Sunday, January 1, 2017

உங்கள் புத்தாண்டு முதலீட்டு தீர்மானத்தில் இதெல்லாம் இருக்கிறதா?

- சேனா சரவணன்

நாம் சேமிப்பதில் கில்லாடியாக இருக்கிறோம். ஆனால், அதனை முதலீடு செய்வதில் கில்லாடியா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பணத்தை பெறும் 4% மட்டுமே வருமானம் தரும் வங்கி சேமிப்பு கணக்கில் வைத்திருக்கிறோம். அல்லது வருமானம் எதுவும் தராத தங்கத்தில் மட்டுமே பணத்தை போட்டு வைத்திருக்கிறோம்.
இதனை தவிர்த்து நாம் சேமிக்கும் பணத்தை சரியாக முதலீடு செய்தால் புத்தாண்டு நமக்கு அதிக மகிழ்ச்சியை தருவதாக இருக்கும்.


புத்தாண்டு முதலீட்டு தீர்மானங்களுக்குள் போகும் முன், சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள சிறிய வித்தியாசத்தை பார்த்து விடுமோம். நீங்கள் உண்டியலில் பணத்தை போட்டு வைப்பது சேமிப்பு, ஆண்டு ஆரம்பத்தில் அதில் 1,000 ரூபாய் போட்டு வைத்திருந்தால் அது ஆண்டு கடைசியிலும் 1,000 ரூபாயாகவே இருக்கும். இதற்கு பதில் இந்த பணத்தை 10%  வருமானம் தரும் ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருந்தால் ஆண்டு இறுதியில் 1,000 ரூபாய் என்பது 1,100 ரூபாயாக அதிகரித்து இருக்கும். இது முதலீடு.
இனி புத்தாண்டு தீர்மானங்களை பார்ப்போம்.
1.வரவு - செலவு கணக்கு 

இது வரைக்கும் வரவு - செலவு கணக்கு எழுதவில்லை என்றால், புத்தாண்டில் ஆரம்பியுங்கள். இதற்கு 30 பக்க நோட்டு போதும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பக்கம். அதில் அன்றைய செலவுகள் மற்றும் வரவுகள் எதைவும் விடாமல் எழுதி வாருங்கள்,

மாதம் முடிந்ததும் ஒவ்வொரு பிரிவிலும் உதாரணத்துக்கு உணவு, சினிமா, செல் போன் ரீஜார்ஜ் என செலவு எவ்வளவு ஆகி இருக்கிறது என்று பாருங்கள். இதில், பலவற்றுக்கு தேவை இல்லாமல் அதிகம் செலவிட்டிருப்பது தெரியும். இதன் மூலம் அடுத்து வரும் மாதங்களில் தேவை இல்லாத செலவை குறைக்க முடியும்.

2. பட்ஜெட்
கட்டாயம் சம்பளம் வாங்கியதும் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள்.  பட்ஜெட் போடும் போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும்படி போது பார்த்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் தேவை இல்லாத செலவுகளை குறைக்க வழி பிறக்கும்.

3. கடன் மறு ஆய்வு
 வர வேண்டிய கடன், கொடுக்க வேண்டிய கடன், முடிக்க வேண்டிய கடன் உள்ளிட்ட விஷயங்களை அலசி ஆராயுங்கள்.  எந்தக் கடனுக்கு அதிக வட்டி (பர்சனல் லோன், கிரெடிட் கார்ட் கடன்) செல்கிறது என்று பார்த்து அதனை முதலில் அடைக்க திட்டமிடுங்கள்.

4. முதலீட்டுக்கு முன் இன்ஷூரன்ஸ்..
நாம் சம்பாதிப்பதே நம் குடும்பம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்பதற்காகதான். அதனால், வருமானம் ஈட்டும் நபராக இருந்தால் உங்களின் ஆண்டு சம்பளத்தை போல் குறைவான பிரீமியம், நிறைவான கவரேஜ் கொண்ட டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள். இதேபோல், மருத்துவச் செலவுக்கு கைகொடுக்கும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை உங்களின் ஓராண்டு சம்பளத் தொகைக்கு இணையாக எடுங்கள்

5. பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும் முதலீடு
உங்களின் முதலீடு, பணவீக்கத்தை தாண்டிய வருமானம் தரும்படி இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) 5 சதவிகிதம் என்றால், உங்கள் முதலீடு இதனை விட அதிகமாக வருமானம் தருவதாக இருக்க வேண்டும். அதாவது, வங்கிச் சேமிப்பில் ஆண்டுக்கு (4%), உண்டியலில் வைத்திருந்தால் நஷ்டம்தான்.

இதற்கு பதிலாக ஆர்.டி, எஃப்டி,மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீட்டை மேற்கொண்டால் பணவீக்கத்தை தாண்டி அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

6.தொடர் முதலீடு..
சிலர் வருட ஆரம்பத்தில் முதலீடு செய்கிற ஆர்வத்தில் இருப்பார்கள். சில மாதங்கள் முதலீடு செய்வார்கள். பிறகு விட்டு விடுவார்கள்.

இதற்கு பதில், சம்பளத்திலே இந்த முதலீட்டு தொகையை பிடிப்பது போல் அல்லது மாதா மாதம் வங்கி கணக்கிலிருந்து செல்வது போல் பார்த்துக் கொண்டால் இந்த பிரச்னை வராது.

7. கெட்ட பழக்க வழக்கங்களுக்கு நோ..!
சிலருக்கு விளையாட்டாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருக்கும். இதற்கு சாதாரணமாக தினம் ரூ.35 ரூபாய். மாதம் சுமார் ரூ. 1,000. ஆண்டுக்கு 12,000. பத்தாண்டுக்கு ரூ. 1,20,000. 30 ஆண்டுகளுக்கு ரூ. 3,60,000.
சிகரெட்டுக்கு செலவாகும் மாதம் ஆயிரம் ரூபாயை 10% வட்டி தரும் ஏதாவது ஒரு திட்டத்தில் போட்டு வந்தால் 30 வருடம் கழித்து உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 22.60 லடசம். அதாவது, 30 ஆண்டுகளில் சிகரெட் பிடிப்பவர் ரூ. 22.60 லட்சத்தை புகையாக விட்டிருக்கிறார்.

