மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு உண்டா… இல்லையா? மாணவர்கள் என்ன செய்யவேண்டும்? #VikatanExclusive #MustRead
மருத்துவப் படிப்பைக் கனவாகக் கொண்ட மாணவர்கள் மீண்டும் சோதனைக் களத்தில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்தாண்டு `நீட்' தேர்வு (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) மூலமாகவே மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்து, அதற்கான நாளையும் (மே-7) அறிவித்துவிட்ட நிலையில், +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழக அரசு. ஏற்கெனவே மனதளவில் தேர்வுக்கு தயாராகியிருந்த மாணவர்களை இப்போது மீண்டும் குழப்பம் சூழ்ந்திருக்கிறது.
தமிழகத்தில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) 3060 இடங்களும், முதுநிலைப் படிப்புகளில் 1331 இடங்களும், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் 192 இடங்களும் உள்ளன. இவை தவிர, 24 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3450 இளநிலை மருத்துவப் படிப்புகள் இருக்கின்றன. 1985-86களில் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வியில் பின்தங்கியிருப்பதால், அங்குள்ள மாணவர்களுக்கு வாய்ப்புத் தரும் வகையில் ‘மத்தியத் தொகுப்பு’ என்ற திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு. அதன்படி இந்தியாவில் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் இளநிலைப் படிப்புகளில் 15 சதவீத இடத்தை மத்தியத் தொகுப்புக்கு வழங்க வேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்காக AIPMT என்ற அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்தி வந்தது. மீதமிருக்கும் இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 65 சதவீத இடங்களுக்கும் மாநில அரசே +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கும்.
முதுநிலைப் படிப்புகளைப் பொறுத்தவரை, 50 சதவீத இடங்கள் மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்பட்டு மத்திய அரசு மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. மீதமிருக்கும் 50 சதவீத இடங்கள், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கும் பிற மருத்துவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களையும் மத்திய அரசே எடுத்துக் கொள்கிறது. இதற்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்குக் கொடுத்தது போத மீதமிருக்கும் இடத்தை தாங்களாகவே நிரப்பிக் கொண்டன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தாங்களே நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களைச் சேர்த்தன.
தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையில் பெருமளவு முறைகேடு நடப்பதாக, தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்த நிலையில், 2010 டிசம்பரில் ‘NEET’ என்ற தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வைக் கொண்டு வந்தது இந்திய மருத்துவக் கவுன்சில். இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகள் இந்தத் தேர்வின் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில். 2016 மே மாதம் NEET தேர்வை கட்டாயமாக்கியது உச்சநீதிமன்றம். உடனடியாக தேர்வுக்கான நாட்களும் அறிவிக்கப்பட்டன. ஆனால் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து, எதிர்க்கும் மாநிலங்களில் மட்டும் தேர்வை ஓராண்டுக்கு தள்ளிப்போடுவதற்கான சட்டம் ஒன்றை இயற்றியது மத்திய அரசு. அதன்படி கடந்தாண்டு வழக்கம் போலவே தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடந்தது.
இதற்கிடையில், எல்லா இடங்களிலும் புற்றீசல் போல NEET பயிற்சி மையங்கள் முளைக்கத் தொடங்கின. நிறைய மாணவர்கள் இந்த மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார்கள். 20 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணங்கள் கறக்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தேர்வுக்கான தேதியையும் அறிவித்து விட்டது மத்திய கல்வி வாரியம். மீண்டும் NEET தேர்வுக்கு எதிரான குரல்கள் ஒலிக்கத் தொடங்கிய நிலையில், கடந்த வாரம் இரண்டு சட்ட மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. +2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்துவதை உறுதி செய்யும் சட்டம்; முதுநிலை மருத்துவ படிப்புகளில் மத்தியத் தொகுப்புக்கு கொடுத்தது போக மீதிமிருக்கும் 50 சதவீத இடத்திற்கு மாநில அரசே மாணவர் சேர்க்கை நடத்துவதை உறுதி செய்யும் சட்டம்...
இச்சூழலில் மே 7ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா? தேவையில்லையா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இச்சூழலில், NEET தேர்வு குறித்து கல்வியாளர்கள் மத்தியிலேயே இருவேறு கருத்துகள் எழுந்துள்ளதும் குறிப்பிடத்தகுந்தது. ”இந்தத் தேர்வு கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்; பெரும் போராட்டத்தின் விளைவாகப் பெற்ற இடஒதுக்கீட்டு உரிமையை குலைத்து விடும்; மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு ஒற்றைப்பாடத்தின் வழியாக, ஒற்றையாட்சி முறைக்கு இந்தியாவை நகர்த்திச் சென்றுவிடும் என்று ஒரு தரப்பு எதிர்க்க, மற்றொரு தரப்பினர், ”எதிர்க்க வேண்டியது தமிழகத்தின் கல்வி முறையைத் தான்; நீட் தேர்வை அல்ல” என்கிறார்கள்.
