Tuesday, February 28, 2017


'தர்மத்தைக் கொல்லும் செங்கோட்டையன்!' கொதிக்கும் கே.பி.முனுசாமி



ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதனால் அதனை விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவர விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில், அவரின் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தற்போது, அமைச்சர் செங்கோட்டையன் 'தர்மத்தைக் கொன்று சசிகலாவைக் காப்பாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.அதன் தொடர்ச்சியாக இன்றும் மாவட்ட செயலாளர்கள், முக்கிய அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், பாண்டியராஜன், பொன்னையன், எம்.எல்.ஏ.செம்மலை, எம்.பி.வனரோஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் இன்று, சேலம் புறநகர் மாவட்டம், சேலம் மாநகர் மாவட்டத்தின் முன்னாள் அ.தி.மு.க.செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 100 பேர் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மதியம் 1 மணி வரை நீண்டது. அதன் பிறகு ஓ.பி.எஸ். முன்னிலையில் அவரின் அ.தி.மு.க. அணிக்கு சோழிங்க நல்லூர் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து, தேமுதிக அணியைச் சேர்ந்த 750 பேர், நேரில் ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வீரவாள் பரிசளித்து, மலர்மாலை அணிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறுகையில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. ஆனால் நேற்று, கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நான் அவரை நேரடியாகப் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். என்னைப் பார்த்து இரண்டு விரலை அசைத்தார் என்றும் பேசியிருக்கிறார். அ.தி.மு.க-வில் செங்கோட்டையன் கட்சிக்காக நன்றாக உழைத்துப் பாடுபட்டவர். அப்படிப்பட்ட ஒரு தொண்டர், தர்மமே சாகின்ற அளவில் ஒரு தவறான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.



ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவரையில், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், மத்திய அமைச்சர்கள், பா.ஜனதா தலைவர் அமித்ஷா என்று எல்லோரும் அப்போலோ வந்தாலும் கூட, அங்கிருப்பவர்களிடம் எப்படி இருக்கிறார் ஜெயலலிதா என்று கேட்பார்கள். வெளியில் வந்து, அவர் நன்றாக இருக்கிறார் என்று மட்டும்தான் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதுவரையில், அவரை நேரடியாக மருத்துவமனையில் பார்த்ததாக யாரும் சொல்லவில்லை. செங்கோட்டையன் எங்களைப் போலவே, தினமும் வருவார். நாங்கள் எங்கே உட்காருகிறோமோ அங்கே உட்காருவார். வருத்தத்தோடு எங்களுடன் கலந்துரையாடுவார். சென்றுவிடுவார். அதிலும் அந்த நேரத்தில் இரண்டு தேர்தல் வந்தது. அதனால் 20 நாட்கள் தேர்தல் பணியில் இருந்தார்.

அவர் கூறுகிறார், ஜெயலலிதாவை கண்ணாடி வழியாகப் பார்த்தேன். இரண்டு விரல்களைக் காட்டினார் என்று. யாரைக் காப்பாற்றுவதற்காக ஒரு தர்மத்தைச் சாகடித்துக்கொண்டிருக்கிறார். சசிகலாவைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவு பெரிய உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலைச் சொல்லுகிறாரே, இவர் ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு ஒரு துரோகம்செய்திருக்கிறார். இது, கடைசியாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

காரணம், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரை யாரும் பார்க்க முடியாத சூழ்நிலையை உருவாக்கியவர், சசிகலா. அவர் கட்டுப்பாட்டில்தான் ஜெயலலிதா இருந்தார். அப்படிப்பட்ட நிலையில், தான் ஜெயலலிதாவைப் பார்த்ததாகக் கூறி, சசிகலாவைக் காப்பாற்ற செங்கோட்டையன் முயற்சிசெய்கிறார். இதனை உடனடியாக அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்தால், வேறுவிதமான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கவேண்டிவரும்." என்று கூறினார்.



பின்னர் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய முனுசாமி, மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளது தெளிவற்றது. அவர், முழுமையாக ஓ.பி.எஸ்.விடுத்த அறிக்கையைப் பார்க்காமலே கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோதே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார். காபந்து முதல்வராக இருந்தாலும், அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ். தான்." என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024