Tuesday, January 31, 2017

காமராஜர் பல்கலை நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் : துணை வேந்தர், பதிவாளர், தேர்வு அதிகாரி இல்லை

மதுரை காமராஜர் பல்கலையில், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியின் பதவிக்காலம் முடியும் நிலையில், பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. அதில், யாரை நியமிப்பது என்பதில், பெரும் சிக்கல் ஏற்பட்டது. தேடல் குழுவில் உறுப்பினராக இடம்பெற்ற, பேராசிரியர் ராமசாமி தரப்பில், குறிப்பிட்ட சில நபர்களை, துணை வேந்தர் பதவியில் நியமிக்க வேண்டும் என, நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.அதனால், தேடல் குழுவில் முரண்பாடுகள் ஏற்பட்டு, பேராசிரியர் ராமசாமி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

இதையடுத்து, புதிய உறுப்பினர் கொண்ட கமிட்டி அமைத்து, துணை வேந்தர் தேர்வு பணி மீண்டும் தீவிரமாகியுள்ளது. இந்த முறை, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி மட்டுமே, தகுதியான, திறமையான கல்வியாளரை தேர்வு செய்ய, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பல்கலை நிர்வாகத்தை நடத்தும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விஜயனின் பதவிக் காலம், பிப்., 8ல் முடிகிறது. அதனால், புதிய அதிகாரியை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான விஜயன், பதிவாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். அவரது நிர்வாகத்தில், அடுக்கடுக்கான முறைகேடு புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே, அடுத்து வரும் அதிகாரியாவது, நேர்மையானவராக இருக்க வேண்டும் என, பேராசிரியர்கள் தரப்பில், கவர்னருக்கும், உயர்கல்வித் துறைக்கும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே, நேர்மையான பேராசிரியரை, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பொறுப்புக்கு தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம், உயர்கல்வி செயலர் கார்த்திக் மற்றும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

 ஒரு வாரத்திற்குள் புதிய அதிகாரியை நியமிக்காவிட்டால், துணை வேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி என, மூன்று பதவிகளும் காலியாகி, பல்கலையின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதுபோன்ற சூழல் ஏற்பட்டால், பல்கலையின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருக்கும் உயர்கல்வி துறை செயலரே, நேரடியாக காமராஜர் பல்கலை சென்று, நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலை ஏற்படும் என, பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
சென்னை பல்கலையில் நிதி முறைகேடு : கவர்னரிடம் பேராசிரியர்கள் புகார்

சென்னை பல்கலையில், பதிவாளர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், பல்கலையில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக, கவர்னருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.சென்னை பல்கலையில், துணைவேந்தர் பதவி காலியாகி, ஓராண்டு முடிந்து விட்டது; புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. உயர்கல்வி செயலர் கார்த்திக் தலைமையிலான கமிட்டி, பல்கலை நிர்வாகத்தை கவனித்து வருகிறது. பதிவாளர் டேவிட் ஜவஹர் மூலம், நிர்வாக பணிகள் நடந்து வருகின்றன. 

பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகனின் பதவிக்காலம், சில தினங்களுக்கு முன் முடிந்த நிலையில், பதிவாளரின் பதவி காலமும், ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிலையில், பல்கலையின் நிதி பயன்பாட்டில், பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக, கவர்னரின் செயலருக்கு பேராசிரியர்கள் புகார் அனுப்பியுள்ளனர். 

