Tuesday, May 31, 2016

எம்ஜிஆர் 100 | 75 - முதலும் கடைசியுமான விநியோகஸ்தர்!

எம்.ஜி.ஆருடன் கைகுலுக்குகிறார் திலீப் குமார். | ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் அட்டகாச போஸ்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. படங்களின் பாடல்களில் இருந்து பத்து பாடல்களை பட்டியலிடுமாறு அவரது ரசிகர்களிடம் கூறினால், பெரும்பாலோர் முதலாவதாக குறிப்பிடுவது ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் இடம்பெற்ற ‘நான் ஆணையிட்டால்…’ பாடலாகத்தான் இருக்கும். அந்தப் படம் இந்தியில் எடுக்கப்பட்டபோது அதில் திலீப் குமார் நடிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர்.!

தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ‘ராமுடு பீமுடு’ படம்தான் தமிழில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ ஆனது. ஏழு திரையரங்குகளில் வெள்ளி விழா கண்டு, பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். அற்புதமாக நடித்திருப்பார். ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்…’ பாடலில் எம்.ஜி.ஆரின் சுறு சுறுப்பு வியக்க வைக்கும். சாட்டையை சுழற்றியபடி ஒரு இடத்தில் நிற்க மாட்டார்.

அதிலும் ஒரு காட்சியில் கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும். தரையில் சுழலும் எம்.ஜி.ஆர்., ஒரு கையை ஊன்றி, மறு கையை உயர்த்தி மேலே பார்த்தபடி கொடுக்கும் அந்த போஸ் அவருக்குத்தான் வரும். தெலுங்கில் என்.டி.ராமராவும் இந்தியில் திலீப் குமாரும் நடித்துள்ள இந்தப் பாடல் காட்சிகளைப் பார்த்தால் எம்.ஜி.ஆரின் எனர்ஜி லெவலே தனி என்பது புரியும்.

இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் தயாரிக்க முடிவு செய்து திலீப் குமாரை நாகிரெட்டி சந்தித்து பேசினார். திலீப் குமாருக்கு ஏற்கெனவே எம்.ஜி.ஆரைத் தெரியும். சென்னையில் எம்.ஜி.ஆரை சந்தித்துள்ளார். அவரது படங்களை பார்த்து ரசித்திருக்கிறார். ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ‘இன்ஸானியத்’ என்ற இந்திப் படத்தை தயாரித்து இயக்கினார். அதில் திலீப் குமார், நடிகை பீனா ராய், நடிகர் ஜெயந்த் ஆகியோர் நடித்திருந்தனர்.

எஸ்.எஸ்.வாசனை பார்க்க இவர்கள் மூவரும் ஒருமுறை சென்னை வந்தனர். எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பதை வாசனிடம் திலீப் குமார் தெரிவித்தார். அதற்கு வாசன் ஏற்பாடு செய்தார். எம்.ஜி.ஆரை அவரது வீட்டில் திலீப் குமார், பீனாராய், ஜெயந்த் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுக்கு எம்.ஜி.ஆர். விருந்தளித்து கவுரவித்தார்.

தான் பார்த்த எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து, தான் ரசித்த பல காட்சிகளை திலீப் குமார் குறிப்பிட்டு பாராட்டினார். தமிழகத்தில் மட்டுமின்றி பெங்களூர், மும்பை (அப்போது பம்பாய்) போன்று இந்தியாவின் பிற நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைக் கண்டு ‘‘எம்.ஜி.ஆருக்கு இருப்பதைப் போன்று வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு ரசிகர் மன்றங்கள் இல்லை’’ என்றும் பாராட்டினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தை இந்தியில் எடுப்பது தொடர்பாக திலீப் குமாரை நாகிரெட்டி மும்பையில் சந்தித் துப் பேசியபோது, படத்தைப் பார்க்க திலீப் குமார் விருப்பப்பட்டார். அதற்கா கவே சென்னை வந்தார். குறிப்பிட்ட நாளில் வாஹினி ஸ்டுடியோவில் உள்ள சிறிய தியேட்டரில் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் திரையிடப்பட்டது. நாகிரெட்டியின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் சென் றார். திலீப் குமாருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

பின்னர், ‘‘படம் ரொம்ப நல்லா இருக்கு. ஆனால், நான் நடிக்க விரும்ப வில்லை’’ என்று திலீப் குமார் கூறிவிட்டார். ‘‘ஏன்?’’ என்று வியப்புடன் கேட்டார் நாகிரெட்டி.

