Sunday, February 26, 2017


அப்துல் கலாம் படித்த கல்லூரியில் தமிழ் கலாசாரத் திருவிழா! #VikatanExclusive




வேட்டி சேலை, தாவணி என கலர்ஃபுல்லாக இருந்தது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) கல்லூரி வளாகம். ட்ரம்ஸ் இசைக்கருவிகள் அதிர பத்து மணி வரை எழுந்திருக்காமல் இரவு முழுவதும் படித்த மாணவர்களின் கனவினை கலைத்து எழுப்பியதோடு, பக்கத்தில் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ளவர்களையும், பேருந்து நிலையத்தில் உள்ளவர்களையும் திரும்பி பார்க்க வைத்தது. அப்துல் கலாம் படித்த மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்ஐடி) தமிழ் கலாசாரத் திருவிழா. இந்த விழாவில் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள உள்ளே சென்று விழாவில் கலந்துகொண்டோம்.

பறை, உரி, நாதஸ்வரம், தவில் மேளம் என்று தமிழிசை முழக்கமிட எல்லோரையும் விசிலடித்து உற்சாகமாக வரவேற்றார்கள் கல்லூரி மாணவர்கள். பட்டுப்புடவையுடன் வந்திருந்த கல்லூரி மாணவிகள் வெள்ளை வேட்டி சட்டையுடன் மிடுக்குடன் வந்த மாணவர்களைச் சிதற விட்டு நடனமாட வைத்தார்கள்.

விழாவின் தொடக்கத்தில் இசைக்கருவிகள் முழக்கங்களுடன் தமிழில் முக்கியமான வாசகங்களை முழங்கியபடி பேரணி நடத்தினார்கள். அதன் பின்பு 'தாமரை பொண்ணு....குங்குமப் பொட்டழகி, கொங்கு நாட்டுக் கனியே!’ என்று நாட்டுப்புறப் பாடல் பாட உற்சாகம் தொற்றிக்கொண்டது மாணவர் மாணவிகளுக்கு.



பாடல்களுக்குத் தகுந்தாற்போல் மாணவர்கள் லுங்கி நடனத்தை, வேட்டியுடன் ஆடிய காட்சி அசர வைத்தது. பாடலின் நடுவில் 'அடி சிறுக்கி, அமுதவல்லியே, ஏன் சிரித்தாய்?' என்ற குரலோசை கேட்டதும், பார்வையாளர்களாக கலந்துகொண்ட மாணவிகள் ஓரக்கண்ணில் மாணவர்களைப் பார்த்த போது கலகலப்பில் களைகட்ட ஆரம்பித்தது விழா.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என இசைக் கச்சேரி மாணவர்களுக்குத் தமிழ்க் கலாசாரத்தை நினைவில் கொண்டு வந்ததோடு உற்சாகத்தையும் கூட்டியது. இடையிடையே ஒவ்வொரு தமிழர்களின் கலாசாரப் பெருமைகள் குறித்தும், அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்கள், மருத்துவ முறைகள் என ஏகப்பட்ட விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள் சீனியர் மாணவர்கள்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த தலைமை ஒருங்கிணைப்பாளரும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நான்காம் ஆண்டு படித்துவரும் மாணவியுமான கீர்த்தனாவிடம் பேசினோம்.

"ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் கலாசார நிகழ்ச்சியினை நடத்துவோம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நிகழ்வினை ஒட்டி 'தமிழன்டா' என்று நிகழ்ச்சியினை மாற்றி 'தமிழ் கலாசாரத் திருவிழா' நடத்தி வருகிறோம். இன்றைக்கு பொறியியல் படித்து மாணவர்கள் தமிழ் கலாசாரத்தை மறக்காமல் இருக்கவும், வருங்காலத்தில் தமிழ் கலாசாரத்தைப் பாதுகாக்கவும் இந்த விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். இங்குத் தமிழில் பிரபலமாக சொற்றோடர்களை எல்லாம் தொகுத்து காட்சிப்படுத்தி இருக்கிறோம். கலைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். அடுத்து மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டு வர கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, கதை, ஓவியம் எனப் பல போட்டிகள் நடத்துகிறோம். இதில் பல கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள்" என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்குத் தயாரானார் கீர்த்தனா.

நாட்டுப்புறப்பாடல் நடன நிகழ்ச்சியில் 'தெற்கு தெருவிலே... தேரோடும் வீதியிலே வாராளே கண்ணாத்தா' என்ற பாடல் ஒலித்தபோது மாணவிகளிடம் குலவைச் சத்தம்! இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எஸ்எஸ்என் கல்லூரி மாணவிகளின் கரகாட்டம் சபாஷ் போட வைத்தது. சென்னை கவின் கலைக்கல்லூரி மாணவர்களின் ஓவியங்கள் இயற்கையினை மீட்டெடுத்தன. நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியில் சிறந்த நூல்கள், சிறந்த வார இதழ்கள், சிறந்த படைப்பாளிகள், சிறந்த பேச்சாளர்கள் என்று தமிழ் இலக்கியப் பரிசுக்கான ஓட்டெடுப்பு நடத்தினார்கள்.



''ஒவ்வொரு ஆண்டும் 'மிட்டாபெஸ்ட்' என்ற நிகழ்ச்சியினை நடத்துவோம். இந்த ஆண்டு தமிழர்களின் பெருமை பேசும் விதமாக 'தமிழன்டா' என்ற பெயரில் 'இனி ஒரு விதி செய்வோம் தமிழருக்கு' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடத்துகிறோம். தமிழர் பேரணி, கலை நிகழ்ச்சி, வீதி நாடகம், தமிழர் விருது, தமிழர் விளையாட்டு, என ‘வையத் தலைமைக்கொள்’ என்ற பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறோம். இதன் மூலம் மாணவர்களுக்குத் தமிழர்களின் பெருமைகளை நினைவுபடுத்தி அடுத்த தலைமுறைக்கும் தமிழ் கலையினை எடுத்துச்செல்கிறோம். தமிழ்நாட்டில் முகம்தெரியாமல் ஏராளமானவர்கள் கல்விக்காகவும், தமிழர் மேம்பாட்டுக்காகவும் உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்க உள்ளோம்" என்கிறார் மாணவ பேரவை தலைவர் மனோஜ்.

இந்தவிழாவில் பைக் ஸ்டண்ட் ரேஸை நடத்தினார்கள். இது பற்றி விசாரித்த போது, 'நகரத்தில் மாடும் இல்லை, மாட்டு வண்டியும் இல்லை. இருந்திருந்தால் ரேக்ளா ரேஸ் நடத்தி இருப்போம். இன்றைக்கு எல்லா இளைஞர்களிடமும் பைக் இருக்கிறது. அதனால் ஒரு புதுமையாக பைக் ஸ்டண்ட் ரேஸை நடத்துகிறோம்' என்றார்கள் இளைஞர்கள்.

கலாசார நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை மாலை அணிவித்து வரவேற்றார்கள். நிரம்பி வழியும் கூட்டத்துக்கு இடையிலும், எந்த விதமான சலசலப்பும் சலனமும் இல்லாமல் கண்ணியத்துடன் நடந்தது கலாச்சார விழா. இது ஜல்லிக்கட்டு புரட்சியினை ஞாபகப்படுத்தியது. வெயில் வாட்டி எடுத்தாலும் களைப்படையாமல் இருந்தனர்.

மாணவர்களுக்கு வாழ்த்துகள் சொல்லி விட்டோம் ஜூட்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024