Tuesday, February 28, 2017

வாட்ஸ் அப்பில் எப்படி இருக்கிறது புதிய 'ஸ்டேட்டஸ்' வசதி?

க.சே. ரமணி பிரபா தேவி


உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமான வாட்ஸ் அப், 'ஸ்டேட்டஸ்' என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள், எமோஜிக்கள் மற்றும் GIF படங்களை நமது ஸ்டேட்டஸாக வைத்துக்கொள்ள முடியும். இந்த புதிய ஸ்டேட்டஸ் 24 மணி நேரத்துக்கு ஆக்டிவாக இருக்கும்.

இவற்றுக்கும் குறுஞ்செய்திகளுக்கு இருப்பது போல என்கிரிப்ஷன் வசதி உள்ளது. இவ்வசதி ஐஓஸ் மற்றும் ஆண்டிராய்டு செயலிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எப்படி இந்த வசதியைப் பெறுவது?
இந்த புதிய வசதியைப் பெற கூகிள் ப்ளே ஸ்டோரில் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்தால் போதும். வாட்ஸ் அப்பில் தானாகவே 'சாட்ஸ்' மற்றும் 'கால்ஸ்' ஐகான்களுக்கு நடுவே 'ஸ்டேட்டஸ்' உண்டாகி இருக்கும்.

எல்லாவற்றுக்கும் முன்னதாக இடப்பக்கத்தில் கேமரா வசதியும் உருவாகி இருக்கும். இதில் புகைப்படங்கள், செல்ஃபி, வீடியோக்களை எடுத்து ஸ்டேட்டஸாக வைக்கலாம். புகைப்படத்தில் எமோஜிக்கள் வைக்க முடியும். எழுதவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸ் உருவானவுடன் அதைச் சேமித்து, விருப்பமிருந்தால் உங்களின் நண்பர்களின் வாட்ஸ் அப் கணக்குகளுக்கு அதை அனுப்பலாம்.
உங்கள் ஸ்டேட்டஸை உங்களது வட்டாரத்தில் யார் யார் பார்த்தார்கள், எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
அதேபோல், யார் யாருக்கு உங்கள் ஸ்டேட்டஸ் தெரிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டு வசதியும் உங்களுக்கு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன?
உலகம் முழுக்க 100 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டு, உலகின் மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனமாகப் பரிமளித்திருக்கிறது வாட்ஸ் அப். 2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது. இதனால் ஃபேஸ்புக்கைப் போலவே வாட்ஸ் அப்பிலும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் தொடர்ந்து அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன.

முன்னதாக வாட்ஸ் அப் நிறுவனம் பயனரைத் தவிர நிறுவனம் உட்பட மற்றவர்கள் யாரும் படிக்க முடியாத என்க்ரிப்ஷன் முறை மற்றும் வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமையே இல்லையா?



"நாளும் கிழமையும்
நலிந்தோருக்கு இல்லை
ஞாயிற்றுக்கிழமையும்
பெண்களுக்கு இல்லை"

- கந்தர்வன்.

வெள்ளிக்கிழமை விடிந்ததுமே 'வீக் எண்ட்' கொண்டாட்ட மனநிலையும் பிறந்துவிடும். சனி, ஞாயிறு கிழமைகளின் விடுமுறையை எப்படிக் கொண்டாடலாம் என்கிற யோசனைகள் உதிக்க தொடங்கி விடும். அதனால் வெள்ளிக்கிழமை சீக்கிரமாக செல்வதுபோல இருக்கும். ஞாயிறு மட்டும் விடுமுறை இருப்பவர்களுக்கு இவற்றை அப்படியே சனிக்கிழமைக்குப் பொருத்திப் பார்க்கலாம்.

வாரம் முழுவதும் உழைப்பவர்கள் விடுமுறையைக் கொண்டாடுவது இயல்புதான். அது தேவையானதுதான். ஏனெனில், நீண்ட ஓட்டத்தில் சிறிது ரிலாக்ஸ் செய்தால், உற்சாகத்தோடு ஓட்டத்தைத் தொடர முடியும். ஆனால், இந்தக் கொண்டாட்டம் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கிறதா?

