எம்ஜிஆர் 100 | 62: பொருளாதாரம் தெரியாதவர்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
‘‘எம்.ஜி.ராமச்சந்திரனை திமுகவில் இருந்து விலக்கியது மறைந்த அண்ணா அவர்களையே விலக்கியது போலாகும். தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர்.! மகாபாரத அர்ஜுனனைப் போல அவரை வெற்றி வீரர் ஆக்குங்கள்’’… திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டபோது மூதறிஞர் ராஜாஜி சொன்ன வாசகங்கள்தான் இவை. 1971-ம் ஆண்டு தேர்தலில் பெருந்தலைவர் காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸும் மூதறிஞர் ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு திமுகவிடம் கடும் தோல்வியை சந்தித்தன.
அதிமுகவையும் திமுகவையும் சமதூரத்தில் வைத்துப் பார்த்த காமராஜருக்கு, ராஜாஜியின் எம்.ஜி.ஆருக்கு ஆதரவான அறிவிப்பு ஏற்புடையதாக இல்லை. சுதந்திரா கட்சியில் இருந்த டாக்டர் எச்.வி. ஹண்டேயை அழைத்து தனது அதிருப்தியை ராஜாஜியிடம் தெரிவிக்குமாறு காமராஜர் கூறினார்.
அதற்கு ராஜாஜியின் பதில், ‘‘காமராஜரும் எம்.ஜி.ஆரை ஆதரிக்க வேண்டும்’’ என்பதே. அவரது பதிலோடு தன்னை சந்தித்த ஹண்டே யிடம், ராஜாஜியை அவரது பிறந்தநாளின்போது சந்தித்து பேசுவதாகக் கூறியிருக்கிறார் காமராஜர். ‘‘ஆனால், அதற்குள் ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்துவிட்டார்’’ என்கிறார் டாக்டர் ஹண்டே. ‘‘அடுத்த சில மாதங்களில் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற அமோக வெற்றி, ராஜாஜியின் கணிப்பை உறுதிப்படுத்தியது’’ என்றும் கூறுகிறார்.
சட்டப்பேரவையில் அப்போதைய திமுக அரசை எதிர்த்து சுதந்திரா கட்சியின் பேரவைத் தலைவராக இருந்த ஹண்டேயின் செயல்பாடுகளை பார்த்த எம்.ஜி.ஆர்., ‘‘ராஜாஜி என்னை ஆதரித்தார். அவரது விருப்பப்படி நீங்கள் அதிமுகவில் சேர வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார். அதன்படி, 1973 ஜூன் 19-ம் தேதி அதிமுகவில் ஹண்டே சேர்ந்தார். அதிமுகவின் முதல் தலைமை நிலையச் செய லாளர் ஆக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார். 1980-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை அண்ணாநகர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு 699 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை ஹண்டே இழந்தாலும், அவரை அமைச்சரவை யில் சேர்த்துக்கொண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆருடன் சேர்ந்து பணியாற்றிய தனது அனுபவத்தில், அவர் தனது அரசியல் எதிரிகளைக்கூட கடுமையாகப் பேசி ஹண்டே பார்த்தது இல்லை. எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களின் தொகுதிகளுக்கும் பாரபட்ச மில்லாமல் அரசின் திட்டங்களை எம்.ஜி.ஆர். செயல்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு அனுபவம் ஹண்டேவுக்கே உண்டு.
திமுக ஆட்சியில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் புலவர் கோவிந்தன். கருணாநிதிக்கு நெருக்கமானவர். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஹண்டே இருந்தபோது, அவரை புலவர் கோவிந்தன் சந்தித்தார். வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள தனது செய்யாறு தொகுதியில் சுகாதாரத்துறை சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்தார்.
அந்தப் பட்டியலை எடுத்துக் கொண்டு முதல்வர் எம்.ஜி.ஆரை ஹண்டே சந்தித்து விஷயத்தைத் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. அந்தப் பணிகளை உடனே நிறைவேற்றுங்கள். புலவர் கோவிந்தன் நல்ல மனிதர். அவர் திமுகவில் இருந்தாலும் நீங்கள் செய்யாறு தொகுதிக்கு நேரடியாகச் சென்று பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ என்றார். இந்த பதிலால் ஹண்டேயின் மதிப்பிலும் மனதிலும் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார்.
தன் மீது வீசப்படும் கடுமையான விமர்சனங்களுக்குக் கூட எம்.ஜி.ஆர். கோபப்பட மாட்டார். அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு அவர் அளிக்கும் பதில் மிகக் கூர்மையாக இருக்கும்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, பரமத்திவேலூர் என்ற இடத்தில் அதிமுக பொதுக்கூட்டம். அதில் கலந்து கொள்வதற்காக எம்.ஜி.ஆருடன் ஹண்டே சென்றார். ஹண்டேயின் கையில் அன்றைய மாலை நாளிதழ் இருந்தது. ‘‘என்ன நியூஸ்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். சொல்வதற்கு ஹண்டேக்கு தயக்கம். என்றாலும் தயங்கியபடியே சொல்லிவிட்டார். ‘‘திமுக தலைவர் கருணாநிதி உங்களுக்குப் பொருளாதாரம் தெரியாது என்று விமர்சித்திருக்கிறார்’’ என்றார் ஹண்டே.
அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். கோபமோ, வருத்தமோ அடையவில்லை. நிதானமாகச் சொன்னார்… ‘‘திமுக தலைவர் கூறுவது உண்மைதான். நான் பெரிய படிப்பு படித்தவன் அல்ல. பொருளாதாரம் பற்றி எனக்கு சொல்ல, அதுபற்றி நன்கு அறிந்த உயர் அதிகாரிகள் இருக்கிறார்கள். ஆனால், பல முதல் அமைச்சர்களுக்குத் தெரியாத விஷயம் எனக்குத் தெரியும். பசி என்றால் என்னவென்று எனக்குத் தெரியும். அந்தக் கஷ்டம் புரியும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய முதல் அமைச்சருக்கு இது தெரிந்தால் போதும்.’’
‘‘எம்.ஜி.ஆர். சொன்னது கரெக்ட்தானே’’ என்கிறார் டாக்டர் ஹண்டே!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
மூதறிஞர் ராஜாஜி நகைச்சுவை உணர்வு உடையவர். எம்.ஜி.ஆரும் அப்படியே. அதிமுகவைத் தொடங்கிய புதிதில் ராஜாஜியின் ஆசியை பெறுவதற்காக அவரை எம்.ஜி.ஆர். சந்தித்தார். படப்பிடிப்பு இருந்ததால் அதை முடித்துவிட்டு ராஜாஜியை பார்க்கச் சென்றபோது தாமதமாகிவிட்டது. வருத்தம் தெரிவித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஷூட்டிங்கினால் தாமதமாகிவிட்டது’’ என்றார். அதற்கு, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை குறிப்பிடும் வகையில் ‘‘ஷூட்டிங்தான் ஏற்கெனவே முடிஞ்சுடுத்தே‘‘ என்று சிலேடையாக ராஜாஜி சொல்ல, ரசித்து சிரித்தார் எம்.ஜி.ஆர்.!
No comments:
Post a Comment