Sunday, February 26, 2017


உஷார் மக்களே...நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையாகவும் இருக்கலாம்! #EggAlert

vikatan.com

முட்டை... குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து தரும் ஓர் உணவு. அதிலும் கலப்படம் என்பதுதான் இப்போது எல்லோரையும் கதிகலங்கவைத்திருக்கிறது. கேரளாவில் ஆரம்பித்தது பிரச்னை... இன்று சென்னை, திருச்சி, சேலம், கோவை... எனத் தமிழகத்தின் பல நகரங்களுக்கும் பரவியுள்ளது. இது தொடர்பாக வலைதளத்தில் வெகு வேகமாகப் பரவிவரும் சில வீடியோக்கள், மக்கள் மத்தியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கின்றன. செயற்கையான சீன முட்டைகள், இன்று தமிழகத்தின் பல நகரங்களில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனையாகின்றன. இவற்றில் பிளாஸ்டிக் உண்டு. சாப்பிட்டால், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்கும் என்கிறார்கள்.



முட்டையில்கூட போலி உண்டா... செயற்கை முட்டை சாத்தியமா... அதில் ஏன் பிளாஸ்டிக் கலக்க வேண்டும்... இப்படி பல கேள்விகளுடன் அவற்றில் ஒரு வீடியோவைப் பார்த்தோம்.

ஒருவர், தான் கடையில் வாங்கி வந்த முட்டை ஒன்றை உடைக்கிறார். முட்டை உடைந்து, தட்டின் மேல் மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் விழுகின்றன. பொதுவாகவே முட்டை ஓட்டின் உட்பகுதியில் மென்மையான, பாலாடை மாதிரியான ஓர் அடுக்கு (லேயர்) இருக்கும். அதை விரலால் எடுத்தால், கையோடு வந்துவிடும். ஆனால், அந்த முட்டையின் உட்பகுதியில் இருப்பதை உரித்தால், லேசான பிளாஸ்டிக்போல பிரிந்துவருகிறது. அதற்குப் பிறகுதான் நமக்குக் காத்திருக்கிறது அதிர்ச்சி. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, ஓட்டின் உட்பகுதியில் இருந்த அந்த லேயரைக் காட்டினால், பிளாஸ்டிக்போலவே தீய்ந்து எரிகிறது. வீடியோவை எடுத்தவர், அசல் பிளாஸ்டிக்போலவே வாசனை வருவதாகவும் சொல்கிறார்.

சாதாரணமாக, முட்டையை உடைத்த பிறகு மஞ்சள் கருவைத் தொட்டால் உடைந்துவிடும். அந்த முட்டையிலோ, மஞ்சள் கருவைத் தொட்டு அமுக்கினாலும் உடையவில்லை. மாறாக, லேசான ரப்பர்போல அமுங்கி எழுகிறது. பிளாஸ்டிக் கலந்த, செயற்கை முட்டை என்கிற அதிர்ச்சி அதைப் பார்த்ததும் நமக்கும் தொற்றிக்கொள்கிறது. இது, நம் உடலுக்கு என்னவெல்லாம் தீங்கு விளைவிக்குமோ என்கிற அச்சமும் கூடவே எழுகிறது.



கடந்த அக்டோபர் மாதமே கேரளாவில் இந்தப் பிரச்னை எழுந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்ட கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, இதுவரை தனக்கு பிளாஸ்டிக் முட்டை தொடர்பாக எந்தப் புகாரும் வரவில்லை எனவும், ஊடகங்கள் இந்தப் பிரச்னையை எழுப்பியதன் அடிப்படையில் விசாரிப்பதாகவும் சொன்னார். உண்மையைக் கண்டறிவதற்காக ஒரு தனிக்குழுவையும் அமைத்தார். இடுக்கி மாவட்டத்தில், கேரளா-தமிழ்நாட்டு எல்லையில் இந்த வகை முட்டைகள் கிடைப்பதாகக் கூறப்பட்டது. அவையும் தமிழ்நாட்டில் இருந்தே வருவதாகவும் செய்திகள் தெரிவித்தன. அந்த நடவடிக்கைகள் குறித்த முடிவுகள் தெளிவாக இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டை சேர்ந்த யுவராணி என்பவர் தற்போது இந்த பிளாஸ்டிக் முட்டைப் பற்றிய தன்னுடைய நேரடி அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்தபோது அதிர்ச்சி பலமடங்கு கூடியது.

“எனக்கு தைராய்டு அறுவை சிகிச்சை செய்துள்ளதால், கால்சியம் குறைபாட்டைப் போக்க தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் மார்க்கெட்டில் முட்டையை வாங்கிவந்தேன். வேகவைத்து உரித்தபோது மெழுகை உரிப்பதுபோல துகில் துகிலாக வந்தது. உள்ளே இருந்த மஞ்சள் கரு மேலே ஆரஞ்சு வண்ணத்தில் சற்றுக் கெட்டியாகவும் உட்புறம் மஞ்சள் வண்ணத்தில் குழைவாகவும் இருந்தது. அதில் இருந்து முட்டைக்கான வாசம் சிறிது வந்தது. எனக்கு அந்த முட்டை குறித்து சந்தேகமாக இருந்ததால், உடனே அதை வீசிவிட்டேன். தொடர்ந்து இன்னொரு முட்டையை உடைத்து, கலக்க முயன்றபோது அதன் மஞ்சள் கரு ஒரு ரப்பர் பந்துபோல தவாவில் முன்னும் பின்னுமாக நழுவியதே தவிர, உடைந்து கரையவே இல்லை. வெகுநேரம் அப்படியே இருந்தது. பிறகு சற்று வலுக்கொடுத்து மஞ்சள் கருவை அழுத்தியபோது அது குழைவான, நன்கு வெந்த மெழுகுபோல சிதைந்தது. அதனால், மொத்த முட்டைகளையும் தூக்கி வீசிவிட்டேன்” என்று சொன்னார் யுவராணி.