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெண்களின் வழக்கமான வேலைகளின் பட்டியல் நீண்டு விடும். விடுமுறை நாள்தானே என்று ஆண்கள் தாமதமாக தூக்கம் கலைப்பார்கள். ஆனால் அவர்கள் எழுந்ததுமே பசிக்கும். அதற்கு தயாராக காபி, டிபன் செய்ய வேண்டியது அந்த வீட்டின் பெண்கள்தான். அதனால் அவர்களால் விடுமுறையன்றும் அதிக நேரம் தூங்க முடியாது. ஆண்கள் டிபன் சாப்பிட்டு விட்டு, டி.வி பார்ப்பது, வெளியே செல்வது என்று 'பிஸி (!) ஆகிவிடுவார்கள். பெண்களுக்கு அடுத்த வேலை காத்திருக்கும்.

ஒரு வாரம் சேர்த்து வைத்த அழுக்குத் துணிகள் குவியலாக சேர்ந்திருக்கும். அதைப் பார்க்கும்போதே மலைப்பு வந்துவிடும். அவற்றை ஊற வைத்து, துவைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். அவற்றை உலர வைக்க மொட்டை மாடியில் தூக்கிச் செல்வது இன்னொரு போராட்டம். மொட்டை மாடியிலிருந்து கீழே இறங்கும்போதே மதிய சமையலுக்காக இறைச்சி வங்கப்பட்டு தயராக இருக்கும்.

மதிய உணவு மீன் என்றால், அதை சுத்தம் செய்து சமைக்க இன்னும் நேரம் பிடிக்கும். இதற்கு இடையில் பிள்ளைகளைக் குளிக்க வைப்பது, படிக்கச் சொல்வதும் நடந்துகொண்டிருக்கும். ஒரு வழியாக மதிய உணவு முடிந்து 'அப்பாடா' என பெருமூச்சு விடும் பெண்களுக்கு சமையலறையில் குவிந்திருக்கும் பாத்திரங்கள் வெல்கம் சொல்லும். 'அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கொள்ளலாம், கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்றால், பூனைகள் பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்து விடும். பாத்திரங்களைத் துலக்கி முடித்து, மொட்டை மாடியில் உலரும் துணிகளை எடுத்து வந்து மடித்து வைத்தால், சூரியன் 'கிளம்பட்டுமா?' என்றுக் கேட்கும். இதற்குள் குழந்தைகள் விளையாடி, சில செல்ல சண்டைகள் போட்டு வர, அதற்கு பஞ்சாயத்துகளையும் பார்க்க வேண்டும். மறுபடியும் மாலை நேர காபி, இரவு டிபன் தயாரித்தல்... என அந்த நாள் முடியும். ஞாயிற்றுக்கிழமையை விட வார நாட்கள் பரவாயில்லையோ எனத் தோன்றிவிடும் பெண்களுக்கு.

அப்படியெனில், பெண்களின் காலண்டரில் ஞாயிற்றுக்கிழமை என்பதே கிடையாதா... அல்லது அது வழக்கமான இன்னொரு நாள்தானா?

உண்மையை ஒப்புக்கொள்வதெனில், பெண்கள் ஞாயிற்றுக்கிழமையைப் பார்த்து அச்சப்படும் அளவுக்கு வேலைகள் குவிந்துவிடுகின்றன. அதனால் விடுமுறைத் தினத்தை வரவேற்கும் மனநிலையில் இருப்பதில்லை. இந்தச் சூழல் மாற வேண்டும் அல்லவா?

