Saturday, May 7, 2016

எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதுகிறார் ஆர்.எஸ். மனோகர். | ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் 100 | 60- நாடகக்கலை மீதான பிரியம்!

M.G.R. திரைப்படத்துறையிலும் அரசியல்துறையிலும் உயர்ந்த நிலைக்குச் சென்றபோதும், அதற்கெல்லாம் காரணமாக விளங்கி மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திய நாடகக் கலையின் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர். நாடகங்களை ஊக்குவித்தவர். நாடக உலகில் இருந்து திரைப்படங்களில் நடிக்க வந்தவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு தனி அன்பு உண்டு.

நாமக்கல்லில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் அவர். சிறுவயது முதலே நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டவர். படிக் கும் காலத்திலேயே பம்மல் சம்பந்த முதலியாரின் ‘மனோகரா’ நாடகத்தில் மனோகரனாக சிறப்பாக நடித்து வந்தார். அதனால், அவரது இயற் பெயரே மறைந்துபோய் நாடகத்தில் நடித்த பாத்திரப் பெயரே நிலைத்துவிட் டது. அவர்தான் பின்னர் 1951-ல் ‘ராஜாம் பாள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து புகழ்பெற்ற ராமசாமி சுப்பிரமணியம் மனோகர் என்ற ஆர்.எஸ்.மனோகர்.

எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர். ‘காவல்காரன்’ படத்தில் குத்துச்சண்டை வீரராக மனோகர் நடித்திருப்பார். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கும் மனோகருக்கும் குத்துச்சண்டை நடக்கும்.

படப்பிடிப்பின்போது மனோகரைப் பார்த்து, ‘‘உங்களுக்கு குத்துச்சண்டை தெரியுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘ஏதோ கொஞ்சம் தெரியும்’’ என்றார் மனோகர். இரண்டு மூன்று ஷாட்கள் முடிந்ததும் மனோகரின் பஞ்ச், தான் குத்துவதை தடுப்பது ஆகியவற்றை கவனித்த எம்.ஜி.ஆர். மனோகரிடம், ‘‘ஏன்யா பொய் சொல்றே? பெரிய சாம்பியன் மாதிரி ஃபைட் பண்றே’’ என்று கூறியபடியே அவரை செல்லமாகக் குத்தினார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்ப தற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப் பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாட கத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட் களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம். மனோ கரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாட கங்களுக்கு தேவையான பொருட்களை எவ் வளவு வேண்டு மானாலும் வாங் கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னு டைய செலவு’’ என்றார். மகிழ்ச் சியில் திக்கு முக்காடிப் போய்விட்டார் மனோகர். தனது நாடகங் களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டார்.

‘அடிமைப்பெண்’ படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கும் போது, படிகளில் உருண்டு விழ இருந்த மனோகரை எம்.ஜி.ஆர். சரியான நேரத் தில் பிடித்து அவரைக் காப்பாற்றினார்.

நாடகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்த ஆர்வத்துக்கு ஒரு உதார ணம். ஒருமுறை சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. கலா மண்டபத்தில் மனோகரின் நாடகங்கள் பதின்மூன்று நாட் களுக்கு தொடர்ந்து நடந்தன. எல்லா நாட்களும் எம்.ஜி.ஆர். வந்து நாடகங்களைப் பார்த்தார்.

அடாது மழை பெய்தாலும் விடாமல் நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்ததும் உண்டு. அதே என்.கே.டி. கலா மண்டபத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.வி.சகஸ்ர நாமத்தின் சேவா ஸ்டேஜ் சார்பில் ‘சத்திய தரிசனம்’ என்ற நாடகம் நடந்தது. அது திறந்தவெளி அரங்கம். தனது மனைவி ஜானகி அம்மையாருடன் வந்து நாடகத்தை எம்.ஜி.ஆர். பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராமல் மழை வந்துவிட்டது. கூடியிருந்தவர்கள் அருகே இருந்த கட்டிடங்களில் போய் ஒண்டிக் கொண்டனர். எம்.ஜி.ஆரும் ஜானகி அம்மையாரும் மழையில் நனைந்தபடியே அமர்ந்திருந்தனர்.

