Saturday, February 25, 2017

கோயம்பேடு-நேரு பூங்கா இடையே 2 மாதத்தில் மெட்ரோ ரெயில் சேவை

பிப்ரவரி 25, 04:45 AM
சென்னை,

சென்னை கோயம்பேடு- நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து 2 மாதத்தில் தொடங்கப்படும் என்று முதன்மை பொதுமேலாளர் (சுரங்கப்பாதை) விஜயகுமார் சிங் கூறினார்.

மெட்ரோ ரெயில் சேவை

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடமும் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 24 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையும், 21 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையும் ஆகும். தரைவழி பாதையில் 16 ரெயில் நிலையங்கள், சுரங்கப்பாதையில் 16 ரெயில் நிலையங்கள் என மொத்தம் 32 ரெயில் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான கட்டுமானப்பணிகள் முழுவதும் நிறைவடைந்துவிட்டன.

2-வது வழித்தடத்தில் உள்ள கோயம்பேடு-ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் உயர்த்தப்பட்ட பாதையில் பணிகள் நிறைவடைந்து, 2015-ம் ஆண்டு மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதேபோல் முதல் வழித்தடத்தில் உள்ள விமான நிலையம் முதல் சின்னமலை இடையே 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பறக்கும் பாதை மற்றும் பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து கடந்த ஆண்டு தொடங்கியது.

பிரம்மாண்ட ரெயில் நிலையம்

இந்நிலையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் நோக்கி சுரங்கம் தோண்டிக்கொண்டு வந்த சுரங்கம் தோண்டும் எந்திரம் நேற்று காலை சென்டிரல் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதை பார்வையிட செய்தியாளர்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் சென்டிரல் ரெயில் நிலையம் எதிரில், 28 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்த ரெயில் நிலையத்தை 76 தூண்கள் தாங்கி நிற்கின்றன. 380 மீட்டர் நீளம், 36 மீட்டர் அகலத்தில் 2 லட்சம் சதுர அடியில் 3 அடுக்குகளாக பிரம்மாண்ட ரெயில் நிலையம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. தரையில் இருந்து 10 மீட்டர் ஆழத்தில் உள்ள தளத்தில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளன. 20 மீட்டர் ஆழத்தில் 2-வது வழித்தடத்தில் வரும் மெட்ரோ ரெயில்களும், 28 மீட்டர் ஆழத்தில் முதல் வழித்தடத்தில் வரும் ரெயில்களும் வரும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ளன.

கார் நிறுத்தும் வசதி

சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் நலன் கருதி பூமிக்கடியில் இருந்து சென்னை மருத்துவ கல்லூரி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, சென்டிரல் ரெயில் நிலையம், பூங்கா ரெயில் நிலையம், ரிப்பன் கட்டிடம் ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் 5 பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர பூந்தமல்லி சாலையை பொதுமக்கள் கடக்க பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து ரிப்பன் கட்டிடத்திற்கும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையத்துக்கும் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் மிகவும் பெரிய ரெயில் நிலையம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகும். இங்கு இடநெருக்கடி அதிகம் இருப்பதால் சென்டிரல் ரெயில் நிலையத்தை ஓட்டியபடி உள்ள இடத்தில் வெளிநாடுகளில் இருப்பது போன்று அதிநவீன வசதிகளுடன் கூடிய 7 அடுக்குகள் கொண்ட கார் நிறுத்தும் வசதியும், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் பின்புறம் 6 அடுக்குகளுடன் கூடிய கார் நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இவற்றில் 4 ஆயிரம் கார்கள் நிறுத்த முடியும்.

தண்டவாளம் அமைக்கும் பணி

இந்த பணிகள் குறித்து சென்னை மெட்ரோ ரெயில் முதன்மை பொதுமேலாளர் (சுரங்கப்பாதை) விஜயகுமார் சிங், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் மெட்ரோ ரெயில் பணி 87.03 சதவீதம் அளவுக்கு பணிகள் நிறைவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வரையில் சுரங்கம் அமைக்கும் கடைசி எந்திரமும் தன்னுடைய பணியை நிறைவு செய்து உள்ளது.

தொடர்ந்து முதல் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக் கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. 2-வது வழித்தடத்தில் மேதின பூங்கா- ஏ.ஜி.டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதையில் 60 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன.

கோயம்பேடு-நேரு பூங்கா

திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய சுரங்கப்பாதையில் உள்ள ரெயில் நிலையங்கள் வழியாக எழும்பூர் சுரங்கப்பாதைக்கு ரெயில் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. 9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சுரங்கப்பாதையில், திருமங்கலம்-நேரு பூங்கா இடையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

விரைவில் பாதுகாப்பு ஆணையர் இந்த பாதையில் ஆய்வு செய்ய உள்ளார். அதை தொடர்ந்து 2 மாதத்தில் கோயம்பேடு-நேரு பூங்கா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. நேரு பூங்கா-எழும்பூர் இடையே தண்டவாளம், சிக்னல்கள், அவசரகால வழி, மின்சார உபகரணங்கள், பாதுகாப்பு கருவிகள் பொருத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த ஆண்டு இறுதியில் கோயம்பேடு மற்றும் திருமங்கலம்-எழும்பூர் இடையே சுரங்கப்பாதையில் பயணிகள் ரெயில் போக்குவரத்தை தொடங்கப்படும். அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பணிகளில் ஈடுபட்ட பொறியாளர்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன இயக்குனர் (திட்டம்) ராஜீவ் நாராயண் திவேதி ராஜஸ்தான் தலைப்பாகை அணிவித்து கவுரவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024