Monday, May 16, 2016

ஆங்கிலம் அறிவோமே - 109: பேட்டை ராப்பா இல்லை ஹிப் ஹாப்பா?


மீண்டும் சில rebusகளை அளிக்கலாமே என்று பல வாசகர்கள் விருப்பப்பட்டதால் இதோ அவ்வகைப் புதிர்கள் இரண்டு. உங்கள் விடைகளை உங்கள் பெயர் மற்றும் உங்கள் ஊரின் பெயருடன் உடனடியாக மின்னஞ்சல் செய்யுங்கள்.

1. STANDS

0 2 3 4 5 6

2. L1IFE1TIM1E

------------------------------------

என் உறவினர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் ‘This house is bigger than Ramanan’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு விஷயங்களை ஒப்பிடும்போது அந்த ஒப்பிடலில் தெளிவு இருக்க வேண்டும்.

ஒரு வீட்டைப் பார்க்கிறீர்கள். ரமணனின் வீட்டைவிட இது பெரியது என்றால் This house is bigger than Ramanan என்று சொல்லக் கூடாது. அப்படிச் சொன்னால் இந்த வீடு ரமணனைவிட (அவர் வீட்டைவிட அல்ல) பெரியது என்றாகிவிடும். எனவே This house is bigger than the house of Ramanan என்றோ This house is bigger than that of Ramanan என்றோ கூற வேண்டும்.

The speed of the new car is higher than the old car என்பதுபோல் குறிப்பிடுபவர்கள் உண்டு. ‘பழைய காரைவிட’ புதிய காரின் வேகம் அதிகம் என்பது தவறு. பழைய காரின் வேகத்தைவிட புதிய காரின் வேகம் அதிகம் என்பதுதானே சரி? எனவே The speed of the new car is higher than that of the old car. இங்கே speed என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை ‘that’ என்ற வார்த்தையின் மூலம் குறிக்கிறோம்.

------------------------------------

“ட்ரூப் என்றால் குழு என்றுதானே அர்த்தம்?’’. இந்தக் கேள்விக்கு இப்படி விளக்கமளிக்கலாம்.

Troupe என்ற வார்த்தையை பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களை மகிழ்விக்கும் நடிகர்கள், நடனக் கலைஞர்கள், சர்க்கஸ் கலைஞர்கள் ஆகியோரின் குழுவைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்கள்.

Troop என்பது பொதுவாக போர்ப் படையைக் குறிக்கிறது. U.N. peace keeping Troops. குறிப்பிட்ட மக்களையோ, மிருகங்களையோ குறிக்கவும் இந்த வார்த்தை பயன்படுகிறது. A troop of secret Agents, A troop of mischievous monkeys.

------------------------------------

Silicon, Silicone இரண்டும் ஒன்றா?

Silicon என்பது ஒரு தனிமம். ஆக்ஸிஜன், கார்பன் போல. இது மணலின் முக்கியப் பகுதி.

டிரான்ஸிஸ்டர் மற்றும் கணினி சிப்களில் உள்ள முக்கியப் பொருள் சிலிகான். இதனால்தான் அமெரிக்காவில் மின்னணுத் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ள இடத்தை சிலிகான் பள்ளத்தாக்கு (Silicon Valley) என்கிறார்கள்.

Silicone என்பது ஒரு கூட்டுப் பொருள். கார்பன், சிலிகான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய மூன்றும் கலந்தது. செயற்கைக் கால்களில் இது ஒரு முக்கியப் பொருள். இதை சிலிகோன் என்று உச்சரிக்கிறார்கள்.

------------------------------------

Neither என்ற வார்த்தைக்குப் பிறகு nor என்பதும், either என்ற வார்த்தைக்குப் பிறகு or என்பதும் அந்த வாக்கியத்தில் இடம்பெறும் என்பது தெரிந்ததுதான். ஆனால் பலரும் தெளிவாகத் தெரிந்து வைத்திராத இதுபோன்ற ஜோடி வார்த்தைகள் (correlatives) உண்டு. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

No sooner என்ற வார்த்தைகள் இடம் பெற்றால் than என்ற வார்த்தையும் அந்த வாக்கியத்தில் கட்டாயம் இடம் பெறவேண்டும்.

Scarcely என்ற வார்த்தை இடம் பெறும்போது before என்ற வார்த்தை இடம் பெறும்.

Hardly என்ற வார்த்தை இடம் பெற்றால் when என்ற வார்த்தை தொடரும்.

இந்த மூன்றின் பயன்பாடுகளையும் விளக்கும் வாக்கியங்கள் இவை.