‘‘எம்.ஜி.ஆர். இரண்டு பாத்திரங்களை யும் சிறப்பாக செய்திருக்கிறார். அது போல என்னால் முடியாது’’ என்றார் திலீப் குமார்.

அவரை அப்படியே அணைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் பெரிய நடிகர். இந்தியில் எவ்வளவோ சாதனை கள், பிரமாதமான படங்கள் பண்ணியிருக் கிறீர்கள். நீங்கள் இந்தப் படத்தை இந்தி யில் செய்தால் படம் பெரிய ‘ஹிட்’ ஆகும். ‘நான் ஆணையிட்டால்’ பாடல் காட்சியில் உங்கள் பாணியில் பண்ணுங்கள்’’ என்று கூறி உற்சாகப்படுத்தினார். பின்னர், இந்தி யில் திலீப் குமார் நடிக்க ‘ராம் அவுர் ஷ்யாம்’ என்ற அந்தப் படமும் வெற்றிகர மாக ஓடியது. அந்தப் படத்தில் திலீப் குமார் நடித்ததற்கு எம்.ஜி.ஆர். அவருக்கு அளித்த உற்சாகம்தான் காரணம்.

பின்னர், 1969-ம் ஆண்டு பொங்கல் நாளில் சென்னையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று திலீப் குமார் கலந்து கொண்டார். அப்போது ஒரு சுவையான சம்பவம்.

சிலை திறப்பு விழாவில் எஸ்.எஸ்.வாச னும் கலந்து கொண்டார். அவர் தீவிர காங்கிரஸ் அபிமானி. அவர் பேசும்போது, ‘‘கலைவாணர் சிலையை திறக்க இப் போதுதான் வேளை வந்துள்ளது’’ என் றார். இறுதியில் பேசிய அண்ணா, ‘‘சிலையை திறக்க இப்போதுதான் வேளை வந்திருப்பதாக வாசன் கூறு கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ள இந்த வேளையைத்தான் அவர் குறிப்பிடு கிறார்’’ என்று கூறி, உடல் நலம் குன்றிய அந்த நிலையிலும் நகைச்சுவை குன்றா மல் பேசினார்.

‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் சென்னை விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெற்றிருந்தது. படம் வெற்றிகரமாக ஓடி நல்ல லாபம் கிடைத் தது. பேசிய தொகைக்கு மேல் லாபம் கிடைத்திருப்பதாகக் கூறி, நாகிரெட்டிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எம்.ஜி.ஆர் அனுப்பினார். கூடுதலாக கிடைத்த லாபத்தை தயாரிப்பாளருக்கு கொடுத்த முதல் விநியோகஸ்தர் மட்டு மல்ல; கடைசி விநியோகஸ்தரும் எம்.ஜி.ஆர்.தான்.

அதை ஏற்றுக் கொள்ள நாகிரெட்டி மறுத்துவிட்டார். ‘‘நீங்கள் செய்யும் தர்ம காரியங்களுக்கு இந்த தொகையை பயன் படுத்திக் கொள்ளுங்கள்’’ என்று அந்த காசோலையை திருப்பி அனுப்பிவிட்டார். எம்.ஜி.ஆரிடம் திரும்பி வந்த அந்த லட்ச ரூபாய் எத்தனை ஏழைகளின் துயரை துடைத்ததோ? யாருக்குத் தெரியும்?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் தயா ராகிக் கொண்டிருந்தபோது, ஒருநாள் இரவு வாஹினி ஸ்டுடியோவின் எட்டாவது படப்பிடிப்பு அரங்கில் தீவிபத்து ஏற்பட்டது. விஷயம் தெரிந்து எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். தேவையான உதவி களை செய்தார். பின்னர், வீட்டில் இருந்த நாகிரெட்டியையும் சந்தித்து ‘‘கவலைப் பட வேண்டாம்’’ என்று ஆறுதல் கூறியபோது, ‘இப்படியும் ஒரு மனிதரா?’ என்று வியந்து எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்தார் நாகிரெட்டி.


முந்தைய தொடர்களை வாசிக்க: எம்ஜிஆர் 100

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024