தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் எது நடக்கக் கூடாது என நினைத்தார்களோ, துரதிருஷ்டவசமாக அது தான் நடந்திருக்கிறது. தமிழகத் தேர்தலில் ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது; பணநாயகம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. அதே நேரத்தில் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான பாமகவின் தர்ம யுத்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்த தேர்தலில் பாமகவுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை வாரி இறைத்தன. ஊழலும், ஊழலும் கை கோர்த்தன என்று கூறும் வகையில் அனைத்து இடங்களிலும் நம்மைத் தவிர வேறு எவரும் வெற்றி பெற்று விடக்கூடாது என்று திமுகவும், அதிமுகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.1000, ரூ.2000, ரூ.5000 வரை பணத்தை கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கின.
தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான கொள்கைகளையும், செயல்திட்டங்களையும் உருவாக்கி முன்னேற்றத்திற்கான ஆவணத்தை பாமக முன்வைத்தது. ஆனால், தமிழகம் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ள அதிமுகவும், திமுகவும், பாமக முன்வைத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான கொள்கைகளையும், திட்டங்களையும் பண பலத்தை பயன்படுத்தியும், தேர்தல் ஆணையம் ஊடகங்கள் ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்தும் வீழ்த்தியிருக்கின்றன.
எப்படியும் ஜெயலலிதாவை வெற்றி பெற வைத்துவிட வேண்டும் என்ற வெறியுடன் பணியாற்றிய தேர்தல் அதிகாரிகளும் இதற்கு துணை போயிருக்கின்றனர். இதன்மூலம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை இரு கட்சிகளும் திட்டமிட்டு தடுத்திருக்கின்றன. எனினும், நமது பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும். இறுதியில் வெற்றி நமக்கே. அதுவரை நமது மக்கள் பணி தொடரும்.
தமிழ்நாட்டில் படித்தவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை விரும்பியவர்கள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு ஆசைப்பட்டவர்கள் என தமிழகத்தில் மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த விரும்பிய அனைவரும் இந்த சதி மற்றும் சூழ்ச்சிக்கு இரையாகி பாமகவுக்கு சாதகமான தீர்ப்பை அளிக்க தவறி விட்டனர். எனினும் இது முடிவல்ல. பாமகவின் தர்மயுத்தம் தொடரும். திராவிடக் கட்சிகளை வீழ்த்தி புதிய வரலாறு படைக்கப் படும். கடந்த ஓராண்டிற்கும் மேலாக பாமக வலியுறுத்தி வரும் ‘புதியதோர் தமிழகம்’ அமைக்கப்படும்.
உலகமே அதிர்ந்த, உலக அரங்கில் இந்தியாவை வெட்கித் தலைகுனிய வைத்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த கட்சியும், ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டவர் தலைமையிலான கட்சியும் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அந்தக் கட்சிகள் தான் இப்போது முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன என்பது தமிழகத்திற்கு பெரும் அவமானமாகும்.
ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல இக்கட்சிகளுக்கு கொள்கைகளோ, தமிழகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற விருப்பமோ சிறிதும் இல்லை. 5 ஆண்டுகள் தொடர்ந்து ஊழல் செய்ய வேண்டும். ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை மக்களிடம் வீசி அவர்களின் வாக்குகளை வாங்கி வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம். அவர்களின் இந்த அணுகுமுறையால் தான் இந்த தேர்தலில் பணநாயகம் வென்றிருக்கிறது; ஜனநாயகம் படுதோல்வி அடைந்திருக்கிறது. விரைவில் நீதிமன்றத்திலும், அதைத்தொடர்ந்து மக்கள் மன்றத்திலும் இந்த இரு கட்சிகளும் தண்டிக்கப்படுவது உறுதி. அப்போது தான் குனிந்த தமிழகம் தலைநிமிரும்.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளான திமுகவையும், அதிமுகவையும் அகற்றும் காலம் தான் நமது பொற்காலம் என்று காமராஜர் கூறினார். அதை நிறைவேற்றி தமிழகத்தில் பொற்காலத்தை ஏற்படுத்தும் நாள் வெகுதொலைவில் இல்லை. அந்த இலக்கை நோக்கிய பாமகவின் பயணம் தொய்வின்றி, புதிய உத்வேகத்துடன் தொடரும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment