Sunday, May 1, 2016

உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

கொஞ்சம் அசந்தால் பார்வை பறிபோகும்









உலகச் சுகாதார நாள்: நீரிழிவை வெல்வோம்

‘உங்களுக்கு சுகர் இருக்கா?’ உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவரிடம் சென்றால், மருத்துவர் முதலில் கேட்கும் கேள்வி பெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு நீரிழிவு நோய் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், அதனுடனேயே மகிழ்ச்சியாக வாழலாம்.

அப்படி இல்லாமல், கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தவறும்போது நீரிழிவு நம்மைப் பாடாய்ப்படுத்திவிடும். அதன் பக்கவிளைவுகளைத் தவிர்க்க முடியாது. மூளை, நரம்பு மண்டலம், கால்கள், இதயம், சிறுநீரகம், கண்கள் போன்றவை பாதிக்கப்படலாம். அதனால் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம்.

ஏன் பக்க விளைவு?

நீரிழிவு நோய் இருப்பது தெரியாமல், அதனால் பாதிப்புக்கு உள்ளாகுபவர்கள் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தே பாதிப்புக்கு உள்ளாகுபவர்களை என்ன செய்வது? இவர்கள் நீரிழிவு நோய்க்கு ஒரு சில மாதங்களுக்கு மாத்திரையைச் சாப்பிட்டு இருப்பார்கள். பிறகு வாயைக் கட்டுப்படுத்த முடியவில்லை, வயிற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை, நேரத்துக்கு மாத்திரையை ஒழுங்காகச் சாப்பிட முடியவில்லை, என் வேலை சூழ்நிலை அப்படி என்று மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, பின்னர்ப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள்.

சிலர், ‘உணவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறேன், வாக்கிங் போகிறேன். இதுவே போதும்’ என்று அவர்களாகவே முடிவு செய்து மாத்திரையை நிறுத்திவிடுவார்கள். இன்னும் சிலர் ‘அந்த மருந்தைச் சாப்பிட்டால் சரியாகும் - இதைச் சாப்பிட்டால் உடனே சர்க்கரை குறையும்’என்று யார்யாரோ சொல்வதைக் கேட்டு, கண்ட கண்ட மருந்தை இவர்கள் போக்குக்குச் சாப்பிடுவார்கள். இப்படி முறையான சிகிச்சையைத் தவிர்ப்பவர்கள் அனைவரும், சில காலம் கழித்துப் பக்கவிளைவுகளால் துன்பப்படுவார்கள். இது பலருக்கும் பார்வைப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளாக நீள்கிறது.

விழித்திரை பாதிப்பு

நீரிழிவு நோயால் கண்புரை, கண் நீர்அழுத்த உயர்வு, நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு முதலியன ஏற்படலாம். பார்வை நரம்புகளும் பாதிக்கப்படலாம். இதில் நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பைத்தான் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.

நீரிழிவு நோய் உள்ள அனைவருக்குமே ‘நீரிழிவு நோய் விழித்திரை பாதிப்பு’ ஏற்பட வாய்ப்புண்டு. நீரிழிவு நோயின் கால அளவை பொறுத்துக் கண்ணில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்ணின் விழித்திரை நல்ல நிலையில் இருந்தால்தான், அதில் விழும் உருவங்கள் தெளிவாகத் தெரியும். ஆனால் விழித்திரைப் பாதிப்பில், விழித்திரைக்கான ரத்தக் குழாய்களில் ரத்தக் கசிவு ஏற்பட்டு விழித்திரை பாதிக்கப்படுவதால் பார்வை குறைவு ஏற்படுகிறது. இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், இவ்வாறு ஏற்பட்ட பார்வையிழப்பை மீட்கவே முடியாது. சில நேரம் விழித்திரை மற்றும் பின் கண்ரசத்தில் புதிய ரத்தக் குழாய்கள் உருவாகலாம். இந்தப் புதிய ரத்தக் குழாய்களில் சில நேரம் ஏற்படும் சுருக்கத்தால் விழித்திரை அதன் அடுக்கிலிருந்து பிரிந்தும் (Retinal Detachment) பார்வையிழப்பு ஏற்படலாம்.

லேசர் மருத்துவம்

நீரிழிவு நோய் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட்ட பிறகு அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. லேசர் மருத்துவத்தின் மூலம் விழித்திரை ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட கசிவைச் சரிசெய்து, கூடுதல் பாதிப்பு ஏற்படாமல் பார்வையைப் பாதுகாக்கலாம். ஆனால், ஏற்கெனவே இழந்த பார்வையை மீட்க முடியாது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்துச் சிலருக்கு விட்ரெக்டமி என்ற அறுவைசிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். அதன் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்தி, கண்களையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்துவருவதன் மூலம் பாதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.

வருமுன் காப்பது

35 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரச்சினை இல்லாவிட்டாலும்கூட ஆண்டுக்கு ஒருமுறையாவது நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது. இந்த வயதில் கண்ணில் அரிப்பு, கண்ணில் தொற்று, கண்கட்டி, கண்ணில் நீர் கசிவு, பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்பட்டாலும், நீரிழிவு நோய் இருக்கிறதா என்று ஆய்வு செய்துகொள்வது நல்லது.

நீரிழிவு நோய்க்கு வாழ்நாள் முழுவதும் மருத்துவம் செய்துகொள்வது சற்றுக் கடினமான ஒன்றுதான். அன்றாட பணிகளுக்கு இடையில் அடிக்கடி சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதன்மூலம் பக்கவிளைவுகள் இன்றி நலமாய் வாழலாம் - பார்வையையும் பாதுகாக்கலாம் எனும்போது ஏன் அலட்சியமாய் இருக்க வேண்டும்?

கட்டுரையாளர், மதுரை தேசியக் கண் மருத்துவச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்

தொடர்புக்கு: veera.opt@gmail.com

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...