‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு... அடுத்தடுத்த போராட்டத்தால் பரபரக்கும் 'நெடுவாசல்'
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் ஓய்ந்த நிலையில், அடுத்த போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்துத் துவங்கிய போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள், பொதுமக்களைக் கடந்து, தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்தடுத்த போராட்ட அறிவிப்பால் நெடுவாசலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கான ஆய்வு மேற்கொள்ள வந்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழக (ONGC ) அதிகாரிகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தைத் துவக்கினர். தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ள நிலையில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான எதிர்ப்பு, இப்போது கிளம்பியது இல்லை. கடந்த ஓராண்டாகவே இந்தத் திட்டத்துக்கு நெடுவாசல் பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். கடந்த ஆண்டு, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC), எரிவாயு சோதனைக்காக இரண்டு விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தி, ஆழ்துளைக் கிணறு அமைக்க முற்பட்டபோதே... விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இதனால், அந்தத் திட்டப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன.
எப்படியும் திட்டம் கைவிடப்படும் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த விவசாயிகள், திட்டப்பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தவே, அதிர்ந்துபோனார்கள். இந்தியாவில், 31 இடங்களில் இயற்கை எரிவாயுவான ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதில், தமிழகத்தில் உள்ள நெடுவாசலும் ஒன்று.
இதற்கான எந்தத் தகவலும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. குறைந்தபட்சம் கருத்துக் கேட்புக் கூட்டத்தைக்கூட அரசு நடத்தாததுதான் உச்சம். இந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும் என விவசாயிகள் அஞ்சினர். விவசாயம் பாதிக்கப்படும், நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு குறையும் என்ற அச்சம், விவசாயிகளையும், அப்பகுதி மக்களையும் கொந்தளிக்க வைத்தது.
"நெடுவாசல் பகுதி, மண்வளம் மிகுந்த பகுதி.விவசாயத்துக்கு ஏற்ற நிலமாகவும் இருக்கிறது. நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் விளையக்கூடிய நிலமாகும். ஏற்கெனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவும் நிலையில், நெடுவாசல் பகுதிதான் ஓரளவு வளமான பகுதியாக இருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் பெருமளவு குறைந்த நிலையில், இந்தத் திட்டம், நிலைமையை மிக மோசமாக்கும். ஏற்கெனவே, விவசாயிகள் நீரின்றி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்; இந்தச் சூழலில், இந்தத் திட்டம் விவசாயிகளை ஒரேயடியாக வீழ்த்திவிடும். விவசாயத்தை கேள்விக்குறியாக்கும். எனவே, இந்தத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்," என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
"பொதுவாக, கடலை ஒட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், விவசாய நிலங்களைக்கொண்ட நெடுவாசலில் மேற்கொள்வது ஏன் என்றும், பூமியில் உள்ள நீரை உறிஞ்சி எடுக்கப்படும் இந்தத் திட்டத்தால் விவசாயம் அழியும்," என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
நெடுவாசலில் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத்துவங்கி இருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி, அந்த மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய விவசாயிகளுடன் பொதுமக்களும் போரட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் அதிகாரிகள் சிறைபிடிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எனத் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்ளன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் போராட்டத்துக்கும் மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். புதுக்கோட்டையில், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, போராட்டத்தை நடத்தினர். இதனால், இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.
இந்தியாவில், மொத்தம் 31 இடங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் நெடுவாசலும் ஒன்று. புதுச்சேரி மாநிலத்தில் காரைக்காலும் இந்தத் திட்டத்துக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால், புதுக்கோட்டையில் சுமார் 100 கிராமங்களில் 5 லட்சம் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் அஞ்சப்படுகிறது.
இன்னுமொரு மாபெரும் போராட்டத்தைத் தமிழகம் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- ச.ஜெ.ரவி,
படங்கள் : ம.அரவிந்த்
No comments:
Post a Comment