இதைப் பார்த்துவிட்டு சகஸ்ரநாமம், ‘‘மழை காரணமாக நாடகத்தை நிறுத்திக் கொள்கிறோம். இன்னொரு நாள் இதை நடத்துவோம்’’ என்று அறிவித்தார். நனைந்த உடையுடன் மேடையேறிய எம்.ஜி.ஆர்., ‘‘அடாது மழை பெய்தாலும் நாடகம் பார்க்கத் தயாராக இருந்தேன். நீங்கள்தான் நிறுத்திவிட்டீர்கள். பார்த்தவரை நாடகம் சிறப்பாக இருந்தது. மீண்டும் நடத்தும்போது சொல்லுங்கள் வருகிறேன்’’ என்று பேசினார்.

அதன்படியே, பெரம்பூர் ஐ.சி.எஃப். திடலில் மறுபடியும் ‘சத்திய தரிசனம்’ நாடகம் நடந்தபோது எம்.ஜி.ஆர். சென்று பார்த்து கலைஞர்களை கவுரவித்தார்.

எம்.ஜி.ஆருடன் மனோகர் பல படங் களில் சண்டைக் காட்சிகளில் நடித் துள்ளார். என்றா லும், ‘உலகம் சுற்றும் வாலி பன்’ படத்தில் எம்.ஜி.ஆரின் சாதுர்யத்தைக் காட்டும் இடை வேளைக்கு முந்தைய ரசமான காட்சி ரசிகர்களைத் துள்ள வைக் கும்.

கதைப்படி, அணுசக்தி ஆராய்ச்சி குறிப்பின் ஒருபகுதி ஹாங்காங் கில் உள்ள ஒருவரின் வீட்டில் இருக்கும். டைம் பீஸில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் குறிப்பை வாங்கிக் கொள்ள எம்.ஜி.ஆர். அங்கு செல்வார். வில்லன் அசோகனின் கையாளாக வரும் மனோகரும் அந்தக் குறிப்பை அடைவதற் காக நாய் வியாபாரி போல, பெரிய கன்றுக் குட்டி சைஸில் இருக்கும் இரண்டு முரட்டு நாய்களுடன் அங்கு வருவார்.

மனோகர் வந்திருப்பதன் நோக்கத்தை நொடியில் எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டு விடுவார். புருவங்களை உயர்த்தி, உதடுகளை லேசாக விரித்து, மூச்சை உள் ளிழுத்து புன்முறுவல் பூக்கும்போதே, தாக்குதலை சமாளிக்க அவர் தயாராகிவிட்டார் என்பதை உணர்ந்து தியேட்டர் அமர்க்களப்படும். தொடர்ந்து மனோகருக்கும் எம்.ஜி.ஆருக்கும் வாக்குவாதம் நடக்கும். எம்.ஜி.ஆர். நடந்து கொண்டே அறையின் மூலைக்கு சென்று கண்ணாடி ஜன்னலின் வழியே கீழே நோட்டம் விட்டுத் திரும்புவார்.

ஒரு கட்டத்தில் கோபமடையும் மனோகர், வீட்டின் சொந்தக்காரரை பார்த்து விரலை சொடுக்கியபடி, ‘‘சார், அப்படீங்கறதுக்குள்ளே, அவர் கையில் உள்ள டைம் பீஸை நாய் கொண்டுவந்துடும். பாக்கறீங்களா?’’ என்று சவால் விடுவார்.

இதை எதிர்பார்த்தவராய், மின்ன லாய் பாய்ந்து சென்று ஏற்கெனவே நோட்டமிட்டு வைத்திருந்த கண்ணாடி ஜன்னலின் வழியே குதித்து எம்.ஜி.ஆர். அங்கிருந்து தப்புவார். அதற்கு முன் அவர் சொல்லும் வசனம் குத்துமதிப் பாகத்தான் காதில் விழும். அந்த அளவுக்கு அணை உடைத்த பெரு வெள்ளமாய் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலும் ஆரவாரமும் தியேட்டரை நிரப்பும். மனோகரைப் பார்த்து எம்.ஜி.ஆர். சொல்லும் அந்த வசனம்...

‘‘நாய்களோட திறமையை அவர் பார்க்கட்டும், என்னோட திறமையை நீ பாரு!’’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


மனோகர் நாடகங்களில் தந்திரக் காட்சிகள் ரசிகர்களைக் கவரும். அவற்றை பார்த்து ரசிக் கவே ஏராளமான மக்கள் வரு வார்கள். சென்னையில் என்.கே.டி. கலா மண்டபத்தில் தொடர்ந்து அவரது நாடகங்களை பார்த்த எம்.ஜி.ஆர்., கடைசி நாள் நிகழ்ச்சி யில் மனோகருக்கு ‘நாடகக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024