8. பொது வாகனங்களை அதிகம் பயன்படுத்துதல்
சிலருக்கு அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் 3,4 கி.மீ தூரம் இருக்கும். பஸ்சில் போனால் அதிகபட்சம் ரூ.15. ஆனால், இவர்கள் ஆட்டோவுக்கு தாராளமாக ரூ.50 செலவு செய்வார்கள்.

இவர்கள் ஆட்டோவுக்கு பதில் பொது வாகனமாக பேருந்தை பயன்படுத்தினால் தினம் மிச்சமாது ரூ.35. மாத சேமிப்பு கிட்டத்தட்ட ரூ. 1,000 என வைத்துக் கொள்வோம். இது 30 ஆண்டுகளுக்கு செல்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

30 ஆண்டுகளுக்கு 10% வட்டி வரும் முதலீட்டில் போட்டால் ரூ. 22.60 லட்சம் கிடைக்கும். இனி, இடை இடையேயாவது பொது வாகனத்தை பயன்படுத்துவீர்கள்தான்.

9. முதலீட்டில் பிரிவினை நல்லது..!
பொதுவாக தங்கம் விலை உயரும் போது பங்குச் சந்தை நன்றாக செயல்படாது. இதே போல், பங்குச் சந்தை சிறப்பாக செயல்படும் போது தங்கம் விலை இறங்கும்.

இதனை சாதாரணமானவர்களால் கணிப்பது கஷ்டம். எனவே, முதலீட்டை எஃப்டி,மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட்  என பிரித்து மேற்கொண்டால், ஒன்று வருமானம் கொடுக்கவில்லை என்றாலும் மற்றது கொடுக்கும். முதலுக்கு மோசம் இல்லாமல் இருப்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

10. பயணங்களுக்கு முன்கூட்டியே திட்டம்..!
பயணங்களுக்கு முன் கூட்டியே திட்டமிடுவது மூலம் ஓட்டல் கட்டணம், விமானக் கட்டணம் போன்றவற்றை கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.


(இந்தக் கட்டுரை 2016 ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி http://www.vikatan.com/personalfinance/article.php?aid=11752 வெளியானது.)

தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்!

 புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஒவ்வொரு நாளின் புதிய விடியலையும், அந்த நாளில் நாம் செய்யும் நான்கு விஷயங்கள் நம்மை மேலும்  உற்சாகப்படுத்தும். அவை தூங்கி எழுதல், குளித்தல், சூரிய ஒளி நம் மீது படுதல், காலை உணவு சாப்பிடுதல். இந்த நான்கு முறைகளையும் எப்படிச் செய்ய வேண்டும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விபரங்களைக் கூறுகிறார் கிராமியக் கலைப் பயிற்சியாளரான மாதேஸ்வரன்.
காலை
விடியற்காலையில் எழுதல்!
தூக்கம்தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கிய ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதனால் இரவு நேரங்களில் செல்போன், டிவி பயன்பாடுகளைக் குறைத்துக் கொண்டு, இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் காலை 5 - 6 மணிக்கெல்லாம் இயல்பாகவே தூக்கம் கலைந்துவிடும்.
விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் இயங்கச்செய்யும். அந்த நேரம் தவறாது யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என நமக்கு ஏதுவான எதாவது ஒரு பயிற்சியையாவது கட்டாயமாகச் செய்ய வேண்டும். இவைதான் நோய் நொடியில்லா, மருந்தில்லா ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம்.
குறிப்பாக இன்றைக்கு பலரின் இரவுப் பொழுதை தூக்கத்துக்கு பதிலாக சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளுமே கைப்பற்றுகின்றன. இதனால் தூக்க நேரம் குறைகிறது. பொதுவாக நம் தூக்க நேரம் குறைய நம் உடலில் வெப்பம் அதிகமாகும். அதனால் அடுத்தடுத்து உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே சீக்கிரம் படுத்து உறங்கி, சீக்கிரம் எழுவதே சிறந்தது.
காலை
குளிர்ந்த நீரில் குளியல்!
இன்றைக்கு பாத்ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர். பொதுவாக நம் உடல் வெப்பமாக இருப்பதால், உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு குளிப்பதும், தூய்மையான குளிர்ந்த நீரை குடித்து வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றுவதுமே வழிகள். மாறாக சூடான நீரால் குளிப்பதால் உடல் மேலும் சூடாவதுடன், சோம்பல் உணர்வும் ஏற்படும்.
அருவியில், ஆறு/குளத்தில், வீட்டில் குளிப்பது என மூன்று வகையான குளியல்கள் உள்ளன. அதில் நீர் நம்மை அடிக்கும் குளியலான அருவியில் குளிப்பதுதான் உடல் செல்களை நன்றாகச் செயல்படத்தூண்டும். அடுத்து நாம் நீரினை அடிக்கும் நீச்சல் செய்யும் முறையான ஆற்றில்/குளத்தில் குளிப்பதாலும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இவ்விரண்டு முறைகளையும் இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலானோரால் கடைபிடிப்பது கடினம் என்பதோடு, நகரப்பகுதியினரால் செய்யவும் முடியாது. அதனால் மூன்றாவதாக வீட்டில் குளிப்பதுதான் ஒரே தீர்வு.
குளிப்பதே உடல் சூட்டைத் தணிப்பதற்காக என்பதால், எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி தினமும் காலையில் 6 - 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும்.
காலை
உடல் மீது சூரிய ஒளிபடுதல்!
தலைக்கு குளித்து சரியாக தலையை துவட்டாமல் விட்டுவிட்டால் தலையில் நீர் கோர்த்து, தலை பாரம், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படலாம். அதனால் குளித்த பின்னர் பத்து நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.
இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நம்மிள் பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான். காலையில் 6 - 8 மணி நேரத்திற்குள், 3 - 10 நிமிடங்கள் வரை மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும். உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும். தோல் நோய்கள் வரவு கட்டுப்படும்.
தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும் என்பதற்குத்தான், சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.
காலை
காலை உணவு சாப்பிடுதல்!
ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான ஆற்றலில், அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான். மாறுபட்ட உணவு முறைகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் காலை நேரம் பலருக்கும் பசி எடுப்பதில்லை. பலரும் தெரிந்தே காலை உணவைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகிறது.
காலை நேரம் சிறுதானிய உணவுகள், அதிகம் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் சாப்பிடுவதே சிறந்தது.

