Sunday, February 26, 2017


நெடுவாசலை விட அதிக ஹைட்ரோ கார்பன் இங்கே இருக்கிறது... அரசின் கவனத்துக்கு!
vikatan.com

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே....

இந்திய அரசு ஹைட்ரோ கார்பனை தேட வேண்டிய இடத்தை விட்டு விட்டு புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் கடலோர மாவட்டங்களில் தேடுகிறார்கள். அது தான் பிரச்சினை.



தமிழகத்தில் மிஞ்சியிருக்கும் விவசாயத்தை அழிக்கும் மிகப்பெரிய அழிவுத்திட்டம். இந்த அழிவுத்திட்டத்தால் எப்படி நிலத்தடி நீர் பாதிக்கும், எப்படி விவசாய நிலங்கள் அழியும் என்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரியும் என்பதால், அதைப்பற்றி விரிவாக விளக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், இன்றைய தமிழக இளைஞன் மீத்தேன் வாயு எடுக்கும் விதத்தை பற்றி, அதனால் விவசாய நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறான்.

இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் விஷன் 2025ன் படி, இந்தியாவில் இருக்கும் 29 படிகப்பாறை (Sedimentary Basin) யின் அளவு 3.14 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவில் தான் ஹைட்ரோ கார்பன் இருக்கிறது.

அதில் 1.39 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு நிலத்திலும்,

1.35 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு 3 ஆழ் கடல் பகுதிகளிலும் – அதாவது கிழக்கு கடற்கரை பகுதி, மேற்கு கடற்கரை பகுதி, அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் உள்ள ஆழ்கடல் பகுதி.

0.40 மில்லின் சதுர பரப்பளவு உள்ள கடல்ஒரம் உள்ள பகுதியிலும் காணப்படுகிறது.

இந்தியா ஹைட்ரோ கார்பன் உபயோகத்தில் 4 வது பெரிய நாடு, ஹைட்ரோ கார்பன் இறக்குமதியில் உலகில் 5 வது பெரிய நாடு. இதில் 75 சதவிகிதம் நாம் இறக்குமதி செய்கிறோம். நாம் எரிசக்தி பயன்பாட்டில் 45 சதவிகிதம் ஹைட்ரோ கார்பன் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் ஆழ்கடலில் இருக்கும் 3 பகுதிகளில் இருந்து மட்டும் 11 பில்லியன் டன் ஹைட்ரோ கார்பன் உற்பத்தி செய்யலாம். இதில் 7 பில்லியன் டன் ஆயில், 4 பில்லியன் டன் வாயு, இதில் ஆயில் 1 பில்லியன் மற்றும் 3 பில்லியன் அளவு வாயு பிரித்து எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஆழ்கடல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினால், அதை இந்த அதிகாரிகள் கடலிலே கண்டரிய ஆழ்குழாய் கிணறு தோண்டினால், இந்தியாவின் அடுத்த 20 ஆண்டுகளுக்கான ஹைட்ரோ கார்பன் தேவையை நாள் ஒன்றுக்கு 410 மில்லியன் க்யூபிக் மீட்டர் என்ற அளவில் எடுக்க முடியும்.

இது ஹைட்ரோ கார்பன் விஷன் 2025ல் சொல்லப்பட்ட இலக்கான ஒரு நாளைக்கு 550 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவை சுலபமாக எட்டும், அப்படியே குறைபாடு இருந்தாலும், அது மிகச் சிறு இடைவெளிதான், இதை 0.40 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவில் இருக்கும் ஆழமில்லா கடல்பகுதியிலும், பாலைவனப் பகுதியிலும், மற்ற வறண்ட நிலப்பரப்பிலும் உள்ள பகுதியில் எடுக்க வாய்ப்பு இருக்கும் போது, எதற்காக மத்திய அரசின் ONGC நிறுவனம் தமிழ்நாட்டில் எடுக்க வேண்டும்?. ஏன் மற்ற மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் இருக்கிறதா இல்லையா என்ற ஆராய்ச்சியை செய்ய வேண்டும்?. விவசாய நிலங்களை பாழ்படுத்த வேண்டும்?

எனவே, பாரத பிரதமர் அவர்களே, அதிகாரிகளின் தவறை அறிமுக நிலையில் கண்டறிந்து மக்களின் பிரதமராக செயல்படுங்கள்.