“NEET தேர்வு விவகாரத்தை சில கல்வியாளர்கள் உணர்வு சார்ந்த விஷயமாக அணுகுகிறார்கள். அறிவு சார்ந்தும் அணுக வேண்டும். இந்தத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று சொல்வது மிகவும் வேடிக்கையானது. ஏற்கனவே ஆயிரக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதைப் போலவும் இனிமேல் அந்த வாய்ப்புகள் கிடைக்காது என்பது போலவும் பேசுகிறார்கள். 2014-15 கல்வியாண்டில் +2 மதிப்பெண் அடிப்படையில் அரசு நிரப்பிய 2975 இடங்களில் வெறும் 37 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 3 பேர் மட்டும் தான் மருத்துவப் படிப்புக்குப் போனார்கள்.
2015-16ல் மொத்தமிருந்த 2,253 இடங்களில் அரசுப்பள்ளிகளில் படித்த 24 மாணவர்களுக்கு மட்டும் தான் இடம் கிடைத்தது. மீத இடங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்தவர்கள் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் தான். 2009-10 கல்வியாண்டில் தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 425 இடங்களில் வெறும் 9 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. ஆக, கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு என்பது எட்டாக்கனியாகத் தான் இருக்கிறது. நாம் எதிர்க்க வேண்டியது NEET தேர்வை அல்ல. தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தான்...” என்கிறார் பேராசிரியர் பிரபா.கல்விமணி.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ்டூ தேர்வை எழுதுகிறார்கள். இவர்களில் 70 சதவீதம் பேர், அரசுப்பள்ளி, மாநகராட்சிப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிப்பவர்கள். 70 சதவீதம் பேருக்கு 4 சதவீதம். 30 சதவீதம் மட்டுமேயான தனியார் பள்ளி மாணவர்களுக்கு 96 சதவீதம். பெரும்பாலான தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு பாடங்களையும் 11ம் வகுப்பு பாடங்களையும் முழுமையாக நடத்துவதில்லை. பெயருக்கு கொஞ்சம் நடத்தி விட்டு 10, +2 பாடங்களையே இரண்டாண்டுகளிலும் நடத்துகிறார்கள். படிப்பு, தேர்வு என்று, வேறு சிந்தனையே எழாதவாறு மாணவர்களை வதைத்து மதிப்பெண்களை வாங்க வைக்கிறார்கள். அரசுப்பள்ளிகளில் அப்படியெல்லாம் நடத்த முடியாது. இங்கு படிக்கும் மாணவர்கள், ஏழைகள். பலர் பகுதிநேரமாக பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இவர்கள், இரண்டாண்டுகள் +2 படித்துவிட்டு தேர்வுக்கு வருகிற தனியார் பள்ளி மாணவனோடு போட்டி போட வேண்டிய நிலை. வெகு எளிதாக முதன்மையான கல்லூரிகளையும், படிப்புகளையும் தனியார் பள்ளி மாணவர்கள் அள்ளிக் கொள்கிறார்கள்.
முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவியும் இந்தக் கருத்தையே வழிமொழிகிறார்.
“இந்தியாவில் இருக்கும் அத்தனை தேர்வு முறைகளும் வடிகட்டும் முறைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது அரசுப்பள்ளியில் படிக்கிற, தாய்மொழி வழியில் படிக்கிற கிராமப்புற மாணவர்கள் தான். ”நீங்களெல்லாம் இங்கே வர தகுதியுடையவர்கள் இல்லை” என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். NEET தேர்வில் ஒரு முக்கிய அம்சத்தை கவனிக்க வேண்டும். மாநில அரசுகள் நடத்தும் கல்லூரிகளில், தங்கள் மாநில மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் வேறுமாநில மாணவர்கள் யாரும் நம் கல்லூரிகளுக்கு வரப்போவதில்லை. வழக்கம் போலவே தனியார் பள்ளி மாணவர்கள் தான் அங்கே வரப்போகிறார்கள். இந்தத் தேர்வு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் என்கிறார்கள். உண்மையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. கற்பித்தலிலும், தேர்வுமுறையிலும் தான் பிரச்னை இருக்கிறது. சிபிஎஸ்இ பாடத்திட்டம், சுயமாக யோசிக்கும் விதத்தில், சுய மொழியில் எழுதும் வகையில் இருக்கும். இங்கு, பாடப்புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே மனப்பாடம் செய்து எழுத வேண்டியிருக்கிறது. சிந்தனைக்கே வேலையில்லை. புத்தகத்தைத் தாண்டி கேள்வி கேட்டால், அவுட் ஆப் செலபஸ் என்று சொல்லி கூடுதல் மதிப்பெண்
கேட்பார்கள்.