கன்னி உரைக்கு எப்படித் தயாரானார் சசிகலா?! -கார்டன் ஒத்திகையின் 'கலகல' பின்னணி

 

அ.தி.மு.க பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு, சசிகலா நிகழ்த்திய முதல் உரையை ஆச்சரியத்தோடு கவனிக்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். ' பொதுக்குழுவில் பேச வேண்டிய பேச்சை, தலைமைக் கழகத்தில் பேசினார். அவரது பேச்சு இந்தளவுக்கு வெற்றி பெறுவதற்குக் காரணமே ம.நடராசன்தான்' என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில்.
சென்னை, வானகரத்தில் கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், தலைமைப் பதவிக்கு சசிகலா பெயரை முன்மொழிந்தனர்

 முதலமைச்சர்   ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள். இதையடுத்து, இன்று நண்பகல் 12.20 மணியளவில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டு, விரிவான உரை நிகழ்த்தினார் சசிகலா. 'தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி' என உரையைத் தொடங்கினார். முதல்வர் உடல்நலனில் ஏற்பட்ட பாதிப்புகள்; காப்பாற்ற முடியாமல் போனது; அவருடன் 33 ஆண்டுகளாக வலம் வந்தது; கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டது என அனைத்தையும் உருக்கமாகவும் கண்ணீர் வடியும் கண்களுடன் பேசி முடித்தார் சசிகலா. இதுவரையில் ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்தவர், மைக் முன்  உரையாற்றியது தொண்டர்கள் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
"பொதுக்குழுவில் பேசுவதற்காக தயாரித்திருந்த குறிப்புகளைத்தான் தலைமைக் கழகத்தில் பேசினார் சசிகலா. ஆனால், அவருக்காக உருவான முழு உரையை அவர் வாசிக்கவில்லை. அந்த உரையின் இறுதி வரிகளில், ' அம்மா இல்லாத இந்தக் காலகட்டத்தில், நம்மைச் சுற்றி எப்படிப்பட்ட சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருக்கிறது என்பதை கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்' என முடிப்பதாகத்தான் இருந்தது. பா.ஜ.க மற்றும் தி.மு.கவை குறிவைக்கும் வகையில் இந்த வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இவற்றை கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார் சசிகலா" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்,
"தொண்டர்கள் மத்தியில் அம்மா இல்லாத குறையைப் போக்கும் வகையில் பேசுவது என முடிவு செய்யப்பட்ட பிறகு, பேச்சுக்கான குறிப்புகளை தயாரிக்கும் பணிகள் துவங்கின. நடராசன் வழிகாட்ட மூன்று பேர் கொண்ட குழுதான் பேச்சுக்கான உரையைத் தயாரித்தது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய கழகத்தை ஜெயலலிதா எப்படிக் கட்டிக் காப்பாற்றினார் என்பதில் தொடங்கி, என்ன செய்யப் போகிறோம் என்பது வரையில் குறிப்புகள் தயாரானது. இதன்பின்னர், கார்டனில் ஓர் அறையில் சிறிய மைக் ஒன்றை அமைத்து, பேசிப் பார்த்தார். பேச்சின் ஏற்ற இறக்கங்களை சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி.தினகரன் சொல்லிக் கொடுத்தார். எந்த இடத்தில் எந்த மாதிரிப் பேச வேண்டும் என்பதை விளக்கினார். இதில் திருப்தியடைந்த பிறகு, உடை விஷயத்தில் கவனம் செலுத்தினார். இதுவரையில், கோவில்களுக்குச் செல்லும்போது மட்டும் பட்டுச் சேலை உடுத்திக் கொண்டு செல்வார். வேறு எந்த ஆடம்பரங்களும் இருக்காது. ஆனால், கட்சித் தலைவர் என்ற தோற்றத்தைக் கொண்டு வருவதற்காக, கறுப்பு கலர் வாட்ச், தேர்ந்த உடை என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்தார் தினகரனின் மனைவி அனுராதா. திட்டமிட்டபடியே பொதுச் செயலாளராக உருவாகிவிட்டார் சசிகலா. இந்த உரையில் மிஸ்ஸான ஒரே விஷயம், ஜெயலலிதாவைப் போலச் சொல்வதற்கு ஒரு குட்டிக் கதையைத் தயாரித்து வைத்திருந்தார். கடைசி நேரத்தில் கதைக்கு கத்திரி போட்டுவிட்டார்கள்" என விவரித்து முடித்தார்.
'எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம். கோடான கோடி கழக கண்மணிக்களுக்காகவும் நான் மீதம் உள்ள வாழ்வை கழிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நம்மை பின்பற்றும் அளவுக்கு கழகத்தை வழிநடத்துவோம்' என அரசியல் கட்சிகளுக்கும் சேர்த்தே கருத்தைச் சொல்லிவிட்டு, கார்டனுக்கு விரைந்தார் சசிகலா.
பொதுவாக, நிழல்கள் எப்போதுமே பேசுவதில்லை. அவைகள் பேச ஆரம்பித்தால் ராஜ்ஜியங்கள் நடுங்கும் என்பார்கள். தற்போது அண்ணா தி.மு.கவின் ராஜ்ஜியத்திற்குள் நிழலாக இருந்த சசிகலா நிஜத்திற்குள் வந்திருக்கிறார். கட்சி மற்றும் ஆட்சியின் எதிர்காலத்தை போகப் போக பார்ப்போம்!

