எம்ஜிஆர் 100 | 57 - ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கியவர்!
தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. தன் மீது வீசப்பட்ட ஏவுகணைகளையே ஏணிப்படிகளாக்கி வெற்றி கண்டவர். இயற்கையாக ஏற்பட்ட தடைகள் மட்டுமின்றி, செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தடைக் கற்களையும் படிக்கற்களாக்கி உயர்ந்தவர். ஒரு காலகட்டத்தில் அவரது படங்களின் ரிசர்வேஷன் சாதனைகூட, படத்துக்கு சிக்கலையும் கெடுபிடியையும் ஏற்படுத்தின.
பேரறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக- வில் எம்.ஜி.ஆர். இணைந்தார். திமுக-வில் அவர் சேர்ந்தபோது, அது தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியல்ல. 1956-ம் ஆண்டு திருச்சியில் நடந்த மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் விருப்பப்படி 1957-ம் ஆண்டில்தான் திமுக தேர்தலில் போட்டி யிட்டது. அப்போது, காங்கிரஸ்தான் ஆளும் கட்சி. அதனால், எந்த லாப நோக்கத்தோடும் திமுகவில் எம்.ஜி.ஆர். சேரவில்லை. சொல்லப்போனால், அன்றைய சூழலில் திமுகவில் இருந்ததால் அவருக்கு இழப்புகளும் சோதனைகளும்தான் அதிகம். அவரது படங்களுக்கு சென்சாரின் பிடி இறுகும். புராணப் படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது, திமுகவின் கொள்கைகளை மனதில் கொண்டு அந்த வாய்ப்புகளை எம்.ஜி.ஆர். நிராகரித்தார்.
1959-ம் ஆண்டில் நாடகத்தில் நடித்தபோது அவருக்கு காலில் மிகக் கடுமையான எலும்பு முறிவு ஏற்பட்டு படுத்த படுக்கையானார். ‘‘இனிமேல் அவரால் நடிக்க மட்டுமல்ல; நடக்கவே முடியாது’’ என்றனர். ஆனால், நடக்காது என்பது எம்.ஜி.ஆரின் வாழ்வில் நடக்காது. வெற்றிகரமாக மீண்டு முன்பை விட வேகமாகவும் வலிமையோடும் சண்டைக் காட்சிகளில் நடித்தார். 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின், ‘‘அவர் உயிர் பிழைத்திருக்கலாம்; ஆனால், சினிமா வாழ்வு முடிந்தது’’ என்றனர். அதைப் பொய்யாக்கி சினிமாவில் ஏற்கனவே இருந்த சாதனைகளை முறியடித்தார்.
அப்படி, ரிசர்வேஷனிலேயே சாதனை படைத்த படம் ‘இதயக்கனி’. 1950-களில் தியேட்டர்களில் அலங்காரம், கொடி, தோரணங்கள், கட் அவுட்கள், ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆகியவை எம்.ஜி.ஆர். படங்களில் இருந்துதான் முதலில் ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர்.படங்களை பார்க்க ரிசர் வேஷனுக்கு முதல் நாள் இரவில் இருந்தே தியேட்டர்களில் ரசிகர்கள் காத்திருந்த அதிசயமும் நடந்தது.
‘இதயக்கனி’ திரைப்படம் சென்னையில் மட்டும் ரிசர்வேஷனிலேயே மூன்றே நாட்களில் வசூல் ரூ.90 ஆயிரத்தைத் தாண்டியது. அந்த நாட்களில் ஒரு டிக்கெட் விலை எவ்வளவு என்று தெரிந் தவர்களுக்கு, இந்த 90 ஆயிரம் வசூல் எத்தகைய சாதனை என்பது புரியும். அதுவரை இல்லாத இந்த சாதனையை, படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப் பன், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விளம்பரமாக வெளியிட்டார். அந்த விளம்பரம் இங்கே இடம் பெற்றுள்ளது. அந்த விளம்பரமே படத்துக்கு சோதனையை ஏற்படுத்தியது. அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி மக்களின் ஆதரவோடு கட்சி வேகமாக வளர்ந்து வந்த நேரம் அது. படத்துக்கு கெடுபிடி தொடங்கியது.