சென்னை பல்கலை பேராசிரியர் பேரவை பொதுச்செயலர், எஸ்.எஸ்.சுந்தரம் அனுப்பியுள்ள புகார் மனு விபரம்: சென்னை பல்கலையில் கட்டட பணிக்காக, பி.எஸ்.கே., இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்துக்கு, விதிகளை மீறி, ஐந்து கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கு துணைவேந்தர் இல்லாத நிலையில், பெரும் நிதியை வழங்க வேண்டும் என்றால், அதற்கு, மூன்று விதமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். சிண்டிகேட் தேர்வு செய்த, ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில், முதலில் அனுமதி பெற வேண்டும். பின், அதை கட்டட கமிட்டி ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்; சிண்டிகேட் கூட்டத்தில், இறுதி ஒப்புதல் பெற வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றாமல், வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அவசரமாக, ஐந்து கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த நிதியானது, பல்கலை கழக மானிய குழுவான, யு.ஜி.சி., வழங்கியது. சென்னை பல்கலையின், நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக மட்டுமே, யு.ஜி.சி., நிதியை பயன்படுத்த வேண்டும். பல்கலையின் நிர்வாக அதிகாரிகள், விதிகளை மீறி கட்டடம் கட்ட நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். இதுகுறித்து, 2016 மார்ச்சில் நடந்த, செனட் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, முறைகேடுகள் குறித்து, பணியில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கமிட்டி மூலம் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையும், பல்கலை நிர்வாகம் செய்யவில்லை. நிதி பரிமாற்றத்திற்கு அனுமதி அளித்த பதிவாளரின் பதவிக்காலம், ஒரு மாதத்தில் முடியும் நிலையில், இந்த பிரச்னை குறித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில்

கூறியுள்ளார்.
- நமது நிருபர் -
முதியோரை பேணுவது இந்திய பண்பாடு'

புதுடில்லி: டில்லியில், 74 வயது மூதாட்டியை துன்புறுத்திய மகனும், மருமகளும், மூதாட்டியின் வீட்டிலிருந்து வெளியேறும்படி, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

டில்லியில் வசித்து வரும், கணவரை இழந்த, 74 வயது மூதாட்டி சாந்தி தேவி, மகனும், மருமகளும் தன்னை துன்புறுத்துவதாக, மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, காமினி லா, பிறப்பித்த உத்தரவு: வாழ்க்கை என்பது ஏணி அல்ல; முழுதாய் சுற்றி வரும் சக்கரம். பெற்றோரின் முதுமைக் காலத்தில், அவர்களை பார்த்துக் கொள்ளாவிட்டால், நம் முதுமைக் காலத்தில், நம் குழந்தைகள் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதை மறந்து விடுகிறோம். முதியவர்களை, அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில், பொருளாதார ரீதியில் கைவிடப்படுவதை, நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளாது. பெற்றோரை மதிப்பது, முதியோரை பேணுவது, வளமையான இந்திய கலாசாரம், பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பண்பு. சாந்தி தேவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து மகனும், மருமகளும் வெளியேற வேண்டும். 2015 அக்டோபர் முதல், அவர்கள் வெளியேறும் வரை, மாதம், 5,000 வீதம், இழப்பீடாக தரப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

31.01.2009: தமிழின் தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் காலமான தினம் இன்று!

By DIN  |   Published on : 31st January 2017 12:00 AM  
nagesh

நாகேஷ் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரவார். நகைச்சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பல சாதனைகள் படைத்தவர். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரியவர்.
நாகேஷ் செப்டம்பர் 27, 1933 அன்று தமிழ்நாடு, தாராபுரம் பகுதியில் கன்னட மாதவர்கள் வாழும் கொழிஞ்சிவாடி என்ற ஊரில் பிறந்தார். தந்தை பெயர் கிருஷ்ணாராவ், தாயார் ருக்மணி அம்மாள். இவரது இயற்பெயர் நாகேஸ்வரன். நாகேஷ் வீட்டில் குண்டப்பா என்றும் நண்பர்களால் குண்டுராவ் என்றும் அழைக்கப்பட்டார்
தாராபுரத்தில் தனது பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துக் கொண்டு கோவை பிஎஸ்ஜி கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தான் அம்மை நோய் வந்து முகத்தில் தழும்புகள் உண்டாயின. நாகேஷ் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், ரெயில்வேயில் எழுத்தராகப் பணிபுரிந்தார்
1959 ஆம் ஆண்டில் திரைப்படத்துறையில் புகுந்தார். தாமரைக்குளம் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தார். அதன்பின்னர் சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் முக்கிய நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றினார். இது மிகவும் வெற்றிப் படமாக அமைந்தது. அவருக்குப் பல படங்களில் ஜோடியாக நடித்தவர் மனோரமா ஆவார்.
கே. பாலசந்தர் கதை, வசனம் எழுதிய சர்வர் சுந்தரம் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து குணச்சித்திர நடிப்பிலும் நாகேஷ் சிறந்து விளங்கினார்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம், தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்றோருடன் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
தமிழர்களின் வாழ்வில் மறக்கவியலா நடிகராகத் திகழ்ந்த நாகேஷ் 31.01.2009 அன்று சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். 

