Saturday, February 25, 2017


”ஹைட்ரோகார்பன் பயங்கரமும் பின்னணி அரசியலும்!”

vikatan.com




ஆயிரம் பல்லாயிரம் கார்ப்பரேட்டுகள் வந்தாலும் நெற்பயிரும் வயல்வெளியும்தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்தவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நெடுவாசல் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். பல வருடகாலமாக தண்ணீரில்லாமல் பொய்த்துக் கிடக்கும் வறண்ட டெல்டா விவசாய மாவட்டங்களான தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே இருக்கிறது இந்த கிராமம். வறட்சிகளில் தப்பிப் பிழைத்து இதன் பசுமை மட்டும் அப்படியே எஞ்சி இருக்கிறது. இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கும் பல ஏக்கர் பரப்பிலான தென்னந்தோப்புகளில் இருந்துதான் சென்னைக்கு பல மூட்டைத் தேங்காய்கள் தினமும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

சகமனிதர்களைக் காப்பாற்றவே நேரமில்லாத நமக்கு நெடுவாசலின் பசுமையும் அது ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என்பதும் தேவையற்றதாக இருக்கலாம். ஆன்லைனில் காலம் தள்ளும் கார்ப்பரேட் குடிமகன்களுக்கு தமிழகத்தின் நெற்களஞ்சியம் எது என்று தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சுமார் 6000 பேர் வசிக்கும் அந்த நெடுவாசல் நிலங்களில் ஒவ்வொரு ஏக்கரும் தற்போது குறைந்தபட்சம் நான்கு மூட்டை விகிதம் நெல் தருகின்றன. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் வருடாந்திர ஜீவனாம்சத்திற்கு போதுமானது அது. ஏற்கெனவே மக்களுக்கு நல்ல முறையில் பயன்பட்டு வரும் வேளாண் நிலத்தில்தான் தற்போது இயற்கை எரிவாயுக்களை நிலத்தின் ஆழத்திலிருந்து உறிஞ்சி எடுப்பதற்காக மத்திய அரசு தற்போது தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. திட்டத்தின் பெயர் “ஹைட்ரோ கார்பன் திட்டம்”.

நிலத்தின் ஆழங்களில் இருந்து இயற்கை எரிவாயுவை ஏன் எடுக்க வேண்டும். இயற்கை நமக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கும் வளங்களை நல்ல முறையில் மக்களுக்கான பயன்பாட்டுக்காக உபயோகப்படுத்திக் கொள்வதற்கு என்கிறது மத்திய அரசு. மக்களுக்கு ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் விவசாய மற்றும் வேளாண் நிலங்களை தொழில்துறைகளுக்காக சிதைப்பதுதான் வளங்களைப் பயன்படுத்துவதா?



மீத்தேன் திட்டத்துக்கு முன்பே துவக்கப்பட்டதா ஹைட்ரோகார்பன் திட்டம்?

நெடுவாசல், முடப்புலிக்காடு, குருவக்கரம்பை, ஆலங்குடி என புதுக்கோட்டை மாவட்டத்தின் கீழ் மட்டும் ஐம்பது கிராம பஞ்சாயத்துகள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் ஒவ்வொன்றிலும் மக்களுக்குப் போதிய விவரங்கள் எதுவுமே தெரிவிக்கப்படாமல் பல வருடங்களுக்கு முன்பே சிறு வயல்களைக் கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து பத்திரத்தில் கைநாட்டு பெற்றுக் கொண்டு தனதாக்கிக் கொண்டுள்ளது அரசு. கைநாட்டு பெறப்பட்ட பத்திரங்களின் நகல் கூட இன்னும் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் பெறப்பட்ட நிலத்தில் 2009-ல் மண்ணில் எண்ணெய் அல்லது எரிவாயு இருக்கிறதா என்று ஆழ்துளாய் பம்புகளை ஆங்காங்கே பொருத்திப் பரிசோதனை செய்துள்ளது. இதற்கிடையேதான் மீத்தேன் திட்டம் கையெழுத்தானதும். அதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது அரசு. மீத்தேன் திட்டம் திரும்பப்பெறப்பட்ட சூழலில் தற்போது ஹைட்ரோகார்பன் திட்டம் மீண்டும் செயலாக்கத்துக்கு வந்துள்ளது.



ஹைட்ரோகார்பன் திட்டம் என்றால் என்ன?

நிலத்தின் கீழ் இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் வாயுக்களின் கூட்டுப்பொருள். இது ஆக்ஸிஜனுடன் சேரும்போது பெரும் இயந்திரங்களை இயக்குவதற்கான ஆற்றலைப் பெறுகிறது. பெட்ரோல், டீசல், நாப்தா, நிலக்கரி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து எரிபொருள் வகைகளும் இந்த ஹைட்ரோகார்பனில் அடக்கம்.