விஞ்ஞானிகளாலும், தொழில் நுட்பத்தாலும் ஹைட்ரோ கார்பன் எங்கு இருக்கிறது என்று சொல்ல முடியும். அதிகாரிகளால் அதை எடுக்க திட்டம் மட்டும் போட முடியும். ஆனால் மக்களால் மக்களுக்கான ஆட்சியை நடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களால் மட்டுமே, இந்த திட்டம் மக்களை பாதிக்கும் திட்டமா, இல்லை இதை செய்வதால் ஏற்படும் சாதக பாதகம் என்ன என்று சிந்திக்க முடியும்.



மக்களுக்கு பாதிப்பு என்றால், விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட்டாகவே மாற்றக்கூடாது என்று நீதிமன்றங்கள் கடுமை காட்டிக்கொண்டிருக்கும் போது, நன்றாக விளையும் விவசாய நிலங்களை, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் தரிசு நிலங்களாக மாற்றும் உரிமையை இந்த அதிகாரிகளுக்கு யார் கொடுத்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கெல்லாம் விவசாய நிலங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுவதை உடனடியாக தடை செய்து அரசாணை வெளியிடுங்கள்.

புதுக்கோட்டை நெடுவாசலில், இராமநாதபுரத்தில் வெட்டியாக சுற்றித்திரியும் ONGC அதிகாரிகளை உடனடியாக ஆழ்கடலில் இருக்கும் 3 பகுதிகளுக்கு ஹைட்ரோகார்பனை கண்டறிய ஆழ்கடலுக்கு அனுப்புங்கள்.

விவசாய சுற்றுப்புற சூழல் சீரழிவிற்கு வித்திடும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் எடுப்பதை தடை செய்யுங்கள்.

இதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக அமைந்தது, இளம் தமிழனின் யுகப்புரட்சி ஜல்லிகட்டு, அமைதியின் சின்னமாக, கோரிக்கையின் வலிமையை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்தியது ஜல்லிகட்டு யுகப்புரட்சி. ஒவ்வொரு அநீதிக்கும் அவன் களத்தில் இறங்கினால் தான் நாங்கள் செயல்படுவோம் என்று நீங்கள் நினைத்தால், அது அவன் தவறல்ல அது உங்கள் தவறு.

அவனவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறான். அதை விடுத்து, அவனை களத்தில் இறங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தாதீர்கள்.

இது போல ஒவ்வொன்றுக்கும் தமிழக இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும் என்றால், இந்த அரசியல் சாக்கடைகளை அப்புறப்படுத்த அவன் களத்தில் இறங்குவான்.

மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாக, அறிவார்ந்த நிலையை விட்டு, அராஜக ஆட்சி செய்யும் யாராக இருந்தாலும் அவர்களை தேர்தல் ஜனநாயகத்தில் கலந்து கொண்டு மாற்றத்தை கொண்டு வருவான் தமிழ் இளைஞன்.

எனவே பாரத பிரதமர் அவர்களுக்கு எங்களது வேண்டுகோள், மலை சார்ந்த வன சுற்றுப்புற சூழலுக்கும், விவசாயம் சார்ந்த நிலத்தடி நீர் சுற்றுப்புற சூழலுக்கும் எதிராக இருக்கும் இந்த திட்டங்களை நீங்கள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிலத்தில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டாமல், ஆழ்கடலிலே செயல்படுத்தி ஹைட்ரோ கார்பன் விஷன் 2025 திட்டத்தை செயல்படுத்த வழி இருக்கும் போது உங்கள் பெட்ரோலியம் அமைச்சருக்கு அறிவுறுத்தி இந்தியாவின் நிலத்தில் தோண்டி ஹைட்ரோ கார்பன் கண்டறியும் திட்டத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை கொண்டுவாருங்கள்.

இல்லையென்றால், மீண்டும் ஒரு யுக புரட்சியை விவசாயிகளோடு சேர்ந்து மாணவர்களும், இளைஞர்களும் கையெடுக்க நேரிடும் என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே மாற்றம் மேலிருந்து வந்தால் அரசாட்சி அது மக்களாட்சி, நல்லாட்சி, அதுவே கீழிருந்து மேலே சென்றால் புரட்சி.

எது வேண்டும் என்பது எங்களை ஆளும் உங்கள் கைகளில்.

-வெ. பொன்ராஜ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024