Tuesday, February 28, 2017


120 ஆடுகள், 400 கோழிகள், இரண்டரை டன் அரிசி... ! மண்மணக்கும் வடக்கம்பட்டி பிரியாணி திருவிழா


தமிழகத்தில் 30 வயதை கடந்தவர்களுக்கு நிச்சயம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தெரியாமல் இருக்காது. அசைவத்துக்கு புகழ்பெற்ற ஹோட்டல் அது. இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள் அனைவரும் சேர்ந்து மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் வழியில் உள்ள வடக்கம்பட்டியில் ஆண்டுதோறும் தை மற்றும் மாசி மாதங்களில் ஒன்று கூடி முனியாண்டி கோயில் திருவிழாவை நடத்துவார்கள். முனியாண்டியை வழிபட்டு, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படும். பிரசாதம் என்னவென்று தெரியுமா? முனியாண்டி விலாஸ் புகழ் மண் மணக்கும் பிரியாணியே தான்.

இந்தாண்டு முனியாண்டி கோயில் திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. ஊரை சுற்றி வயல். பழமை மாறாமல் புதுமையும் கலந்த வீடுகள் என்று பளிச்சிட்டது வடக்கம்பட்டி. ஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கிறது இந்தத் திருவிழா. இந்த நாளில் இந்தியா முழுக்க முனியாண்டி விலாஸ் வைத்திருப்பவர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி விடுகிறார்கள். திருவிழாவைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர், முனியாண்டி விலாஸ் ஹோட்டலை பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் சமூக வரலாற்றில் மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டலுக்கு என்று தனி இடமுண்டு. அசைவ உணவுக்கு புகழ்பெற்ற ஹோட்டல் இது. இந்தத் தலைமுறையினரிடம் அசைவ உணவகங்கள் என்றால் கே.எப்.சி., அரேபியன் கபாப், டொமினோஸ் என வாயில் நுழையாத பெயர்களை சொல்வார்கள். அவர்களுக்கு முனியாண்டி விலாஸ் பற்றி தெரியுமா என தெரியவில்லை. அசைவ உணவகம் என்றால் முனியாண்டி விலாஸ் தான் என்ற நிலைமை இப்போது இல்லை. முனியாண்டி விலாஸ் உணவகங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது.



குளிரூட்டப்பட்ட அறை, அழகிய கட்டமைப்பு, வித்தியாசமான தோற்றம், புரியாத பெயர்களில் உணவகங்கள் பெருத்து விட்டன. இது போன்ற பிரமாண்ட ஹோட்டல்கள் வருவதற்கு முன்பு, நம் மக்களை சுவையால் கட்டி போட்டவர்கள் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்தான். .

இப்போதும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் , ஆர்பாட்டமில்லாமல் முக்கிய நகரங்களில் இயங்கி வருகின்றன. அதற்கென்று ஒரு வாடிக்கையாளர் கூட்டமுள்ளது. நியாயமான விலை, வீட்டுச் சாப்பாடு போன்ற உணர்வு. கலப்படமில்லாத செய்முறை. காசுக்கு உணவு விற்றாலும் அதில் அறத்துடன் நடந்து கொள்ளும் விதம். இதுதான் இன்னும் அவர்களை இயங்க வைத்து வருகிறது.

இந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலை நடத்துபவர்களில் கணிசமானவர்கள், வடக்கம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தான். தங்கள் தொழில் வெற்றிகரமாக நடக்க வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் தான் காரணம் என நம்பும் அவர்கள், ஆண்டுதோறும் முனியாண்டி கோயிலுக்கு விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். இரு வெவ்வேறு சமூகத்தினர் தை, மாசி மாதங்களில் தனித்தனியே கொண்டாடுகிறார்கள்.

"தினமும் தங்கள் ஹோட்டலில் நடக்கும் முதல் வியாபார பணத்தை அப்படியே சாமிக்கென்று என்று எடுத்து வைத்து விடுவோம். ஆண்டுதோறும் சேரும் மொத்த பணத்தை ஆண்டு முடிவில் விழா கமிட்டியிடம் கொடுத்து விடுவோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அதில் ஒரு ரூபாயை கூட எடுக்க மாட்டோம். அதில் தான் இந்த திருவிழாவை நடத்துகிறோம்" என்கின்றனர் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்காரர்கள்.