புதிதாய் பிறப்போம்... புத்தாண்டுக்கான 10 விதிகள்! #FeelFreshThisNewYear


ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம்மில் பலரும் தவறாமல் செய்கிற விஷயம் ஒன்று உண்டு. புதுப் புது விஷயங்களைச் செய்யப் போவதாகத் திட்டமிடுவோம்; அதற்காக உறுதிமொழி எடுப்போம் அல்லது கெட்ட (நம் உடலையும் மனதையும் பாதிக்கிற) விஷயங்களை விடப் போவதாகத் திட்டமிடுவோம். ஆரம்பத்தில் இவற்றைக் கடைப்பிடித்தாலும், பலருக்கும் அது நிறைவேற்ற முடியாத செயல். பெரும்பாலானவர்களால், ஜனவரியில் சுறுசுறுப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிற அந்த விஷயங்கள், மாதத்தின் பாதியிலே நின்று போகும். என்னதான் செய்யலாம்? இந்த ஆண்டாவது நாம் ஏற்கும் உறுதிமொழிகளுக்கு உயிர் கொடுப்போம் எனப் புத்தாண்டுக்கான உறுதியெடுப்போம். சரி, இந்தப் புத்தாண்டை அற்புதமாக மாற்றச் சில வழிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைப்பிடிக்க உறுதி ஏற்போமா?
                

எடை குறைக்கப்போறேன்!

உள்ளுக்குள் ஒரு நக்கல் சிரிப்போடு தொடங்கும் உறுதிமொழி இது. பலருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால், செய்து முடிப்பதோ கடினம். புத்தாண்டு டின்னரிலேயே இந்த உறுதிமொழியைக் காணாமல் போகச் செய்யக் கூடாது என்பதை முதல் உறுதிமொழியாக எடுத்துவிட்டு, அடுத்த உறுதிமொழிக்குச் செல்லுங்கள். `ஜனவரியில் 1 அல்லது 2 கிலோ எடை குறைப்பேன்’ என முடிவுசெய்து, அதை அப்படியே டிசம்பர் வரை நீட்டிச் செல்லுங்கள். நீங்கள் 10-12 கிலோவாவது எடை குறைத்திருத்தால், அந்த ஆண்டுக்கான வெற்றியை முழுமையாகக் கொண்டாடுங்கள்.
  

டிராவல் ப்ளான் பண்ணுங்க!

திட்டமிடாமல் செய்தால், எந்த வேலையும் சொதப்பும். பிளான் பண்ணிச் செய்தால் வொர்க்அவுட் ஆகிற விஷயம் இது. மாதத்துக்கு ஒருமுறையாவது இயற்கையை ரசிக்க காடோ, மலையோ ஏறி இறங்குங்கள். ஸ்ட்ரெஸ்ஸை மறந்து, கவலைகளை கழற்றிவிட்டு வர வாய்ப்பாக அமையட்டும். சில சமயங்களில் திட்டமிடாமல், சூழலே அமைத்துத் தரும் பயணத்தையும் முழுமையாக வரவேற்றுப் புறப்படுங்கள். உங்களைப் புத்துணர்வாக்க பயணம் முக்கியம்.

ஸ்டீம் இன்ஜின் உடலுக்கும் கேடு... சூழலுக்கும் கேடு!

பிரேக் என்றால் ஜூஸ், சமோசா, வடை எனச் சாப்பிடுவதுகூட ஓ.கேதான். ஆனால், புகை மட்டும் வேண்டாம் பாஸ். அடிக்கடி புகைவிட்டுக் கொண்டே இருக்க, நீங்கள் என்ன ஸ்டீம் இன்ஜினா? மகள், மகன் மீது சத்தியம் வைப்பதெல்லாம் பழைய கதை. உங்கள் குடும்பத்தைப் பார்க்க நீங்கள் இருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, முயற்சி செய்யுங்கள். நிச்சயம் வெற்றியடைய முடியும். புகை நமக்கு எப்போதுமே பகைதான்.
                               

தள்ளிப்போடாதே... எதையும்!

வேலையில் கெட்ட பெயர் வாங்குவதற்கு இது ஒரு முக்கிய காரணம். அதேபோல் உறவுகளில் சிக்கல் ஏற்படுவதும் இதனால்தான். மார்க் ட்வெயின் சொன்ன பொன்மொழி இது.
`உயிருடன் இருக்கும் தவளையை காலையிலே கடித்துச் சாப்பிட்டுவிடுங்கள். இல்லையெனில், அது நாள் முழுதும் பக்கத்திலேயே நின்றுகொண்டு உங்களின் அருவருப்பு உணர்வை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கும்.’ இது நாம் செய்யவேண்டிய வேலைகளுக்கும் பொருந்தக் கூடியதுதான். வேலையைத் தள்ளிப் போடாமல், அப்போதே செய்து முடிப்பது நல்லது.

ஸ்மார்ட் வொர்க்கராக மாறலாமே!

எல்லா விஷயங்களையும் நாம் மட்டுமே தெரிந்துவைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. யார் யாருக்கு என்னென்ன தெரியும் என்பதைத் தெரிந்துகொண்டாலே போதும், அவரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதுவும் ஸ்மார்ட் வொர்க்தான்.
               

ஹார்டு வொர்க்கராக இவ்வளவே போதும்!

ஒவ்வொரு நாளும் பத்துப் பக்கங்களை மட்டுமே படிக்கும் பழக்கம் உள்ளவர், ஒருநாளைக்குக் கூடுதலாக நான்கு பக்கம் படித்தாலுமே அவர் ஹார்டு வொர்க்கர்தான். ஆனால், நாம் பெரும்பாலும் `மாங்கு மாங்கு’ என்று வேலை செய்பவனையே ஹார்டு வொர்க்கர் என நினைத்துக் கொள்கிறோம். இனி... ஹார்டு வொர்க்கராக மாறுங்கள். இதற்கு, கொஞ்சம் மெனக்கெடுதலும் நிறைய முயற்சி இருந்தாலே போதுமானது. கொஞ்சம் மாற்றமே ஹார்டு வொர்க்கராக மாற்றும்.