வாசகர் ஒருவர் அனுப்பிய வீடியோ...

பிளாஸ்டிக் முட்டை விவகாரம் குறித்து சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் அனிதாவிடம் கேட்டபோது, ÔÔஇதுபோன்ற பிளாஸ்டிக் முட்டைகள் தற்போது சந்தைகளில் நல்ல முட்டைகளோடு கலந்து விற்பனைக்கு விடப்பட்டுள்ளது உண்மைதான். இந்த வகையான பிளாஸ்டிக் முட்டைகளை வெளிப்புறத் தோற்றத்தை வைத்து கண்டுபிடிக்க முடியாது. முட்டையின் கருவை வைத்தே இதைக் கண்டறிய இயலும். மஞ்சள் கருவின் நிறம் மாறி இருக்கும். மஞ்சள் கருவையும் வெள்ளைக்கருவையும் ஒன்று சேர்த்துக் கலக்கும்போது, மஞ்சள் கரு திரியும். மேலும், இந்த வகையான பிளாஸ்டிக் முட்டைகளை வேகவைத்த பிறகு, முட்டை ஓடு லேயர் லேயராக பிரியும். இந்த முட்டை உடலுக்கு நல்லது அல்ல’’ என்று எச்சரிக்கைக் கொடுத்தார்.

சென்னை மட்டும் அல்ல... சேலம், திருச்சி... என ஒவ்வொரு நகரமாக பிளாஸ்டிக் முட்டைகள் பரவிக்கொண்டே இருக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு நல்லது என்றும், பாலூட்டும் தாய்மார்களுக்கு, கர்ப்பிணிகளுக்குத் தேவை என்றும், முதியோரின் எலும்புப் பிரச்னைகளுக்கு தீர்வு என்றும், கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு உகந்தது என்றும் கருதப்படும் ஆரோக்கியமான உணவான முட்டையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் கலப்படம் ஆபத்தானது. பிளாஸ்டிக் முட்டைகளை வேகவைக்கும்போதோ, ஆம்லெட், ஆஃப்பாயில் போன்று பொரிக்கும்போதோ அதீத வெப்பத்தால் அவற்றில் புற்றுநோயைத் தூண்டும் கார்சினோஜன்கள் உருவாகின்றன. இவை புற்றுநோயை உருவாக்கும். மேலும், சுவாசக் கோளாறுகள், ஆஸ்துமா, கர்ப்பப்பை கோளாறுகள், ஹார்மோன் பிரச்னைகள், பாலியல் குறைபாடுகள் உட்பட பல நோய்களை ஏற்படுத்தும். எதிர்கால சந்ததியினரை மிக மோசமாக பாதிக்கும். எனவே, முட்டைகளைப் பயன்படுத்துவோர் மிகமிக எச்சரிக்கையாக இருப்பதுதான் இதற்குத் தீர்வு!

சரி... பிளாஸ்டிக் முட்டையைத் தயாரித்து, விற்பனைக்கு விடவேண்டிய அவசியம் என்ன?

ஒரு கோழிப் பண்ணையை ஆரம்பித்து, கோழிகளைப் பராமரித்து, முட்டைகளைத் தயாரித்து விற்பதைக் காட்டிலும், இதன் அடக்கச் செலவு குறைவு. சீக்கிரம் அழுகிப்போகாது என்பதும் இதன் ப்ளஸ் பாயின்ட்ஸ்.. என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
போலி முட்டை விஷயத்தில் அரசுதான் உடனே களத்தில் இறங்கி தீர்வு காண வேண்டும்!



போலி முட்டையைக் கண்டுபிடிப்பது எப்படி?

* நிஜ முட்டையைவிட, போலி முட்டை கொஞ்சம் பளபளப்பாக இருக்கும். ஆனால், இதை வைத்து மட்டும் போலி என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

* தொட்டுப் பார்த்தால், சாதாரண முட்டையைவிட கொஞ்சம் கடினமாக இருப்பது தெரியும்.

* உடைப்பதற்கு முன்பாக லேசாக ஆட்டிப் பார்த்தால், தண்ணீர் தளும்பி மேல் எழுவதுபோல் ஒரு சத்தம் கேட்கும்.

* உண்மையான முட்டையை முகர்ந்து பார்த்தால், லேசாக இறைச்சி வாடை அடிக்கும்; இதில் அடிக்காது.

* லேசாக விரலால் தட்டிப் பார்த்தால், நிஜ முட்டையில் சத்தம் நன்றாகக் கேட்கும்.

* உடைத்த சில நிமிடங்களிலேயே, போலி முட்டையில் உள்ள மஞ்சள் கருவும் வெள்ளைக் கருவும் ஒன்றோடு ஒன்று கலந்துவிடும். நிஜ முட்டையில் அப்படி நடக்காது.

உஷார் மக்களே... நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையாகவும் இருக்கலாம்!

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...