அரசுப்பள்ளிகளில் நடக்கும் இன்னொரு அபத்தம் ஆங்கில வழிக் கல்வி. தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, அவற்றைப் பார்த்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குகிறது. நேற்று வரை தமிழ் வழியில் பாடம் நடத்திய ஆசிரியர்கள் ஆங்கில வழியில் எப்படி பாடம் நடத்துவார்கள்? அவர்களுக்கே போதிய திறன் இல்லாதபோது, மாணவர்களின் சிந்தனையை அவர்கள் எப்படித் தூண்ட முடியும்? அரசுப்பள்ளிகள் என்றில்லை... புறநகரங்கள், கிராமப்புறங்களில் இருக்கும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குக் கூட ஆங்கிலத்தில் போதிய திறன் இல்லை என்பதே உண்மை. கல்வியில் நாம் இமாலயத் தோல்வி அடைந்திருக்கிறோம் என்பது தான் உண்மை. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் NEET தேர்வை எதிர்ப்பது தேவையற்றது. இந்தத் தேர்வால் பாதிப்பே இல்லை என்று சொல்லவில்லை. எந்த சூழலிலும் மத்திய அரசு மாநில உரிமையை பறிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி மாநில அரசின் கையில் தான் இருக்க வேண்டும். ஆனால், நாம் உடனடியாக செய்ய வேண்டியது, NEET தேர்வை எதிர்ப்பதல்ல. கல்வித்திட்டத்தை, பாடத்திட்டத்தை மாற்றுவது. கல்வியை அரசு முழுப்பொறுப்பில் எடுத்துக் கொள்வது, தாய்மொழி வழிக்கல்வியை கட்டாயப்படுத்துவது...” என்கிறார் வசந்திதேவி.
NEET தேர்வு மட்டுமல்ல... அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐ.ஐ.டி., எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட அனைத்து நுழைவுத்தேர்வுகளிலுமே தமிழக மாணவர்கள் மிகவும் பின்தங்கியே இருக்கிறார்கள். அதற்குக் காரணம், இங்கே மாணவர்களை தயாரிக்கும் முறை. 1978ல் 11 ஆண்டு பள்ளிப்படிப்பு, ஒரு ஆண்டு ப்ரி யுனிவர்சிடி படிப்பு, மூன்று ஆண்டு பட்டப்படிப்பு என்று இருந்ததை 10+2+3 என்று மாற்றினார்கள். 10ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பு. +1, +2 என்பது கோர்ஸ். +1-ல் பாதிப் பாடங்கள் இருந்தால், +2-ல் பாதிப்பாடங்கள் இருக்கும். இரண்டையும் படித்தால் தான் மாணவர்களுக்கு தெளிவான புரிதல் கிடைக்கும். அகில இந்திய நுழைவுத்தேர்வுகள் அனைத்திலும் +1-ல் இருந்து பாதி கேள்விகளும் +2வில் பாதி கேள்வுகளும் தான் கேட்கப்படுகின்றன. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் +1 நடத்தாமல் இரண்டு ஆண்டுகளிலும் +2 நடத்துவதால் பதில் எழுதமுடியாமல் தோல்வி அடைகிறார்கள்.
ஆந்திரா இந்த விதத்தில் நமக்குப் பாடம் நடத்துகிறது. +1, +2 படிப்புகளை ஜூனியர் காலேஜ் என்ற பெயரில் நடத்துவதோடு, இரண்டு ஆண்டுகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தி இரண்டு மதிப்பெண்களையும் பகுத்து இறுதி கிரேடை முடிவு செய்கிறார்கள். அதனால் தான் அத்தனை மத்திய நிறுவனங்களிலும் ஆந்திர மாணவர்கள் நிறைந்திருக்கிறார்கள். 2008ல் ஐஐடி நுழைவுத்தேர்வில் ஆந்திராவில் இருந்து 1697 பேர் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகத்தில் இருந்து 202 பேர் மட்டுமே சேர முடிந்தது. 2016ல் சென்னை ஐ.ஐ.டியில் ஆந்திரப் பாடத்திட்டத்தில் இருந்து 158 பேரும், தெலுங்கானா பாடத்திட்டத்தில் இருந்து 155 பேரும் தேர்வானார்கள். தமிழக பாடத்திட்டத்தில் இருந்து தேர்வானது வெறும் 13 மாணவர்கள்.