உண்மையிலேயே அவ்வளவு டிக்கெட்கள் முன்பதிவு ஆகியிருக்கிறதா? என்று வணிகவரித் துறை அதிகாரிகள் படம் வெளியாக இருந்த தியேட்டர்களை கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கினர். படம் பார்க்க வரும் மக்கள் மிரண்டு திரும்பிப் போகும் அளவுக்கு டிக்கெட் கவுன் டர்களுக்கு வெளியே பலமான கண்காணிப்பு களும் கட்டுப்பாடுகளும் போடப்பட்டன. தியேட் டர்களின் அலுவலகத்திலும் கெடுபிடிகள். இவ்வளவையும் தாண்டி ‘இதயக்கனி’ படம் அபார வெற்றி பெற்றது. சென் னையில் சத்யம் தியேட்டரில் முதன்முதலில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் பெற்றது ‘இதயக்கனி’.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சென்னையில் தேவி பார டைஸ் அரங்கில் ரிசர்வேஷனின் போதே, 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படம் வெளியாவதற்குள் எத் தனையோ இடையூறுகள். 2014-ம் ஆண்டு செப்டம்பர் 14-ல் ‘தி இந்து’ தமிழ் நாளித ழில், ‘உலகம் சுற்றிய வாலிபன் தூத்துக்குடிக்கு வந்த கதை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், பஸ் இன்ஜின் உள்ளே பாதுகாப்பாக மறைத்து ரீல் பெட்டியை தியேட்டருக்குள் கொண்டு சென்ற செய்தி இடம் பெற்றது நினைவிருக்கலாம்.
கெடுபிடிகள் காரணமாக, போஸ்டர்கூட ஒட்டப்படாமல் படம் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடி, எம்.ஜி.ஆர். வசூல் சக்கரவர்த்தி என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ நிரூபித்தது. படத்துக்கான பணிகள் நடக்கும்போது அடிக்கடி மின்தடை ஏற்படும். அதை எல்லாம் எம்.ஜி.ஆர். சமாளித்தார். அந்த நெருக்கடியிலும் நண்பரின் பிள்ளைகளுக்காக படத்தை அவரது வீட்டுக்கே அனுப்பி வைத்தார் எம்.ஜி.ஆர்.!
படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான ஏ.பி.நாகராஜன், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு, தனது மகன்கள் வெங்கடசாமி, பரமசிவம் ஆகியோரிடம் படத்தின் சிறப்புகளை தெரிவித் தார். அவர்களுக்கு உடனடியாக படம் பார்க்க ஆசை. தியேட்டருக்குச் சென்றால் படத்துக்கு டிக்கெட் கிடைக்காது என்பதால் எம்.ஜி.ஆரைத் தொடர்பு கொண்ட ஏ.பி.நாக ராஜன், தனது மகன்களுக்காக இரண்டு டிக்கெட்களை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், ஏ.பி.நாகராஜனின் மகன்களுக்காக படத்தின் பிரின்ட்டையே எம்.ஜி.ஆர். அனுப்பிவைத்தார். படத்தை பார்த்துவிட்டு உடனடியாக அவற்றை பல்லாவரம் லட்சுமி திரையரங்கிற்கு அனுப்பி வைத்துவிடும்படி கூறினார். உருகிவிட்டார் ஏ.பி.நாகராஜன். இத்தனைக்கும் அவர் அதுவரை எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுத்தது இல்லை.
திமுகவின் முக்கிய பிரமுக ராக விளங்கிய மதுரை முத்து, ‘‘உலகம் சுற்றும் வாலிபன் வெளியானால் புடவை கட்டிக் கொள்கிறேன்’’ என்றுகூட சவால்விட்டார். படம் வெளியான பிறகு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அவருக்கு புடவைகளை பார்சலில் அனுப்பி வைத்தனர். இங்கே எம்.ஜி.ஆரின் பெருந்தன்மைக்கு ஒரு உதாரணம். பின்னர், அதே மதுரை முத்து அதிமுகவில் சேர்ந்தபோது அவரை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொண்டதோடு, மதுரை மாநகராட்சி மேயராகவும் ஆக்கினார்.
எதிரிகளையும் நண்பர்களாக்கி, சோதனை களை சாதனைகளாக மாற்றியவர் எம்.ஜி.ஆர்.!
- தொடரும்...
படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்
‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் அதுவரை வெளியான தமிழ் படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்தது. எம்.ஜி.ஆர். திரையுலகில் இருக்கும் வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தேவி திரையரங்கில் 1970-ல் வெளியான ‘மெக்கனாஸ் கோல்ட்’ (Mackenna’s Gold) ஆங்கிலப் படம்தான் அதுவரை இந்தியாவில் ஒரே திரையரங்கில் அதிக நாள் ஓடியதில் அதிக வசூல் செய்த படமாக இருந்தது. அந்த சாதனையையும் தேவி பாரடைஸ் அரங்கில் வெளியான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ முறியடித்தது.
No comments:
Post a Comment