Saturday, February 25, 2017

மதுரை காமராஜ் பல்கலையில் 'களையெடுப்பு' : சான்றிதழ் பிரிவில் திடீர் தடை

மதுரை: மதுரை காமராஜ் பல் கலையில், முறைகேடு புகார்களில் சிக்கியவர் உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த, 68 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுத்துறை சான்றிதழ் பிரிவில், வெளி நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலை துணைவேந்தர் பணியிடம், இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ளது. மேலும், பதிவாளர், தேர்வாணையர், டீன், தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் உட்பட முக்கிய பதவிகளும் காலியாக உள்ளன.தற்போது, பதிவாளர் (பொறுப்பு) ஆறுமுகம், தேர்வாணையராக, முன்னாள் துணைவேந்தர் முத்துச்செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

 இவர்கள் பொறுப்பேற்ற பின், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, தொலைநிலை கல்வி கூடுதல் தேர்வாணையர் அலுவலகத்தில், ஐந்து கண்காணிப்பாளர் உட்பட, 25 உதவி, துணை பதிவாளர்கள், ஊழியர்கள், 43 தொகுப்பூதிய பணியாளர்கள், வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தேர்வுத்துறை சான்றிதழ் பிரிவில், பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இதனால், அங்கு அலுவலர் தவிர, வெளி நபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. 24 மணி நேரமும் தனியார் நிறுவன காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இங்கு சான்றிதழ், உண்மை தன்மை சான்றிதழ், பட்டம் சான்றிதழ் பெற, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர் வந்து செல்கின்றனர். சான்றிதழ் வழங்க இடைத்தரகர்கள் மூலம் ஊழியர்கள் சிலர், பணம் வசூலித்தது தெரியவந்தது.

 இதைஅடுத்து, ஆறு இடைத்தரகர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டனர். முறைகேட்டில் ஈடுபட்ட, பல்கலை ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேர்வாணையர் முத்துச்செழியன் கூறியதாவது: கடந்த 20ம் தேதி பொறுப்பேற்ற பின், இங்கு நடக்கும் முறைகேடு குறித்து, மாணவர்கள் என்னிடம் புகார் அளித்தனர். விசாரணை நடத்தி, இதுவரை பலர், வேறு துறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிலருக்கு வழக்கமான பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டது.காலை, 10:30 மணிக்குள் ஊழியர்கள் இருக்கையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வருவோர், 'ஆப்சென்ட்' ஆக கருதப்படுவர். சான்றிதழ் பிரிவில் வெளிநபர் செல்லவும், ஊழியர் அலைபேசி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

'குறைதீர் மையம்' துவக்கம் : தேர்வாணையர் முத்துச்செழியன் கூறியதாவது:பட்டம் சான்றிதழ் பெற, விண்ணப்பம் அளிப்பது உட்பட பல்வேறு பணிகளுக்காக இத்துறைக்கு வரும் மாணவர்களுக்கு, தேர்வாணையர் அலுவலகம் முன் துணை பதிவாளர் மேற்பார்வையில், 'குறைதீர் மையம்' துவங்கப்பட்டுள்ளது. மாணவர், தேவை குறித்து, இங்கு விண்ணப்பித்தால், அன்று மாலைக்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருசில நாட்கள் ஆகும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தேதி ஒதுக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ் பெற, இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024