“பாடத்திட்டத்தில் பிரச்னை இருக்கிறது; அதை சரி செய்ய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இப்போதைய பிரச்னை வேறு. மாநில அரசின் மொத்த உரிமையையும் பறிக்கிற முயற்சி இது. கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றும் அளவுக்கு மத்திய அரசின் நிதிநிலை இல்லை என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருந்த காலக்கட்டங்களில் 3 கி.மீக்கு ஒரு தொடக்கப்பள்ளியும், 5.கி.மீக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியையும் தொடங்கி நம் பிள்ளைகளுக்கு வெளிச்சம் கொடுத்தார் காமராஜர். பள்ளியோடு நம் பிள்ளைகள் நின்று விடக்கூடாது என்று தஞ்சாவூரிலும், செங்கற்பட்டிலும், சென்னையிலும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தை ஆண்ட அத்தனை முதல்வர்களும் அவர்கள் பங்குக்கு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினார்கள். நமது முதலீட்டில், நம் பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தும் உரிமையை பறிப்பது என்ன நியாயம்?
இதை மேம்போக்காக, ஒரு தேர்வு என்ற அடிப்படையில் பார்ப்பது விபரீதம். 1980ல் உலக வங்கியிடம் அப்போதைய பிரதமர் இந்திரா கடன் வாங்கியதில் இருந்து தொடங்குகிறது இதன் வேர். அரசின் கடமைகளாக இருந்த கல்வியையும் மருத்துவத்தையும் வணிகமாக்கி வர்த்தகர்கள் கையில் தருவதற்கான முனைப்புகள் அப்போதிருந்து தொடங்குகின்றன. மாணவர்களை மடைமாற்றுவதற்காக தொழிற்கல்விகள் கொண்டு வரப்பட்டன. கல்விக்கொள்கைகள் அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டன. நீதிமன்றங்கள் அவற்றை வழிமொழிந்தன. கல்வியில் யாரும் முதலீடு செய்யலாம். கல்வி வர்த்தகத்தில் யாரும் குறுக்கீடு செய்யக்கூடாது. சட்டங்கள், அமைப்புகளை அவற்றுக்கு ஏற்றவாறு திருத்துவது; இதற்கெல்லாம் அடிப்படையாக ஒரே நிர்வாக அமைப்பைக் கொண்டு வருவது. இந்த நீண்ட செயல்திட்டத்தின் ஒரு அங்கம் தான் NEET மாதிரியான தேர்வுகள். மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் மத்திய பாடத்திட்டத்தில் தான் படிக்க வேண்டும். பிறகு எப்படி மாநிலப் பாடத்திட்டத்தில் படிப்பார்கள்?
படிப்படியாக அதை காலி செய்து விட்டு நாடு முழுவதும் ஒற்றைக் கல்விமுறையைக் கொண்டு வருவது தான் இதன் பின்னுள்ள திட்டம். தனிப்பயிற்சிக்கும், தேர்வுக்கான பயிற்சிக்கும் செல்லும் நகர்ப்புற மாணவனோடு, பால், பேப்பர் போட்டு, வயற்காட்டு வேலைக்குச் சென்று பொருளீட்டிக் குடும்பத்தை காப்பாற்றும் கடமையையும் சுமந்து கொண்டு படிக்கும் ஒரு கிராமப்புற மாணவன் எப்படி போட்டி போட முடியும்? அவன் மருத்துவராக நினைப்பது தவறா? தேர்வில் வெற்றி பெற்றால் தான் இட ஒதுக்கீடு என்றால், தேர்வையே எழுத முடியாத அடித்தட்டு குழந்தைகள் மருத்துவராக வரவே கூடாதா?
NEET தேர்வு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. வடக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்காக பிற மாநிலங்களின் மருத்துவ இடங்களை பெறும் மத்திய அரசு, 35 வருடங்களாக அந்த மாநிலங்களில் இதுவரை எத்தனை மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளது.? நாம் ஏன் நம் வாய்ப்புகளை இழக்க வேண்டும்? அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் பொது நுழைவுத்தேர்வைக் கொண்டு வரும் மத்திய அரசு, அதன் நிர்வாகத்தில் உள்ள எய்ம்ஸ், ஜிப்மர், பிஜிஐ சண்டிகர் போன்ற நிறுவனங்களுக்கு மட்டும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்துவது ஏன்? விரைவில் நடக்கவிருக்கிற உலக வர்த்தக மாநாட்டில் நாங்கள் மருத்துவக் கல்வியில் இருந்த அத்தனை இடையூறுகளையும் அகற்றி விட்டோம் என்று வர்த்தகர்களுக்கு பிராக்ரஸ் ரிப்போர்ட் வாசிப்பதற்காகத் தான் இந்த தேர்வை கொண்டு வந்திருக்கிறார்கள். கல்வித்திட்டத்தின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி இந்த தேர்வை ஆதரிப்பவர்கள் இதைப் புரிந்து கொள்ள
வேண்டும்...” என்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
NEET தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசு சட்டம் நடைமுறைக்கு வருமா? வராதா என்ற குழப்பம் சூழ்ந்துள்ளது... மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்..?
