபோன்ற அரசியல் தந்திரங்கள் பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை எவ்விதத்திலும் உயர்த்தப்போவதில்லை. இலவசங்களாலும், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளாலும் தங்களுக்குப் பயனேதும் இல்லை என்பதை அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் உணர்த்த வேண்டிய தருணம் இது!
No comments:
Post a Comment