இதன் அரசியல் பின்னணி

நெடுவாசல் பகுதியில் தற்போது அரசால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு ஏக்கர் நிலத்தில் இந்த ஹைட்ரோகார்பன்களை எடுப்பதற்குதான் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.நெடுவாசல் தவிர இந்தியாவில் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதானி வெல்ஸ்பன் எக்ஸ்ப்ளோரேஷன், ஜெம் லெபாரட்டரீஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நெடுவாசலில் தனது ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ள ஜெம் லெபாரட்டரீஸ் கர்நாடகாவைச் சேர்ந்த கோடீஸ்வர பாரதிய ஜனதா எம்.பி சித்தேஸ்வராவிற்கு சொந்தமானது என்பது கூடுதல் தகவல். அடுத்த 15 ஆண்டுகளில் நாற்பது மில்லியன் டன் எண்ணெய், 22 பில்லியன் கண மீட்டர் எரிவாயுவை உறிஞ்சி எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது பசுமையின் கடைசி மிச்சம் வரை உறிஞ்சி எடுத்துச் செல்ல இவர்களுக்கு பதினைந்து வருடகாலம் தேவைப்படுகிறது. இப்படி எண்ணைய், எரிவாயுவை பூமியில் இருந்து உறிஞ்சி எடுக்க தனியார் நிறுவனங்கள் அரசுக்கு ரூ.9,600 கோடி தருவார்கள்.



ஹைட்ரோகார்பன் திட்டம் ஏன் பாதுகாப்பற்றது?

நெடுவாசல் பகுதி மக்களில் சுமார் 1000 பேர் வரை எண்ணெய் தொழிற்சாலைகள் மற்றும் கிணறுகள் அதிகம் இருக்கும் அரேபிய நாடுகளில்தான் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து 45 நாட்கள் எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளில் வேலை செய்துவிட்டு அடுத்த 45 நாட்கள் அவர்களுக்கான ஓய்வு தரப்படுகிறது. அந்த நாட்களில் கிணறுகளும் இயங்காது. அதாவது தொடர்ந்து அதுபோன்ற கிணறுகளின் பக்கம் வேலை செய்வது மனித உயிருக்கே ஆபத்தானது என்பதால் இந்த ஓய்வு தரப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கே ஆபத்தினை காரணம் காட்டி ஓய்வு தரப்படும் நிலையில் தற்போது நெடுவாசல் பகுதியில் குடியிருப்புகள் அருகே தொடர்ந்து பதினைந்து வருடங்கள் எரிவாயுக்களை உறிஞ்சி எடுப்பது எவ்வளவு ஆபத்தினை விளைவிக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

அமெரிக்க எதிர்ப்பு

அமெரிக்காவின் மிஸ்ஸிஸ்பி மற்றும் மிஸ்ஸோரி நீர்படுகைகளின் கரையோரம் வசிக்கும் அமெரிக்க வாழ் பழங்குடியின மக்கள் கடந்த வருடத் தொடக்கத்தில் போராட்டத்தில் களமிறங்கினர். அந்த பகுதிகளில், டகோடா பைப்லைன் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான போராட்டம். அந்தத் திட்டம் மிஸ்ஸோரி மற்றும் மிஸ்ஸிஸ்பியின் மொத்த நீரையும் வீணாக்கிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். இந்த இரு ஆறுகளும் அமெரிக்காவின் 41 மாகாணங்களின் குடிநீர் வாழ்வாதாரத்திற்கானது. கனடாவின் இரு மாகாணங்களும் இதனால் பயனடைகின்றன. எரிவாயு எடுப்பதால் நீர் மாசுபடுவதுடன், தாங்கள் பாதிப்படுவோம் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தார்கள் அந்த பழங்குடிகள். அமெரிக்கா கண்ட நீண்டகாலப் போராட்டங்களில் இதுவும் ஒன்று. போராட்டம் இன்றும் தொடர்ந்தபடி இருக்கிறது.

தொழில்துறையில் பலவகையில் முன்னேற்றம் அடைந்துள்ள அமெரிக்க மக்களே, நிலத்தில் இருந்து எரிவாயு எடுப்பதற்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர். கடலில் சிந்திய எண்ணெயை வாளி வைத்து அள்ளிக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் உடைய நாம் எப்படி நெடுவாசல் பகுதி மக்கள் மற்றும் அவர்களது நிலங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யப்போகிறோம் என்று அரசு சிந்தித்தா?

காவிரி பிரச்னை, நில வறட்சி, விவசாயிகள் தற்கொலை என எண்ணற்ற பிரச்னைகள் தமிழக விவசாய நலன்களுக்கு எதிராக இருந்து வரும் சூழலில் ஹைட்ரோகார்பன் திட்டம் நிச்சயம் கவளச் அரிசிக்கே பிரச்னையை விளைவிக்கும் சூழலை உருவாக்கும். தைப்புரட்சியும் மெரினா போராட்டமும் தவறெனப்படும் எதையும் மக்கள் சக்தியால் மாற்றி எழுத முடியும் என்பதற்கான தொடக்கப்புள்ளிதான். நம் விவசாயம் முழுவதுமாகக் காப்பாற்றப்பட்டால்தான் அந்தப் புரட்சி முழுமைபெற முடியும். தைப் புரட்சியாளர்களே, நெடுவாசலுக்கு உதவுவோமா?

ஐஷ்வர்யா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024