1. No sooner had we reached the station, than the train started.

2. We scarcely reached the station before the train started.

3. We had hardly gone to the station when the train started.

------------------------------------

இசை, நடனம் போன்ற கலைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட ஒரு வாசகர் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பான ஆங்கில விமர்சனங்களில் காணப்படும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்தும், புரியாமலும் இருக்கிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். அந்த வார்த்தைகளோடு மேலும் சில (இதே துறையைச் சேர்ந்த) வார்த்தைகளின் பொருளை யும் புரிந்து கொள்வோமே.

Maestro என்றால் மிகவும் மதிக்கத்தக்க இசையை உருவாக்குபவர் என்று அர்த்தம்.

Bass அல்லது Alto என்றால் அது (ஆண்) பாடகரின் குரல் கீழிருந்து மேலே செல்வதை உணர்த்துகிறது (ஆரோகணம்).

பாலே நடனம் என்று நாம் கூறுவதை ஆங்கிலத்தில் Ballate என்பார்கள். ரஷ்யாவில் பிரபலமான இந்த நடனத்தை நாம் பார்த்திருப்போம். ஆனால் Ballad என்பது கதையை விவரிக்கும் ஒரு பாடல்.

Concert என்றால் கச்சேரி. அதாவது மக்களை நேரடிப் பார்வையாளர்களாகக் கொண்ட மேடை இசை நிகழ்ச்சி.

Fusion என்றால் அது இரண்டு வெவ்வேறு இசை வடிவங்கள் இணைவதைக் குறிக்கிறது. என்றாலும் Jazz மற்றும் Electric Rock இருவகைகளின் இணைப்பைத்தான் Fusion என்று குறிப்பிட்டனர். நம் கச்சேரிகளில் இடம் பெறும் ஜூகல்பந்தி என்பதும் இதுபோன்ற இருவேறு இசை வடிவங்களின் இணைப்புதானே.

ஆப்ரா எனப்படும் Opera என்பது இசை வடிவ நாடகம். பின்னணி இசை ஒலித்துக்கொண்டே இருக்க மேடையில் தோன்றுபவர்கள் சொந்தக் குரலில் பாடுவார்கள். Diva என்பவர் இதுபோன்ற பிரம்மாண்டமான ஆப்ராவில் பங்குகொள்ளும் முக்கிய பின்னணிப் பாடகி.

Rap என்பது பாப் இசையை அடிப்படையாகக் கொண்ட இசை மற்றும் நடன வடிவம். Hip hop இசையை rap இசை என்பார்கள். மற்றபடி பேட்டை ராப் பற்றி நீங்கள் அறிவீர்கள்!

காபரே நடனம் என்றால் அரைகுறை உடைகளை அணிந்து கொண்டு ஆடும் ஆட்டம் என்ற பிம்பம் நம் மனதில் பதிந்திருக்கிறது. எனினும் Cabaret என்பது மதுவகம் அல்லது ஹோட்டல்களில் ஆடப்படும் நடனம், அவ்வளவே. எனினும் நடைமுறையில் நம் பிம்பம்தான் சரியானது.

காயர் (Choir) என்பது பாடகர்களின் குழுவைக் குறிக்கிறது. முக்கியமாக மாதா கோவில்களில் இடம்பெறும் இசைப் பாடல்களை கூட்டாகப் பாடுபவர்களைக் குறிக்கிறது. .

------------------------------------

“Fun என்றாலே சிரிப்பும் கும்மாளமும்தானே” என்று தன் கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் நண்பரிடம் ஒரு சில விளக்கங்களைக் கூறுவது அவசியமாகிறது.

Fun என்றால் அதில் நகைச்சுவையோ, வெடிச் சிரிப்போ இருந்தாக வேண்டும் என்பதில்லை. Fun என்றால் உற்சாகம். அதாவது enjoyment. கீழே உள்ள வாக்கியங்களைப் படித்தால் மேலும் தெளிவாகும்.

It was fun seating on the wall near the sea.

It is more fun to go with friends than to go out alone.

Just for fun, we painted our faces.

ஆனால் funny என்ற வார்த்தைக்குப் பொருள் ‘சிரிப்பை வரவழைக்கக்கூடிய’ என்பதாகும். You do look funny in that red dress.

சிப்ஸ்

ஒருவரை Portly என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்? அவர் பருமனாக இருக்கிறார் என்று அர்த்தம். Plump.

நெற்றிக்கு இருபுறமும் உள்ள பகுதிகளை எப்படிக் குறிப்பிடுவது? Temples.

Your victory is momentary whereas our victory will be momentous” என்று ஒரு கதையில் படித்தேன். இரண்டு விக்டரிக்களுக்கும் என்ன வேறுபாடு என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார்

Momentary victory என்பது தாற்காலிகமான வெற்றி. Momentous victory என்பது திருப்புமுனையான, மிக முக்கியமான வெற்றி.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

No comments:

Post a Comment

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...