மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா பேட்டி
எம்.சண்முகம்
மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு எதிராக அவசர சட்டம் கொண்டுவரும் திட்டம் இல்லை. மேலும் ஜூலை 24-ம் தேதி திட்டமிட்டபடி 2-ம் கட்ட நுழைவு தேர்வு நடக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ரூ.80 லட்சம் வரை நன்கொடை வசூலிப்பதாகவும் 100-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வு நடப்பதாகவும் மாணவர்களிடம் இருந்து புகார்கள் வந்ததையடுத்து, தேசிய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தி தகுதி அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டங்கள் இருப்பதால், மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. கடந்த 1-ம் தேதி நடந்த முதல்கட்ட தேர்வில் 6.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்வை ஜூலை 24-ம் தேதி நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தலைமையில் கடந்தவாரம் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில அரசுகள் சார்பில் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நுழைவுத்தேர்வுக்கான பாடத் திட்டம் மற்றும் மொழி வேறுபடுவதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாநிலங்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தேசிய நுழைவுத்தேர்வு நடை முறையில் இருந்து மாநிலங் களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததாகவும், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப் பட்டதாகவும் தகவல் வெளியானது.
அவசர சட்டம்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விரைவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, அவசர சட்டம் கொண்டு வருவதற்கான அவசியம் குறித்து விளக்குவார் என்றும் கூறப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததும் அவசர சட்டம் அமலுக்கு வரும். இருப்பினும் அடுத்த ஆண்டு தேசிய நுழைவுத்தேர்வு முறையை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால். ‘அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை. இத்தகவல் உண்மையானது அல்ல’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment