Monday, May 23, 2016

தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம் - முதல் உத்தரவில் கையொப்பமிட்டார் ஜெயலலிதா

சென்னை:

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று, தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மது கடைகளை இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.

காமராஜர், எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதையடுத்து சனிக்கிழமை கவர்னர் ரோசய்யாவை சந்தித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது அவர் 28 அமைச்சர்கள் கொண்ட மந்திரிசபை பட்டியலையும் கொடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ரோசய்யா, ஆட்சி அமைக்க வருமாறு ஜெயலலிதாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அரசு பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் செய்யப்பட்டன.

தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவி ஏற்பதால், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் இன்று அதிகாலை முதலே பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் பகுதியிலும், கடற்கரை சாலையிலும் குவிந்தனர். இதனால் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது.

அதுபோல போயஸ் கார்டனில் இருந்து, விழா நடக்கும் இடம் வரை ஜெயலலிதா வரும் வழி நெடுக அவரை வரவேற்று பதாகைகளும், அ.தி.மு.க. கொடிகளும், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளன. ஆங்காங்கே அ.தி.மு.க. நிர்வாகிகள் மேள-தாளம் முழங்க ஜெயலலிதாவை வரவேற்க திரண்டு நின்றனர். எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. கொடிகள் பறந்தன.

பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெயலலிதா 11.40 மணிக்குப் புறப்பட்டார். 11.50 மணிக்கு அவர் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்குக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

விழா மேடைக்கு அவர் வந்ததும் “புரட்சித்தலைவி வாழ்க”, “அம்மா வாழ்க” என்று அ.தி.மு.க.வினர் வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களுக்கு ஜெயலலிதா கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தார். இதையடுத்து கவர்னர் ரோசய்யா வந்ததும் சுமார் 12 மணியளவில் பதவி ஏற்பு விழா தொடங்கியது.

சரியாக 12.07 மணிக்கு ஜெயலலிதாவுக்கு கவர்னர் ரோசைய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்லூர் கே.ராஜு, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், டாக்டர் சரோஜா, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், காமராஜ், ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எஸ். பி.சண்முகநாதன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயக்குமார், கே.டி. ராஜேந்திரபாலாஜி, கே.சி. வீரமணி, பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, ராஜலட்சுமி, டாக்டர் மணிகண்டன், கரூர் விஜயபாஸ்கர் ஆகிய 28 பேரும் குழு, குழுவாக பதவியேற்றனர்.

அவர்கள் அனைவருக்கும் கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார். சரியாக பதினைந்து நிமிடங்களில் பதவி ஏற்பு விழா நிறைவு பெற்றது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி ஏராளமான வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. 1300-க்கும் மேற்பட்டவர்கள் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் நிரம்பி வழிந்தது.

மத்திய அரசின் சார்பில் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பதவி ஏற்பு விழாவை பொதுமக்கள் காணும் வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அகன்றதிரை கொண்ட எல்.சி.டி. திரைகள் அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 1,500 போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இது தவிர முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்லும் வழி நெடுக பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, செயிண்ட் ஜாட்ஜ் கோட்டையில் உள்ள மாநில அரசின் தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள், பணியாளர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், அரசின் தலைமை ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் போலீஸ் டிஜிபி அசோக் குமார், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அறைக்கு சென்றார். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இன்று தனது முதல்வர் பணியைத் தொடர்ந்தார். பிற்பகல் 12.40 மணியளவில் ஐந்து முக்கிய கோப்புகளில் அவர் கையொப்பமிட்டார்.

4 கிராமுக்கு பதிலாக தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம், விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி, கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம், வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணிக்கு பதிலாக இனி நண்பகல் 12 மணிக்கு மேல் திறக்கப்படும் ஆகிய ஐந்து முக்கிய உத்தரவுகளில் அவர் கையொப்பமிட்டார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் அவர் முதல் கையெழுத்திட்டார்.

இதையடுத்து 28 அமைச்சர்களும் தங்களது அறைக்கு சென்று பொறுப்பேற்றனர். அவர்களும் இன்றே தங்களது பணிகளைத் தொடங்கினார்கள்.

பிற்பகல் 1.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் 28 அமைச்சர்களும் கவர்னர் மாளிகைக்கு செல்கின்றனர்.

அங்கு சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை பதவி ஏற்கும் விழா நடக்கிறது. கவர்னர் ரோசய்யா, தற்காலிக சபாநாயகரான செம்மலைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதில் கலந்து கொண்டு செம்மலைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். அதன் பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தி.மு,க. பொருளாளரும், தமிழ்நாடு முன்னாள் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், சென்னை வடக்கு மாவட்ட செயலாளரும் துறைமுகம் தொகுதி எம்,எல்.ஏ.வுமான பி.கே. சேகர் பாபு, முன்னாள் அமைச்சர் துரைமுருகன், பொன்முடி, நடிகரும் வேளச்சேரி எம்.எல்.ஏ.வுமான வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் வி.ஐ.பி.க்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...