மனம் பேசும்... உடல் கெஞ்சும்... சமாளிப்பது எப்படி?

`காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும்’ என மனம் கூச்சல்போடும். `நிறைய வேலை இருக்கு’ என்று ரீமைண்டர் அடித்துக்கொண்டே இருக்கும். மீறியும் உடலானது, `நைட்டு லேட்டாத்தானே படுத்தோம்... கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கலாமே’ எனக் கெஞ்சும். இந்த இரண்டின் மொழியையும் புரிந்து, தெளிந்து செயல்படுவதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் பயணமும் தொடக்கமும். மனதையும் உடலையும் கட்டுக்குள் வையுங்கள். இரண்டும் உடன்படுகிற வாழ்வியலை மேற்கொள்ளுங்கள்.

கற்கவேண்டிய 'லைஃப் ஸ்கில்'!

ஆண், பெண் இருவருக்கும் கைகொடுக்கும் திறன் இது. `யார் சமையலில் சூப்பர்?’ எனப் போட்டி போடவேண்டிய விஷயமும் இதுதான். நூடுல்ஸைத் தாண்டி நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. பிரியாணி செய்ய முயன்று, அது தக்காளி சாதமாக மாறினாலும் சரி... டோன்ட் கிவ் அப். அடுத்த முறை அது பிரியாணியாக மாறும் வரை முயல்வோம். சமையலை நேசிப்போம். அதிலுள்ள சிரமங்கள் புரிந்தால் ஃபுட் வேஸ்ட் தடுக்கப்படும்.
                         

அதிகமாகக் கவனி... அளவுடன் பேசு!

ஒருவரைப் பார்க்கும்போது இவர் நமக்கு சரியாக வருவாரா, மாட்டாரா என யூகிப்பது கொஞ்சம் கடினம்தான். ஆனால், ஒருவர் பேசுவதை வைத்து, அதை நிச்சயம் யூகிக்க முடியும். முடிந்த வரை அதிகமாகக் கவனிப்போம். கவனிப்பது ஒரு தியானம். `மங்க்கி மைண்டு’ என்று சொல்வார்கள். பத்து சிந்தனையில் பதினொன்றாவதாக ஓர் எண்ணம் தோன்றும். இது அனைத்தையும் கவனிப்போம். இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். இதற்கு நேரமோ, இடமோ தேவைப்படாது. வாழ்க்கையின் அங்கம்தான் கவனித்தல். அது உங்களுடன் தொடர்ந்துகொண்டே இருக்கும். கவனித்தலைப் பழகினாலே பேச்சு அளவானதாக மாறிவிடும். தேவையில்லாத இடங்களில் பேசுவதை நிறுத்தினாலே, பெரும்பாலான உறவுச் சிக்கல்கள் தவிர்க்கப்படும்.

உன்னை மாற்றும் சுவாசமே!

இந்தக் கேள்விக்கு பலருக்கும் விடை தெரிவது கஷ்டம்தான். எதிர்பார்க்க முடியாத, கற்பனை செய்ய முடியாத மாற்றங்களைத் தந்து, நம் உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க ஓர் எளிய பயிற்சியால் முடியும். அதுதான் மூச்சுப் பயிற்சி. மூச்சைக் கவனிக்கும்போது, கவனிக்கும் திறன் ஓங்கும். மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்போது உடல்நலத்துடன் உணர்வுகளின் நலமும் கூடும். உங்களை நீங்கள் ஆள முடியும். பிரச்னையை எதிர்கொள்ளும் திறன் கிடைக்கும். சின்னச் சின்ன பிரச்னைகள் தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ள தியானத்துக்கும் மூச்சுப் பயிற்சிக்கும் சரி சமமான பங்கு உண்டு. உங்களை மாற்றும் சுவாசத்தை சீர் செய்வோம். அதற்கு உதவும் தியானமும் மூச்சுப் பயிற்சியும் வாழ்க்கையின் வழிமுறைகள்.


- ப்ரீத்தி
 அன்றைக்கும்... இன்றைக்கும்... என்றைக்குமான புத்தாண்டு பொன்மொழிகள் 10.