நிச்சயம் மாறவேண்டும் என்பவர்கள். வீட்டு வேலைகளை பெண்கள் மட்டுமே செய்யவேண்டும் மன நிலையிலிருந்து வெளியேற வேண்டும். தொடக்கத்தில் தயக்கம் இருக்கத்தான் செய்யும். இந்தத் தயக்கம் ஆண்டாண்டு காலமாய் ஆண்கள் மனதில் ஏற்றப்பட்ட ஒன்று. அதை ஓரிரு நாட்களில் இறக்கி வைத்துவிட முடியாது. ஆனாலும் இப்போது தொடங்க விட்டால், அடுத்த தலைமுறைக்கும் இந்த வேலைப் பாகுபாடு பரவிவிடும். வீட்டு வேலைகளில் எல்லோரும் பங்கெடுக்கும்போது, வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டு, எல்லோருக்குமான ஓய்வு நேரம் கிடைக்கும். அப்படி அமையும் பட்சத்தில் திங்கள் கிழமையை எதிர்கொள்வதை பெண்களால் திட்டமிட முடியும்.

இனி ஞாயிற்றுக்கிழமை ஓய்வும் கொண்டாட்டமும் பெண்களுக்கும் இருக்கட்டும்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் இயங்கும் தொடக்கப்பள்ளி: ஆசிரியர்களின் சம்பளத்தில் வாடகை

க. ரமேஷ்

ஸ்ரீமுஷ்ணம் அருகே வினாயகபுரத்தில் பள்ளியாக இயங்கி வரும் ஓட்டுவீடு. அடுத்தபடம்: தரையில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓட்டு வீட்டின் அறையில் வாடகைக்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கொழை ஊராட்சிக்கு உட்பட்டது வினாயகபுரம் கிராமம். போக்குவரத்து அதிகம் இல்லாத இக்கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும்.
இக்கிராமத்தில் 1978-ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைக்கப்பட்டது. ஏழாண்டுகளுக்கு பிறகு 1985-ல் பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளியில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் தற்போது 11 மாணவர்கள் மட்டும் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளிக் கட்டிடம் வலுவிழந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அரசு உத்தரவின்படி பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் திறந்தவெளியில் அமர்ந்து கல்வி பயின்றனர். ஆனாலும் இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து அப்பள்ளியின் கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் என்பவரது முயற்சியால் அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் என்பவரது ஓட்டு வீட்டின் ஒரு அறையை பள்ளியாக மாற்றி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த அறைக்கான வாடகையை பள்ளியில் பணியாற்றும் இரு ஆசிரியர்கள் தங்களது சம்பளத்திலிருந்து கொடுத்து வருகின்றனர்.
இந்த வீட்டின் மேற்கூரை ஓடுகளால் ஆனதால் வெயில் காலங்களில் மாணவர்கள் வெப்ப தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு கூடம் அதே வீட்டின் பின்புறம் செயல்பட்டு வருகிறது. மேலும், போதிய இடவசதி இல்லாததால் பெஞ்ச், ஆவணங்கள் வைக்கும் பீரோ ஆகியவை வைத்து பயன்படுத்த முடியவில்லை. மாணவர்களும் தரையில் அமர்ந்து தான் படிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக கிராம கல்விக்குழு உறுப்பினர் முருகன் கூறுகையில், “எங்கள் ஊரில் உள்ள ஏழை எளிய மக்கள், தனியார் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப முடியாத நிலையில் உள்ளவர்கள். அரசு கிராமப்புற மாணவர்கள் படித்து முன்னேறும் வகையில் பல்வேறு நடவடிக்கையை எடுத்தாலும், எங்கள் ஊர் போல போக்குவரத்து இல்லாத உட்பகுதியில் உள்ள பள்ளிகளின் நிலை இது தான். எனவே எங்களை போன்ற ஏழைகளின் பிள்ளைகள் படிக்க உடனடியாக பள்ளிக் கட்டிடத்தை கட்டித்தர வேண்டும்" என்றார்.

மலைக்க வைத்த நகைகள்.. அசரவைத்த சொகுசுப் பேருந்து! அந்த நாள் ஞாபகம்!


