Monday, February 27, 2017


விரல்களை வலிமையாக்கும் 2 நிமிடப் பயிற்சிகள்..! #PhotoStory
எழுதுவது, ஓவியம் வரைவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது, பொருட்களை பிடிப்பது, எடையை தூக்குவது என அனைத்துக்குமே பயன்படக்கூடியவை கைவிரல்கள். அத்தகைய கைவிரல்களை வலிமையாக்குவது, பராமரிப்பது நம் வேலைகளை சுலபமாக்கும். கை வலி, விரல் வலி ஆகியவற்றை வராமல் தடுக்கும். இதோ, நமக்கான 2 நிமிட ஈஸி பயிற்சிகள்...

கைமூட்டு தளர்வு பயிற்சி (Fist flexes)

வலது கையை நன்றாக விரித்து, பின் கட்டை விரலைத் தவிர மற்ற விரல்களையும் மடக்கி, மூடியபடி வைக்க வேண்டும். கட்டைவிரலை மற்ற விரல்களின் மேல் வைத்து அழுத்தம் கொடுப்பதுபோல் வைக்க வேண்டும். இதேநிலையில், 30 விநாடிகள் வைத்து இருக்க வேண்டும். பின், மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு செய்வது ஒரு செட். இதேபோன்று, இடது கையிலும் 10 முறை செய்யலாம்.



ஸ்ட்ரெஸ் பந்தை அழுத்துதல் (Stress ball squeezes)

ஸ்ட்ரெஸ் பந்தை உள்ளங்கைகளில் வைத்து, நன்றாகப் பிடித்துக் கொள்ளவும். முடிந்தளவுக்கு, அழுத்தம் கொடுக்க வேண்டும். இதேபோல், ஐந்து விநாடிகள் வரை பந்தை அழுத்திய நிலையிலேயே இருக்கலாம். இந்தப் பயிற்சியை இரண்டு கைகளிலும் தலா ஐந்து முறை வரை செய்யலாம்.
குறிப்பு: இந்தப் பயிற்சியை செய்ய டென்னிஸ் பந்து போல, கடினமான பந்துகளை பயன்படுத்தக் கூடாது.



விரல்களைத் தூக்குதல் (Finger lift)

டேபிளில் அல்லது தரையில் வலது கையை வைக்க வேண்டும். சுண்டு விரலை மட்டும் ஐந்து நொடிகள் வரை தூக்கவும் மற்ற விரல்களை தூக்க முயற்சிக்க கூடாது. இவ்வாறு, ஆள்காட்டி விரல், நடுவிரல் என ஐந்து விரல்களையும் தூக்குவது ஒரு செட். இதேபோல், இரண்டு கைகளிலும் 5 முறைச் செய்யலாம்.



கட்டைவிரல் தொடுதல் (Thumb touch)

கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனியைத் தொட வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்கட்டும். அதே நிலையில், 30 விநாடிகள் வரை வைத்திருக்கவும். ஐந்து விநாடிகள் ரிலாக்ஸ் செய்துவிட்டு, இதேபோல் நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் என ஒவ்வொரு விரலின் நுனியையும் தொட வேண்டும்.



கட்டைவிரல் வளைத்தல் (Thumb curve)

உள்ளங்கை உங்களை நோக்கியபடி, விரல்களை விரிக்க வேண்டும். கட்டை விரலை மட்டும் மடக்கி, சுண்டு விரலின் அடிப்பகுதியில் தொடுவது போல வைக்க வேண்டும். இதேபோல், ஐந்து விரல்களுக்கும் செய்ய வேண்டும். இது ஒரு செட். இவ்வாறு இரு கைகளிலும் 20 முறைச் செய்ய வேண்டும்.



பலன்கள்:

கை, மணிக்கட்டு, தோள்பட்டைப் போன்றவற்றில் இருக்கும் அழுத்தம் நீங்கும்.

விரல் தசைகளின் இறுக்கத்தை நீக்கும்.

விரல்களில், சீரான ரத்த ஓட்டம் பாய உதவும்.

விரல்களுக்கு சிறந்த பயிற்சியாக அமைவதால், வலி நீங்கும்.

விரல்களின் நெகிழ்வுதன்மை மேம்படும்.

குறிப்பு: எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

-செ.சங்கீதா,
படங்கள்: க.மணிவண்ணன் (மாணவப் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024