ம் எதிரே புதிதாக ஓர் ஆண்டு! ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியன்று, புத்தாண்டுக் கொண்டாட்டம், பெரும்பாலானோர் எடுக்கும் தீர்மானங்கள், தலைவர்கள்-பிரபலங்கள் அருளும் வாழ்த்துச் செய்திகளைப்போல பொன்மொழிகளுக்கும் பிரத்தியேகமான ஓர் இடம் உண்டு. கடைப்பிடிக்க முடிகிறதோ, இல்லையோ... பல பொன்மொழிகள் நம்மைச் சிந்திக்கவைப்பவை. உலக அளவில் சில பிரபலங்கள் புத்தாண்டை ஒட்டி, வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சொன்ன பொன்மொழிகள் இங்கே...
``இந்த வருடத்தில் எல்லா நாளுமே சிறந்த நாளே; இதை உங்கள் இதயத்தில் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்!’’
- ரால்ஃப் வால்டோ எமர்சன் (அமெரிக்க கவிஞர், கட்டுரையாளர்)
***
``ஒரு புத்தகத்தின் அத்தியாயம் எழுதக் காத்திருப்பதைப்போல், புது வருடம் நம் முன்னால் நின்றுகொண்டிருக்கிறது. இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலமாக, அந்தக் கதையை எழுத நாம் உதவுவோம்.’’
- மெலடி பீட்டி (அமெரிக்க எழுத்தாளர்)
***
``என் புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் கேட்டால், அது நான் யார் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதற்காகத்தான் இருக்கும்.’’
-  சிரில் குஸேக் (ஐரிஷ் நடிகர்).
***
``புத்தாண்டு தினம் என்பது ஒவ்வொரு மனிதனின் பிறந்தநாள்.’’
- சார்லஸ் லேம்ப் ( இங்கிலாந்து எழுத்தாளர்)
***
``புத்தாண்டை வரவேற்போம்; அதை உரிமையோடு பெறுவதற்கு நமக்கு மற்றொரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.’’
- ஓபரா வின்ஃப்ரே (அமெரிக்க நடிகை)
***
``தேதி கேலண்டரின் தாளைக் கிழிக்கும் ஒவ்வொரு முறையும், புதிய யோசனை மற்றும் முன்னேற்றத்துக்கான ஒரு புதிய இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்!’’
- சார்லஸ் எஃப். கேட்டரிங் (அமெரிக்க தொழிலதிபர்)
***
``உங்கள் குற்றங்களுடன் போரிடுங்கள்; அக்கம்பக்கத்தாருடன் அமைதியைப் பேணுங்கள்; பிறக்கும் ஒவ்வோர் ஆண்டும் உங்களைச் சிறந்த மனிதனாக அடையாளம் காணச் செய்யுங்கள்!’’
- பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் (நவீன அமெரிக்காவை வடிவமைத்தவர்களில் ஒருவர், விஞ்ஞானி).
***
``அன்றன்றைய நாளுக்கான தீர்மானங்களைத்தான் நான் யோசிக்கிறேனே தவிர, ஆண்டுகளுக்காக அல்ல.’’
- ஹென்றி ஸ்பென்சர் மூர் (இங்கிலாந்து சிற்பி மற்றும் ஓவியர்).
***
``நாம் எல்லோருமே ஒவ்வொரு வருடமும் வேறொரு ஆளாக இருக்கிறோம்.  நம் வாழ்க்கை முழுக்க ஒரே மாதிரியான ஆளாக நாம் இருக்க முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன்.’’
- ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (இயக்குநர்).
***
``வருகிற ஆண்டிலும் நீங்கள் தவறுகள் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏனென்றால், நீங்கள் தவறுகள் செய்த பிறகுதான் புதிய விஷயங்களைச் செய்கிறீர்கள்;  புதியவற்றை முயற்சிக்கிறீர்கள்; கற்றுக்கொள்கிறீர்கள்; அதற்காக வாழ்கிறீர்கள்; உங்களை முன்னுக்குக்கொண்டு வருகிறீர்கள்; உங்களை நீங்களே மாற்றிக்கொள்கிறீர்கள்; உங்கள் உலகத்தையும் மாற்றுகிறீர்கள். இதற்கு முன்னர் செய்யாதவற்றையெல்லாம் செய்கிறீர்கள். மிக முக்கியமாக, நீங்கள் ஏதோ செய்துகொண்டு இருக்கிறீர்கள்.’’

- நெயில் கெய்மேன் (இங்கிலாந்து எழுத்தாளர்).
***
தொகுப்பு: பாலு சத்யா

தனது கன்னிப் பேச்சில் சசிகலா சொன்னதும்... சொல்லாததும்!

 சசிகலா

.தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், சசிகலா கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதல் முறையாக உரை நிகழ்த்தினார். அவரது உரை, வெளியில் கூடி நின்ற தொண்டர்களுக்கும் கேட்கும் வகையில், அகன்ற எல்.இ.டி திரையில் ஒளிபரப்பப்பட்டது.

சசிகலா தனது உரையின்போது, "உலகமே வியக்கிற வெற்றிகளால், அ.தி.மு.க-வை வழி நடத்திய நம் அம்மா, இப்போது நம்மிடம் இல்லாத நிலையில், இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், கழகம்தான் தமிழகத்தை ஆளும் என, நம் அம்மா முன் வைத்துச் சென்றிருக்கிற நம்பிக்கையைக் காப்பதற்காக கூடி இருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

"ஜெயலலிதாவின் வழியில் கழகப் பணியாற்றிடுவேன். ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு நான் அம்மாவோடு சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கும் மேலாக, எத்தனையோ கூட்டங்களில் அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று, மேடைக்கு வந்து உங்களிடையே பேசுகிற ஒரு சூழல் எனக்கு உருவாகி இருக்கிறது" என்று சொன்னதன் மூலம் இவர், ஜெயலலிதாவுடன் பல கூட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் மிக்கவர் என்பதை பதிவு செய்ய விழைந்துள்ளார்.

'தன்னை நம்பி வந்தவர்களை என்றுமே கைவிடாத நம் அம்மா' என்று சசிகலா கூறியது, யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அவருக்கு சரியாகப் பொருந்தும்.  "அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றும் அளவுக்கு உடல் நலம் தேறிவந்த நிலையில்", என்று மீண்டும் ஒருமுறை அப்போலோ சொன்ன அதே பொய்யான தகவலை தலைமைக் கழகத்திலும் பதிவு செய்துள்ளார் சசிகலா. எவ்வளவோ முயன்றபோதிலும், இறைவன், ஜெயலலிதாவின் இதயத்துடிப்பை நிறுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்.
"தேவதை இல்லாத அரசியல் மாடம், களை இழந்து நிற்கிறது. எனக்கோ, அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை. சில நிமிடங்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள்; சில முறை மட்டுமே அம்மாவைப் பார்த்தவர்கள்; சில விநாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்கள்; அவர்களே இன்று அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்களை அம்மாவுடன் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு எப்படி இருக்கும் என்பதை, வார்த்தைகளால் விவரிக்க முடியாது" என்று சூசகமாகக் குறிப்பிட்டு, தனக்குத் தான் மிகப்பெரிய இழப்பு மற்றவர்களைக் காட்டிலும், தானே கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வரத் தகுதியானவர் என்பதை சசிகலா சொல்லாமல் சொல்லியுள்ளாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
அவரோடு இருந்த காலமெல்லாம், ``அக்கா, கோட்டைக்கு கிளம்பிட்டீங்களா; அக்கா, மதிய சாப்பாட்டிற்கு என்ன
வேண்டும்'' என அனுதினமும் அம்மாவைப் பற்றிய சிந்திப்புகளிலேயே தன் வாழ்நாட்களை செலவழித்தவள் என்று கூறும் சசிகலா, பின்னர், மக்களைப் பற்றி ஜெயலலிதா சிந்தித்தபோது, ஜெயலலிதாவைவும், கழகத்தையும் பற்றியே தான் சிந்தித்ததாக  தெரிவித்துள்ளார்.