2000 பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திலிருந்து ஐந்து பெரிய சூட்கேஸ்கள், அப்போது சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த முதலாவது சிறப்பு நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டன. ஜெயலலிதா, சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குச் சொந்தமான தங்க நகைகள், வைர நகைகள் அந்த ஐந்து சூட்கேஸ்களில் வைக்கப்பட்டிருந்தன.

போயஸ் தோட்டத்திலுள்ள ஜெயலலிதா வீட்டிலும், சுதாகரனின் வீட்டிலும் கைப்பற்றப்பட்ட அந்த நகைகளை நீதிமன்றத்துக்குக் கொண்டுவருமாறு நீதிபதி எஸ்.சம்பந்தம் ஆணையிட்டிருந்தார். நகைகளை மதிப்பிட்டு, வழக்கின் சாட்சியங்களாக அவற்றை வைத்திருக்கலாம் என்று அவை கொண்டுவரப்பட்டிருந்தன. ஒவ்வொரு சூட்கேஸிலிருந்தும் எடுக்கப்பட்ட ஆபரணங்களின் அழகைப் பார்த்து, நீதிமன்றத்தில் கூடியிருந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், போலீஸ்காரர்கள் என்று அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

சுதாகரன் திருமணத்தின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒரே மாதிரியான சேலைகளில், ஒரே மாதிரியான நகைகள் அணிந்திருக்கும் புகைப்படம் மிகப் பிரபலமானது. அப்போது அவர்கள் அணிந்திருந்த ஒட்டியாணங்களில் ஒன்று நீதிமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டபோது அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன.

இன்னொரு ஒட்டியாணம் சோதனைகளில் கிடைக்கவே இல்லை என்று வழக்கு விசாரணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒட்டியாணத்தின் எடை 1,044 கிராம். 2,389 வைரக் கற்கள், 18 மரகதக் கற்கள், 9 மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம் அது. 487.4 கிராம் எடை கொண்ட காசுமாலையும் எல்லோர் கண்களையும் விரிய வைத்தது. ஜெயலலிதா வாங்கியிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வு.

கேரவன் வேன்களெல்லாம் வராத காலத்திலேயே பல்வேறு சிறப்பு வசதிகள் அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்தன. ஷவருடன் கூடிய ஒரு குளியலறை, தொலைபேசி, மேஜை, நாற்காலிகள் கொண்ட ஒரு ‘மினி கான்ஃபரன்ஸ் ஹால்’, தொலைக்காட்சி என்று புதுமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்தில் செய்யப்பட்டிருந்த சிறப்பு வசதிகள் அனைவரையும் வாய் பிளக்கச் செய்தன. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், அந்தப் பேருந்தை வடிவமைத்ததுடன், ஜெயலலிதாவுக்கு அதை விநியோகமும் செய்திருந்தது. சீக்கியரான அதன் தலைவர், ஜெயலலிதாவுக்கான அந்தப் பேருந்தை போயஸ் கார்டனுக்கு தானே தனிப்பட்ட முறையில் சேர்ப்பித்ததாகவும் சொன்னார்.

“அந்தப் பேருந்தை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தீர்களா?” என்று வழக்கறிஞர் கேட்டபோது, “இல்லை. வேறொரு மேடம்தான் (சசிகலா!) அங்கு இருந்தார்” என்றார். சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன், பையனூரில் உள்ள தனது நிலத்தை சசிகலா தரப்பு கட்டாயப்படுத்தி விற்க வைத்தது பற்றி விவரித்தபோது உடைந்து அழுதார்!

