Saturday, February 25, 2017


ஜெயலலிதா பெயரில் மரம் நடுவிழா!' அரசு விளம்பரத்தின் சர்ச்சை
vikatan.com



கடந்த ஆண்டு இதே நாள் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்காக அரசு சார்பில் நாளிதழ்களில் முழு பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டிருந்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ஞானதேசிகனும், வனத்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மாவும் இந்த விளம்பரத்தை கொடுத்திருந்தார்கள்.

"முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக மரம் நடுவது வரவேற்க வேண்டியது தான். ஆனால் அதற்காக அரசு செலவில் நாளிதழ்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்பதை ஏற்க முடியாது. தலைமைச் செயலாளரின் இந்த போக்கு கண்டனத்துக்குரியது" என அப்போதே சர்ச்சை எழுந்தது. ஆனால் அதைப்பற்றி அ.தி.மு.க.வும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.

இன்று ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஜெயலலிதா இப்போது உயிரோடு இல்லை. முதல்வராகவும் இல்லை. மறுபுறம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தெரிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழலில், ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாளையொட்டி, 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்திருக்கிறார்.

இதற்காக இன்றைய நாளிதழ்களில் முழு பக்க விளம்பரங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுற்றுச்சூழல், வனத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த விளம்பரம் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் விலக்கப்பட்டாலும், ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெயலலிதா குற்றம் புரிந்துள்ளார் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அரசுதிட்டங்களில், அவரது புகைப்படங்களை பயன்படுத்துவது என்பது, அரசியலமைப்பு சட்டத்தையும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தையும் மீறுவது போலாகும். இதையடுத்து ஜெயலலிதாவின் படங்கள் அம்மா உணவகம் உள்ளிட்ட இடங்களில் மறைக்கப்பட்டது.



இந்தச் சூழலில் ஜெயலலிதா பெயரில் மரம் நடும் திட்டத்தை அறிவித்ததோடு, அதற்காக அரசு செலவில் விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களுக்கான இந்த திட்டத்துக்கும், விளம்பரங்களுக்கும் அரசின் வருவாயில் இருந்து தான் நிதி செலவிடப்படுகிறது. ஊழல் வழக்கில் குற்றவாளியாக உள்ள ஒருவருக்கு, அரசு திட்டங்களில் விளம்பரம் செய்யப்படுவது என்பது ஏற்க முடியாது.

இந்த விளம்பரத்தை கட்சியோ, கட்சியின் நிர்வாகிகளோ கொடுக்கவில்லை. அரசு சார்பில் தலைமைச் செயலாளர் கொடுத்திருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் ஜெயலலிதாவின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைத்திருப்பதே தவறு என தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் பெரும் செலவிட்டு விளம்பரம் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

'அட விடுங்கப்பா... மரம் தானே நடறாங்க. நல்லது தானே'னு சொல்பவர்கள், கடந்த ஆண்டு ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளுக்கு நடப்பட்ட 68 லட்சம் மரக்கன்றுகள் நிலை என்ன ஆனது என்பதை அறிந்து சொல்லவும்.

- ச.ஜெ.ரவி

No comments:

Post a Comment

NEWS TODAY