திருவிழாவில் முனியாண்டி சாமிக்கு வழிபாடு நடத்தி வழிபட்ட பின்னர், அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. மண் மணக்கும் பிரியாணியும், இதற்காக நூற்றுக்கணக்கான ஆடு, கோழிகள் பலி கொடுக்கப்படுகிறது. உற்சாகமாய் கொண்டாடுகிறார்கள் மக்கள்.



இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராமசாமி, ‘’நான் சென்னை பூந்தமல்லியில் ஹோட்டல் வைத்திருக்கிறேன். பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தேடி வந்து சாப்பிடத்தான் செய்கிறார்கள். நாங்கள் இன்னும் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை விற்பதில்லை. எல்லாமே கைப்பக்குவத்தில் உருவான மசாலாக்கள் மூலம் உணவு தயாரிக்கிறோம். கறிகளில் கலப்படமோ, கெட்டுப்போனதையோ பயன்படுத்த மாட்டோம். அந்த காலத்தில் எங்கள் பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது விவசாயத்தில் நல்ல வசதியாக இருந்த எங்கள் முன்னோர்கள், உணவு சமைத்துக்கொண்டு போய் அனைத்து மக்களுக்கும் வழங்கியுள்ளார்கள். நீண்ட நாட்கள் இந்த அறப்பணியை செய்ததன் மூலம், ஊரிலுள்ள பலரும் சமையல் வேலையை கற்று கொண்டிருக்கிறார்கள்.

விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துபோக பிழைப்பு தேடி பலரும் வெளியுர்களுக்கு சென்றார்கள். அதன் பின்பு சுப்பையா நாயுடு என்பவர் 1937 ல் காரைக்குடியில் முதல் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து ராமரெட்டி என்பவர் கள்ளிக்குடியில் இரண்டாவது முனியாண்டி விலாஸ் ஹோட்டலை திறந்தார். அதை தொடர்ந்து தமிழகம் முழுக்கவும், மற்ற மாநிலங்களிலும் டெல்லி, மும்பையிலும் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் உருவாகின. எங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முனியாண்டி விலாஸ் பெயருக்கு முன்பு மதுரையை போட்டுக்கொண்டோம். அதன் பின்பு மதுரை முனியாண்டி விலாஸ் ஹோட்டல்கள் பிரபலமானது. உணவு வழங்குவது புண்ணியம். அதற்கு பணம் வாங்கக்கூடாது என்றாலும், இக்கால பொருளாதாரச்சூழலில் இலவசமாக உணவு வழங்கமுடியாது. அதனால்தான் ஆண்டுக்கொரு முறை அன்னதானம் வழங்கி புண்ணியம் தேடுகிறோம். அதை சாதாரண அன்னதானமாக இல்லமால் பிரியாணியாக கொடுக்கிறோம்.

தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் நாயுடு சமூகத்தினரும், மாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் ரெட்டியார் சமூகத்தினரும் இந்த அன்னதானத்தை செய்கிறோம். இரண்டு நாட்கள் சைவ அன்னதானம் வழங்கும் நாங்கள் மூன்றாம் நாளில் பிரியாணியை வழங்குகிறோம். எவ்வளவுதான் புதுப்புது பெயர்களில் ஹோட்டல்கள் வந்தாலும், முனியாண்டி விலாஸ் இருக்கும். அதுக்கு காரணம் வடக்கம்பட்டி முனியாண்டி சாமியின் அருள்தான்’’ என்றார்.

மலை போல குவித்து வைக்கப்பட்ட அரிசி மூட்டைகள், 120 ஆடுகள், 400 கோழிகளைக் கொண்டு, தங்களுக்கே உரிய கைப்பக்குவத்தில் பிரியாணி சமைத்து, சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. அங்கேயே சாப்பிட்டும், பார்சல் கட்டியும் எடுத்து செல்கிறார்கள் மக்கள்.
பிரியாணி மணமுடன் முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் பெயரும் அந்த வட்டாரம் முழுக்க பரவுகிறது.

- செ.சல்மான்,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024