நகைகளுக்குக் காவலாக வந்திருந்த போலீஸார், நீதிமன்றத்திலேயே முழுதாக மூன்று நாட்களுக்குத் தங்க வேண்டியதாயிற்று. ஏனென்றால், மூன்று நாட்கள் மதிப்பிடும் அளவுக்கு நகைகளைக் குவித்திருந்தார் ஜெயலலிதா. அந்த ஐந்து சூட்கேஸ்களும் தற்போது ரிசர்வ் வங்கி வசம் உள்ளன.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

நீட் தேர்வு அடிப்படையில் கால்நடை மருத்துவப் படிப்புக்கும் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை: கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு

சி.கண்ணன்

நீட் தேர்வு அடிப்படையில் கால் நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டின் 15 சதவீதம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி களில் உள்ள கால்நடை மருத் துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக் கான (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) இடங்களில் 15 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் (விசிஐ - VCI), அகில இந்திய கால் நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPVT) மூலம் 15 சதவீதம் இடங்கள் நிரப்பப்படுகிறது. மீத முள்ள, மாநில அரசுகளுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

15 சதவீதம் இடங்கள்
இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங் களுக்கு, இந்த ஆண்டு அகில இந்திய கால்நடை மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு நடக் காது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (நீட் - NEET) மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வரும் மே மாதம் 7-ம் தேதி நடத்துகிறது. அந்த நீட் தேர்வில் தகுதிப் பெறும் மாணவர்களைக் கொண்டு 15 சதவீதம் கால்நடை மருத்துவ படிப்பு இடங்கள் நிரப்பப்படும் என்று இந்திய கால்நடை மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.

மாணவர்கள் அதிர்ச்சி
இதன்மூலம் கால்நடை மருத் துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேர உள்ள மாணவர்கள் நீட் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட 4 கல்லூரிகளில் 320 இடங்களில் மாநில அரசுக்கு 272 இடங்கள் உள்ளன. இவற்றில் 48 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகிறது. இந்த 48 இடங்களும், இந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதனால் மாண வர்களும், அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முதல்கட்டம்
நாடுமுழுவதும் அரசு மருத்து வம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படும் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு (AIPMT) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது. மீதமுள்ள மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது. கடந்த ஆண்டு 15 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீதம் இடங்கள் மற்றும் மாநில அரசுக்கான 85 சதவீதம் இடங்களுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போன்ற நடைமுறையை பின்பற்றி கால்நடை மருத்துவப் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டு வரப்படுகிறது. முதல்கட்டமாக 15 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மீதமுள்ள 85 சதவீதம் கால்நடை மருத்துவப் படிப்பு இடங்களுக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையவை

மார்ச் 3-வது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல்?- அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக உயர வாய்ப்பு

கி.கணேஷ்

தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படு கிறது. இதில், அரசு ஊழியர்களுக் கான ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.

அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவை யின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கடந்த வாரம் துறைகள் வாரியாக முக்கிய தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை தொகுத்து முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்படும். இப்பணி கள் சில தினங்களில் முடியும். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் குறித்து முதல்வர் முடிவு செய் வார். வழக்கமாக மார்ச் இரண்டாம் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு மார்ச் 3-ம் வாரத்தில் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது’’ என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபித்து கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துள்ளார். 500 மதுக்கடைகள் மூடல், பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம், மகப்பேறு உதவித் தொகை உயர்வு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்புகளுக்கு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், பல்வேறு திட்டங்களுக்கான தொடர் நிதியும் ஒதுக்கப்பட வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அரசியல் சூழலில், இந்த அரசு மீது மக்களி டையே அதிருப்தியும் எதிர்ப்பும் உள்ளது. இதை மாற்றுவதற்காக பொதுமக்களை குறிப்பாக பெண் களை கவரும் வகையில், பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டிய அவசியமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

ஓய்வு வயது உயர்வு

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழி யர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற் போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.

ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

மத்திய அரசு ஓய்வுபெறும் வயதை கடந்த 1998-ல் 60 ஆக உயர்த்தியது. இதைத் தொடர்ந்து தமிழக அரசும் உயர்த்த உள்ளதாக பலமுறை கூறப்பட்டது. ஆனால், உயர்த்தவில்லை. தற்போது ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறும் என தகவல் கசிந்துள்ளது. இது ஓய்வு வயதை நெருங்குபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அவர்கள் ஆதரிப்பார்கள்.