தனக்கு 62 வயதாகிறது என்றும், தனது வாழ்நாள் வரை, இந்த இயக்கத்திற்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்து, அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்பதை மறைமுகமாக உணர்த்தியுள்ளார்."அவரை விட்டு நான் பிரிந்திருந்த நாட்கள் மிக மிகக் குறைவு. அதை நாட்கள் என்று சொல்வதை விட, அவருடைய கம்பீரக் குரலை நான் கேட்காத நேரம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவும், கழகமுமே உலகம் என்று வாழ்ந்த என்னை, உங்களின் அன்புக் கட்டளை, எஞ்சி இருக்கும் காலத்தை, அம்மா கட்டிக் காத்த கழகத்திற்காகவும், கோடான கோடி கழகக் கண்மணிகளுக்காகவும் நான் வாழ வேண்டும் என்கிற உறுதியை எனக்குள் எடுக்க வைத்திருக்கிறது" என்று தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். சந்தடி சாக்கில், எதற்காக கார்டனை விட்டு, ஜெயலலிதா அவரை வெளியேற்றினார் என்பதை தனக்கு சாதகமாக மறைத்து விட்டார். கட்சியை விட்டு நீக்கியது, சசிகலாவின் உறவினர்கள் அனைவரையும் ஜெயலலிதா இருந்தவரை கார்டனில் நுழைய அனுமதிக்காதது போன்ற தகவல்களை கட்சியின் கீழ்மட்டத் தொண்டர்களும், தமிழக மக்களும் மறந்து விடுவார்கள் என்று கருதிவிட்டார் போலும்.
இடையிடையே தழுதழுத்த குரலில் பேசி, ஜெயலலிதாவின் மறைவு, தனக்கு மிகவும் வருத்தம் என்பதை ஊடகங்கள் மூலம் மக்கள் மத்தியில் பதிய வைக்க எத்தனித்துள்ளார் சசிகலா. ஆனால், அனைத்தையும் மக்கள் அங்குலம், அங்குலமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் அறிவாரா?
தமிழக மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் ஆசை தொடர்ந்து நிறைவேறும் என்றும் கூறும் அதே வேளையில், தனது குடும்ப உறுப்பினர்கள், ஆட்சி அதிகாரத்தில் தலையிட மாட்டார்கள் என்பதை தெரிவிக்க மறந்தது ஏன்?

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில், இந்திராவுக்குப் பின்னர், தனி ஒரு ஆளாக நின்று போராடி, பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த, ஜெயலலிதாவின் வழியில், தானும் அ.தி.மு.க-வின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன் என்று தெரிவித்ததன் மூலம், ஜெயலலிதாவுக்கு உள்ள துணிவு தனக்கும் உள்ளது என்று கூறுகிறார்.

பெரியாரின் தன்மானம், அண்ணாவின் இனமானம், எம்.ஜி.ஆரின் பொன்மனம், இவை யாவும் ஒருங்கே பெற்ற ஜெயலலிதாவின் போர்க் குணத்திற்கு ஈடு இணை ஆகிட ஒருவராலும் முடியாது என்றாலும், அவரது பாதத் தடங்களை, வேதமெனப் பின்பற்றி, இந்த இயக்கத்தை, மக்களின் அரசாக, அவர் காட்டிய வழியில் செயல்படும் என்று சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா வழிநடத்திய ராணுவ கட்டுப்பாட்டோடு, இயக்கத்திற்காக உழைக்கும் தொண்டர்களுக்கு உயர்வு அளித்து அழகு பார்க்க, எந்த
அளவுகோலை அவர்  கொண்டிருந்தாரோ அதேபோல், இம்மி கூட விலகாமல் இந்த இயக்கத்தை கொண்டு செலுத்துவோம் என்று கூறியுள்ளார். ஆனால், அந்த தொண்டனை தான் ஜெயலலலிதா உடல் அருகே கூட விடாமல், அரண் அமைத்து நின்றது மன்னார்குடி குடும்பம்!

ஜெயலலிதாவின் விருப்பப்படி, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க சார்பில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். ஒன்றரை கோடி பிள்ளைகளை (தொண்டர்களை) ஜெயலலிதா தன்னிடத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்திருப்பதாகவே உணர்கிறேன் என சசிகலா பேசியது, ஜெயலலிதாவுக்குப் பின்னர், கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க, தயாராக இருந்தது போன்ற தோற்றத்தையே ஏற்படுத்தி உள்ளது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

எப்படியோ, மருத்துவமனையில் 75 நாட்கள் என்ன நடந்தது? என்றே தெரியாத நிலையில், அப்போலோ மருத்துவமனைக்கும், குறிப்பிட்ட சிலருக்குமே உண்மை தெரிந்திருந்த நிலையில், அதேபோன்று, பொதுக்குழு, பொறுப்பேற்பு, சசிகலாவின் முதல் உரை என அனைத்துமே அரங்கேறியுள்ளது.

போதை மட்டும்தானா புத்தாண்டு?! -அதிர்ச்சியளிக்கும் 10 உண்மைகள்

புத்தாண்டை குடி, போதை என எவ்வித பழக்கமும் இல்லாமல், விழிப்புணர்வுடன் மகிழ்வாய் இன்புற வேண்டும் என ஆலோசனை கூறுகிறார் சமூக ஆர்வலர் ஜெனிபர் வில்சன்.

