By ஆசிரியர்
First Published : 26 May 2016 01:49 AM IST
தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் 93.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வேளையில், இந்த முடிவுகள் காட்டும் உண்மைகள் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கவலையையும் அளிக்கின்றன. அந்தக் கவலைகளில் முதலிடம்பெறுவது தமிழ் வழிக் கல்வி மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதே.
அரசுப் பள்ளி மாணவர்களில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களின் தரவரிசையில் தமிழ்நாடு முழுமைக்கும் 10 பேர் மட்டுமே இடம்பெறுகிறார்கள். இந்த பத்து பேரிலும்கூட, ஐந்து பேர் தமிழ் வழியில் பயின்றவர்கள்.
தமிழை முதல் மொழிப் பாடமாகப் படித்து மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் (அதாவது 499, 498, 497 மதிப்பெண்கள் பெற்றவர்கள்) 276 பேர். ஆனாலும் இவர்களில் அனைத்துப் பாடங்களையும் தமிழ்வழியில் படித்தவர்கள் 4 பேர் மட்டுமே. ஜீவஸ்ரீ (498, தேனி), மரியா மெடோனா (497, நெல்லை),
எம். தரணி (497, கரூர்), லின்சி செரினா (497, மயிலம்பாறை, விழுப்புரம் மாவட்டம்) ஆகியோர் மட்டுமே தமிழ்வழியில் படித்து சிறப்பான தேர்ச்சி காட்டியவர்கள். இந்த 4 மாணவர்களையும் தமிழ் உலகம் பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் பயின்று மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்றுள்ள இந்த 9 மாணவர்களும் தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அரசுப் பள்ளியில் பயின்று தரவரிசையில் இடம்பெற்ற, ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்கள் 5 பேரும் அரசுப் பள்ளிகளைப் பெருமைப்படுத்தியுள்ளனர். இந்த 14 பேருக்கும் தினமணியின் சிறப்பு வாழ்த்துகள், பாராட்டுகள்.
சமச்சீர் கல்வி அமலில் உள்ள நிலையில், ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே பாடத்திட்டம்தான் கற்பிக்கப்படுகின்றன. இருப்பினும், அரசுப் பள்ளிகள் தொடர்ந்து பின்தங்குவது, அவற்றின் மீதான மக்களின் நம்பகத்தன்மையைக் குறைத்துக்கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகள் இந்த அவநம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்கின்றன. கட்டணம், நன்கொடை என்று வசூல் வேட்டை நடத்துகின்றன.
ஆங்கிலவழி பயிலும் மாணவர்களே அதிக மதிப்பெண் பெற முடியும் என்கிற தோற்றம் மறைந்தபாடில்லை. ஆகவே, தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர் படையெடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் ஆங்கில வழியில் படித்தாலும் அந்த மாணவர்களால் ஒரு கடிதம்கூடப் பிழையின்றி ஆங்கிலத்தில் எழுத முடிவதில்லை என்பதை அவர்கள் உணர்வதே இல்லை. பிறகு ஏன் இவ்வளவு பணத்தைக் கொட்டி, தனியார் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்?
அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் அர்ப்பணிப்பு இல்லை என்ற வழக்கமான குற்றச்சாட்டுகளைவிட மிக முக்கியமாக அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு அரசுப் பள்ளிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இல்லை என்பதுதான். "தனியார் பள்ளியில் சேர்த்தாலும்கூட நாங்கள் எங்கள் குழந்தைகளைத் தனிவகுப்புகளுக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. தனியார் பள்ளிகளில் படிப்பதால் மட்டுமே அவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுவிடுவதில்லை. பிறகும் ஏன் இலவச கல்வி தரும் அரசுப் பள்ளிகளைத் தவிர்க்கிறோம் என்றால், அரசுப் பள்ளி வளாகங்கள் சுகாதாரமாக இல்லை என்பதால்தான் என்பதுதான் அவர்கள் பரவலாகக் கூறும் காரணம்.
அரசுப் பள்ளிகளில் நல்ல கழிவறைகள், குடிநீர் வசதியைக்கூட குழந்தைகளுக்கு உறுதிப்படுத்துவதில்லை. கழிவறைகளில் தண்ணீர் கிடையாது. கதவுகளும்கூட இருப்பதில்லை. அப்படி இருந்தால் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை எப்படி பெற்றோர்கள் அனுப்புவார்கள்? தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகம்தான். ஆனால் கொஞ்சம் சுமாரான, அன்றாடம் சுத்தம் செய்யப்படுகின்ற கழிவறைகள் உள்ளன. பள்ளிக்கு வராவிட்டால், தொலைபேசியில் தகவல் கொடுக்கிறார்கள். முடிந்த வரை விசாரிக்கிறார்கள். இதையெல்லாம் அரசுப் பள்ளிகளில் எதிர்பார்க்க முடியாது. இதனை சரி செய்தாலும் போதும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்.
அனைத்து மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகளும் தமிழ்வழிக் கல்விக்கான வகுப்புகளை, ஆங்கிலவழி வகுப்புகளுக்கு இணையாக நடத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்வழிக் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். தாய்மொழியில் படிப்பதும், கூடவே ஆங்கில அறிவைப் பெறுவதும்தான் சிறந்த கல்வி முறையாக, மேம்படுத்தும் கல்வியாக அமையும்.
ஜெர்மனி, இத்தாலி, சீனா, ஜப்பான், ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் தாய்மொழியில்தான் அடிப்படைப் பள்ளிக் கல்வி கற்பிக்கப்படுகிறது. உயர்நிலை அல்லது கல்லூரி அளவில்தான் அங்கே தேவைப்படுவோருக்கு ஆங்கில வழிக் கல்வி அளிக்கப்படுகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கேயும் அந்த நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது.
அதேபோல, அரசுப் பள்ளிகள் அனைத்தையும் தூய்மையாக, கட்டுப்பாடு மிக்கதாக மாற்ற வேண்டும். உள்ளூர் அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து அரசுப் பள்ளியை மேம்படுத்தலாம். மாவட்டந்தோறும் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து நடத்த அனுமதிக்கப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு அதிகரித்தாக வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். அப்படிச் செய்யாதவர்களை ஆசிரியர்களாகப் பணியாற்றத் தகுதியற்றவர்களாக அரசு அறிவிக்க வேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் போனால், விரைவிலேயே அரசுப் பள்ளிகளில் சேர யாருமே முன்வராமல் இயல்பாகவே மூடு விழா நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!
No comments:
Post a Comment