ஸ்கூல் அட்மிஷனுக்கு இனி கியூவில் நிற்கத் தேவையில்லை, ஆன்லைனில் அட்மிஷன் வாங்கலாம்!

By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 31st January 2017 01:24 PM  |
parent_q_for_school_admis
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலே பள்ளி வளாகங்களில் புது அட்மிஷன்களுக்காக பெற்றோர் கூட்டம் களைகட்டும். இந்தமுறை சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி பள்ளி வளாகத்தில் அதிசயத் தக்க வகையில் அப்படியான களேபரக் கூட்ட நெரிசல்களைக் காண முடியவில்லை. என்னவென்று விசாரித்ததில் இந்த ஆண்டிலிருந்து அவர்களது பள்ளியின் சில கிளைகளில் ஆன்லைன் அட்மிஷன் முறையை அறிமுகம் செய்திருக்கிறார்களாம். டி.ஏ.வி உள்ளிட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு ஆன்லைன் அட்மிஷன் முறைகளை மேற்கொள்வதற்கான மென்பொருள் தொழில்நுட்பங்களை நிர்வகிக்கிறது ஸ்கூல் ஸ்கீஸ் எனும் நிறுவனம். இதன் அமைப்பாளர் ஜெகதீஷ் தேவராஜன். 
கோல சரஸ்வதி பள்ளி, டி.ஏ.வி, ஸ்பார்ட்டன் உள்ளிட்ட பள்ளிகளில் இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் முதல் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறை செயல்படுத்தப் படவிருப்பதாகவும், மேலும் பல பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைய ஆர்வமாக விசாரித்து வருவதாகவும், கூடிய விரைவில் சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப் படலாம், இதனால் பெற்றோர்களின் அட்மிஷன் அலுப்பு தீர்ந்து அவர்களுக்கு பள்ளி துவக்க நாட்களுக்கான டென்சன் குறையும் என தேவராஜன் தெரிவித்தார். மேலும் இந்த ஆன்லைன் அட்மிஷன் முறையில் அப்ளிகேஷன் ஃபார்ம்களை நிரப்புவதில் பெற்றோர்களுக்கு சந்தேகங்கள் வரின், உதவும் பொருட்டு சாட் அவுட்புட் விண்டோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பயன்படுத்தி பெற்றோர் எளிதாக தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஃபார்ம்களை நிரப்பு பதிவு செய்யலாம்.
கரண்ட் பில், மளிகை பில், கிரெடிட் கார்டு பில் முதற்கொண்டு அனைத்தையுமே ஆன்லைனில் உட்கார்ந்த இடத்திலிருந்தே கட்டிமுடிக்கும் வசதியுள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில் பள்ளிகளுக்கான அட்மிஷன்களும் ஆன்லைனில் முடித்துக் கொள்ளலாம் என்பது பெற்றோரைப் பொருத்தவரை மிகப் பெரிய ஆசுவாசம் தரும் மாற்றமே! அடுத்த ஆண்டு துவக்கத்துக்குள் சென்னை பள்ளிகள் அனைத்திலுமே இந்த முறை செயல்பாட்டுக்கு வந்து விடலாம்.

கைதான மாணவர்கள் 36 பேர் விடுவிப்பு; போலீஸ் மீது கடும் நடவடிக்கை: முதல்வரின் அதிரடி அறிவிப்பு