அதே நேரம் வயது உச்சவரம்பை நெருங்கி அரசுப் பணிக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதகமான முடிவாகும். வரும் 2018 முதல் 2020 வரை சுமார் 2.5 லட்சம் பேர் வரை பணி மூப்பால் ஓய்வு பெறவுள்ளனர். இவர்களுக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பதன் மூலம், அரசுக்கு ஒரு மடங்கு கூடுதல் செலவு ஏற்படும். மேலும், வரும் ஆண்டுகளில் பணியாளர் தேர்வும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இது இளைஞர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை மறுப்பதாகும். எனவே, இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'தர்மத்தைக் கொல்லும் செங்கோட்டையன்!' கொதிக்கும் கே.பி.முனுசாமி



ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனால் அதனை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், அவரின் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தற்போது, அமைச்சர் செங்கோட்டையன் 'தர்மத்தைக் கொன்று சசிகலாவைக் காப்பாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பாண்டியராஜன், பொன்னையன், எம்.எல்.ஏ.செம்மலை, எம்.பி.வனரோஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் இன்று, சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டத்தின் முன்னாள் அ.தி.மு.க.செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மதியம் 1 மணி வரை நீண்டது. அதன் பிறகு ஓ.பி.எஸ். முன்னிலையில் அவரின் அ.தி.மு.க. அணிக்கு சோழிங்க நல்லூர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து, தேமுதிக அணியைச் சேர்ந்த 750 பேர், நேரில் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரவாள் பரிசளித்து, மலர்மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆனால் நேற்று, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை நேரடியாகப் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். என்னைப் பார்த்து இரண்டு விரலை அசைத்தார் என்றும் பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வில் செங்கோட்டையன் கட்சிக்காக நன்றாக உழைத்துப் பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு தொண்டர், தர்மமே சாகின்ற அளவில் ஒரு தவறான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.



ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவரையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர்கள், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்று எல்லோரும் அப்போலோ வந்தாலும் கூட, அங்கிருப்பவர்களிடம் எப்படி இருக்கிறார் ஜெயலலிதா என்று கேட்பார்கள். வெளியில் வந்து, அவர் நன்றாக இருக்கிறார் என்று மட்டும்தான் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதுவரையில், அவரை நேரடியாக மருத்துவமனையில் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. செங்கோட்டையன் எங்களைப் போலவே, தினமும் வருவார். நாங்கள் எங்கே உட்காருகிறோமோ அங்கே உட்காருவார். வருத்தத்தோடு எங்களுடன் கலந்துரையாடுவார். சென்றுவிடுவார். அதிலும் அந்த நேரத்தில் இரண்டு தேர்தல் வந்தது. அதனால் 20 நாட்கள் தேர்தல் பணியில் இருந்தார்.

அவர் கூறுகிறார், ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகப் பார்த்தேன். இரண்டு விரல்களைக் காட்டினார் என்று. யாரைக் காப்பாற்றுவதற்காக ஒரு தர்மத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கிறார். சசிகலாவைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவு பெரிய உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலைச் சொல்லுகிறாரே, இவர் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு ஒரு துரோகம்செய்திருக்கிறார். இது, கடைசியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை யாரும் பார்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர், சசிகலா. அவர் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். அப்படிப்பட்ட நிலையில், தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகக் கூறி, சசிகலாவைக் காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சிசெய்கிறார். இதனை உடனடியாக அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால், வேறுவிதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவேண்டிவரும்." என்று கூறினார்.



பின்னர் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முனுசாமி, மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளது தெளிவற்றது. அவர், முழுமையாக ஓ.பி.எஸ்.விடுத்த அறிக்கையைப் பார்க்காமலே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். காபந்து முதல்வராக இருந்தாலும், அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். தான்." என்று தெரிவித்தார்.

NEWS TODAY 2.5.2024