1. புத்தாண்டை வரவேற்க உலகம் முழுவதும் மக்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், யாரும் விரும்பாத கேள்வியாகத்தான் இது இருக்க முடியும், ஆனால், உண்மை என்னவென்றால், ஆண்டின் எந்த நாளை விடவும் புத்தாண்டு தினத்தில்தான் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிகம் என்பதும், அன்றைய தினம்தான் அதிகமான விபத்துகள் நடக்கின்றன என்பதும் நாம் சிந்திக்க வேண்டிய செய்தி.
2. “ஸ்வீட் எடு.. கொண்டாடு” என்கிற காலம் போய், “மச்சி.. ஓபன் தி பாட்டில்” எனக் காலம் அடியோடு மாறிவிட்டது. அதுவும், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றால் மதுவுக்குத்தான் முக்கிய இடம். முன்னிரவில் ஆரம்பிக்கும் மது விருந்துகள், பல இடங்களில் விடிய, விடிய தொடருகிறது. மதுவில் ஊறித்திளைத்துவிட்டு, “ஸ்டெடியாதான்டா இருக்கேன்” என வசனமும் பேசி விட்டு, தள்ளாடிக் கொண்டே  நடந்து போய், வாகனம் ஓட்டினால் என்ன நடக்கும்? தறிகெட்டு ஓட்டி, எங்கேயாவது இடித்துக் கொள்வதும், யாரையேனும் இடித்துத்
தள்ளுவதும்தான் நடக்கும். மொத்தத்தில் புத்தாண்டு இரவில், தேவையில்லாமல் வெளியில் செல்வதன் மூலம் ஆபத்தை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை.

3. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவிகித சாலை விபத்துகள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால்தான் நடப்பதாக கூறப்படுகிறது. புள்ளி விவரங்களில் பதிவாகாத இன்னும் எத்தனையோ விபத்துகளும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

4. வாகனம் ஓட்டி விபத்துகளை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலும் நீண்டுகொண்டே போகிறது. மது குடித்து கொண்டாடுவது என முடிவு செய்துவிட்டால், ஓர் ஓட்டுனரை ஏற்பாடு செய்து கொள்வதே நல்லது. இல்லையென்றால், விபத்து ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் 100 சதவிகிதம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

5. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில், 2014-ம் ஆண்டில் இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருந்தது. அந்த ஆண்டில் மட்டும், தமிழகத்தில் 15 ஆயிரம் பேர்  உயிரிழந்திருக்கிறார்கள். பெரு நகரங்கள் என்று பார்க்கும் போது, டெல்லிக்கு அடுத்தபடியாக சென்னை 1,046 உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரை, புள்ளி விவரத்தில் இடம் பெற்ற 67 ஆயிரம் விபத்துகளில் மொத்தம் 587 விபத்துகள்தான் குடித்துவிட்டு
வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? விபத்து குறித்த முறையான தகவல்களை பதிவு செய்யத் தவறியதுதான் காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாது என்ற காரணத்தைக் காட்டி, குடும்பத்தினருடன் சமரசம் செய்து, காவல்துறையினரே போதை மரணங்களை மறைக்கின்றனர் என்கிறார்கள். அரசாங்கமே மது விற்பனை செய்வதுதான் இதற்குக் காரணம் என்பதை சொல்லவும் வேண்டுமா?
6. வேதனையின் உச்சம் என்னவென்றால், கடந்த 2 வருடங்களாகத்தான், விபத்துகளுக்கான காரணத்தின் அடிப்படையில் புள்ளிவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அது முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பது வேறு. பிரச்சனை தெளிவாக தெரிந்தால் மட்டுமே, அதைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்க முடியும்.

7. 2016 புத்தாண்டு தினத்தன்று சென்னையில் மட்டும் 900 சாலை விபத்துகள் ஏற்பட்டது என்கிறது காவல்துறை புள்ளி விவரம். இந்த விபத்துகளில் 4 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 600 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதனால்தான், மதுவால் கிடைக்கும் மகிழ்ச்சி முக்கியமா? இல்லை… ஆண்டின் முதல்நாளே மருத்துவமனைக்கு செல்ல ஆசையா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டி இருக்கிறது.

8. அதே சமயம், புத்தாண்டு என்பதால், மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து விடாதீர்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதாவது, உடல் நலக்குறைவு என்று உணர்ந்த பின்னரும், ஆண்டின் முதல் நாளே மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா? எனப் போகாமல் தவிர்க்காதீர்கள் என்கிறது அந்த ஆய்வு.

9. சில வருடங்களுக்கு முன்பு,  டேவிட் ஃபிலிப் என்ற ஆய்வாளர் 1979 முதல் 2004 வரை நிகழ்ந்த 5 கோடியே 70 லட்சம் பேரின் மரணம் குறித்து ஆய்வு செய்தார்.  மரணம் ஏற்பட்டதற்கான காரணம், மரணமடைந்த காலகட்டம் என பல்வேறு காரணிகளை ஆராய்ந்து பார்த்ததில், வேறு எந்த கால கட்டத்தை விடவும், புத்தாண்டு தினத்தன்றுதான் நிறைய மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக
கண்டுபிடித்தார். மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒருபுறம் என்றால், மற்றொரு புறம், உடல்நலக் குறைவு என உணர்ந்த பின்னரும், புத்தாண்டும் அதுவுமாக, மருத்துவமனைக்கு போக வேண்டுமா என போகாமல் இருந்திருக்கிறார்களாம்.

10. புத்தாண்டுக் கொண்டாட்டங்களைப் பொறுத்தவரை, நமது உடல்நலன் குறித்த அக்கறையோடு இருப்பதே நல்லது. கடற்கரை, கேளிக்கை விடுதிகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், நண்பர்களின் இல்லம் என எங்கு புத்தாண்டைக் கொண்டாடினாலும்,

மது அருந்தினால், வேறு ஒருவர் துணையுடன் வீட்டிற்குச் செல்வதே நலம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பிடிபடுவோர் மீது, காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுத்து, வண்டிகளை பறிமுதல் செய்வதுடன், மாற்று வாகனங்கள்

மூலம் அவர்களை வீட்டுக்கு அனுப்புவதே சரியாக இருக்கும். கால் டாக்சி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொண்டால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க வேண்டுமா?
இல்லையா...நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
 -ஜெனிபர் வில்சன்

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...