“நிச்சயம் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்வை எதிர்கொள்ள வேண்டும். இந்த சட்டம் உள்பட எதிலும் மாணவர்கள் கவனம் செலுத்தத் தேவையில்லை...” என்கிறார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்.
“NEET தேர்வு வெறும் மருத்துவத்திற்கானது மட்டுமல்ல. அடுத்த ஆண்டு முதல் பொறியியலுக்கும், அதற்கு அடுத்த ஆண்டில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் கொண்டு வரப்பட உள்ளது. அதனால் இதை விழிபோடு அணுக வேண்டும். இப்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம் மத்திய சுகாதாரத்துறை, சட்டத்துறையின் பரிசீலனைக்குப் பிறகு ஜனாதிபதிக்குச் செல்லும். அவர் கையெழுத்திட்டால் நிரந்தரமாக தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இருக்காது. ஆனால், இதில் இன்னொரு பிரச்னை இருக்கிறது. இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மட்டுமே இப்போது சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், உயர் சிறப்புப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களும் இப்போது மத்திய அரசுக்குத் தான் செல்கிறது. பிற மாநில மருத்துவர்களே பெரும்பான்மையாக அதைப் பெறுகிறார்கள். அதற்கும் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்.
1985ல் கொண்டு மத்திய தொகுப்பு கொண்டு வரப்பட்டபோது ஆந்திரமும், ஜம்மு காஷ்மீரும் மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பில் எங்களுக்கு இடமும் வேண்டாம்; நாங்களும் உங்களுக்கு இடம் தரமாட்டோம் என்று வலுவான சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார்கள். அதைப்போல, மொத்த இடத்தையும் மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழகத்திலும் வலுவான சட்டம் கொண்டு வரவேண்டும். நாம் மத்தியத் தொகுப்புத் தரும் 450 இடங்களில் கால் பங்கைக்கூட நம் மாணவர்கள் பிறமாநிலக் கல்லூரிகளில் பெறுவதில்லை. NEET தேர்வை தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தி, மத்திய அரசே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். எல்லாவற்றிலும் டிஜிட்டல் பேசுகிற மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கான கல்விக்கட்டணத்தையும் டிஜிட்டலாக்க வேண்டும். தமிழக அரசு ஒரே குரலில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டும். நீதிமன்றத்துக்கு சென்றால் தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்து எதிர்கொள்ள வேண்டும். ..” என்கிறார் ரவீந்திரநாத்.
தமிழக அரசின் சட்டம் இன்னும் நிறைய தூரங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும். உச்சநீதிமன்றத்தில் யாரும் தடை கோரலாம். அப்படி ஒரு சூழல் வந்தால்..?
”மாணவர்கள் வீதிக்கு வரவேண்டும். தங்கள் பண்பாட்டு உரிமைக்காக வந்தார்கள் அல்லவா? அதைப்போல, தங்கள் எதிர்காலத்துக்காக போராட வேண்டும். அனைவரும் அவர்களுக்குப் பின்னால் நிற்க வேண்டும். மத்திய அரசு மிரள வேண்டும். தமிழகத்திற்கு போதிய அரிசி தராததைக் கண்டித்து முதல்வராக இருந்த எம்ஜிஆர் உண்ணாவிரதம் இருந்தார். 2 மணி நேரத்தில் மத்திய அரசு பணிந்தது. காவிரிப் பிரச்னைக்காக முதல்வராக இருந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததார். மத்திய அரசு பணிந்தது. ஒருவேளை சட்டம் நிராகரிக்கப்பட்டால், இப்போதைய முதல்வர் மெரினாவில் வந்து போராட வேண்டும். மாநிலமே அவர் பின்னால் நிற்கும். வரலாற்றில் அழியாத இடமும் கிடைக்கும்..” என்கிறார் பிரின்ஸ்
கஜேந்திரபாபு.
No comments:
Post a Comment