By DIN  |   Published on : 31st January 2017 11:27 AM  |   
cm_speech

சென்னை: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் உரையாற்றிய முதல்வர் பன்னீர்செல்வம், சென்னை மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட 36 மாணவர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். போலீஸ் தடியடி, வன்முறை தொடர்பாக ஆணையம் விசாரணை நடத்தும். காவல்துறையினரின் அத்துமீறல் இருந்ததா என்பது குறித்தும் ஆணையம் விசாரணை நடத்தும். 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்படும்.
வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தீ வைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  
மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நடுக்குப்பத்தில் தாற்காலிக மீன் சந்தை அமைக்கப்படும். நடுக்குப்பம், அயோத்திகுப்பம், மாட்டான்குப்பம் மீனவர்களுக்கு உரிய மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்படும். நடுக்குப்பம், மாட்டான் குப்பம் மீனவர்களுக்கு ஆய்வுக்குப் பின், உரிய நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இன்போசிஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர் படுகொலை: கொலையாளியைக் காட்டிக் கொடுத்த தடயம்

By DIN  |   Published on : 30th January 2017 12:31 PM  |   
murdered

புணே: புணேவின் ஹிஞ்ஜேவாடி ஐடி பூங்காவில்  உள்ள இன்போசிஸ் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் ஊழியர் ஞாயிற்றுக்கிழமை மாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த மென்பொறியாளர் கே. ரஸிலா ராஜூ ஞாயிற்றுக்கிழமை தனது  வேலைகளை செய்ய அலுவலகம் வந்துள்ளார்.
இந்த நிலையில், தான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்துக்குள்ளேயே கம்ப்யூட்டர் ஒயரால் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து காவல்துறை துணை ஆணையர் வைஷாலி ஜாதவ் கூறுகையில், பெங்களூர் அலுவலகத்தில் உள்ள இரண்டு ஊழியர்களுடன் ஆன்லைனில் தொடர்பு கொண்டபடியே, ரஸிலா புணே அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பணியாற்றிக் கொண்டிருந்துள்ளார்.
மதியம் 2 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த ரஸிலாவின் பணி நேரம் இரவு 11 மணி வரையாகும். இதற்கிடைய,  மாலை 5 மணிக்குப் பிறகு அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், இன்போசிஸ் திட்ட மேலாளர், இரவு 8 மணியளவில் அலுவலக பாதுகாவலரை தொடர்பு கொண்டு, அலுவலகத்துக்குள் சென்று ரஸிலாவை பார்க்கச் சொல்லியிருக்கிறார்.
அவர் உள்ளே சென்று பார்த்த போது, ரஸிலா மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ரஸிலா 5 மணியளவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்தது.
அப்போது அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பபென் செயில்சியா (26) மற்றொரு பாதுகாவலர் பணிக்கு வந்ததும், மாலை 6.30 மணியளவில் பணி முடிந்து, வழக்கம் போல அலுவலகத்தில் இருந்து கிளம்பியுள்ளார். பபென் செயில்சியா அசாமைச் சேர்ந்தவர்.
அவர் நேராக தனது இருப்பிடத்துக்குச் சென்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு மும்பைக்கு கிளம்பியுள்ளார்.
ரஸிலா கொலை செய்யப்பட்டது இரவு 8 மணியளவில்தான் தெரிய வந்தது. அதன்பிறகு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அலுவலகத்துக்குள் பபென் நுழைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவரது இருப்பிடத்துக்குச் சென்றனர்.
ஆனால் அதற்குள் பபென் புணேவை விட்டு தப்பிவிட்டார். உடனடியாக காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை தொடர்ந்து சென்று இன்று அதிகாலை 3 மணயளவில் கைது செய்தனர். பபெனிடம் விசாரணை நடத்திய பிறகே கொலைக்கான காரணம் தெரியவரும்.
இதற்கிடையே, உயிரிழந்த ரஸிலாவுடன் தங்கியிருந்த தோழிகள் கொலை செய்யப்பட்டவரை அடையாளம் காட்டினர். மேலம், கொலை செய்யப்பட்ட ரஸிலா அனைவரிடமும் மிகவும் தோழமையுடன் பேசுவார் என்றும் தோழிகள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் இன்போசிஸ் ஊழியர்கள் பலரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பிட்ட சிலரால் மட்டுமே அலுவலகத்துக்குள் நுழைய முடியும் என்ற நிலையில் இப்படி ஒரு கொலை நடந்திருப்பது அனைவரையும் பாதிக்கச் செய்துள்ளது.

NEWS TODAY 2.5.2024